Monday, April 27, 2020

என்னைத் தீயில் எறிந்தவள் - ஒரு பன்முகப் பார்வை


பேராசிரியர் - முனைவர் சேமுமு. முகமதலி - சென்னை
பொதுச் செயலாளர் - தமிழ்நாடு தொண்டு இயக்கம்
ஆசிரியர் - இனிய திசைகள்

படிப்பறிவு ஒன்றினால் மட்டுமே கவிஞன் உருவாகி விடுவதில்லை. பட்டறிவு நிறைய வேண்டும். வெறும் பட்டறிவே கவிஞனை உருவாக்கி விடுவதில்லை. மனிதர்களை ஊடுருவி, உற்று நோக்கிப் படிக்கும் கண்களும்  சமுதாயப் பிரச்சனைகளை அலசி ஆய்ந்து தெளிந்து உருகும் சுனையாக உள்ளமும்  சமூக அவலங்களில் ஆழ்ந்து அனுபவித்துப் பொங்கும் அருவியாக உணர்வும் இவற்றையெல்லாம் வார்த்தைகளில் வார்த்தெடுக்கும் வல்லமையும் மிகுந்தவனிடமே கவித்துவம் குடி கொண்டிருக்கிறது.

    நீறு பூத்த நெருப்பாக அவனுள் உறங்கும் கவித்துவத்தை ஏதாகிவும் ஒரு நிகழ்வு நெம்பு கோலால் நெம்பி விட்டால் நீறு அகல,  நெருப்பு ஜூவாலை பரவ ஆரம்பித்து விடுகிறது. மள மளவெனக் கவிதை பரவக் கவிஞன் காலத்தை வென்று விடத் தொடங்குகிறான். இத்தகையதொரு கவிஞராகவே அஷ்ரஃப் சிஹாப்தீன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

1999ம் ஆண்டு அவரது 'காணாமல் போனவர்கள்' முதற் கவிதைத் தொகுதி வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் 2008ம் ஆண்டில் 'என்னைத் தீயில் எறிந்தவள்' இரண்டாம் கவிதைத் தொகுதி வெளிவந்தது. 'வெகு நாட்களுக்குப் பின் உன்னைச் சந்திக்கும் போது கண்ணீரோடும் அமைதியுடனும் சந்திப்பேன்' என்றான் கவிஞன் பைரன். 'என்னைத் தீயில் எறிந்தவ'ளைப் படிக்கும் போது மட்டுமல்ல, படித்து முடித்துவிட்ட பின்பும் அமைதியும் கண்ணீர் முத்துக்களுமே ஆக்கிரமித்துக் கொள்கிற வெற்றியை அஷ்ரஃப் சிஹாப்தீன் பெற்றுக் கொண்டுள்ளார்.


'காணாமல் போனவர்கள்' முதல் கவிதைத் தொகுப்பைத் தன்னை முந்தியிருக்கச் செய்த தந்தைக்கும் தாய்க்கும் சமர்ப்பித்த கவிஞர் தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'என்னைத் தீயில் எறிந்தவளை'த் தன்னில் பாதியாக இருக்கும் தனது மனைவிக்கும்  மீதியாக இருக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் சமர்ப்பித்துள்ளதன் மூலம் பிறந்த, புகுந்த சொந்த பந்த உறவுகளைப் பாராட்டத் தெரிந்தவன்தான் முழுமையான மனிதனாக முடியும் என்கிற மகா வித்தை தானாகவே கைவரப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. முழுமையான மனிதனாக உருப்பெற முயற்சிக்கிறவனேயல்லாமல் மற்றவனெல்லாம் மாபெரும் கவிஞனாக உருவாகி விடுதல் சாத்தியமில்லாதது. இந்த மந்திரத்தை உணர்ந்திருக்கிற அஷ்ரஃப் பாராட்டுக்குரியவராவார்.

இலக்கு உடையதே இலக்கியம். வாழ்க்கைக் கண்ணாடியான இலக்கியத்தில் பாவிகம் இல்லாமல் காவியம் இல்லை. படைப்பின் நோக்கத்தையும் படைத்துள்ளவை வெளிப்படுத்த விரும்புகிற நோக்கத்தையும் கோடிட்டுக் காட்டாத படைப்பு எதற்காக என்று கூறப்பெறாத விருந்தை அல்லது மருந்தைப் போன்றதாகி விடும். சிலரிடம் கனவுகள் இருக்கும். சிலரிடம் சிக்கல்கள் இருக்கும். சிலரிடம் நகைச்சுவை இருக்கும். அஷ்ரபிடம் சில கவிதைகள் இருக்கின்றன. ஆனால் நம் அனைவரிடமும் சில வருத்தங்கள் இருக்கும் - தீரும்வரை கண்ணீர் விடுவதற்கு! அந்த வருத்தங்களைத்தான் 'என்னைத் தீயில் எறிந்தவள்' அகிலத்துக்கு எடுத்துச் சொல்கிறது. இந்த வருத்தங்கள் எதுவரை என்பதையும் நூலுள் காட்டியதன் மூலம் அழுது புலம்ப அல்லது எழுந்து விடியல் காணவும் அவரது கவிதை கலங்கரை விளக்கமென வெளிச்சம் செலுத்துகிறது.

'என் வருத்தங்கள் வருத்தங்கள் இல்லையென்றும் எனது கவலைகள் கவலைகள் இல்லையென்றும்; சாதிக்க வேண்டுமெனச் சிரித்துக் கொண்டே துப்பாக்கி காட்டுகிறார்கள். எனது அடையாளங்களை அழித்தபடி, எனது பாடல்களை எரித்தபடி, இயல்பாய் இருந்து விட்டுப் போ என்கிறார்கள்! ஆகட்டும் நண்பர்களே, உங்கள் செங்கோல் ஓங்கட்டும் - என் அச்சம் தொலைகிற நாள் வரைக்கும்!' என அச்சம் தவிர்க்க நெருப்பூட்டுகிறார்.  கவிதை என்பது உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தாலும் அறிவின் வழிகாட்டுதலாகவும் அமைய வேண்டுமென்பதைக் கவிஞர் உள்வாங்கியிருப்பது உணர்ந்து குறிப்பிடத்தக்கதாகும். 'பழமாயிருந்தால் பறவைகள் கூடமைத்து இளைப்பாறுவோர் மீது எச்சமிடும். பலகைக்காய் வாள் கொண்டறுப்பர். பெரும் வெள்ளமோ, காற்றோ புரட்டி இழுத்துத் தள்ளிவிடும். நாம் புல்லாகவே இருந்து விட்டுப் போவோம் - மிதிபட மிதிபட நிமிர முடியுமென்ற ஒரே ஒரு காரணத்தால்' என்ற அவரது 'நிமிர்தல்' ஒரு நெம்புகோல் கவிதை என்றே கூறலாம்.

படைத்துக் காட்ட வேண்டிய உணர்ச்சியைத் தானே அனுபவிக்கும் திறனுடைய கவிஞனே சிறந்த படைப்பை அளிக்க முடியும். படைத்தவன் அனுபவித்துத் தந்த அந்த உணர்ச்சியைப் படிப்பவனும் பெற்றானாகில் அதுதான் நிலைபெற்ற படைப்பாகவும் கவிஞன் அடைய நினைக்கும் நோக்கத்தை நோக்கிப் படிக்கிறவனையும் உந்திச் செலுத்துகிற தேர்ந்த படைப்பாகவும் அமைய முடியும். 'குண்டு வெடிப்பில் குதறப்பட்டவர், குண்டு துளைத்துக் குருதியில் கிடந்தவர், கண்ணி வெடியில் கொல்லப்பட்டவர், கடத்தப்பட்டுக் காணாமல் போனவர், கிராஸ் ஃபயரில் அகப்பட்டு அகாலமானவர், எரிந்தவிந்த டயருக்குள் எலும்பாய்க் கிடந்தவர், பாதி கருகியும் பாதி கருகாமலும் பாதையில் கிடந்தவர் - இவரெல்லாம் யாரோ ஒருவர்தான். யாரோ ஒருவர் தெருவில் சிதிலமாகச் சிதறிக் கிடக்கிறார் என யாரோ ஒருவர் உன்னைச் சொல்வதற்குள் சுதாகரித்துக் கொள்!' இந்த யாரோ ஒருவர் கவிதை சொல்ல வேண்டி ஒன்றை உணர்;த்தி விட்டுப் போவது கவிஞனின் படைப்புணர்ச்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.

சமூகப் பிரக்ஞை இல்லாமல் கவிதை எழுதுவதும் உயிரற்ற சடலத்தைக் கட்டி மகிழ முனைவதும் ஒன்றாகும். அத்தகைய பிரக்ஞை கண்ணாடிச் சாரளத்துக்குள்ளே இருந்து கொண்டு வீதியில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதாக இருப்பதில் மட்டும் சிறப்பில்லை. வீதிக்கு வந்து நிகழ்வுகளின் உணர்வுகளில் வீழ்ந்து உழன்று நெஞ்சுக்குள் நஞ்சை வைத்து உதட்டுக்குத் தேனைத் தடவி உதிர்க்கின்ற நயவஞ்சக வார்த்தைகளின்றி, உள்ளத்தின் பள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற உணர்வுகளைப் பக்குவமாகப் படம் பிடிக்க உணர்த்துகிற நல்ல புகைப்படமாகக் கவிதை அமைவதில்தான் உண்மையான கவிஞன் ஆத்மார்த்த ரீதியாகப் படிப்பவனின் உள்ளத்தைத் தொட முடியும். உறவையும் நட்பையும் இனப் போராட்டத்தில் இழந்து போனவர் அஷ்ரப் சிஹாப்தீன். தன்னளவில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர், அதிலும் தேர்ந்த ஒரு கவிஞர் வெளிப்படுத்துகின்ற வார்த்தைகளுக்குச் சக்தி அதிகமேயாகும். அந்தச் சக்தியைத்தான் 'என்னைத் தீயில் எறிந்தவள்' கவிதை ஒரு சான்றாக உணர்த்தி நிற்கிறது.

உள்ள நிலைமையை உணராமல் வெறுமனே வீராவேச வார்த்தைகளைக் கொட்டுவதில் அஷ்ரஃபுக்கு உடன்பாடு இல்லை. உள்ள நிலைமையை யதார்த்தம் தவறாமல் எடுத்துரைக்க முனைகையில் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமே அவரது கவிதைகளில் எதிரொலிப்பதையும் நாம் காண முடிகிறது. 'சந்திக்கு வருவாயா சாயங்காலம்.. மீண்டும் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம்!', 'செய்தித்தாள் பக்கமொன்றின் கீழ் மூலையில் அனாதரவாய்க் கிடக்கும் கவிதையொன்றைப் போல சுவாரசியமற்றுப் போய்க் கிடக்கிறது வாழ்க்கை!' 'வேறு வழியில்லாமல் கைகளைக் குலுக்கிக் கொண்டோம். வெறுங் கைகளை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனால் செய்ய முடிந்ததெல்லாம் அது ஒன்றுதான்... அல்லாஹ்வுக்காக என்னை மன்னிக்க வேண்டும் நீ!, 'இந்த மான்கள்தாம் பாவம்! அவை கூடிக் கூடிக் குசுகுசுப்பதெல்லாம் கானலைப் பற்றித்தான்!' - போன்றவை கையறு பாடல்களாகப் படிப்பவரது நெஞ்சைக் கவ்வுகின்றன.

'என்னைத் தீயில் எறிந்தவளில் பெரும்பான்மையான கவிதைகள், ஒரேயுணர்வைப் பீறிட்டுக் காட்டுவதாய்ப் பொதுவாக உணரலாம். ஒரேயுணர்வு திரும்பத் திரும்ப வௌ;வேறு வடிவங்களில் பாடு உணர்வாய் அமைவதற்குக் காரணம், அஷ்ரஃபின் நெஞ்சில் ஆழப் பதிந்த துயரத்தின் நோக்கமாகும். வாழ்வின் ஜீவ மரணப் போராட்டத்தில் சுரண்டல், சாதி வேற்றுமை, லஞ்சம், மோசடி, ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, கலப்படம் முதலிய சமூகக் கொடுமைகளையெல்லாம் விஞ்சுகின்ற இனப் படுகொலையைக் கண்டு அனுபவித்த நிலை அவருக்குரியது. கடுமையான தாக்குதலுக்கு ஆளான அவரது உள்ள வெளிப்பாடு பல்வேறு வடிவங்களில்  வெளியாவது இயற்கையே ஆகும்.

ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலானவற்றை வளர்த்துப் பண்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பும் கவிஞனைச் சார்ந்ததாகும். சமுதாயத்தால் கவிஞனும் கவிஞனால் சமுதாயமும் பாதிப்புக்குள்ளாகவே வேண்டும். அப்போதுதான் சமுதாய சீர்திருத்தத்துக்குரிய கவிதைகளைத் தனது நன்கொடையாகக் கவிஞனால் தர முடியும். அத்தகு நன்கொடைகளை அஷ்ரஃப் இந்நூலில் வழங்கியிருக்கிறார்.

'பக்தியூட்டுவோர் பிள்ளை ஐராப்பாவில் படிக்க, உனது பிள்ளை கோவணத்துடன் திரிவது புரியாமல்!' என்று 'நீயும் உனது தேச பக்தியும் அறிவுறுத்துகிறது. 'நாளையை நினைத்து நடுங்கும் நண்பா நெஞ்சில் உரங்கொள்வாய்! இது வேளையில் மட்டும் வீசும் காற்று விளங்கி உளங் கொள்வாய்' என 'வேளையில் வீசுங் காற்று' நம்பிக்கை தருகிறது. 'ஏராள இடமுண்டு எல்லைகளைத் தாண்டுதற்கும் எல்லைகளைத் தாண்டி எழுந்து நடப்பதற்கும் - நீங்கள்தாம் வெளியே வருவதில்லை!' எனக் 'கிணற்றுக்குள் இருப்பவர்களை' வெளியே கொண்டுவரத் துடிக்கிறது அஷ்ரஃபின் கவிதை. 'போர் நின்று மானிடப் பெரு வேட்டையாடும் பிண வெறிக்குத் தீயிடுங்கள் - அவன் இனவெறியைக் குழியிடுங்கள்' என்று கவிஞர் முரசு கொட்டுகிறார். சமுதாயத்தின் மறுமலர்ச்சியை நோக்கி மக்களை நகர்த்துகிற கவிஞரின் திறன் நுணுகி நோக்கிப் பாராட்டுவதற்குரியதாகும்.

மனிதனுக்கு மனிதன் நன்றி பாராட்டாதவன், தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி பாராட்டுபவன் ஆக மாட்டான். நன்றி உணர்வு நனி சிறக்க அமையப் பெற்றவர் அஷ்ரஃப். சமுதாயத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து மாபெரும் வெற்றி கண்ட மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மீது அஷ்ரஃப் சிஹாப்தீன் பெரும் பற்றும் பாசமும் கொண்டவர். அதனால்தான் தான் முனைப்புக் கொண்டு தொகுத்த ;மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' எனும் தொகுப்பு நூலை 'முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்துக்கு' எனக்கூறி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அன்னார் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் பின்னணியில் அஷ்ரஃப் சிஹாப்தீன் படைத்த 'நீ நடந்து போன தெரு' என்ற கவிதை 'என்னைத தீயில் எறிந்தவள்' என்ற நூலில் கை தட்டுகிறது. 'நீ நடந்தாய்.. தீ தீய்ந்து போயிற்று... நீ நடந்தாய்.. நதிகள் பிரவகித்து ஓடின.. இருட்டுத் தெருவுக்குள் உன்னை இழுத்துக் கொண்டு போனவர்களின் குருட்டுக் கண்களுக்கெல்லாம் வெளிச்சத்தின் விசாலத்தையல்லவா விதை;து விட்டு வந்தாய்... கேட்கிறதா.. அந்தச் சத்தம்..? நீ திரும்பிய போது எழுந்த கைதட்டல் இன்னும் ஓயவேயில்லை!' என இன்றைக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஆதர்ஷ புருஷராகத் திகழும்  தலைவரை நன்றிகூர்கிறார்.

மர்ஹூம் அஷ்ரப் கண்ட முஸ்லிம் காங்கிரஸின் சின்னம் மரம். அன்னாரின் மறைவுக்குப் பின் பிளவுகளும் பிணக்குகளும் வஞ்சகத்துக்கு ஆளாகிச் சூழ்ந்தன. அதனால்தான் வெம்பிய மனத்துடன் கவிஞர், மரமாக இல்லையென்றாலும் புல்லாகவாவது இருந்து விடுவோம். மிதி பட மிதி பட நிமிர முடியுமென்ற ஒரே ஒரு காரணத்தால்' என்று பாடுகிறார். சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற வங்கரிமாதாவை 'இருண்ட கண்டத்தின் இரண்டாவது நைல் நதி' என்று பாட வந்தபோது கூட, 'அம்மணி, பன்னிரண்டு மில்லியன் மரங்களை நட்டு வளர்த்துள்ளீர்களாமே.. ஆச்சரியமாக இருக்கிறது.. எங்கள் அண்ணன் நட்டு வளர்த்த ஒரேயொரு மரத்தைக் கூடக் கட்டிக் காக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம்' என்ற அஷ்ரஃப் குமுறி, இலங்கை முஸ்லிம் சமுதாயத்துக்குச் சூடு ஏற்றத் தவறவில்லை. சிறந்த கவிஞன் என்பவன் தேர்ந்த விமரிசகனாகவும் இருக்க வேண்டும் என்ற அடையாளத்துக்குச் சான்றாக அஷ்ரஃபைக் கூறலாம்.

அன்றாட அவலங்களை எடுத்துக் காட்டிப் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி விடுகிற நல்ல சிந்தனையாளனாகவும் கவிஞர் திகழ்கிறார். 'நான் எங்கே போகிறேன்?' என்று 'விடை தெரியா வினா' வாகக் கேட்பதும் நோய்களிலேயே மிகப்பெரிய 'இழி நோய்' 'உள்ளத் தினவெடுத்த உயரத்தில் நின்றபடி அடுத்தவன் மீது அபிப்பிராயம் சொல்லுவது' எனக் கூறுவதும் 'ஒரு சோடிச் செருப்பு' எனும் கவிதையில் 'குளிர் அறைகளில் பெண்ணியம் பேசும் மானிடரே, (தார்ச் சாலையில் வேகவைக்கும் வெயிலில் பச்சை மதலையைச் சுமந்தபடி செல்லும்) இவளுக்கு உங்களில் யார் வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள் ஒரு சோடிச் செருப்புகளை?' என்று கேட்பதும் 'அத்தனைக்கும் ஆமாம் போட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது - உன்னிடமும் சில தேவைகள் இருப்பதால்' என்றும் 'வேறு வழியொன்றும் தோன்றுதில்லை எனக்கு.. பொய்களோடு வாழ்வதைத் தவிர' என்று யதார்த்தம் பேசுவதும் மிகுந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாகவும் உருகுவதாகவும் அமைந்துள்ளன.

காதலைப் பாடாதவன் கவிஞனாக இருக்க முடியாது. எந்தவொரு கவிஞனின் எழுதுகோலும் தொடக்கத்தில் அதிகமாகவும் வயதும் அனுபவமும் ஏற ஏற அவ்வப்போது அதற்கேற்பவும் காதல் கொள்ளாதிருப்பதில்லை. எல்லோருக்கும் இருக்கும் வருத்தங்களில் காதல் வருத்தமும் இருப்பதில் வியப்பில்லை. அஷ்ரஃப் 'அந்த நினைவு' என்ற கவிதையால், 'ஊசி முனையொன்று உள்நகத்துள் புகுந்ததுபோல் அவ்வப்போது வரும்.. யாருடையவளாகவோ ஆகி விட்ட உன் நினைவு' என்று கூறும் போது, அது நிறைவேறாதுபோன ஒரு காதல் உணர்வு மட்டுமே என்று சிந்தனைக்குத் தடைபோட இயலவில்லை.சமுதாயம் இழந்து விட்ட எத்தனையோ ஆக்கங்களை நினைவுகூர்கிற உருவகமாகவே அந்த வரிகள் துளைக்கின்றன.

இறையருளால் உலகை உய்விக்க வந்த உத்தமத் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி, 'முஹம்மத் என்று எழுதிவிட்டு முகர்ந்து பார்த்தேன் என் கலிமா விரலில் கூட கஸ்தூரி வாசம்! மொழியின் உச்சம் கவிதை. மானுடத்தின் உச்சம் முஹம்மத்' என்று பலவாறாக எடுத்துரைக்கும்போது, அஷ்ரஃபின் சொல்லாட்சித் திறன் கொடிகட்டிப் பறக்கிறது. சொல்லாட்சித் திறன் என்பது ஒரு நல்ல நடைக்கும் ஆரோக்கியமான சுவை உணவுக்கும் மட்டுமல்ல, அவற்றைத் தாண்டி அறிவுக்குங்கூட அவசியமாகும் என்பதற்கு 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' எனும் கவிதையே தக்க சான்றாகும். 'வாழ்க்கையை சரியாக வகுத்துத் தந்தவர் முஹம்மத். வகுக்கப்பட்டதை வகுக்கப்போய்த்தான் வருத்தத்தில் விழுந்திருக்கிறோம்' என்று கூறி, 'நாயகமே, நீங்கள் இறைஞ்சுங்கள்.. எங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்ற இறைஞ்சுங்கள்!' என்ற இறைஞ்சுதலோடு கவிதையை முடித்திருக்கும் ஆளுமை, நல்ல நடைக்கும் ஆரோக்கியமான சுவை உணவுக்கும் அறிவுக்கும் தீனியாகிறது.

'காணாமல் போனவர்கள்' என்ற தொகுப்பிலிருந்த 'ஸெய்த்தூன்', 'ஹபீப்' ஆகிய கவிதைகளை 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' தொகுப்பில் மீளவும் இடம்பெறச் செய்திருந்தார் அஷ்ரஃப். 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' தொகுப்பிலிருந்து 'என்னைத் தீயில் எறிந்தவள்', 'குரும்பட்டி', 'உன் தேச பக்தியும் நீயும்' ஆகிய மூன்று கவிதைகளை 'என்னைத் தீயில் எறிந்தவள்' தொகுப்பில் மீளவும் இடம்பெறச் செய்துள்ளமையும் கவனிக்கத் தக்கதாகும். கவிஞனுடைய மன ஆழத்தில் அழுத்தமாகப் பதிந்து விட்ட நிகழ்ச்சிகளின் முத்திரை மூலாதாரப் பொருளாகக் கவிதையில் அதிகம் பிரதிபலிக்கப்படவே செய்யும். கவிஞனால் உணர்ந்து அனுபவிக்கப்பட்டுச் சிந்திக்கப்பட்ட முக்கியமானவை மட்டுமே உண்மையான மூலாதாரப் பொருளாகக் கவிதையில் திரும்பத் திரும்ப எதிரொலிக்கும் என்பதற்கேற்பவே கவிதைகளை மீளவும் அஷ்ரஃப் பதிவு செய்துள்ளார் என்றே கருதலாம்.

தேசிய சாஹித்திய அரச விருது பெற்ற ஐம்பது கவிதைகளைக் கொண்ட 'என்னைத் தீயில் எறிந்தவள்' அஷ்ரஃப் சிஹாப்தீனின் வயது மற்றும் அனுபவத்துக்கேற்ப தெளிவான சிந்தனையின் போக்கில் பிரசவிக்கப்பட்டதேயாகும். கவிஞருடைய தாயாரின் தந்தையான - பாட்டனார் அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் அவர்களது பாடலைப் பாடிப் பரிசிலோடு அவரிடம் பெற்ற முத்தமே அஷ்ரஃப் கவிஞரானதற்கு அடிப்படை. ஆலிம் புலவரின் உந்துதல் அகிலத்திற்கு அருமையான கவிஞரை நன்கொடையாக அளித்திருக்கிறது. அஷ்ரஃபுக்கு வாய்த்த ஒலிபரப்புத் துறை அனுபவம் அவரின் பின்புலமாக இருக்கும் சமூக, அரசியல், ஆன்மீகத் தளங்கள் அவரை மிகத் தேர்ந்த கலைஞனாகச் செதுக்கியிருக்கின்றன என்பதையும் இந்நூலில் உணர முடிகிறது.

ஒரு கவிஞனுடைய சிந்தனை வளமும் கருத்து வளமும் மிகச் சிறந்த முறையில் வெளிப்பட வேண்டுமெனில் மிக நேர்த்தியான அமைப்புத் திறன் அவசியம் வேண்டும். அத்தகைய வினைத் திறன் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குக் கைவந்த கலையாக அழகூட்டுகிறது. அதற்குக் காரணம் ஒரு தேர்;ந்த கலைஞனுக்குத் தேவையான சிந்தனைத் திறம், கலை ஆற்றல், விமர்சிக்கும் திறன் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்திருப்பதுதான். அதனாலேயே 'என்னைத் தீயில் எறிந்தவள்' மிகச் சிறந்த அங்கீகாரத்தை அஷ்ரஃபுக்குக் கலை உலகில் வழங்கியிருக்கிறதெனத் துணியலாம்.

எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆழத்துக்கு ஊடுருவிப் பாய்ந்து உண்மையை உணர்ந்து காணுகிற வித்தை, மொழி வளம், சொல் நடை, அமைப்புத் திறன் முதலியன தெளிந்த சிந்தனை, தேர்ந்த கருத்து இவற்றோடு பொங்கி உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கிறபோது, பிறக்கின்ற கவிதை காலத்தை வென்று நிலைக்கும் ஆற்றல் உடையதாகவே அமையும் என்பதற்குக் கவிமாமணி அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'என்னைத் தீயில் எறிந்தவள்' நூல் சான்று பகர்கிறது.  இலங்கை இலக்கிய உலகில் மட்டுமன்றி, அனைத்துலகத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் அஷ்ரஃப் சிஹாப்தீன் இந்நூல் மூலம் கவிமாமணியாக அங்கீகாரம் பெற்றுள்ளார் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை.

(2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

குறிப்பு- கட்டுரையாசிரியர் பெயர் மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்ட மூலம் குறிப்பிடப்படாமல் இக்கட்டுரையை அச்சிலோ, இணையத்திலோ அல்லது கல்விசார் தேவைகளுக்கோ யாராகிலும்; பயன்படுத்தினால் அந்நபர் அல்லது நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: