Monday, March 9, 2015

நாச்சியாதீவு பர்வீனின் மூன்றாவது இதயம்!


நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் உடனே நமது மனதில் ஒட்டிக் கொள்வதில்லை. வெகு சிலரே எந்த வித நிபந்தனையுமில்லாமல் மனதில் வந்து அமர்ந்து விடுவார்கள். அப்படித்தான் நானும் பர்வீனும் பரஸ்பரம் ஒருவரில் ஒருவர் ஒட்டிக் கொண்டது நடந்திருக்க வேண்டும்.

பர்வீனுக்கும் எனக்குமான உறவுக்கு ஏறக்குறையப் பத்து வருடங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். குறிப்பாக இலக்கியமும் சமூகாபிமானமுமே எங்களது உறவைப் பாதுகாத்து வந்திருக்கின்றன. இவற்றை விட வேறு அம்சங்களுக்கு எங்களது உரையாடலில் முக்கியத்துவம் அன்றும் இருந்ததில்லை, இன்றும் இருந்ததில்லை!

இவ்வாறான நட்புக்குள் ஒருவர் மற்றவரின் கவிதைத் தொகுதியை முன் வைத்துப் பேசுகையில் பரஸ்பர முதுகு சொறிதல்களுக்கு பெருமளவில் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த நட்புக்கு அப்பால் நின்றே நான் பேசியாக வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் எனது காலத்துக்குப் பிந்தி வந்தவர்கள் பலர் என்னை அழைத்துப் பேச வைத்ததில் தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் ஏமாந்திருக்கிறார்கள். அது எனது வித்துவத்தை முன்வைக்கவோ எனது முன்னோடி அந்தஸ்தைத் தக்கவைக்கவோ செய்யப்பட்ட எத்தனங்கள் அல்ல. என்னளவில் எனது தராசு முள்ளு சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்.

இந்தத் தொகுதியில் 51ம் பக்கம் 'என் எதிரிகளுக்கு' என்று ஒரு கவிதை இருக்கிறது. இந்தக் கவிதையை மாத்திரமே முன் வைத்து பர்வீன் என்ற படைப்பாளியை நம்மால் முழுவதுமாக எடை போடக் கூடியதாக இருக்கும். உணர்வு பூர்வமானதும் உணர்ச்சிபூர்வமானதும் தனது மண்ணின் மீதுள்ள காதலின் ஆழத்தைப் புலப்படுத்துவதாகவும் சிறுமை கண்டு பொங்கிச்;   சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் அப்பால் எதுவுமில்லை என்றும் உரத்துப் பேசுவதுமான இந்தக் கவிதையை அவர் வானொலி இலக்கிய மஞ்சரிக்காக எனக்கு முன்னிலையில்தான் முதலில் வாசித்தார்.

நியாயத்தைப் பேசும் குரல் எப்போதும் அழுத்தமாகவும் வீரியமாகவும் வெளிப்படும். அப்படித்தான் அந்தக் கவிதை அவரது வாயில் இருந்து வெளிவந்தது. அக்கவிதை கொண்டுள்ள தீயதைத் தன் காலில் போட்டு ஆவேசத்துடன் நசுக்கும் வார்த்தைகள் ஒரு கணம் என்னைப் பயமுறுத்தியதை நான் மறைக்க முடியாது. ஆனால்  மனிதனின் ஏழ்மையை விற்றுப் பிழைப்பவர்களுக்கு எதிராக ஒரு கவிஞன் தனது சொல்வாளை வீசும் போது இன்னொரு கவிஞனால் அதைத் தடுப்பது சாத்தியம் இல்லை. அவ்வாறு செய்வதும் கவிதையைப் படைத்த கவிஞனை சமரசத்தின்பால் தள்ளி விடுவதும் அல்லது அந்த எல்லை நோக்கி நகர்த்துவதும் ஒரு பாவ காரியம் என்பதை நான் அறிவேன்.

நூல் வெளியீடு - முதல் பிரதி பெறும் ஹாஜி இஸ்ஹாக்

பர்வீன் என்ற படைப்பாளியின் பலமும் பலவீனமும் தனது பிரதேசமும் அது சார் மக்களுமாகவே இருப்பதைத் தொடர்ந்தும் நான் கண்டு வந்திருக்கிறேன். அவரது கவிதை, அவரது எழுத்து, அவரது சிந்தனை, அவரது நடவடிக்கைகள், அவரது அரசியல் என்று யாவுமே தனது பிரதேசம், தனது சமூகம் என்றே இருந்து வருகிறது. வேறோர் இடத்தில் ஒரு தினத்தில் பர்வீனும் கலந்து கொள்ளும் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தாலும் கூடத் தனது பிரதேசத்தில் ஒரு சிறிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமானால் அவர் தனது பிரதேசத்தில் தங்கி விடுவதையே தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார். இதுதான் பர்வீன் என்ற கவிஞன் தனது பிரதேசம், தனது பிரதேச மக்கள், தனது சமூகம் ஆகியவற்றின் மீது வைத்திருக்கும் பேரபிமானம், பற்று, பாசம் எல்லாமே!
இந்தக் கவிதைத் தொகுதியில் 30 கவிதைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றுள் மூத்தமா, உம்மா, மனைவி என்று மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளதுடன் எட்டாத கனியாகவே போய்விட்ட ஆனால் மனதில் நின்று விட்ட காதலி பற்றியும் இரண்டு கவிதைகள் உள்ளன. யார் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - அநேகமாகவும் எல்லா ஆண்களின் நெஞ்சுக்குள்ளும் மரணம் வரை ஒரு பெண் வாழ்ந்து கொண்டேயிருக்கிறாள் என்பது ஒரு மறைக்கப்பட்ட உண்மை. பலர் ஒரு போதும்... ஒரு போதும் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் அதைச் சொல்லும் தைரியமும் ஓர்மமும் கவிஞனுக்கு மட்டுமே உண்டு.

எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தைரியமும் திறந்த நூலாகவே வாழ்ந்து விட்டுப் போவோம் என்ற தெளிவும் உள்ள ஒரு படைப்பாளி இதைச் சொல்ல மட்டுமல்ல, எதைச் சொல்லவும் அச்சப்பட மாட்டான். அது ஒரு சிறந்த படைப்பாளிக்குப் பெரும் அழகு சேர்ப்பது என்று நான் கருதுகிறேன்.

சவூதியில் கொலை செய்யப்பட்ட ரிஸானா பற்றிய கவிதை, பனை, முருங்கை, புளியமரம், அரச மரம் என ஒவ்வொரு கவிதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு பழமில்லாத மரம் - என்றும் ஒரு கவிதை உண்டு. அது முஸ்லிம் அரசியலைப் பேசுவதாக நான் கருதுகிறேன். மீனவர்கள், ஆசான்கள் பற்றியும் இரண்டு கவிதைகள் அடங்கியுள்ளன.

ஒட்டு மொத்தமாக ஒரே மூச்சில் இத்தொகுதியைப் படித்து விட முடியும். பர்வீன் என்ற படைப்பாளியின் கொடுமை கண்டு கொதிக்கும் ஆவேசம், கையறு நிலைக்குள்ளானவர்கள் மீதான பச்சாதாம், நடந்திருக்க வேண்டியவை நடக்காமல் போன ஏக்கம், பிரதேசம் - சமூகம் எனக்கருதப்படும் மக்களின் நலன் குறித்த எதிர்பார்ப்பு ஆகியன இக்கவிதைகளின் வடி ரசமாக அமைந்துள்ளன.

கவிதையின் போக்கு மாறிக் கொண்டே செல்லுகிறது. ஒவ்வொரு படைப்பாளியும் தான் நினைத்த விதத்தில் தத்தமது கருத்துக்களை தனக்கு வாலாயமான விதத்தில், மொழியில் சொல்லிச் செல்கிறார்கள். சிலருடைய கவிதைகள் பெரும் மயக்கத்தை உண்டு பண்ணுபவை. சிலருடைய கவிதைகள் எதைப் பேசுகின்றன என்று மீண்டும் மீண்டும் படித்தும் புரிந்து கொள்ள முடியாதவை. பர்வீனின் கவிதை மொழி நேரே பேசுகிறது. படிப்பாளி முதற்கொண்டு சாதாரண வாசகன் வரை சென்றடையும் மொழியாக அது அமைந்திருக்கிறது.

தினமும் ஆயிரக் கணக்கான கவிதைகள் எழுதப்படுகின்றன. கோடிக் கணக்கில் கவிதைகள் குவிந்தாலும் கவிதை என்று நாம் சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவற்றுள் அதி உன்னதமானவை என்று பொறுக்கியெடுப்பதற்கு இருப்பவை அபூர்வம். உயிருள்ள ஒரு கவிதை என்றைக்குமே தன்னளவிலும் படிப்பவர் மனதுக்குள் சதா துடித்துக் கொண்டேயிருக்கும்.



எனது கவிதை இதுதான், இப்படித்தான் எனக்குக் கவிதை வருகிறது - என்ற வகையில்தான் இன்று அநேக கவிதைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. பர்வீனும் அப்படியே. இவற்றின் மொழியாலும் படைப்பாளியின் சிந்தனையாலும் அந்தக் கவிதை பேசும் அம்சம் மக்களைச் சென்றடைகிறது. ஒரு படைப்பு மக்களைச் சென்றடைவதும் படைப்பாளியின் கருத்து அவதானிக்கப்படுவதுமே முக்கியம். ஒரு கவிஞனுடைய வாசிப்பும், கவிதை பற்றிய அவனது ஆழ்ந்த அறிவும் அவனது மொழி வல்லமையுமே அவன் படைக்கும் கவிதையின் அழகைத் தீர்மானிப்பவை.

பர்வீனுக்குள் இருக்கும் கவிஞனுக்கு ஓசை நயத்துடன் கவிதை பீறிடுவதை நான் இந்தக் கவிதைகளில் ஆங்காங்கே அவதானிக்கிறேன். உதாரணமாக...

'ஓட்டை விழுந்த உங்கள் வாழ்வை முதலில் முதலில் ஒட்டுங்கள்
ஆட்டைப் போல மாட்டைப் போல என்று பிறகு திட்டுங்கள்!'

ஆசான்களுக்கு ஓர் அஞ்சல் - பக். 02)

'வழிகள் தோறும் காதல் கொடிகள்
விரிந்து கிடந்தன ஞாபக வெளியில்..!'

'யாரின் கண்கள் நம்மைச் சுட்டது
காதல் கொடிகள் அறுந்து விட்டது!'

தலைப்பில்லாத என் கவிதை பக்கம் - 23)

ஒரு வரிசையில் நிற்கும் இளம் பெண்களில் தன்னுடைய ஆளைக் கண்டு கொண்டால்  காதல் ஊறிய இளைஞனுக்குள் எப்படிப் பரவசம் வருமோ அப்படியும் சில இடங்கள் இக்கவிதைகளுக்குள் உண்டு. உதாரணத்துக்கு ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்...

'அந்தத் தாவணிக் கிளியை அவன் தலையில் வைத்துத் தாங்கினான்
அவன் நினைவுகளை அவள் நெஞ்சில் நிரப்பித் தூங்கினாள்!'

(காதலின் கல்வெட்டு - பக் 10)

இததான் கவிஞர்களின் அழகு. எதையும் அழகாகப் பார்க்கவும் அழகாககச் சொல்லவும் உள்ளத்தை மலர்த்தும் விதமாக எடுத்துக் கூறவும் கவிஞர்களால், படைப்பாளிகளால்தான் முடியும்.

இலக்கியப் படைப்பாளிகள், கலைஞர்கள் எப்போதும் ஏனைவர்களை விடவும் சிறப்பு வாய்ந்தவர்கள். இந்தப் பிரதேசத்தில் நூற்றுக் கணக்கான கோடீஸ்வரர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான பள்ளிவாசல் தலைவர்கள், பொறியியலாளர்கள், பல்வேறு உயர் பதவியில் இருப்பவர்கள், வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் இருந்தார்கள்... இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எனக்குத் தெரியாது. என்னைப் போல பலருக்கும் தெரியாது. ஆனால் ஒரு அன்பு ஜவஹர்ஷாவை, கெக்கிராவ சஹானாவை, சுலைஹாவை, நாச்சியாதீவு பர்வீனை, எம்.சி. ரஸ்மினை, வஸீம் அக்ரமை, எம்.சி. நஜிமுதீனை, அன்பு அமீனை, நேகம பஸானை, மிஹிந்தலை பாரிஸை ஏன் அண்மையில் இலக்கியத்தில் நாட்டம் காட்டி வரத் தொடங்கியுள்ள நாச்சியாதீவு ரினோஸாவைக் கூடக் கிழக்கில் பிறந்து தலை நகரில் வசிக்கும் எனக்குத் தெரிந்திருக்கிறது.

இதுதான் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்குமுரிய தனிச் சிறப்பு. அவர்கள் வாழுமிடம் பிறப்பிடம் எல்லாம் அவர்களால் வெளிச்சத்துக்கு உள்ளாகும். கவனிப்புப் பெறும். பிரபல்யமாகும். எப்போதும் பேசப்படும்!

இன்றைய சமூக முக்கியஸ்தர், பெருங்கோடீஸ்வரர் - மிஞ்சினால் முக்கியத்துவம் இருக்கும் வரைக்கும், செல்வம் இருக்கும் வரைக்கும் சமூகத்தில் பேசப்படுவார்கள். அவர்களால் ஒரு நல்ல, அரிய காரியம் ஒன்று நடந்திருந்தால் 50 ஆண்டுகள் பேசப்படக் கூடும். ஆனால் இன்று வெளியிடப்படும் இந்தக் கவிதைத் தொகுதியின் இறுதிப் பிரதி உலகில் இருக்கும் வரை பர்வீன் என்ற படைப்பாளி பேசப்படுவான், அவனது ஊர் பேசப்படும்.
இன்றைய தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் நாட்டு நிலைமையைப் பற்றியும் சமூக நிலைமைபற்றியும் தெரிந்து கொள்ளத் தலைமுறை கடந்து வர இருக்கும் ஆய்வாளனுக்கு, வரலாற்றாசிரியனுக்கு ஒரு படைப்பாளியின் நூல்தான் முக்கியமானது. இன்றைய மக்கள் கூட்டத்தின் முழு மொத்த வாழ்வியலையும் பண்பாட்டையும் நாவல்களில், சிறுகதைகளில், கவிதைகளில் இருந்துதான் அவன் கண்டு பிடிக்கிறான்.

இந்த இடத்தில் பர்வீன் பற்றிய ஒரு முக்கியமான எனது அவதானத்தைக் குறிப்பிட்டேயாக வேண்டும். எமக்குப் பிறகு தோன்றிய எழுத்தாளர் அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும் அவரது கவிதைகளை அந்த அணியினரோடு சேர்த்துப் பார்த்தாலும் கவிதைகளுக்கு அப்பால் அவரது எழுத்துக்களைப் படிக்கும் போது அவரை அந்த அணியில் என்னால் சேர்க்க முடியவில்லை. அதை இன்னும் தெளிவாகச் சொல்வதானால் கவிதைகளை விட அவரது ஏனைய எழுத்துக்கள் ஒரு மூத்த எழுத்தாளனின் எழுத்துக்களின் அழகு கொண்டு கவித்துவமும் தாக்கமும் மிக்கவையாக இருக்கின்றன. அவரது கவிதைகளை விட அவரது பத்திரிகைக் கட்டுரைகளாகட்டும், சமூகவியல் சார்ந்த குறிப்புகளாகட்டும் - அவற்றை நான் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கிறேன்.

எந்த ஒரு சிக்கலையும் கருப்பு - வெள்ளை என்று பேச பர்வீன் தயங்குவதில்லை. இங்குதான் பர்வீன் என்ற ஓர் எழுத்தாளுமையின் அரசியல் நோக்கின் போக்கு வெளிப்பட்டு நிற்பதாகப் புரிந்து கொள்கிறேன்.

பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் சமூக, அரசியல் சிந்தனைகளை தமது எழுத்துக்களில் மறைமுகமாக வெளிப்படுத்தவதோடு நின்று விடுவார்கள். அரசியலில் களத்தில் இறங்கிச் செயற்படும் போது தாம் கடுமையாக விமர்சிக்கப்படுவோம் என்ற பயம் அவர்களுக்கு உண்டு. மக்களுக்கான களச் செயற்பாடு என்பது பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சிப் பகிர்வது போன்ற ஓர் இலகுவான சிரமம் அல்ல. உண்மையில் அது ஒரு போராட்டம். எனவே மேலோட்டமாக அல்லது உள்ளேட்டமாகத் தமது கவிதைகளில் கதைகளில் கோடி காட்டுவதுடன் தமது கடமையை முடித்துக் கொண்டு விடுவார்கள்.

உள்ளோட்டமாகவும் அல்லாமல் மேலோட்டமாகவும் அல்லாமல் நேரடியாக அரசியல் பேசவும் எழுதவும் களத்தில் இறங்கிச் செயற்படவுமான துணிச்சல் வாய்ப்பது அபூர்வமானது. அதற்கு மிகுந்த மனோ தைரியமும், வலிமையும் தேவைப்படுகிறது. இந்தத் துணிச்சலையும் மனோ வலிமையையும் நான் பர்வீனில் காண்கிறேன். எந்த ஒரு சமூகப் பணிக்கும் களத்தில் இறங்கிச் செயற்படும் உத்வேகமும் உன்னத பண்பும் அவரிடம் இருக்கின்றன.

பயணங்களின் போது சகோதரர் ரஸ்மினும் நானும் பர்வீனின் இயங்கு தளங்கள் குறித்து, அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பலமுறை உரையாடி இருக்கிறோம். இந்த விடயம் இது வரை பர்வீனுக்குக் கூடத் தெரியாது. ஆயினும் நேரடியாக அவரது அரசியல் அபிலாஷைகள் குறித்து நானே வினவியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் 'எனக்கு அரசியலில் இறங்குவதற்கான பணப் பின்புலம் கிடையாது. ஆனால் எமது மக்களது குரல் நாடாளுமன்றத்தில் எமது மண்ணைச் சார்ந்த ஒருவர் மூலமே ஒலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.

அவரது ஆசை சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பிரதிபலிப்பதை உங்களில் பலரும் அறிவீர்கள். அனுராதபுர முஸ்லிம்களிலிருந்து ஒரு பிரதிநிதி நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று பாசாங்கில்லாமல் கபடம் இல்லாமல் ஒலிக்கும் அவரது குரல் எனக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. எல்லா அரசியல் முக்கியஸ்தர்களோடும் பிரபல்யங்களோடும் அவருக்குத் தொடர்பு இருக்கிறது. ஆனால் தமது பிரதேச மக்களுக்கான பிரதிநிதித்துவம் ஒன்றை அடைய வேண்டும் என்பதற்காக யாருடனும் சமரசம் செய்து கொள்ள அவர் தயாராக இருப்பதையும் நான் புரிந்திருக்கிறேன்.

தனக்கெனச் சிந்திக்காமல் தான் சார்ந்த பிரதேசமும் தான் சார்ந்த மக்கள் கூட்டமும் அதே மக்கள் குழுமத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகக் களமிறங்கிப் போராடத் தயாராக இருக்கும் ஒருவராக பர்வீன் இருப்பது குறித்து நான் பெரிதும் சந்தோஷமடைகிறேன். ஏனெனில் இதில் போலித்தனங்கள் எதுவும் கிடையாது.

இந்த விவகாரம் குறித்து நான் சற்று அழுத்தி வாசிப்பது ஏன் என்று உங்களுக்குக் கேள்விகள் எழலாம். பர்வீன் என்ற எனக்குப் பழக்கப்பட்ட நபர் நேரடி அரசியலில் இறங்கவில்லை என்பதால் அவருக்கு வெள்ளையடிக்கும் அவசியம் எனக்கு இல்லை. ஒரே சமூகத்தின் சக படைப்பாளியான எனதும் பர்வீனினதும் அலை வரிசை ஒன்றுதான். இந்த நாட்டில் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் மாகாணங்களில் சிதறிவாழும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்படாத வரை அவர்களது மொத்தமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலே போகும் என்ற பர்வீனின் கருத்துடன் நானும் உடன்பட்டுச் செல்கிறேன். நானும் ஒரு முஸ்லிம் என்ற வகையில் முஸ்லிம் சமூகம் குறித்த எனது ஆதங்கத்தை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்றே கருதுகிறேன்.

பர்வீனின் எல்லாக் கனவுகளும் மெய்ப்படப் பிரார்த்திக்கிறேன்.

(08.03.2015 அன்று அனுராதபுரம் சிரிசி மண்டபத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: