மேலேயுள்ள படத்தில் உள்ளவர்களைப் பார்த்து யார் என்று சொல்லுங்கள் என்று கேட்டால் ‘இது தெரியாதா... நம்ம ஜோர்ஜ் புஷ் அண்ணாச்சி’ என்று எந்த விதத் தயக்கமும் இன்றிச் சொல்லி விடுவீர்கள். ‘அட சின்ன வயசில அழகாத்தான் இருந்திருக்காரு...’ என்று கூடவே ஒரு கொமன்ட்டும் அடிப்பீர்கள்.
ஆனால் இருவரும் ஒருவரல்ல என்பதுதான் உண்மை!
பையன் பெயர் உஸாமா நபில். எந்த நாடு என்று கேட்கிறீர்களா... ஆச்சரியப்படுவீர்கள்... வேறென்ன ஈராக்தான்!
2005ல் எடுத்த படம் அது. அசலாக ஜோர்ஜ் புஷ் போலவே இருக்கிறான். அமெரிக்கப் படையினர்தான் கற்பழிப்பில் ஈடுபட்டார்கள்... பெரியவருமா... என்று உங்களுக்குச் சந்தேகம் வந்தால் அது தப்பு!
உசாமாவின் தந்தை ஒரு சாதாரண மனிதர். ஒரு சில்லறைக் கடைக்குச் சொந்தக்காரர்.
ஜோர்ஜ் புஷ் போலவே இருப்பது உசாமாவுக்குப் பெரும் தலையிடி. அவன் போகுமிடமெல்லாம் இந்தப் பிரச்சினை ஒரு நிழல் போல அவனைச் சித்திரவதை செய்து கொண்டேயிருக்கிறது.
உசாமா நபில் சொல்கிறான்:-
“இது எனது விருப்பம் அல்ல. அல்லாஹ்வின் ஏற்பாடு! இறைவன் ஒரே மாதிரி 40 பேரைப் படைக்கிறானாம். (இது அரபியில் வழங்கப்பட்டு வரும் மொழி). என்றுடைய தந்தையார் இந்த உருவ ஒற்றுமை பற்றி நீ கவலைப்படாதே என்று அடிக்கடி சொல்வார். உண்மையைச் சொல்லப் போனால் ‘ஜோர்ஜ் புஷ்’ என்கிற பெயரை நான் பல காரணங்களுக்காக வெறுக்கிறேன். இந்தப் பெயர் ஓர் அறபுப் பெயரோ இஸ்லாமியப் பெயரோ அல்ல. ஈராக்கில் ஆயிரக் கணக்கான சிறுவர்களைக் கொன்றவன் அவன். இந்தத் தோற்ற ஒற்றுமையை மறைக்க பாடசாலையில் நான் எவ்வளவோ முயற்சிக்கிறேன். ஆனால் சீக்கிரம் அடையாளம் கண்டு கொண்டு ‘புஷ்’ என்று என்னை அழைக்கிறார்கள். இப்படி அழைக்கும் போது எனக்கு திகைப்புத்தான் ஏற்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து அழைக்கப்பட்டால் அப்படியே அப்பெயர் நிலைத்து விடுமோ என்கிற பயம்தான். இதிலிருந்து எப்படி என்னைக் காத்துக் கொள்வது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”
