Tuesday, May 17, 2011

2007 சென்னை மாநாட்டினூடாக மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06.03

2007 சென்னை மாநாட்டைச் சொதப்பிய ஏற்பாட்டாளர்கள் சார்பில் இலங்கை இணைப்பாளர்களைக் குறை சொல்லி விட்ட அறிக்கைக்கு இணைப்பாளர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் விடுத்த பதிலறிக்கை இது. தினக்குரல் பத்திரிகையில் 22 ஜூன் 2007ல் வெளியான பகுதி - பகுதி 1 எனவும் 23ம் திகதி வெளியான பகுதி - பகுதி 2 என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி - 01


ஒரு சர்வதேச மாநாட்டைத் திட்டமிடுவதற்குத் தெரியாமல் நடத்திவிட்டு இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் கூடத் தன்னிலை விளக்கமளிக்கும் பரிதாபம் சகோதரர் ஹிதாயத்துல்லாவுக்கு நேர்ந்திருக்கிறது.

அவரது அறிக்கை சோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய்களால் ஆனது என்பதை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று மாநாட்டில் கலந்து கொண்டோர் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளதால் அவரது நியாயங்கள் இலங்கையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை முதலில் அவருக்கும் அவருடைய இலங்கை ‘பினாமி’களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவரது அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை அம்மாநாட்டின் இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்ற முறையில் தெளிவு படுத்த வேண்டியது எனது கடமையாகும்.

இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் இரு பிரிவுகளாகப் பிரிந்து தாங்களாகவே இலங்கைப் பத்திரிகைகளில் தனித் தனி அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்று ஹிதாயத்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் நண்பர் எஸ்.முத்துமீரானையும் ஒருங்கிணைப்பாளர்களாக அவர் நியமித்திருந்தனர். எனக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குமான கடிதத்தை எனது முகவரிக்கே அனுப்பியிருந்தனர். இந்த நியமனம் நடக்குந் தருணத்தில் எஸ். முத்துமீரான் சென்னையில் இருந்தார். அவரது கடிதம் அங்கு வைத்தே வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வந்த எஸ்.முத்துமீரான் தினகரன் பத்திரிகையில் இது குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் தன்னுடன் சேர்த்து என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் ஒருங்கிணைப்பாளர்களாக மாநாட்டுகட் குழுவினர் நியமித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எங்களுக்கான கடிதம் வந்த போது மாநாட்டுக்குச் செல்ல விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி கொடுத்தோம். எஸ். முத்துமீரான் கிழக்கில் இருந்தார். நாங்கள் கொழும்பில் இருந்தோம். விபரம் கோரியவர்களிடம் அவர்களின் வசதிக்கேற்ப அவரையோ எங்களையோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தோம். தொலைக் காட்சிப் பேட்டிகளின்போதும் வானொலிப் பேட்டிகளின் போதும் நானும் அஷ்ரஃப் சிஹாப்தீனும் இதையே பிரஸ்தாபித்தோம்.

இதில் ஹிதாயத்துல்லா சொல்வது போன்ற அறிக்கைகளை எந்தப் பத்திரிகைகளுக்கும் நாமோ நண்பர் முத்துமீரானோ கொடுத்திருக்கவில்லை. செய்திக்கும் அறிக்கைக்கும் வித்தியாசம் தெரியாத அவர் இம்மாநாட்டின் செயலாளராகச் செயற்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

பிரிந்திருந்த எம்மை ஒற்றுமைப்படுத்துவதற்காக இலங்கை வந்ததாக ஒரு பொய்யை அவர் எழுதியுள்ளார். எமக்குள் அப்படி ஒரு பிரிவினை இருக்கவில்லை. அவர் ஓர் இரண்டுங்கெட்டான் அரசியல்வாதியாக இருப்பதால் இலங்கைக்கு யசூஸி அகாஸி, எரிக் சோல்ஹெய்ம் போன்ற சமாதானத் தூதுவர்கள் வந்து செல்வதால் தானும் ஒரு சமாதானத் தூதுவராகப் போய்வர வேண்டும் என்று ஓர் அற்ப ஆசை அவருக்குள் இருந்திருக்கலாம்.

