இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 06.02
நீங்கள் சந்தித்த கர்வமும் பெருமையும் மிக்க மனிதர் பெயரைச் சொல்லுமாறு என்னிடம் கேட்டால் கவிக்கோ அப்துல் ரகுமான் என்று தயக்கமே இல்லாமல் சொல்லுவேன். அவருடனான அனுபவங்கள் அப்படி அமைந்து விட்டது. இலங்கைக்கு வந்தால் நன்றாகப் பேசிக் கதைப்பார்.
இந்தியாவில் எந்தவொரு இடத்தில் கண்டாலும் காணாத மனிதரைப் போல் சென்று விடுவார். நீங்கள் அருகில் சென்று ஸலாம் சொல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசித்து விட்டுத்தான் பதில் சொல்லுவார். அதுவும் வேண்டா வெறுப்புடன். அவர் எக்கடி நடந்து கொள்வார் என்பதை குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் அன் கோ இலங்கையில் கலந்து கொண்ட கூட்டத்திலும் பகிரங்கமாக நான் சொல்லிக் காட்டினேன்.
2007 சென்னை மாநாட்டில் பழக்கமுள்ள எங்களை மட்டும் அல்ல, யாரையும் அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவர் சில வேளை தாயின் வயிற்றில் பிறக்காமல் வானத்திலிருந்து வந்திறங்கிய தேவதூதன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று கூட நான் அவ்வப்போது சிந்திப்பதுண்டு.
அது கிடக்கட்டும். இவர் எந்த விடயத்தில் சம்பந்தப்பட்டாலும் அங்கு ஒரு ஒழுங்கற்ற நிலை உருவாகி விடும் என்று நான் ஏற்கனவே குப்பப் பிச்சை முகம்மது இக்பால் மாநாட்டுக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் ஒரு தகவல் அதற்கு அணி சேர்த்திருக்கிறது. அதுதான்... திமுக.. தன் திண்ணையைக் காலி செய்திருப்பது! கவிக்கோ 2007 மாநாட்டை நடத்திய பின் கலைஞரைத் துதிபாடி வக்பு வாரியத் தலைமையைப் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே நடந்த மாநாடுகளில் கவிக்கோ ஒரு தமிழறிஞராகவே கலந்த கொண்டுள்ளார். 2007ம் ஆண்டு மாநாட்டில் ஒரு பதவியைப் பெறும் நோக்கத்தைக் கொண்டே புகுந்து விளையாடினார் என்று சென்னையில் அவ்வேளை நண்பர்கள் நமக்குச் சொன்னார்கள். கலைஞர் கதை நேற்று தமிழகத்தில் முடிவடைந்து விட கவிக்கோவின் சீட்டும் கிழிகிறது. இந்தப் பதவியை கவிக்கோவுக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் கலைஞர் சில வேளை தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திக்கலாம்!
இஸ்லாமிய இலக்கியக் கழகம் கவிக்கோ, இதாயத்துல்லாஹ் அன்கோவின் பிடிக்குள் இருக்கிறது என்பது நீங்கள் தெரிந்ததே. தமிழ் நாடு தேர்தல் சமயத்தில் இவர்கள் இருவரும் கெப்டனும் கலைஞரைச் சந்தித்துப் படத்துக்குப் போஸ் கொடுக்கும் அழகைப் பாருங்கள்.

