Showing posts with label 2007 islamic tamil conf - malaysia conf - ashroffshihabdeen. Show all posts
Showing posts with label 2007 islamic tamil conf - malaysia conf - ashroffshihabdeen. Show all posts

Tuesday, May 17, 2011

2007 சென்னை மாநாட்டினூடாக மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06.03

2007 சென்னை மாநாட்டைச் சொதப்பிய ஏற்பாட்டாளர்கள் சார்பில் இலங்கை இணைப்பாளர்களைக் குறை சொல்லி விட்ட அறிக்கைக்கு இணைப்பாளர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் விடுத்த பதிலறிக்கை இது. தினக்குரல் பத்திரிகையில் 22 ஜூன் 2007ல் வெளியான பகுதி - பகுதி 1 எனவும் 23ம் திகதி வெளியான பகுதி - பகுதி 2 என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி - 01


ஒரு சர்வதேச மாநாட்டைத் திட்டமிடுவதற்குத் தெரியாமல் நடத்திவிட்டு இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் கூடத் தன்னிலை விளக்கமளிக்கும் பரிதாபம் சகோதரர் ஹிதாயத்துல்லாவுக்கு நேர்ந்திருக்கிறது.

அவரது அறிக்கை சோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய்களால் ஆனது என்பதை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று மாநாட்டில் கலந்து கொண்டோர் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளதால் அவரது நியாயங்கள் இலங்கையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை முதலில் அவருக்கும் அவருடைய இலங்கை ‘பினாமி’களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவரது அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை அம்மாநாட்டின் இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்ற முறையில் தெளிவு படுத்த வேண்டியது எனது கடமையாகும்.

இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் இரு பிரிவுகளாகப் பிரிந்து தாங்களாகவே இலங்கைப் பத்திரிகைகளில் தனித் தனி அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்று ஹிதாயத்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் நண்பர் எஸ்.முத்துமீரானையும் ஒருங்கிணைப்பாளர்களாக அவர் நியமித்திருந்தனர். எனக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குமான கடிதத்தை எனது முகவரிக்கே அனுப்பியிருந்தனர். இந்த நியமனம் நடக்குந் தருணத்தில் எஸ். முத்துமீரான் சென்னையில் இருந்தார். அவரது கடிதம் அங்கு வைத்தே வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வந்த எஸ்.முத்துமீரான் தினகரன் பத்திரிகையில் இது குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் தன்னுடன் சேர்த்து என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் ஒருங்கிணைப்பாளர்களாக மாநாட்டுகட் குழுவினர் நியமித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எங்களுக்கான கடிதம் வந்த போது மாநாட்டுக்குச் செல்ல விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி கொடுத்தோம். எஸ். முத்துமீரான் கிழக்கில் இருந்தார். நாங்கள் கொழும்பில் இருந்தோம். விபரம் கோரியவர்களிடம் அவர்களின் வசதிக்கேற்ப அவரையோ எங்களையோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தோம். தொலைக் காட்சிப் பேட்டிகளின்போதும் வானொலிப் பேட்டிகளின் போதும் நானும் அஷ்ரஃப் சிஹாப்தீனும் இதையே பிரஸ்தாபித்தோம்.