ஸஹீஹ் முஸ்லிம் என்ற ஹதீஸ் கிரந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு விழாவுக்கு கவிக்கோ, றஹ்மத் அறக்கட்டளையின் அழைப்பின் பேரில் இலங்கை வருகிறார் என்பதாலும் கவிக்கோவும் மாநாட்டு முக்கியஸ்தர் என்பதாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநாட்டுக்குப் பணம் சேர்ப்பதற்காக - அவரது பாஷையில் சொல்வதானால் மாநாட்டின் பெயரால் பிச்சை எடுப்பதற்காகவே - ஹிதாயத்துல்லாஹ் இலங்கை வந்தார்.

புரவலர் ஹாஸிம் உமர் மற்றும் வர்த்தகர் பாயிக் மக்கின் போன்றவர்களிடம் பணம் பெற்றுத் தருமாறு அவர் என்னை வற்புறுத்தினார். வேறு செல்வதந்தர்களிடம் பணம் கறக்க முடியுமாயின் கறந்து தரும்படியும் வேண்டுகோள் விடுத்தார். முடியாத பட்சத்தில் அவர்களது தொலைபேசி இலக்கங்களையாவது தாருங்கள் என்று என்னிடம் கேட்டார்.

இது பற்றி நான் புரவலர் ஹாஷிம் உமரிடம் தகவல் தெரிவித்தேன். அவர் இதுபற்றி எக்கருத்தையும் வெளியிடவில்லை. ஏற்கனவே இலங்கை வந்த ஒரு பிரபல்யம் மிக்க இலக்கியவாதியினால் ஏற்பட்ட கசப்புணர்வு அவர் மனதில் இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஒரு விடயத்தை நிச்சயமாக என்னால் குறிப்பிட முடியும். இலங்கைப் புரவலர்கள் பணம் இறைத்திருந்தால் அழைப்பிதழில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் பணம் சேர்ப்பதே ஹிதாயத்துல்லாவின் முழு நோக்கமாக இருந்தது. கடந்த காலங்களில் மாநாடு நடத்துவதற்கு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் எந்தவொரு செயலாளரும் இவரைப் போல் யாசகம் கேட்டு தெருத்தெருவாக அலைந்தது கிடையாது.

இலங்கைக்கு வந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் அவர் சந்தித்தார். அவரிடமுங்கூட பணம் சேர்த்துத் தாருங்கள் என்றுதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிணங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொடுத்த ‘சண்டெல்’ மட்டும் ‘ஹட்ச்’ நிறுவனங்களின் விளம்பரங்களை நீங்கள் மாநாட்டு மலரில் காணலாம்.


பேராளர்களிடம் சேர்த்த பணத்தைத் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கிக் கொண்டிருந்த வேளை அவர்கள் கேட்டும் கூட நாங்கள் கொடுக்கவில்லை என்று ஒரு பெரும் பொய்யை ஹிதாயத்துல்லா சொல்லியிருக்கிறார்.

எம்முடைய பட்டியலில் உள்ளடங்கியிருந்த 75 பேரில் 56 பேர் எங்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள். இவர்கள் அனைவரும் பேராளர் கட்டணத்தை விமானக் கட்டணத்தோடு சேர்த்து எமக்குச் செலுத்தியிருந்தார்கள். மீதிப் பத்தொன்பது பேரும் மாநாட்டில் எம்முடன் இணைந்து கொள்வதாகத் தெரிவித்து விட்டு சில தினங்கள் முன்பதாகவே இந்தியா சென்று விட்டனர். இவர்களில் சிலர் மட்டுமே உரிய வேளையில் பேராளர் கட்டணம் செலுத்தியவர்கள். ஏனையோர் எம்மைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்காததால் இந்தியாவில் வைத்து அதனைச் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தனர்.

வந்த முதல் நாளிலேயே தங்கும் அறைக்காக விடுதி விடுதியாக அலைந்து திரியும் போது அவர்களிடம் பணம் கேட்டு நிற்பது அநாகரிகம் என்பதால் அடுத்த தினமே அதைச் சேகரிக்கத் தொடங்கினோம்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் நெறியாளர்கள் ஐந்து பேர். துணைத் தலைவர்கள் ஒன்பது பேர். துணைச் செயலாளர்கள் ஒன்பது பேர். தவிர தலைவர், செயலாளர், துணைச் செய்லாளர், பொருளாளர் என நான்கு பேர். இவர்களில் பொருளாளரைத் தவிர வேறு எவரும் எமது பக்மே தலை வைத்துக் கூடப்படுக்கவில்லை. இவர்களில் பொறுப்புள்ள ஒருவர் வந்து அப்பணத்தைக் கேட்டிருந்தாலோ அல்லது ஒரு நபரை அனுப்பிப் பணத்தைக் கோரியிருந்தாலோ நாம் அதனைக் கொடுத்திருப்போம். ஏனெனில் நமது நாட்டைச் சேர்ந்த எந்தப் பேராளரும் பிச்சைக்காரர்கள் அல்லர் என்பதால் அவர்களுக்கான பணத்தை மாநாட்டை நடத்துவோரிடம் கொடுத்து விட்டுப் பின்னர் பெற்றுக் கொள்ளத் தயாராயிருந்தோம்.

அப்படியாயின் பணத்தை உங்களைப் பார்க்க வந்த பொருளாளரிடம் கொடுத்திருக்கலாமே என்று நீங்கள் நியாயமான ஒரு கேள்வியைக் கேட்க முடியும். ‘திட்டமிட்டே என்னை ஓரங் கட்டிளார்கள்’ என்ற தலைப்பில் சமரசம் 16- 30 ஜூன் இதழில் பொருளாளர் பொருளாளர் சொல்லியிருக்கும் வார்த்தைகளை இங்கு தருவதன் மூலம் இந்தக் கேள்விக்கான தெளிவான விடை உங்களுக்குக் கிடைக்கும். அவர் இவ்வாறு சொல்கிறார்...

“பேராளர் கட்டணத் தொகை மற்றும் விளம்பரத்திற்காகக் கிடைத்த தொகை மட்டுமே வங்கியில் இருந்தது. புரவலர்களிடமிருந்து வந்த தொகைக்கான விவரங்களை அவர்கள் எனக்குத் தெரிவிக்கத் தயாரில்லை. இந்நிலையில் செக்கில் கையெழுத்துப் போட்டு மொத்த செக் புக்கையும் எங்களிடம் தந்து விடுங்கள். நீங்கள் கணக்கை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் நான் ஒரேயடியாக எல்லா ஆவணங்களையும் செக் புக்கையும் தலைவரிடம் ஒப்படைத்து விட்டு வெளிவந்து விட்டேன். அதன் பிறகு அவர்கள் என்ன வசூல் செய்தார்கள், என்ன செலவு செய்தார்கள் என்ற விவரம் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. நான் பெயருக்குத்தான் பொருளாளர்.”

அவரது பதிலின் மூலம் நாம் தெரிந்து கொள்வது உண்மையில் இலங்கையருடன் இருந்த நட்பின் பெயரில்தான் அவர் அங்கு வந்து நலம் விசாரித்தாரே தவிர பொருளாளராக அல்ல.

இதேவேளை கவிக்கோவும் தலைவர் கெப்டன் அமீர் அலியும் செயலாளர் ஹிதாயத்துல்லாவும் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் பொருளாளரிடம் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டு தரக் கேட்டதைக் கொண்டு ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள்.

பேராளர் பணத்தைத் தந்தால்தான் வசதிகள் யாவும் செய்து தரப்படும் என்று ஒரு வார்த்தை எமக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருக்குமாக இருந்தால் அதனை இலங்கையிலிருந்தே நாம் அனுப்பி வைத்திருப்போம். 15,500 ரூபாவுக்கு விமானச் சீட்டு வாங்க முடிந்த நமது நாட்டுப் பேராளர்களுக்கு பேராளர் கட்டணமான 660 ரூபாவைத் தருவது சிரமமானது என்று நாங்கள் எண்ணவில்லை. அந்தப் பணம் அத்துணை முக்கியமானது என்று கருதியிருந்தால் சென்னை விமான நியைத்தில் நாம் விமானத்தை விட்டு இறங்கும் போது ஹிதாயத்துல்லாஹ் அங்கு நின்று அதை வாங்கிச் சென்றிருக்கலாம்.

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு நாங்கள் கப்பலில் சென்று இறங்கிய போது மண்டபம் என்ற இடத்தில் எம்மை வரவேற்கக் காத்திருந்த மாநாட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவரான மர்ஹ_ம் ஜமால்தீன் என்னிடம் பேராளர் கட்டணத்தை அறவிட்டுத் தன்னிடம் ஒப்படைக்கும் படி கேட்டார். அதன்படி அனைத்துப் பேராளர்களிடமும் அதனை அறவிட்டு மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஒப்படைத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

உணவுக் கூப்பன் இல்லாத வரிசைகளை உருவாக்கியதாக ஹிதாயத்துல்லாஹ் மற்றொரு பொய்யையும் சொல்லியிருக்கிறார். விபரம் வேண்டுபவர்கள் இலங்கையிலிருந்த சென்ற பேராளர்களைத் தொடர்பு கொண்டு ஹிதாயத்துல்லாவின் வார்த்தைகளின் உண்மைத் தன்மையை அறிந்த கொள்ளலாம்.

40 பேரை அழைத்து வந்த குழுவினர்களில் ஜனாப் நிலாம் தலைமையில் வந்த 15 நபர்கள் என்று அவரத அறிக்கையில் சொல்கிறார். ஒரு குழுவினர் 75 பேர்களை அழைத்துவந்தவர்கள் என்று ஒரு இடத்திலும் 25 பேர்களை அழைத்து வந்தவர்கள் என்று மற்றொரு இடத்திலும் சொல்கிறார். அவரது அறிக்கையின் ஓரிடத்தில் இலங்கைப் பேராளர்களை அழைத்து வந்த குழுத் தலைவர் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந்தார் என்று சொல்கிறார். எத்தனை பேரை அழைத்து வந்தது எந்தத் தலைவர் என்று அவர் குறிப்பிடாததால் இது குறித்த நம்மால் பதில் தர முடியாது. தவிரவும் சகட்டு மேனிக்கு இடையூறுகள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்த போதும் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தது நாம் அல்லர்.

இதற்குள் இருக்கும் எனது வினாக்கள் எவையென்றால் விரும்பியவரெல்லாம் ஆளுக்கு ஒரு குழுவை அழைத்து வர முடியுமென்றால் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டது எதற்காக? 40 பேரை அழைத்து வந்தவர் எந்த இணைப்பாளர்?

நிலாம் சரியாக நடந்து கொண்டார் என்று குறிப்பிடும் ஹிதாயதத்துல்லா ஓர் இலங்கைப் பேராளனாக இருந்து மாநாட்டில் இலங்கையருக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து நிலாம் எழுதிய விடயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் எழுதிய கட்டுரைகள் 2007.06.10ம் 17ம் திகதிகளில் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கின்றன. ஹிதாயத்துல்லா எவற்றை மறைக்க முயற்சிக்கின்றாரோ அவற்றை நிலாம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். நண்பர் நிலாமைச் சரி கண்டார் என்றால் ஹிதாயத்துல்லாவின் அறிக்கை பொய்களால் ஆனது என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார் என்று அர்த்தம்.

ஹிதாயத்துல்லாவின் அறிக்கையில் உச்சக்கட்ட நகைச்சுவையாக நான் கருதுவது ‘ஜின்னாஹ்வுக்குப் பொற் கிழி வழங்குவதென யாரும் வாக்களிக்கவில்லை’ என அவர் தெரிவித்திருப்பது. நான் பொற்கிழி வழங்கக் கோரினேன் என்பதை முதலில் அவர் நிரூபிக்க வேண்டும். அவர் இலங்கைகக்கு வந்திருந்த போது பயணத்துக்கு வாகன ஏற்பாடுகளை இலவசமாகச் செய்த கொடுத்தவன் நான். எனது சொந்தப் பணத்தில் மாநாடு பற்றிய கூட்டத்தை நடத்த தமிழ்ச் சங்கத்தில் மண்டபம் ஏற்பாடு செய்தவன் நான். இலங்கையில் அவர் நின்ற நாட்களில் அவர் உபயோகித்த செல்லிடத் தொலைபேசி என் இளைய மகனுடையது. அதன் சிம் கார்ட்டைக் கூடத் திருப்பித் தராமல்தான் இங்கிருந்து அவர் சென்றார் என்பதை உறுதி செய்து கொள்ள விரும்பினால் என் மகன் ஷப்றாஸைத் தொடர்பு கொள்ளலாம். அவர் அதில் பேசுவதற்காகத் தனது பணத்தில் ரீ லோட் (டாப் அப்) செய்து கொடுத்தது கூட என் மகன்தான்.

பகுதி - 2

இது தவிர இரு இந்தியப் படைப்பாளிகளுக்கு பொற்கிழி வழங்குவதற்காக இலங்கை ரூபாய் மதிப்பில் 60,000 ரூபாவை நான் ஏற்பாடு செய்திருந்தேன். இலங்கையின் இரண்டு பெண்கள் அமைப்புகளான எம்.ஐ.சி.எச் (மகளிர் பிரிவு), எம்.டபிள்யூ.எஸ்.எல் ஆகியவை இதனை வழங்க முன்வந்திருந்தன. இவ்வியக்கங்களின் சார்பின் தலைவியும் துணைத் தலைவியும் பேராளர்களாக எம்முடன் வந்திருந்தனர். இத் தொகை பற்றி இலங்கையிலிருந்த செல்வதற்கு முன் ஹிதாயத்துல்லாவுக்கு நான் அறிவித்திருந்தேன். அதே போல பொருளாளருக்கும் தெரிவித்திருந்தேன். இப்பணத்தை அவ்வியக்கங்களைச் சேர்ந்தவர்களின் கரங்களாலேயே வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகப் பொருளாளர் கூறியிருந்தார். ஆனால் பொருளாளர் மாநாட்டு நடவடிக்கைகளிலிருந்து விலகி நின்றார். மாநாட்டை நடத்தியோர் இலங்கைப் பேராளர்கள் மீது காட்டிய அலட்சிய மனோபாவம், மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் நடவடிக்கை பற்றி இந்திய நண்பர்களே தெரிவித்த சந்தேகங்கள் போன்ற காரணங்களால் அப்பணத்தை அவர்களிடம் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுக்கப்பட்டால் அது உரியவர்களுக்கு வழங்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் எங்களுக்கிருந்தது. நமது பேராளர்களைச் சரிவரக் கவனிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகவே எனக்கு வழங்கப்படவிருந்த விருதினையும் புறக்கணித்தேன்.

பொற்கிழி வழங்குவதற்குப் பணம் ஏற்பாடு செய்து செய்து கொண்டு சென்ற நான் பொற்கிழிக்கு ஆசைப் பட்டேன் என்பது அபாண்டம் அல்லவா? பஞ்சத்துக்குப் பாம்பாட்டும் நிலையில் நான் இல்லை என்பதை மனச்சாட்சி உளள்வராக இருந்தால் ஹிதாயத்துல்லா ஒத்துக் கொள்வார்.

கண்டி மௌலானா சலாவுதீன் என்பவர் குழுத் தலைவர் மீது புகாரைக் கூறிவிட்டு எங்களிடம் ஒரு கடிதத்தையும் தந்துவிட்டுச் சென்றார் என்று தனது அறிக்கையில் ஹிதாயத்துல்லாஹ் குறிப்பிடுகிறார். கண்டி மௌலானா என்ற ஒரு நபரை எங்களுக்குத் தெரியாது. ஆனால் சலாஹ_தீன் மௌலவி என்ற நபரைத் தெரியும். புகார் கொடுக்கும் இடம் பொலிஸ் நிலையம். அங்கு கொடுக்காமல் ஏன் ஹிதாயத்துல்லாவிடம் கொடுத்தார் என்பது முதல் கேள்வி.


சலாஹ_தீன் என்பவர் எங்கள் பேராளர் பட்டியலில் உள்ளவர் அல்லர். ஹிதாயத்துல்லாவிடம் நாம் அனுப்பிய பட்டியல் உண்டு. அதில் அவர் சலாஹ_த்தீன் என்ற பெயர் உள்ளதா இல்லையா என்பதையல்லவா முதலில் பார்த்திருக்க வேண்டும். பேராளர் பட்டியல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானச் சிட்டுகள் தயாரான பிறகு மேற்குறித்த சலாஹ_த்தீன் என்னிடம் ஓர் உதவி கோரினார். பணம் தருவதாகவும் தனக்கும் தனது மனைவிக்கும் எம்முடன் வருவதற்கு இரண்டு விமானப் பயணச் சீட்டுக்களைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டார். எமது பட்டியல் பூரணப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டு விட்டதை அவருக்குச் சொன்ன போது தான் ஹிதாயத்துல்லாவிடம் பேராளர் பணம் செலுத்தியதாகவும் எனவே பயணச் சீட்டை மாத்திரம் பெற்றுத் தருமாறும் தொலைபேசியில் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

எமக்கு விமானப் பயணச் சீட்டு ஏற்பாடுகளைப் பொறுப்பெடுத்துச் செய்து தந்த டாக்டர் தாஸீம் அகமது கண்டியில் மரணமடைந்த தனது சிறிய தாயாரின் ஜனாஸாவுடன் கல்முனை சென்றிருந்தார். சலாஹ_தீனின் விமானச் சீட்டுக்காக அவரை அங்கு தங்க விடாமல் வரவழைத்து அதனைப் பெற்றுக் கொடுத்தேன்.

நாங்கள் மொத்தமாக விமானச் சீட்டுக்களைப் பெற்றதாலேயே 15,500 ரூபாவுக்கு விமானச் சீட்டுப் பெற முடிந்தது. மேற்கொண்டு விமாச் சீட்டுப் பெறுவதாயின் 1200 ரூபா மேலதிகமாகத் தேவை என ஜோர்ஜ் ஸரூவர்ட் நிறுவனம் தெரிவித்தது. இதனை சலாஹ_தீனிடம் தெரிவித்தேன். அவர் அதற்கு இணங்கினார். அவ்விமானச் சீட்டுக்கள் எனது பணத்திலேயே பெறப்பட்டன. அதன் பிறகே சலாஹ-தீன் அதற்குரிய பணத்தை அனுப்பி வைத்திருந்தார். அவர் அனுப்பிய பணத்தில் பேராளர் கட்டணம் அடங்கியிருக்கவில்லை. ஆக, அவருக்கு அவரது பணத்தில் அவரது வேண்டுகோளில் விமானச் சீட்டுக்கள் இரண்டினைப் பெற்றுக் கொடுத்தோமே தவிர அவர் எங்களுடன் வந்த பேராளர் அல்லர்.

அடுத்த விடயம் இலங்கை அமைச்சர்கள் பற்றியது. அவர்கள் எவரும் கருணாநிதி கலந்த கொள்ளும் அரங்கில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அதற்கு அதற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் சொன்னார் ஹிதாயத்துல்லாஹ். ஆனால் எமது அமைச்சர்கள் எவரும் கருணாநிதி கலந்து கொள்ளும் மேடையில் அமர்ந்திருக்க வேண்டு கோள் விடுக்கவில்லை என்பதை இவ்விடத்தில் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். இதனால் அமைச்சர்களில் இருவரை முதல்நாள் மேடையில் அமர்த்தினார்கள். அதற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லுகிற படி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான அரசியல் பிரச்சினைகளால் கலைஞருடன் அமர்த்த முடியவில்லையென்றால் மலேசிய அமைச்சரை கலைஞர் பங்கு கொள்ளும் அரங்குக்கு அழைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமல்லவா?

பிறநாட்டு அமைச்சர்களை முதல் நாளுடன் கழற்றி விட்டு இறுதி நாளை தனது சொந்த அரசியல் லாபத்திற்கான தளமாக ஒதுக்கிக் கொண்டார் ஹிதாயத்துல்லா. அதற்குத் துணை போனார் கவிக்கோ. இதுதான் அதற்குள்ளிருந்த இரகசியம்.

இலங்கையர்தாம் ஒத்துழைக்கவில்லையென்றால் மலேசியப் பேராளர்கள் எவரும் இவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் உணவையும் மறுத்து தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தையுமு; மறுத்தது ஏன் என்பதற்கு ஹிதாயத்துல்லா என்ன நியாயம் சொல்லப் போகிறார். அது குறித்து ஏன் இதுவரை வாயே திறக்கவில்லை.

நாம் அங்கு சென்று இறங்கி தங்குவதற்குரிய விடுதிகளுக்கு வரும் வரை எங்கு தங்க வைக்கப்படுவோம் என்று கூட மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவிக்கவே இல்லை. மூன்று விடுகதிகளில் தங்கியிருந்த எமக்கு எத்தனை மணிக்கு உணவு வரும் எத்தனை மணிக்கு நாங்கள் புறப்பட வேண்டும் என்ற எந்தத் தகவலும் அவர்களால் தரப்படவில்லை. வாகனம் வருகிறது என்று ஒருவர் சொல்லுவார். ஆனால் வாகனம் வராது. என்ன செய்வது? யாரிடம் கேட்பது என்பதே எமக்கு ஒரு பெரும் பிரச்சினையாகியிருந்தது. மாநாடு நடத்துபவர்கள் அதற்கௌ ஓரிருவரை ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?

பேராளர் கட்டணமான ரூபாய் 250 ஐப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறார் ஹிதாயத்துல்லா. 2002 இலங்கை மாநாட்டின் போது எந்தவொரு வெளிநாட்டுப் பேராளரிடமும் ஒரு செப்புச் சதம் கூட நாம் அறவிட்டிருக்கவில்லை. மூன்று இரவுகள் நாம் அவர்களுக்கு விருந்தளித்துக் கௌரவித்தோம். பகல் பேசனத்தை மவுன்ட்லவினியா ஹோட்டலிலிருந்து வரவழைத்துத் தந்தோம். ஒவ்வொரு இடத்திலிருந்தும் போக வர குளிரூட்டப்பட்ட பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தோம். ஆய்வரங்குகளுக்குச் செல்வதற்கு ஆகக் குறைந்தது ஒரு சாதாரண பஸ்ஸை அனுப்புவதற்கு வக்கில்லாத இஸ்லாமிய இலக்கியக் கழகத்துக்கு சர்வதேச மாநாடு ஒரு கேடா?

துவக்க விழாவின் போது ஏழு மணித்தியாலங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வழங்காமல் நம்மை உட்கார வைத்திருந்தவர்தான் இந்த ஹிதாயத்துல்லா. சாதாரண பள்ளிக் கூட நிகழ்ச்சியை விட மோசமான மாநாட்டை நடத்தி விட்டு நமக்கு நியாயம் சொல்லித்தரப் புறப்பட்டிருக்கிறார். வீட்டுக்கு வரும் அடுத்த தெருவைச் சேர்ந்தவரைக் கூட நமது நாட்டவர்கள் உபசரிக்காமல் அனுப்பியவர்கள் அல்லர். கேவலம், ஒரு சொட்டு நீர் கொடுப்பதற்கு வக்கற்ற ஹிதாயத்துல்லாவுக்கு செயலாளர் பதவி கொடுத்தவர்கள் தாகத்துக்குத் தண்ணீர் கொடுக்காத பாவத்தைச் சுமந்த திரிகிறார்கள்.

காலை உணவை காலை பத்து மணிக்குக் கொண்டு வந்த தெருவில் வைத்துப் பகிர்ந்து விட்டு சுவையான உணவை வழங்கியதாக வேறு தனக்குத்தானே மாலை போட்டுக் கொள்கிறார்.

மாநாடு முடிந்ததும் எமக்குப் புத்தகப் பொதி தராமல் இழுத்தடித்தார்கள். நானும் டாக்டர் தாஸிமும் எங்கள் கால நேரத்தைச் செலவழித்து காத்துக் கிடந்து அவற்றைப் பெறவேண்டியிருந்தது. புத்தகப் பையைப் பெற்றுக் கொண்டால் நமது அடுத்த விடயத்தைக் கவனிக்கலாம் என்று பதறிப் பதறிக் காத்திருந்தவர்கள் பலர். சிலர் புத்தகப் பொதி கிடைத்ததும் நாட்டுக்குத் திரும்பிவிடக் காத்திருந்தனர். பேராளர் பணம் தாமதமாகிறது என்பதற்காக வேறு நாட்டு நபர்களுக்கு இவ்வாறு ஒரு சீரழிவை இவர்கள் ஏற்படுத்தலாமா? அத்தாமதம் உண்மை என்றால் கேவலம், 250 பணத்துக்காகத்தானே வெளிநாட்டுப் பேராளர்களுடன் இவ்வாறு நடந்து கொண்டனர். இது ஹிதாயத்துல்லாவுக்குக் கேவலமாகத் தெரியவில்லையா?

மாநாடு குறித்து எந்த அதிருப்தியையும் இலங்கை ஒருங்கிணைப்பாளர்கள் மூவரும் இலங்கையின் எந்தப் பத்திரிகையிலும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் எழுதியிருந்ததை மறுதலிப்பதற்காக ஹிதாயத்துல்லா எங்கள் மீதும் குற்றம் சுமத்தியிருப்பது நியாயமற்றது.

கடந்த காலங்களில் இவ்வாறானஒரு பதிலை எழுதும் நிலை எனக்கு ஏற்பட்டதில்லை. இவ்வாறு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு என்னை உட்படுத்திய பொறுப்பை ஹிதாயத்துல்லாவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எங்களது பட்டியலில் இருந்தவர்களில் அநேகமானோரும் (இளைஞர்கள் உட்பட) விளங்கிக் கொள்ளும் தன்மையுடையோராக இருந்தனர் என்பது எமது மன அழுத்தத்தைப் பெரிதும் குறைத்தது. அந்தப் புரிந்துணர்வுக்காகவும் எங்கள் மீது காட்டிய அன்பு மரியாதைக்காகவும் அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

கட்சிக் கூட்டங்களுக்கு லொறிகளில் ஆள் கொண்டு செல்பவர்கள் இலக்கிய மாநாடு நடத்தினால் எப்படியிருக்கும் என்பதை இம்மாநாட்டின் மூலம் ஹிதாயத்துல்லா நமக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------

மேற்படி மாநாட்டை நடத்தியவர்களில் ஒருவரான கவிக்கோவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமே மாநாடுகள் பலவற்றை அழகாகவும் வெற்றிகரமாகவும் நடத்திய பலரை மலேசிய விழாவை விட்டுத் தூரமாக்கி விட்டிருக்கிறது. பல இலக்கியவாதிகள் கசந்து நிற்கக் காரணமாகியிருக்கிறது. பல இயக்கங்கள் துண்டாடப் பட்டு விட்டன. இந்த பெருமை அனைத்தும் மலேசிய விழாவுக்கும் அதன் ஏற்பாட்டுக் குழுவுக்குமே உரியது.


இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் சில அரசியல்வாதிகளுக்கு இலகுவான விளம்பரமாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தளமாகவும் இலக்கியவாதியல்லாத சிலர் தமக்கொரு கனவான் தனத்தைப் பெற்றுக் கொள்ளும் சுலபமான வழியாகவும் சிலருக்கு பைசாப் பார்க்கும் வியாபாரமாகவும் மாறிக் கொண்டு வருவதை எடுத்துச் சொல்வதே இவற்றை நாம் பொதுத்தளத்தில் வைப்பதன்; நோக்கமாகும்.

இன்னும் சில காலத்தில் மந்தைகளைப் போல ஏழை இலக்கியவாதிகளை ஏற்றிச் சென்று இறக்கி விட்டு இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் பெயரால் வி.ஐ.பிக்களுடன் சிலர் தனி விருந்து உண்ணும் நிலை ஏற்படும் போல் தெரிகிறது.எழுத்தினால் நிமிரந்து நிற்க முடியாமல் குறுக்கு வழியிலேயே புகழ் பெற நினைக்கும் சில இலக்கியவாதிகளும் அறிஞர்களும் இத்துயர நிலை ஏற்படத் துணை நிற்க ஆரம்பித்து விட்டார்களோ என்ற ஒரு சந்தேகமும் வலுக்கத் துவங்கியிருக்கிறது.

---------------------------------------------------------------------------------------------------

அடுத்து, 2007ம் ஆண்டு மாநாடு பற்றி அப்துல் அஜீஸ் பாக்கவி அவர்கள் எழுதிய கட்டுரையை வலையேற்றம் செய்யலாம் என்றிருக்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------------

இவ்விடயம் சம்பந்தமாகத் தைரியமாகக் கருத்துத் தெரிவிக்க விரும்புவோர் எனது மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
ashroffshihabdeen@gmail.com
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: