“'தமிழ்க் கவிதைகளில் புண்ணாக்கு' என்று எனக்குத் தலைப்புத் தரப்பட்டிருக்கிறது. இது ஓர் ஆழமான தலைப்பு. ஏறக்குறைய ஓர் ஆய்வு நூலுக்கான தலைப்பு என்று சொல்லலாம். என்னால் முடிந்தவரை தமிழ்க் கவிதைகளில் புண்ணாக்குப் பற்றிக் குறிப்பிடப்பட்ட தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இத் தலைப்பிலான ஒரு முன்னோடி அறிமுகமாக இதை எடுத்துக் கொள்ளுமாறு இங்கு ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கும் எனது பேராசிரிய நண்பர்களையும் உங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
'தமிழ்க் கவிதைப் புண்ணாக்கு' என்று எனக்குத் தலைப்புத் தராதிருந்தமைக்காக மாநாடு நடத்தும் நண்பர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.”
கடைசி வசனத்தைப் பேராசிரியர் சொன்ன போது சபையிலிருந்து 'கொல்'லென்ற சிரிப்புச் சத்தம் எழுந்தது. அவரது அடுத்த வார்த்தைக்கிடையில் பலர் கசமுசாவெனப் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
“இந்த மாநாட்டின் ஆய்வரங்குக்கான தலைப்புகளை எனது அன்புக்கும் நெஞ்சார்ந்த நேசத்துக்கும் உரியவரும் எனது உள்ளத்தில் உறைந்திருக்கும் முன்னாள் முதுநிலை விரிவுரையாளருமான செவ்வண்ணன் அவர்கள் வழங்கியிருக்கிறார். அவரைப் போன்ற உயரிய தமிழ் அறிஞர்களால் என்னைப் போன்ற பல நூறு கல்விமான்கள் நாட்டில் உருவானார்கள். இவ்வாறான தமிழ் வளர்க்கும் மாநாடுகளில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.”
'பெரிய புண்ணாக்கைச் சின்னப் புண்ணாக்குப் புகழ்ந்து தள்ளுது. அடுத்த சோதினை இருக்குமாக்கும்' என்று சபையில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் மற்றவன் காதில் குசுகுசுத்தான்.
“முதலில் புண்ணாக்கு என்பது என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். புண்ணாக்கு என்பதன் சரியான வடிவம் பிண்ணாக்கு என்பதாகும். பிண்ணாக்கை நமது புண்ணாக்குகள் பேசிப்பேசி புண்ணாக்காக மாற்றி விட்டார்கள்.
எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பின் எஞ்சும் சக்கைப் பொருள் புண்ணாக்கு எனப்படும். புண்ணாக்கு மூன்று வகைப்படுகிறது. தேங்காய்ப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவையே அவை மூன்றுமாம். தேங்காய், கடலை, எள்ளு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெயும் கடலையிலிருந்து கடலை எண்ணெயும் எள்ளிலிருந்து நல்லெண்ணையும் பெறப்படுகிறது. இவற்றின் சக்கையாக எஞ்சுவது புண்ணாக்கு. பொதுவாக புண்ணாக்கு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சங்க கால, சங்கமருவிய கால, பல்லவர் கால இலக்கியங்களில் புண்ணாக்குக் கிடையாது. அதாவது நமது பழந் தமிழ் இலக்கியங்களில் ஓர் இடத்திலாவது புண்ணாக்கு என்ற பதத்தை நமது புலவர்கள் யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுரைக்காகவும் உரைக்காகவும் பல இலக்கியங்களைக் கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு தேடினேன். கிடைக்கவேயில்லை. கண்ணில் விட்டது எந்த எண்ணெய் என்று கேட்க வேண்டாம்.” (சபையில் மறுபடி சிரிப்பு)
“பாரதிக்குப் பிறகு பலர் புண்ணாக்கைப் பாடியிருக்கிறார்கள். சற்றுத் தெளிவாக அதைச் சொல்ல வேண்டுமாயின் முன் நவீனத்துவ, பின் நவீனத்துவ காலக் கவிதைகளில் ஏராளமாகப் புண்ணாக்குக் கிடைக்கிறது. மரபுக் கவிதைகளில் புண்ணாக்கு விரவிக் கிடப்பதாக பலரும் அவ்வப்போது எழுதும் கட்டுரைகளில் படித்து வந்திருக்கிறேன்.
ஓர் ஆய்வுக் கட்டுரையையோ ஒரு உரையையோ நான் தயார் செய்ய அமர்ந்தால் நான் நொறுக்குத் தீனி உண்பது வழக்கம். இந்த உரைக்காக நான் தயாராகும் வேளை எனது சின்ன மகனிடம் ஒரு பருப்பு வடை வாங்கி வருமாறு கடைக்கு அனுப்பினேன். வடையை உண்பதற்காக அதைச் சுற்றியிருந்த தாளைப் பிரித்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தத் தாளில் புண்ணாக்குப் பற்றிக் கவிதை வரிகள் இரண்டிருந்தன. அது ஒரு சஞ்சிகையில் கிழிக்கப்பட்ட தாள். தாறுமாறாக அந்தத் தாள் கிழிக்கப்பட்டிருந்ததால் அதன் அடுத்த துண்டு கடையில் இருக்கலாம் என நினைத்து அவசர அவசரமாகக் கடைக்குச் சென்று விசாரித்தேன். எனது மகன் வடை வாங்கிய அடுத்த நிமிடத்தில் இன்னொரு நபருக்கு இரண்டு வடைகள் சுற்றிக் கொடுத்ததாகக் கடைக்காரர் சொன்னார். அவர் பதில் சொன்ன போது 'இரண்டு' என்ற சொல்லில் அழுத்திச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.
ஒரு பேராசிரியரான எனக்கு வால் கிடைத்தால் போதாதா? அத்துண்டை எடுத்துப் பார்வையைச் செலுத்தினேன். அதில் பின்வரும் சொற்கள் இருந்தன. புலவர் பேத்தை, மகன் நீ, கடனைத் திருப்பிக் கேட்டு, வறுமையில் உழன்ற ஆகிய சொற்களுடன் 'எதிரி வந்தால் புண்ணாக்கு - கதிரில் குருவி சுண்ணாக்கு' என்ற கவிதை வரிகளும் இருந்தன.
கவிஞர் காத்து வாயனைப் போல் புலவர் பேத்தை வாயன் என்று ஒருவர் இருந்திருக்கிறார். வறுமையில் வாடிய புலவர் யாரிடமோ கடன் பட்டிருக்கிறார். கடனைத் திருப்பிக் கேட்க வந்தவனைத் தாக்குமாறு புலவர் மகனைக் கேட்டுக் கொள்கிறார். அதாவது இந்த இடத்தில் புண்ணாக்கு என்பது புண்படுத்து என்கிற அர்த்தத்தில் வருவதை நாம் காண்கிறோம். புலவர்கள் ஒரு சொல்லில் பல பொருள் கோடுவார்கள். எனவே 'எதிரி வந்தால் புண்ணாக்கு' என்ற அர்த்தத்தில் புலவர் சொல்லியிருக்கிறார். இந்தக் கவியடியை யுத்தம் நடக்கும் போது நாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டவும் பயன்படுத்தலாம் என்பது வெள்ளிடை மலை.
இந்தக் கவியடியை மற்றொரு நாட்டுடன் யுத்தம் புரியும் எந்தவொரு நாட்டு மக்களும் பயன்படுத்த முடியும் என்பதால் கவிஞர் சர்வதேச தரத்தைத் தொட்டு விடுகிறார். அதேவேளை இச்சொல் மற்றொரு பொருளையும் குறிக்கிறது என்பதை மேல் நாட்டார் அறிய வருகையில் அவர்கள் தமிழ் மொழியின் மேன்மை குறித்துச் சிலிர்ப்படைய நேரிடும் என்பது நமக்கெல்லாம் நிறைந்த பெருமையாகும். அதே போல பிற நாட்டார் புண்ணாக்குப் பற்றி அறிந்து கொள்ளவும் வழியேற்படும்.
அடுத்த வரி நமக்கு அவசியம் இல்லையெனினும் அதன் மூலம் நாம் புரிந்து கொள்வது யாதெனில் விளைந்திருக்கும் வேளாண்மைக் கதிரில் குருவிகள் உட்கார்ந்தால் அத்தனையையும் கொறித்து விட்டுப் போய்விடும். குருவிகள் எப்போதும் வயலுக்குப் பாட்டம் பாட்டமாகவே வரும். அப்படி குருவிகள் வரும் போது சுண்ணக் கல் எடுத்து வீசு என்பதையே 'சுண்ணாக்கு' என்பதன் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார். அதற்கு ஏன் சுண்ணாக்கு என்று சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. புலவர்கள் அப்படித்தான். கவிதைக்கு ஏற்றவாறு தமிழைப் பயன்படுத்துவார்கள்.
