Showing posts with label Kayalpattinam Conference - ahsroff shihabdeen. Show all posts
Showing posts with label Kayalpattinam Conference - ahsroff shihabdeen. Show all posts

Friday, September 16, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 2


இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 2

காயல்பட்டின மாநாட்டுக்கான இலங்கைச் செயற்பாடுகளை டாக்டர் ஜின்னாஹ்வும் மானா மக்கீனும் முன்னெடுத்தார்கள். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நான் ஒத்துழைத்தேன். மானா மக்கீனுக்கு ஹாஜி பாயிக் மக்கீனும் தோள் கொடுத்தார். கவிஞர் யாழ். அஸீமும் உதவி செய்தார்.

மாநாடு நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குக் கப்பல் பயணமும் ஆரம்பமாகி விட்டது. தூத்துக்குடிக்கும் காயல் பட்டணத்துக்கும் இடையே குறுகிய பயணத்தூரமே இருப்பதாலும் ஒரு தொகையினர் கப்பலில் பயணம் செய்ய விரும்பக் கூடும் என்பதால் கப்பலில் செல்ல விரும்பும் குழுவினரை மானா மக்கீன் பொறுப்பெடுப்பதாகவும் விமான மார்க்கமாக சென்னை சென்று அங்கிருந்து பஸ் மூலம் காயல்படடினம் செல்ல விரும்புவோரை டாக்டர் ஜின்னாஹ் பொறுப்பெடுப்பதாகவும் முடிவெடுத்தார்கள்.


இந்தியா வீசா நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள்தாம் பலரது பயணத்துக்கு இடையூறாக இருந்தன. ஒன் லைனில் வீசா விண்ணப்பம் பெறுவது, அதில் ஒரு எழுத்தேனும் பிசகாமல் இருப்பது, இறங்கும் இடம் ஆகியன பலரைக் குழப்பத்தில் தள்ளின. அடையும் இடம் சென்னை என்று குறிப்பிட்டால் வீசாவிலும் அதைக் குறிப்பிடுவார்கள். அவ்வாறு வீசா பெற்றவர்கள் கப்பலில் பயணம் செய்ய முடியாது. ஆனால் வீசாவுக்கான படிவத்தை நிரப்பும் போது விரிவாகச் சொடுக்கிப் பார்த்தால் All ports என்று ஒன்று இருக்கிறது. அவ்வாறு நிரப்பினால் கப்பலிலும் போகலாம், விமானத்திலும் செல்லலாம். இந்த விடயத்தை சென்று வந்த பிறகுதான் நான் அறிய வந்தேன்.


நான் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். குழுவினர் பயணப் படுவதற்கு இரண்டு தினம் முன்னரே நானும் அல் அஸ_மத்தும் சென்னை சென்று விட்டோம். எனது நூல் வெளியீட்டை சென்னையில் நடத்தவிருந்தமையால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் காயல்பட்டினம் செல்வதற்கான பஸ் ஏற்பாடுகளைச் செய்வதும் எங்கள் நோக்கமாக இருந்தது.

காயல் பட்டினம் செல்வதற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உப செயலாளர் பேராசிரியர் அகமது மரைக்காயர் தனது வேலைப் பளுவுக்கு மத்தியில் சொகுசு பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். நான் அவரை இரவு 10.30 அளவில் ஒரு கணினி மையத்தில் சந்தித்த போது மாநாட்டு ஆய்வுக் கட்டுரை நூலுக்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தார்.