Showing posts with label மூன்றாவது இதயம். Show all posts
Showing posts with label மூன்றாவது இதயம். Show all posts

Monday, March 9, 2015

நாச்சியாதீவு பர்வீனின் மூன்றாவது இதயம்!


நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் உடனே நமது மனதில் ஒட்டிக் கொள்வதில்லை. வெகு சிலரே எந்த வித நிபந்தனையுமில்லாமல் மனதில் வந்து அமர்ந்து விடுவார்கள். அப்படித்தான் நானும் பர்வீனும் பரஸ்பரம் ஒருவரில் ஒருவர் ஒட்டிக் கொண்டது நடந்திருக்க வேண்டும்.

பர்வீனுக்கும் எனக்குமான உறவுக்கு ஏறக்குறையப் பத்து வருடங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். குறிப்பாக இலக்கியமும் சமூகாபிமானமுமே எங்களது உறவைப் பாதுகாத்து வந்திருக்கின்றன. இவற்றை விட வேறு அம்சங்களுக்கு எங்களது உரையாடலில் முக்கியத்துவம் அன்றும் இருந்ததில்லை, இன்றும் இருந்ததில்லை!

இவ்வாறான நட்புக்குள் ஒருவர் மற்றவரின் கவிதைத் தொகுதியை முன் வைத்துப் பேசுகையில் பரஸ்பர முதுகு சொறிதல்களுக்கு பெருமளவில் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த நட்புக்கு அப்பால் நின்றே நான் பேசியாக வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் எனது காலத்துக்குப் பிந்தி வந்தவர்கள் பலர் என்னை அழைத்துப் பேச வைத்ததில் தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் ஏமாந்திருக்கிறார்கள். அது எனது வித்துவத்தை முன்வைக்கவோ எனது முன்னோடி அந்தஸ்தைத் தக்கவைக்கவோ செய்யப்பட்ட எத்தனங்கள் அல்ல. என்னளவில் எனது தராசு முள்ளு சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்.

இந்தத் தொகுதியில் 51ம் பக்கம் 'என் எதிரிகளுக்கு' என்று ஒரு கவிதை இருக்கிறது. இந்தக் கவிதையை மாத்திரமே முன் வைத்து பர்வீன் என்ற படைப்பாளியை நம்மால் முழுவதுமாக எடை போடக் கூடியதாக இருக்கும். உணர்வு பூர்வமானதும் உணர்ச்சிபூர்வமானதும் தனது மண்ணின் மீதுள்ள காதலின் ஆழத்தைப் புலப்படுத்துவதாகவும் சிறுமை கண்டு பொங்கிச்;   சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் அப்பால் எதுவுமில்லை என்றும் உரத்துப் பேசுவதுமான இந்தக் கவிதையை அவர் வானொலி இலக்கிய மஞ்சரிக்காக எனக்கு முன்னிலையில்தான் முதலில் வாசித்தார்.

நியாயத்தைப் பேசும் குரல் எப்போதும் அழுத்தமாகவும் வீரியமாகவும் வெளிப்படும். அப்படித்தான் அந்தக் கவிதை அவரது வாயில் இருந்து வெளிவந்தது. அக்கவிதை கொண்டுள்ள தீயதைத் தன் காலில் போட்டு ஆவேசத்துடன் நசுக்கும் வார்த்தைகள் ஒரு கணம் என்னைப் பயமுறுத்தியதை நான் மறைக்க முடியாது. ஆனால்  மனிதனின் ஏழ்மையை விற்றுப் பிழைப்பவர்களுக்கு எதிராக ஒரு கவிஞன் தனது சொல்வாளை வீசும் போது இன்னொரு கவிஞனால் அதைத் தடுப்பது சாத்தியம் இல்லை. அவ்வாறு செய்வதும் கவிதையைப் படைத்த கவிஞனை சமரசத்தின்பால் தள்ளி விடுவதும் அல்லது அந்த எல்லை நோக்கி நகர்த்துவதும் ஒரு பாவ காரியம் என்பதை நான் அறிவேன்.

நூல் வெளியீடு - முதல் பிரதி பெறும் ஹாஜி இஸ்ஹாக்

பர்வீன் என்ற படைப்பாளியின் பலமும் பலவீனமும் தனது பிரதேசமும் அது சார் மக்களுமாகவே இருப்பதைத் தொடர்ந்தும் நான் கண்டு வந்திருக்கிறேன். அவரது கவிதை, அவரது எழுத்து, அவரது சிந்தனை, அவரது நடவடிக்கைகள், அவரது அரசியல் என்று யாவுமே தனது பிரதேசம், தனது சமூகம் என்றே இருந்து வருகிறது. வேறோர் இடத்தில் ஒரு தினத்தில் பர்வீனும் கலந்து கொள்ளும் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தாலும் கூடத் தனது பிரதேசத்தில் ஒரு சிறிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமானால் அவர் தனது பிரதேசத்தில் தங்கி விடுவதையே தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார். இதுதான் பர்வீன் என்ற கவிஞன் தனது பிரதேசம், தனது பிரதேச மக்கள், தனது சமூகம் ஆகியவற்றின் மீது வைத்திருக்கும் பேரபிமானம், பற்று, பாசம் எல்லாமே!
இந்தக் கவிதைத் தொகுதியில் 30 கவிதைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றுள் மூத்தமா, உம்மா, மனைவி என்று மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளதுடன் எட்டாத கனியாகவே போய்விட்ட ஆனால் மனதில் நின்று விட்ட காதலி பற்றியும் இரண்டு கவிதைகள் உள்ளன. யார் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - அநேகமாகவும் எல்லா ஆண்களின் நெஞ்சுக்குள்ளும் மரணம் வரை ஒரு பெண் வாழ்ந்து கொண்டேயிருக்கிறாள் என்பது ஒரு மறைக்கப்பட்ட உண்மை. பலர் ஒரு போதும்... ஒரு போதும் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் அதைச் சொல்லும் தைரியமும் ஓர்மமும் கவிஞனுக்கு மட்டுமே உண்டு.

எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தைரியமும் திறந்த நூலாகவே வாழ்ந்து விட்டுப் போவோம் என்ற தெளிவும் உள்ள ஒரு படைப்பாளி இதைச் சொல்ல மட்டுமல்ல, எதைச் சொல்லவும் அச்சப்பட மாட்டான். அது ஒரு சிறந்த படைப்பாளிக்குப் பெரும் அழகு சேர்ப்பது என்று நான் கருதுகிறேன்.

சவூதியில் கொலை செய்யப்பட்ட ரிஸானா பற்றிய கவிதை, பனை, முருங்கை, புளியமரம், அரச மரம் என ஒவ்வொரு கவிதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு பழமில்லாத மரம் - என்றும் ஒரு கவிதை உண்டு. அது முஸ்லிம் அரசியலைப் பேசுவதாக நான் கருதுகிறேன். மீனவர்கள், ஆசான்கள் பற்றியும் இரண்டு கவிதைகள் அடங்கியுள்ளன.

ஒட்டு மொத்தமாக ஒரே மூச்சில் இத்தொகுதியைப் படித்து விட முடியும். பர்வீன் என்ற படைப்பாளியின் கொடுமை கண்டு கொதிக்கும் ஆவேசம், கையறு நிலைக்குள்ளானவர்கள் மீதான பச்சாதாம், நடந்திருக்க வேண்டியவை நடக்காமல் போன ஏக்கம், பிரதேசம் - சமூகம் எனக்கருதப்படும் மக்களின் நலன் குறித்த எதிர்பார்ப்பு ஆகியன இக்கவிதைகளின் வடி ரசமாக அமைந்துள்ளன.

கவிதையின் போக்கு மாறிக் கொண்டே செல்லுகிறது. ஒவ்வொரு படைப்பாளியும் தான் நினைத்த விதத்தில் தத்தமது கருத்துக்களை தனக்கு வாலாயமான விதத்தில், மொழியில் சொல்லிச் செல்கிறார்கள். சிலருடைய கவிதைகள் பெரும் மயக்கத்தை உண்டு பண்ணுபவை. சிலருடைய கவிதைகள் எதைப் பேசுகின்றன என்று மீண்டும் மீண்டும் படித்தும் புரிந்து கொள்ள முடியாதவை. பர்வீனின் கவிதை மொழி நேரே பேசுகிறது. படிப்பாளி முதற்கொண்டு சாதாரண வாசகன் வரை சென்றடையும் மொழியாக அது அமைந்திருக்கிறது.

தினமும் ஆயிரக் கணக்கான கவிதைகள் எழுதப்படுகின்றன. கோடிக் கணக்கில் கவிதைகள் குவிந்தாலும் கவிதை என்று நாம் சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவற்றுள் அதி உன்னதமானவை என்று பொறுக்கியெடுப்பதற்கு இருப்பவை அபூர்வம். உயிருள்ள ஒரு கவிதை என்றைக்குமே தன்னளவிலும் படிப்பவர் மனதுக்குள் சதா துடித்துக் கொண்டேயிருக்கும்.