Wednesday, February 27, 2013

கைகட்டி நிற்கும் கதைமொழி


(“விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதை நூலுக்கு பிரபல சிறுகதை எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் அவர்கள் வழங்கிய மதிப்புரை)


அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை ஒரு கவிஞனாக (காணாமல் போனவர்கள் - 1999, என்னைத் தீயில் எறிந்தவள் - 2009), ஒரு பத்தி எழுத்தாளராக (தீர்க்கவர்ணம் - 2009), ஒரு மொழிபெயர்ப்பாளராக (உன்னை வாசிக்கும் எழுத்து - 2007, ஒரு குடம் கண்ணீர் - 2010, ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் - 2011) ஒரு பயண இலக்கியக்காரராக (ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை - 2009) நான் ஏலவே அறிந்திருக்கிறேன்.

சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், பத்தி எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு, கவிதை என்று அகலக் கால் வைத்தாலும் மிக ஆழமாகவே வைத்திருக்கின்றார் -  வைக்கின்றார் என்பதை அவருடைய ஒவ்வொரு நூலும் ஊர்ஜிதம் செய்தே வந்துள்ளது.

'ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை' என்னும் பயண அனுபவ நூல் - எழுபது பக்கங்களே கொண்ட அந்தச் சின்ன நூல் இவருடைய பயண அனுபவங்களை எவ்வளவு அற்புதமாகப் பதிவு செய்கின்றது!

அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் பயண நூல்கள் பற்றிப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'குறிப்பிட்ட பயண அனுபவங்களையும் பார்த்த, கேட்ட விடயங்களையும் கொண்டு சுவாரஸ்யமாகவும் அறிவுபூர்வமாகவும் எழுதும் சிறு பிரிவினருக்கான சிறந்த உதாரணம் அஸீஸ்' என்னும் குறிப்பே என் நிலைவிலோடியது, இந்தச் சின்ன நூலை வாசித்த போது.

நம்மை மறந்து வாசிக்கச் செய்யும் சுகானுபவம் எல்லா எழுத்துக்களிலுமா கிடைக்கிறது!

'விரல்களற்றவனின் பிரார்த்தனை' எனும் இந்தத் தொகுதி மூலம் தன்னை ஒரு பேசப்படவேண்டிய - விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டிய சிறுகதையாளனாகவும் நிரூபித்துக் கொள்கின்றார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

'எல்குறொஸ்' செயற்கைக் கோளிலிருந்து பிரியவிருக்கும் ஒரு ஏவுகணை சந்திரனில் செய்யப்போகும் வித்தைகள் பற்றிப் பேசும் 'அவ்வெண்ணிலவில்' கதையில் நாஸா விண்ணாய்வுக் கூடம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் அஷ்ரஃப்:-

'நாஸா விண்ணாய்வுக் கூடத்தில் கால் இடறினால் ஒரு விஞ்ஞானி மேல்தான் விழ வேண்டும். விழுபவனும்கூட ஒரு விஞ்ஞானியாகத்தான் இருப்பான்...'

நமது இலக்கிய உலகும் அப்படித்தான் இருக்கிறது. தங்களுக்குத் தாங்களே பட்டங்கள் சூட்டிப் பறக்க விட்டுக் கொண்டும் பறந்து கொண்டும்  கால் இடறினால் இன்னொரு பட்டத்தில் விழுந்து கொண்டும்...

கதை, கதையாகத்தான் வந்து குவிகின்றது. இலங்கையில் ஒரு மாதத்துக்குச் சுமார் 150 லிருந்து 200 வரை கதைகள் எழுதப்படுகின்றன. ஒரு வருடத்துக்கு எத்தனை என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தச் சின்ன இலங்கையிலேயே இப்படியென்றால் தமிழ் நாட்டில்...? ஆண்டுக்கு 5000 கதைகள் போல் எழுதப்படலாம். ஒரு பக்கக் கதைகள் உட்பட.

வருடத்தின் சிறந்த கதைகள் என்று ஒரு 12 சிறுகதைகளைத் தெரிவு செய்து நூலாக்கும் இலக்கியச் சிந்தனை அமைப்பு நல்ல கதைகள் கிடைக்காத சிரமத்தால் தங்கள் பணியினைக் கைவிட்டு விடும் உத்தேசத்தில் இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

அங்கே இலக்கியச் சிந்தனையும் இங்கே தகவமும் திணறித்தான் போகின்றன, நல்ல சிறுகதைத் தேடலில்.

நம்மில் நிறையப்பேருக்குச் சிறுகதை எழுதுவது என்பது ஒரு லேசான விளையாட்டான விசயமாகப் போய்விட்டது.

'இந்தக் கதை வேண்டாம். வேறொன்று தருகின்றீர்களா?' என்று கேட்பார் பத்திரிகையாசிரியர்.

'நாளைக்குக் கொண்டு வர்ரேன் சார்! எப்பிடியும் அடுத்த வாரம் வந்துடணும்!' என்று கூறிச் செல்பவர்களை நான் நிறையவே அறிந்திருக்கிறேன்.

அவசரமாகக் கற்பனை பண்ணி, அவசர அவசரமாக எழுதி, அவசரமாகப் பேப்பரில் போட்டுக் கொள்வதால்தான் இந்தக் கீழ் நிலை.

ஒரு இரண்டு நாள் குப்பைக்காரர் வராவிட்டால் பார்க்க வேண்டுமே எங்கள் ஒழுங்கையை - அத்தனையத்தனை வீடுகளிலும் வீட்டுக்கு இரண்டு மூன்று என்று கலர் கலராய்ச் சிலு சிலுப் பைகள் தோரணமிட்டுத் தொங்கும் அழகை!

உதாரணம் சரியில்லையோ என்னும் நினைவு வருகின்றது. கூடவே அஷ்ரஃபின் துணையும் கிடைக்கிறது.

முதல் கதை 'நாய்ப்பாசம்'.

அந்த நாயின் நடை... அது நடந்து செல்லும் விதம். 'எனது அந்த நாளைய ஆசிரியர் ஒருவரை ஞாபகப்படுத்தியது. வாத்தியாரை நாயுடன் ஒப்பிடுவதாக நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது...' என்றெழுதிச் செல்கிறார்.

கிணற்றில் நீர் ஊறுவது போல் அது மனதில் கிடந்து ஊறவேண்டும் என்கிறார் ஒரு பழைய மேநாட்டுக் கதையாசிரியப் பெண். இந்த அமெரிக்க எழுத்துச் சிற்பியின் (குநசடிநச நுனயெ) கூற்றுப்படி, 'ஒரு சிறுகதை பேப்பரில் அல்லாமல் மனதில் வளர வேண்டும். எழுத்தாளன் மாதக்கணக்கில் அதை மனதில் சுமந்து திரிய வேண்டும்.'

ஒரு சிறுகதையின் பிறப்பைப் பிரசவத்தின் பாடுகளுடன் ஒப்பிடுகின்றனர் அனுபவஸ்தர்கள். சுமந்து திரிதல், வெளிவரத் துடிக்கும் அதன் படபடப்பு, பிறக்கும்போது அது தரும் வேதனை, பிறந்தபின் கிடைக்கும் சுகமான மகிழ்வு... என்று அத்தனையும் அந்த வாசகத்துக்குள் இரண்டையும் இணைக்கின்ற விதம் உயிர்ப்பானது.

சிறுகதை எழுதுவது அப்படி ஒன்றும் லேசான விசயமில்லை எனத் தெரிந்து கொண்டேதான் இந்தத் தீக்குள் விரலை வைக்கும் செயற்பாட்டில் இறங்கியிருக்கிறார் அஷ்ரஃப்.

அவருடைய 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்க'ளும் 'ஒரு குடம் கண்ணீ'ரும் அதை அவருக்கு உணர்த்தியிருக்கும். உபதேசித்திருக்கும்.

Sunday, February 24, 2013

திப்பு சுல்தானின் மனிதாபிமானம்


திப்பு சுல்தானின் மனிதாபிமானம் என்ற கவிதை நாடகம் கடந்த 29.01.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. 

கல்வியமைச்சினால் 2009ல் நடத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டிகளில் இடம் பெற்ற முஸ்லிம் நாடகப் போட்டிக்காக இந்நாடகம் எழுதப்பட்டது.  கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுத் தேசிய ரீதியில் இந்நாடகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

2011ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டுப் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.  டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களே இதனை நடித்தார்கள்.

பின்னர் ஒலிபரப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வானொலி அறிவிப்பாளர்களால் நடிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. 

இந்நாடகத்துக்கான வரலாற்றுத் தகவல் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய “தீரன் திப்பு சுல்தான்” காவியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.




நாடகம் பகுதி - 1


நாடகம் பகுதி - 2



நாடகம் பகுதி - 3



Monday, February 18, 2013

ஹலால் - ஆகுமானது!


பொது பலசேனாவுக்கு ஹலால் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் தமது உற்பத்திப் பொருட்களைப் பிற தேசங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குச் சான்றிதழ் தேவை. ஹலால் முத்திரை இல்லாமல்
உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் அவற்றின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்குச் செல்லும். முஸ்லிம்கள் அல்லாத ஏற்றுமதி நிறுவனங்களும்
அங்கு தொழில் புரியும் எல்லா இனத்தவர்களும் பாதிப்படைவார்கள், தொழில்களை இழக்கும் நிலை உருவாகும். நாட்டின் வருமானமும் பாதிக்கப்படும்.

ஹலால் முத்திரை இல்லை என்றால் உள்ளுர் முஸ்லிம்களும் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளையும் கொள்வனவு செய்யப்போவதில்லை. மிகப் பெறுமதியான ஒரு பொருள் - மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது என்றாலும் கூட - அதில் தமக்குச் சந்தேகம் தோன்றுமாயின் அதை முற்று முழுதாக முஸ்லிம்கள் நிராகரித்து விட்டு நம்பிக்கைக்குரிய மாற்றுப் பொருளைத் தேடிக் கொள்வார்கள்.

இவ்விரு விடயங்களும் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் - குறிப்பாக முஸ்லிம்களுக்கு உரித்தில்லாத நிறுவனங்களுக்கு நன்கு தெரியும். ஹலால் சான்றிதழை மறுப்பதானது பலரின் வாழ்வில் விழும் பேரிடி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உணராத ஒரேயொரு பிரிவினர் பொது பலசேனா அமைப்பினர் மாத்திரமேயாவர். அவர்களைப் பொறுத்த வரை இது பௌத்த நாடு... இந்த நாட்டில் பிக்குகள் தவிர்ந்த வேறு எந்தச் சிறுபான்மை மக்களதும் ஒன்றியம் -
அது மத ரீதியில் நாட்டின் பொது விடயங்களில் எந்த விதமான அதிகாரங்களையும் செல்வாக்கையும்  கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கருத்து நமக்கு உணர்த்தும் விடயமாகும்.

ஹலால் சான்றிதழ் நீக்கத்தால் பலரும் நஷ்டமடைவார்கள் என்பதையும் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழுக்கான அதிகாரத்தை வைத்திருக்கக் கூடாது என்பதைச் சொல்பவர்களது எண்ணத்தையும் கருத்திற்
கொண்டு வேறு ஓர் ஏற்பாட்டைச் செய்ய யோசிக்கலாம்.

இதை அரசு சட்டபூர்வமான ஒரு விடயமாக மாற்றிக் கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் செயல்பாடாக மாற்றியமைக்கலாம். வர்த்தக அமைச்சின் மேற்பார்வையின் கீழ்
முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் அதிகாரிகளால் இச்சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

அவ்வாறு மேற்கொள்ளும் போது ஜம்இய்யத்துல் உலமா சபை நிர்வகிக்கும் ஹலால் பிரிவு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும். சான்றிதழ் பிரிவில் கடமை புரியும் அனைத்து ஊழியர்களும் அரச ஊழியர்களாக மாறுவர்.

ஹலால் சான்றிதழ் பெறும் நிறுவனங்களில் மேற்பார்வைக்காக கல்வித் தகைமையு்ள்ள ஆலிம்களையும் நியமிக்க முடியும்.

அவ்வாறு அரசு ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ளுமாயின் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறது என்ற பிரசாரம் மறைந்து விடும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் ஹலால் சான்றிதழுக்காக அறவிடும் பணத் தொகையை அவ்வப்போது அதிகரித்துக் கொள்ளவும் அரசுக்கு வசதியாக இருக்கும்.

இக்கருத்து பற்றிய உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

Saturday, February 2, 2013

சினிமாவும் முஸ்லிம்களும்...!



முஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமாக்காரர்களின் பின்னால் அலைவது தீர்வாகுமா என்ற தலைப்பில் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதால் உருவான சர்ச்சையும், கொந்தளிப்பும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள், கமலுடன் நேரடி உரையாடல்கள் என முடுக்கிவிடப்பட்டிருந்த எதிர்ப்பியக்கம் தீவிரத் தன்மை பெற்றுள்ளது.

'துப்பாக்கி' திரைப்படம் வெளியான உடன் இதுபோன்ற சர்ச்சைகளும், எதிர்க்குரல்களும் ஓங்கி ஒலித்ததன் விளைவாக, அப்படக்குழுவினர் முஸ்லிம் கூட்டமைப்பினரைச் சந்தித்து சமரசப்பேச்சுக்கு முன்வந்ததோடு, மன்னிப்பும் கேட்டனர். ‘இனி இதுபோன்ற தவறான சித்தரிப்புகளுடன் படம் எடுக்க மாட்டோம்’ என உறுதியும் அளித்தனர். அந்த வெற்றிதந்த உற்சாகமே, தற்போது விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பைத் திருப்பியுள்ளது.

கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அண்மையில் நடிகர் கமல்ஹாசனை இருமுறை சந்தித்துள்ளனர். விஸ்வரூபம் வெளியிடப்படும் முன் தங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, படம் வெளியாவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக திரையிட்டுக் காட்டுகிறேன் என உறுதியளித்தார் கமல். அதன்படி கடந்த 21-01-2013 அன்று மாலை படத்தைப்போட்டுக் காட்டினார். படம் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்குப் பேரதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு அதன் காட்சி அமைப்பு இருந்தது. உடனே களமிறங்கிய கூட்டமைப்பினர் விஸ்வரூபத்தைத் தடைசெய்ய வேண்டும் என முழங்கினர். சட்டம் ஒழுங்கிற்கும், சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் விஸ்வரூபம் இருப்பதால் தமிழகத்தில் அப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஒட்டி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

திரைப்படங்களில் முஸ்லிம்களை இழிவாகச் சித்தரிக்கும் போக்குக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து செய்யப்படும் இவ்வாறான எதிர்வினைகள் வரவேற்கத்தக்கதே என்றாலும், பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து தீர்வைக் காண்பதற்கு யாருமே முயலவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிப்பது என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு நோய் ஆகும். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகளால் செய்யப்படும் பரப்புரைகள். இன்னொன்று, முஸ்லிம்கள் குறித்த சரியான புரிதலின்மை. ஊடகங்கள் எதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனவோ, அதையே உண்மையென நம்பும் பொதுப்புத்தியும் இத்தகைய நிலைக்கு மற்றுமோர் காரணமாகும்.

ஒருமுறை விஜயகாந்தைச் சந்தித்து விரிவான உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தபோது, ’உங்கள் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், ‘பேப்பர்ல அப்படித்தானே வருது’ என்று பதில் கூறினார். எங்களுக்கு விஜயகாந்தின் மீது கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது.

இதுதான் மணிரத்னம், கமல் போன்றவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான வேறுபாடு.

மணிரத்னம், கமல் போன்றவர்கள் அமெரிக்காவைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைத் திட்டமிட்டு செய்பவர்கள். விஜயகாந்த் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி அதன் அடிப்படையில் செயல்படுபவர். இதில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசுவதன் மூலமும், முஸ்லிம்கள் பற்றிய உண்மை நிலையை அவருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் நிலைமையை சரிசெய்து விடமுடியும். ஆனால், மணிரத்னத்தையும், கமலையும் அவ்வாறு செய்ய முடியாது. எதிர்ப்புகளுக்கு அஞ்சி நேரடியான காட்சிகளை வைப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கினாலும், ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் வெறுப்பை அவர்கள் ஊடகத்தின் வழியே விதைத்துக் கொண்டேதான் இருப்பர். அவர்கள் போன்ற சிந்தனை உடையவர்கள் பல நூறுபேர் சினிமாவில் உள்ளனர். ஒவ்வொருவருக்கு எதிராகவும் முஸ்லிம்கள் கொடி தூக்கிக் கொண்டே இருக்கவும் முடியாது.

அப்படியெனில் என்னதான் செய்வது? இதற்கு என்னதான் தீர்வு?

Wednesday, January 30, 2013

வானொலி நாடக நடிப்புப் பயிற்சி


ஜஸ்ட் மீடியா பவுண்டேசன் அனுசரணையில் வானொலி நாடக நடிப்புப் பயிற்சிப் பயிலரங்கு கடந்த 26, 27 -01 - 2013 அன்று கொழும்பு -3ல் அமைந்துள்ள இன்ஸைட் நிறுவனத்தில் நடைபெற்றது. இத்துறையில் ஆர்வமுள்ள 25 பயிலுனர்கள் இதில் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் தலைமையுரை.


நிகழ்வில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவர் அஷஷெயக் நஜா முகம்மத் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.


ஜஸ்ட் மீடியா பவுண்்ஷன் தலைவர் சட்டத்தரணி பாரிஸ் உரை நிகழ்த்துகையில்...


அறிவிப்பாளரும் எஸ்.டி.ஜே.எப். நிறுவனத்தின் பணிப்பாளரும் நிகழ்வின் வளவாளரும் நிகழ்வுக்கான உறுதுணையாளருமான எம்.சி.ரஸ்மின் உரை நிகழ்த்துகையில்...


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நாடகத் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ.எல். ஜபீர் உரையாற்றுகிறார்.


சிரேஷ்ட அறிவிப்பாளரும் நாடக நடிகரும் சூரியன் வானொலி ஆலோசகருமான திரு நடராஜ சிவம் வானொலி நாடகம் பற்றி உரை நிகழ்த்தினார்.


பயிலுனர்கள்


பயிலுனர்கள்


வளவாளர்களும் அனுசரணையாளர்களும்


பயிலுனர் ஒருவர் தமது குழு அறிக்கை சமர்ப்பித்தல்

Thursday, January 24, 2013

கமல்ஹாஸன் சுட்ட படங்கள்


நடிப்புச் சிறப்பில் நகைச்சுவை நடிகர்களுக்கு அடுத்ததாகப் பிடித்த நடிகர்களுள் கமல்ஹாஸனும் ஒருவர். “உன்னைப்போல் ஒருவன்” பார்த்த பிறகு அவரைப் பற்றியிருந்த எல்லா மதிப்பீடுகளும் கரைந்து போயின. எல்லாக் கதாநாகர்களும் தீவிரவாதிகளை இறுதியில் தாங்களே முடித்து விடுவார்கள். அதையே அவரும் அப்படத்தில் செய்தார். அப்படத்தை வைத்துச் செய்யப்பட்ட விளம்பரங்களும் அலட்டல்களும் ஓர் ஒப்பற்ற காவியம் போன்ற மனப்பதிவை உண்டாக்கியிருந்தது. படத்தைப் பார்த்த பிறகுதான் இது ஓர் அப்பட்டமான மோசடி என்பது புரிந்தது. கிட்டத்தட்ட புஸ் என்று காத்துக் கூட வராத ஒரு வெடி. நினைத்துச் சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

இன்றைக்கு அவர்தான் மீடியாவி்ல் பேசு பொருள். அவரது படங்கள் வித்தியாசமானவைதாம். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவையும் கூட. ஒரு சிறுபான்மைச் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துப் படம் எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பது அவரது திறமைகளை மழுங்கடிக்கிறது. அர்ஜூனைப்போல, விஜயகாந்தைப்போல, விஜய் போல ஒரு வெத்து வேட்டு நிலைக்குத் தன்னை நகர்த்தி அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

இனி-

அவரது படங்கள் பற்றிய ஒரு இணையப் பதிவை இங்கு தருகிறேன்.

---------------------------------------------------------


நிகழ மறுத்த அற்புதம்


முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான்.

தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில படங்களின் ஊடாகவே அறிந்து கொள்ள முடிகிற ஒரு அவதானிப்பு என்னவெனில், கமல்ஹாஸனின் படங்களைத் தவிர்க்கவே முடியாது என்பதைத்தான். பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களைக் கவனிக்கும் யாராகினும், தமிழ்ப்படங்களில், கமலின் படங்கள் மிகவும் வித்யாசமானவை என்றும், தமிழ்ப் படங்களை, கமல்ஹாஸனின் படங்கள் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன என்றும் ஒரு முடிவுக்கு வருவதை வெகு எளிதாகக் காண முடியும். கமல்ஹாஸனுமே, தனது படங்கள் அப்படிப்பட்ட நோக்கில் எடுக்கப்படுபவைதான் என்று பல பேட்டிகளில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.

ரசிகர்களாகிய நாமுமே, கமல்ஹாஸனின் படங்களை ஒரு கலை நோக்குடனே பாவித்து வந்திருக்கிறோம். கமல் படங்கள் என்றால், அவை முற்றிலும் வணிக நோக்குடன் எடுக்கப்படாமல், ஓரளவுக்கேனும் மாற்று சினிமாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்னும் ஒரு தகவல், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் சினிமா ரசிகர்களிடையே பரப்பப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது. மீடியாவுமே இப்படித்தான் கமலின் படங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது.

ஆனால்….. (இது ஒரு பெரிய ‘ஆனால்’)…

இவை அத்தனைக்கும் கமல் தகுதியுடையவரா?

சுற்றி வளைக்காமல், நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டுவரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்.

இருங்கள். . . கமல் ரசிகர்கள் பொங்கியெழுமுன், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். எனது நோக்கம், கமலைப் பழிப்பதோ அல்லது அவர் மீது அவதூறு சுமத்துவதோ இல்லை. அதற்கு எனக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், சிலகாலமாகவே, தமிழ்த் திரையுலகில் காப்பி அடிப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், அதை முதன்முதலில் பெருவாரியாக ஆரம்பித்து வைத்த நபரைப் பற்றி எழுதினால்தான் பொருத்தம் என்பதால், இக்கட்டுரையை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் மூல காரணம்.

இன்னொரு காரணம் – சில வாரங்கள் முன், ராவணன் வெளிவந்த சமயம், மணிரத்னத்தைத் தமிழ் வலையுலகம் போட்டுத் தாளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் – மணிரத்னம் உலகப் படங்களைச் சுடுகிறார் என்பது. அது உண்மைதான். ஆனால், கமல் அளவு காப்பியடித்தது யாரும் இல்லை என்பதே உண்மை. ஆகவேதான் இக்கட்டுரை.

நான் அவசரப்பட்டு இதைக் கூறவில்லை. இதோ கட்டுரையின் முக்கிய பாகத்தில் அந்த ஆதாரங்களைப் பார்க்கலாம்.

ராஜபார்வை – கமலின் முக்கியப் படமாகக் கருதப்படுகிறது. அவரது நூறாவது படமும் கூட. கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, தரமான படங்களைக் கமல் கொடுக்க ஆரம்பித்ததற்கு இது ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது. படத்தின் கதை, ஒரு குருட்டு வயலினிஸ்ட் பற்றியது. அவனுக்கு அறிமுகமாகும் ஒரு துடிப்பான பெண், அவனது வாழ்க்கையில் கொண்டுவரும் மகிழ்ச்சி.. இப்படிச் செல்கிறது கதை. மிகப்பலரால் பாராட்டப்பெற்ற ஒரு படம் இது.

சரி. இப்பொழுது, Butterflies are Free (1972) என்ற படத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். டான் பேக்கர் என்பவன், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் வாழும், பிறவியிலேயே பார்வையிழந்த நபர். அவனது வீட்டு ஓனரின் மகள், அவனது வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஊட்டி, அதன்பின் அவனைப் பிரிந்து சென்றுவிடுகிறாள். அதன்பின், அவனுக்கு அறிமுகமாகும் மற்றொரு பெண், அவன் குருடன் என்றே அறிந்துகொள்ளாமல், அவனுடன் பழகுகிறாள். தனது சிகரெட்டின் சாம்பலை மேஜை மீது அவன் உதிர்க்கும் ஒரு தருணத்தில் தான் அவன் குருடன் என்று அறிந்துகொள்கிறாள். அதன்பின் இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த டான் பேக்கர், ஒரு இசைக்கலைஞனாக ஆக முயற்சிப்பதுதான்.

இரண்டு படங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் கூட, ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டதுதான் ராஜபார்வை என்று புரிந்துகொள்ள முடியும். இதில் வேறு, ராஜபார்வையின் ‘கதை’ என்று கமலின் பெயர் இருக்கும்.

Tuesday, January 22, 2013

கிட்னி வாங்கலையோ... கிட்னி...!



ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் அந்த நாடு சல்லடையாகிவிட்டது. ஈராக்கின் புகழ்பூத்த எழுத்தாளர் மஹ்மூத் சயீத் வழங்கியிருந்த ஒரு பேட்டியில் ஈராக் மக்கள் தீராத வறுமையில் வாடுவதாகவும் உணவுக்காகத் தமது கிட்னியொன்றை விற்பதாகவும் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருந்தார்.

மஹ்மூத் சயீதின் எழுத்துக்கள் சதாம் ஹூஸைன் அரசினால் தடைவிதிக்கப்பட்டவை. அவரும் அடிக்கடி சிறைவாசம் அனுபவித்தவர். சதாம் காலத்திலேயே நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு தேசத்தில் வாழ்ந்து வருகிறார்.

“கிட்னி” விற்று மக்கள் பசி போக்கும் நிலையை “சபாஹ் அல் முர் - கசந்த காலை”என்ற தனது கதையில் அவர் சித்தரித்திருந்தார். ஏற்கனவே “விசர்நாய்க் கடி”, “புகையிரதம்” ஆகிய அவரது இரண்டு கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அக்கதைகள் இரண்டும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” என்ற நான் மொழிபெயர்த்த அரபுக் கதைகளின் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

அண்மையில் அவரது “கசந்த காலை” என்ற கதையையும் மொழிபெயர்த்தேன். இக்கதை “விடிவெள்ளி” பத்திரிகையில் அண்மையில் வெளிவந்தது. அக்கதையை இத்துடன் இணைத்துள்ளேன். கதை முடிந்த பிறகு உள்ள குறிப்பையும் சேர்த்தே படியுங்கள்.
----------------------------------------


கசந்த காலை
மஹ்மூத் சயீத் (ஈராக்)


கொக்கரக் கோ...கோ.... கொக்கரக் கோ... கோ...

சேவலின் கூவலுடன் அவள் கண்விழித்தாள். அவளிடமிருந்து ஒரு கேலிச் சிரிப்பு வெளிப்பட்டது. தனது கண்களை ஜன்னல் பக்கம் திருப்பிச் சேவலைப் போல் கூவிப்பார்த்hள். சேவலிடமிருந்து பதில் வரவில்லை. ஜன்னலுக்கு அருகே கிடந்த மெத்தையில் அவள் படுத்திருந்தான். ஜன்னலுக்கு வெளியே நின்ற மாதுளை மரத்தின் கிளையில் பூத்திருந்த மலர்கள் காற்றில் அசைந்து ஜன்னல் கம்பிகளில் உரசி விளையாடிக் கொண்டிருந்தன. சேவல் மீண்டும் கூவியது. மீண்டும் அவளிடமிருந்து அந்தச் சிரிப்பு வெளிப்பட்டது. சேவல் போல் மீண்டும் அவள் கூவிப் பார்த்தாள். ஆனால் சேவலிடமிருந்து பதில்தான் கிடைக்கவில்லை.

ஒரு சின்னக் குருவி ஜன்னலில் வந்தமர்ந்து குரல் கொடுத்தது. அது தனது வால் பகுதி மேலும் கீழும் அசைத்துக் கொண்டேயிருந்தது. அவள் மீண்டும் சிரித்துக் கொண்டு அக்குருவியை அழைத்தாள். குருவியை நோக்கி அவளது கரங்கள் நீண்டன. அதை அக்குருவி கவனிக்கவில்லை. சிரிப்புச் சத்தம் கேட்டுக் குருவி தனது கீச்சை நிறுத்திக் கொண்டது. அது ஒரு பக்கமாகத் திரும்பிப் பார்த்தது. பின் சுற்றிச் சுற்றித் தனது அழகான கண்களால் சத்தம் வரும் இடத்தைத் தேடியது. ஜன்னலின் கிராதி குருவியின் பார்வையைத் தடுத்ததால் ஜன்னலூடாகப் பார்க்க அதற்கு முடியவில்லை. குருவி மீண்டும் உற்சாகமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தது. அவள் மீண்டும் குருவியை அழைத்தாள். குருவியிருந்த திசை நோக்கித் தனது கரத்தை நீட்டினாள். ஆனால் அக்குருவி தனது இணையை அழைத்து இனிமையாகக்  குரல் கொடுத்தபடி அதை நோக்கிப் பறந்து சென்றது.

அவளது தந்தையார் குறட்டையை நிறுத்தியிருந்தார். மிக நீண்ட மூச்சை உள்வாங்கி மெதுவாக வெளிப்படுத்தினார். பலகையொன்றில் லேசாகத் தட்டுவது போன்ற அவளது தாயாரின் நித்திரைச் சுவாசத்தை விடவும் உறங்கிக் கொண்டிருக்கும் அவளது சகோதரனின் சாதாரண சுவாசத்தையும் விடவும் தந்தையார் உள்வாங்கி விடும் மூச்சு வித்தியாசமாக இருப்பதை அவதானித்தாள். ஆனால் அவளது பார்வை ஜன்னலோடு ஒட்டியிருந்தது. குருவியும் அதன் இணையும் மரத்திலிருந்து இன்னும் ஜன்னலுக்குத் திரும்பவில்லை. குருவிகளின் சத்தத்தை அவள் மிகவும் விரும்பி ரசித்தாள். அவள் அழைத்த போது அவை வராத போதும் ஜன்னலருகே அவை வரும்வரை காத்திருந்தாள்.

அவளுடைய தந்தையை நோக்கி ஒலித்த தாயாரின் குரல் கேட்டு அவள் தலையைத் திருப்பினாள்.

'நீங்கள் தூங்குங்கள்.. ஏன் இவ்வளவு நேரத்தோடு எழும்புகிறீர்கள்? ..............

'நான் தயாராக வேணும்.'

'நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு!'

'தூக்கம் கலைந்தால் எனக்கு மீண்டும் தூக்கம் வராது!'

அவர் எழுவதற்கு முயன்ற போது அவள் அவரது கையில் தொங்கினாள். அவளிடமிருந்து இனிமையான ஒரு செல்லச் சிரிப்பு வெளியானது. அந்தச் சிரிப்பின் ஈர்ப்பில் அவரது கவனம் மகளின் மீது குவிந்தது. அளவில்லாத ஆனந்தம் கொப்பளிக்கும் சிரிப்பு... அவளது சின்னஞ்சிறிய கரங்களைத் தட்டி வெளிப்பட்ட குதூகலம்... அந்தக் கரங்களைத் தந்தையை நோக்கி நீட்டித் தழுவும் பாவனை... முத்துக்களைப் போன்ற அவளது சின்னப் பற்கள் இரண்டு... பெரிய கருமையான வெளிச்சக் கண்கள்... தந்தையின் சுவாசத்தை அவர் அருகே உணர்ந்த அவள் அக்காற்றை அவளது சின்னக் கன்னங்கள் உப்பிச் சிவப்புப் பந்து போலாகும் வரை தனது வாய்க்குள் உள்வாங்கி எச்சில் தெறிக்க அவரது முகத்தில் ஊதி விளையாடினாள். அச்செயலில் அவளுக்குக் கிடைத்த சிறிய வெற்றி மீண்டும் ஒரு செல்லச் சிரிப்பை வரவழைத்தது.

'அடி போக்கிரிப் பெண்ணே... நீ என்ன செய்திருக்கிறாய் பார்...'

சொல்லியபடி அவர் சிரித்தார்.

Monday, January 14, 2013

ரிசானா மீதான மரண தண்டனை: எதிர்வினைகளும் பதில்களும்



- அஷ்ஷெய்க் ஏ.பி்.எம். இத்ரீஸ் -

இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி கொலைக்கு கொலைதான் தண்டனை, அது ஒரு காட்டு மிராண்டித் தனமான சட்டமாகத் தெரிந்தாலும் தனது வாழுமுரிமை பறிக்கப் படும் என்ற ஒரே அச்சம் மாத்திரமே அநியாயமாக ஒருவரை கொல்வதிலிருந்து தடுக்கும் என்கிறார்களே?

‘கொலைக்கு கொலைதான்’ என்ற வார்த்தையை நாம் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. கொலைக்கு கொலைதான் என்றால் அது கொலை என்று முதலில் இஸ்லாமிய ஷரீஅத் நிரூபிக்க வேண்டும் என்று சொல்கிறது. நடந்தது தற்கொலையாக இருக்கலாம். சந்தர்ப்ப வசத்தால் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம். சுவாசக் குழாய்க்குள் பால் போய் அடைத்ததால் இறந்திருக்கலாம். கொக்குச் சுடப்போனவர் தவறி காட்டுக்குள் இருந்த மனிதரை தெரியாமல் சுட்டிருக்கலாம். இவ்வாறு எண்ணற்ற மரணங்களின் வகைகள் இருக்கின்றன. திட்டமிட்டு குற்றஞ் செய்ய வேண்டும் என்று நினைத்து குற்ற மனத்தோடு செய்யப்பட்ட கொலையா என்பது இஸ்லாமிய ஷரீஆவில் முக்கியமான விடயப் பொருளாக ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து நவீன சட்ட அறிஞர்களான அப்துல்காதர் அவ்தா, அஹ்மத் ஷர்கா போன்ற பல முஸ்லிம் நியாயவியல் அறிஞர்கள் ஆழமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். இவை இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளன. எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் என்ற வாதம் பிழையானது. ‘அத்தஷ்ரிஉல் ஜினாயீ’ என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய குற்றவியல் நூலை படித்த யாரும் கொலைக்குக் கொலை என்று எடுத்த எடுப்பிலேயே முடிவெடுக்க மாட்டார்கள். குறைந்தது இலங்கையின் சட்டத்தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி வீரமந்திரி, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் போன்றோரின் இஸ்லாமிய நியாயவியல், குற்றவியல் குறித்த ஆங்கில நூல்களையாவது குறைந்தபட்சம் வாசித்தவர்கள் கூட எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் தண்டனை என்று முடிவெடுக்க மாட்டார்கள்.

இஸ்லாமிய ஷரீஆவைக் கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ முடியுமா?

இஸ்லாமிய ஷரீஆ என்பதற்குள் பலவகையான சொல்லாடல்கள் அறபு மொழியில் பயன்பாட்டில் உள்ளன. ‘அல்பிக்ஹு’, ‘இஜ்திஹாத்’, ‘அத்தஸ்ரிஉல் ஜினாயீ’ இவை ஒவ்வொன்றுக்கும் தனியான பரப்பெல்லைகளும் இயல்முறைகளும் காணப்படுகின்றன. ஷரீஆ என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்த சொல்லாடலாகும். ஆனால் தமிழ் மொழிச் சூழலில் ஷரிஆ என்பது பல உள் ஆய்வு பிரிவுகளைக் கொண்ட ஒரு சட்டவாக்கத் தொகுதியாக நோக்கப்படுவதில்லை. அதற்குள் நடைபெறும் வாதவிவாதங்கள் அவ்விவாதங்கள் இறுதியில் எட்டப்படும் முடிவுகள் கொண்ட ஒரு செறிவான சொல்லாடலாகும்.

இங்கு ஷரீவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்ற சொல்லாடல்கள் என்ன அர்த்தத்தில் கையாளப்படுகிறது என்பது முக்கியமானது. அச்சொல்லாடல்களை நான் புரிந்து கொண்ட வகையில் சொல்வதானால், ஒரு பண்பாட்டின் சமூக நெறிமுறைகளை, சட்டதிட்டங்களை, அதனுடைய சமூக வழக்காறுகளை மற்றப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் கேள்விக்குட்படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் பின்னால் பலவகையான அரசியல் இருக்க முடியும். எல்லாவற்றையும் ஒரே படித்தானதாக, வகைப்பட்டதாக நாம் நோக்கத் தேவையில்லை. பழங்குடித் தன்மையிலிருந்து விடுபடாத, மனிதாபிமானமற்ற வழக்காறுகளும் நெறிமுறைகளும் மற்றொரு பண்பாட்டுக்கு அச்சுறுத்தலையும் பயத்தையும் ஏற்படுத்துகின்ற போது அத்தகைய விமர்சனங்கள் எழ வாய்ப்புமுள்ளது. குறிப்பிட்ட பண்பாடு மட்டும்தான் உன்னதமானது, அந்த பண்பாடு கடைப்பிடிக்கும் அனைத்து நெறிமுறைகளும் புனிதமானவை, எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற பண்பாட்டு ஆதிக்கம் அல்லது அடையாள உருவாக்கம் மற்றமைகளை அச்சத்திற்கும் அசௌகரியத்திற்கும் உள்ளாக்க முடியும். அந்தக் கோணத்திலிருந்தும் விமர்சனங்களைப் பார்க்க முடியும்.

உதாரணமாக, ஆடை விசயத்தை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட கறுப்பு நிற அபாயா அணிந்தால்தான் உண்மையான ஷரீஅத் கூறும் இஸ்லாமியப் பெண்ணாகக் கருத முடியும் என்று நாம் வலியுறுத்தும் போது பல தசாப்தங்களுக்கு முன் நமது தாய்மார்கள், பெண்கள் மூதாட்டிகள் அவ்றத்தை மறைத்து அணிந்த ‘சேலை’ போன்ற ஆடைகளை நாம் இஸ்லாம் அல்ல என்று மறுத்துவிடுகிறோம். குறிப்பிட்ட பூகோள, புவியல் சூழலில் வாழும் மக்கள் அங்குள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப ஆடைகளை, அதன் நிறங்களை, வடிவங்களை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. இப்படித்தான் மற்ற விடயங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இப்போது நாம் ஷரீஆவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்பதை இஜ்திஹாத் – மறுவாசிப்பு என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் அதன் விளக்கம் வேறு வகையாக அமையும். ஷரீஅத்தில் இஜ்திஹாத் இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இருக்கிறது. இஸ்லாத்தை பிரதான இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் இறையியல் சார்ந்த விடயங்கள், சமூகவியல் சார்ந்த விடயங்கள் எனப் பிரிக்கலாம். இறையியல் சார்ந்த விடயங்களிலும் கூட அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே இஸ்லாம் பரவிய வேளைகளில் பல்வேறு இஜ்திஹாதுகளை இறையியல் சார்ந்த வசனங்கள் எதிர்கொண்டதை நாம் காண முடியும். இறையியல் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த விடயங்களை கொச்சைப்படுத்துவது, நிந்திப்பது, பொதுவான நோக்கில் பொதுவான உலக சமூகங்களின் பண்பாடுகளின் அறங்களின் படி தவறானதுதான். ஆனால், சமூகவியல் சார்ந்த விடயங்களில் இஸ்லாம் தாராளமாக மாற்றுக் கருத்துக்களுக்கும் மறுவாசிப்புக்களுக்கும் தனது வரலாற்றுப் போக்கில் நெகிழ்ந்து கொடுத்தே வளர்ந்து வந்துள்ளது.

ஷரீஆ என்பது பற்றி நம்மிடம் ஒரு தட்டையான புரிதல்தான் இருக்கிறது. இறை வெளிப்பாடு ஊடாக நபிகளுக்குக் கிடைத்த அல்குர்ஆனும் நபிகளின் மொழியையும் சிந்தனைகளையும் கொண்ட ஹதீஸ்களும் மட்டும் அல்ல ஷரீஆ என்பது. அவற்றுக்குக் காலத்துக் காலம் இஸ்லாமியப் புலமைத்துவ வாதிகள், புத்துயிர்ப்பாளர்கள் வழங்கிய வியாக்கியானங்களும் சாராம்சப்படுத்தல்களும் நியாயவியல் விதிகளும் சேர்ந்ததுதான் ஷரீஆவாகும். எனவே ஏற்கனவே ஷரீஆ சொல்லப்பட்டுவிட்டது, அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது என்று சொல்ல முடியாது. முஸ்லிமின் நோக்கில் அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் புனிதமாகக் கருதப்படலாம். அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட வியாக்கியானங்கள் புனிதமானவை அல்ல. வியாக்கியானங்கள் கால, இட, சூழ்நிலைகளுக்கேற்ப, சமூகப் பண்பாட்டுப் பின்புலங்களுக்கேற்ப மாறுபட்டுச் செல்ல முடியும். பழங்குடி முறையிலிருந்து நிலச்சுவாந்தர் முறைக்கு ஒரு சமூகம் மாற முடியும். நிலச்சுவாந்தர் முறையிலிருந்து முதலாளித்துவ சமூக நிலைக்கு மாற முடியும். முதலாளித்துவத்திலிருந்து ஜனநாயக சமூகங்களாக மாற்றம் பெறலாம். இந்த ஒவ்வொரு சூழலிலும் இஸ்லாமிய ஷரீஆ நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய நிலமைகளுக்கேற்ப தீர்வுகளைப் பேசக்கூடிய உயிரோட்டத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் மூலம் ஷரீஆ மறுவாசிப்புக்குட்படுகிறது. மறுவாசிப்பு என்பது புனிதப் பிரதிகளை மற்றொரு வகையில் வாழவைப்பதுதான். அது அழிப்பது அல்ல. ஆனால் மைய நீரோட்டத்திலிருக்கும் வைதீக நிலைப்பட்ட இறுக்கமான நிறுவன நோக்குக் கொண்ட இஸ்லாமிய கருத்தியல் அடிப்படைவாதம் தான் இந்த வாசிப்புக்களுக்கும் புதிய இஜ்திஹாதுகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. உஸ்மானிய சாம்ராஜியத்திற்குப் பின்னர் அறபு இஸ்லாமிய உலகில் இஸ்லாமிய ஷரீஆத் துறையில் குறிப்பாக நியாயவியல், பொருளியல் (முஆமலாத்), சிறுபான்மைக்கான நியாயவியல் என்றெல்லாம் பல துறைகளில் ஆங்காங்கே புதுவகையான இஜ்திஹாத் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் வலுவான தரப்புக்கு மத்தியில் அவை சென்று சேரவில்லை. வலதுசாரி உலமாக்களும் முதலாளித்துவம் சார்பான சேகுகளின் கைகளில்தான் அதிகாரம் இருக்கிறது. எனவே ஷரீஆவுக்கு எதிரான விமர்சனம் என்பதை நான் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுமத சகோதரர்கள், ஊடகங்கள் இஸ்லாம் மீதும் ஷரீஆ சட்டம் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனரே?

இஸ்லாம் உலக மனிதர்களுக்காக அருளப்பட்ட மார்க்கம் என்றே அதன் போதனைகள், அதிகாரபூர்வ நூல்கள் கூறுகின்றன. அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, சமூகத்திற்கோ, மொழிக்கோ உரியதல்ல. அதனால்தான் எல்லா மொழிகளிலும் எல்லாத் தேசங்களிலும் இஸ்லாத்தோடு இணைந்த சமூகங்கள் பன்னெடுங் காலமாக வாழ்ந்து வருகின்றன. எனவே இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உரியது, நபிகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட தூதர் என்ற மாதிரியே இன்றைய முஸ்லிம் மனப்பாங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தவறான கட்டமைப்பாகும். இந்த தவறான கட்டமைப்பில் இருந்துதான் மேற்கூறிய கேள்வியே எழுகின்றது.

மாற்று மத சகோதரர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் மீதும் ஷரீஆ மீதும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்றால் நாம் அதை பொசிடிவாகத்தான் பார்க்க வேண்டும். எதிர்மறையாகச் சிந்திக்கத் தேவையில்லை. உரையாடலுக்கான வாயில், பண்பாடுகளுக்கிடையிலான உரையாடல் அந்த இடத்தில்தான் ஆரோக்கியமாகத் தொடங்குகிறது. அந்த வாயிலை நாம் மேலும் மேலும் திறந்து இஸ்லாம் பற்றிய, முஸ்லிம்கள் பற்றிய மேலும் நல்ல புரிதலை உருவாக்க முயலவேண்டுமே அல்லாமல் விமர்சனங்களை முன்வைப்பவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி நோண்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் இருந்தால் நமக்கென்ன? நமக்குத் தெரிந்த இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் ஊடாகப் பெற்ற நல்ல பண்பாட்டையும் அவர்களோடு நாகரிகமாகப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாம் கூறும் பண்பாடாகும். எப்போதும் மூடுண்ட, அடைபட்ட போக்கை இஸ்லாம் விரும்புவதில்லை. திறந்த மனதுடன் மற்றப் பண்பாடுகளுடன் ஊடாடி, உரையாடி கலந்து பேசி மனித சமூகங்களுக்கும் பண்பாடுகளுக்கும் மத்தியில் நடுநிலையான (உம்மத்தன் வசத்தன்) சமூகம் என்ற உயரிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்றே இஸ்லாமியப் போதனைகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஒரு முஸ்லிம் பிழையாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகிறான் என்றால் அதைப் பிழை என்று ஒத்துக் கொள்வதில் தயக்கம் காட்டத் தேவையில்லை. பிழையென ஒத்துக் கொள்ளவில்லையானால் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு பிழை என்றுதான் மாற்று மதத்தினர்கள் நினைப்பார்கள்.

சஊதியில் நடைமுறையில் உள்ள சட்டம் ஷரீஆ சட்டம் இல்லை என்று எப்படிக் கூற முடியும்?

Saturday, January 12, 2013

யாழ். அஸீம் எழுதிய - மண்ணில் வேரோடிய மனசோடு



“எப்படியிருக்கிறது வாழ்க்கை?”  என்ற வினாவை வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிக்கும் பலரிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன். தொழில் நிமித்தம் வாழ்பவரர்கள், ஒரு காலப் பிரிவில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளானவர்கள், சுகபோகக் கனவுகளோடு வெளியேறியவரர்கள் போன்ற - தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் எனது பட்டியலில் அடங்குவார்கள். வெவ்வேறு காலப்பிரிவுகளில் வெவ்வேறு நிலைமைகளில் இவ்வினாத் தொடுக்கப்பட்ட போதும் அவர்கள் அனைவரினதும் பதிலின் சாராம்சம் ஒன்றாகவே இருந்ததை நான் அறிய வந்தேன்.  “நம்ம நாடு போல் வராது!” என்பதே அவர்கள் அனைவரினதும் பதிலாக அமைந்திருந்தது.


ஒரு விமானப் பயணம் மேற் கொண்டு இலங்கைக்குத் திரும்பும் போது விமான நிலையத்தில் பயணிகளை குறிப்பாக இலங்கையரை அவதானித்தீர்களானால் அவர்கள் அனைவரிடமும் ஒரு வித்தியாசமான அவசரத்தைக் காண்பீர்கள். எவ்வளவு விரைவாகத் தனது இருப்பிடத்தை அடைய முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது உறவுகளைக் காண முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது சூழலைச் சேர முடியுமோ, அவ்வளவு விரைவாக இயங்கி  அடைந்து கொள்ளும்  மனித மனத்தின் துடிப்பைத்தான் அந்த அவசரம் நமக்கு உணர்த்துகிறது.

நானும் சில நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அதிக பட்சம் பத்து நாட்கள் மாத்திரமே அங்கெல்லாம் என்னால் தாக்குப் பிடிக்க முடிந்திருக்க முடிந்திருக்கிறது. நமது தேசத்தை விட எல்லா வகையிலும் முன்னேறிய, பார்த்துப் பரவசப்படக் கூடிய ஏராளமான அம்சங்களைக் கொண்ட நாடுகளாக அவை விளங்கிய போதும் நாட்கள் செல்லச் செல்ல அத்தேசங்களின் எல்லா அம்சங்களும் எல்லா அழகுகளும் எல்லா ஆச்சரியங்களும் எனக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்கு அருந்திய தேனீர் கூட வயிற்றைக் குமட்டும் அளவுக்கு என்னை வெறுப்பேற்றியிருக்கிறது. அவ்வாறான நிலைமைகளில் நமதுமண்ணும் நமது உறவுகளும், நமது சூழலும், நமது நட்பும் உலகத்தில் வேறு இடங்களில் கிடைக்கும் எல்லாவற்றையும் விட உயர;ந்தவையாக, உன்னதமானவையாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன.  ஏன் நமது மண்ணின் ஒரு மிடர் நீர் கூட உலகத்தில் எங்கும் கிடைக்காத அதியற்புத பானமாக நமது உணர்வில் தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனின் சொந்த இடத்துக்கு அவனது சூழலுக்கு இணையாக வேறொரு இடமும் சூழலும் அமைவதில்லை என்பதைத்தான் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் உறவினர் அல்லது உடன்பிறப்பு, அல்லது நெருங்கிய பாசத்துக்குரிய ஒருவரின் நிதமான பிரிவு நம்மை தாங்க முடியாத துயரில் தள்ளிவிடக்கூடியது. என்றாலும் கூட ஒரு மாதத்தின் பின், அல்லது ஆறு மாதங்களின் பின் அந்தத் துயரிலிருந்து நாம் மீண்டு விடுகிறோம். நமது வழமையான வாழ்வுக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த வாழ்வின் போது அவனது மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவனது எண்ணவேட்டங்கள் எல்லோரையும் போல் வாழும் ஒரு மனிதனின் எண்ணவேட்டமாக இருப்பதில்லை. அவனது வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் இந்தத் துயரம் ஒரு நுளம்புக் கடி போலபோலவோ ஒரு கட்டெறும்புக் கடிபோலவோ இருப்பதில்லை. நகக் கண்ணுள் சிதைந்த மரப்பலகையின் சிராய் ஏறிவிடுவதுபோல கல்லில் கால் மோதி கால் நகத்தைப் பெயர்த்துவிடுவது போல அவ்வப்போது அவனை வதை செய்து கொண்டேயிருக்கும். இந்த வதை அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப்டட மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 22 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.

இந்தக் கால் நூற்றாண்டுத் துயரம் அரசியலாக, சமூகவியலாக, பண்பாட்டியலாக, இலக்கியமாகவெல்லாம் இன்று மாற்றம் பெற்று விட்டது. வரலாற்றுக்கும் நாளைய சமூகத்துக்கும் இந்தத் துயரை எடுத்துச் செல்லவும் சொல்லலவும் பயன்படப்போவது இலக்கியம் என்பதில் சந்தேகம் கிடையாது. அந்த மகத்தான பங்களிப்பைச் செய்தவராகத்தான் நாம் நண்பர் யாழ் அஸீம் அவர்களைப் பார்க்கிறோம். எல்லா மக்கள் குழுமத்துக்குள்ளும் கவிஞர்கள், படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினதும் வாழ்வை அவர்களே காலத்துக்குக் காலம் படம் பிடித்து வரலாற்றுக்கும் அடுத்த பரம்பரைக்கும் வழங்கும் உன்னதமான பணியைச் செய்து வருகிறார்கள்.

Friday, January 11, 2013

யாத்ரா - 22 கலந்துரையாடல்


யாத்ரா நிர்வாக ஆசிரியர் நாச்சியாதீவு பர்வீன்

யாத்ரா -22 இதழ் பற்றிய கலந்துரையாடல் கடந்த 07.01.2013 அன்று இலக்கம் 31, 42வது லேன், கொழும்பு - 6ல் அமைந்துள்ள பிரின்ஸ் அகடமியில் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் லண்டனில் வசிக்கும் யாத்ரா வாசகியான சட்டத்தரணி ஷர்மிலா ஜெயினுலாப்தீன் அதிதியாகக் கலந்து கொண்டார்.


தலைமையுரை நிகழ்த்தும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்


கவிஞர் மேமன் கவி

இலங்கையில் வெளிவந்த சி்ற்றிதழ்கள், கவிதை இதழ்கள் ஆகியவை பற்றியும் இதழ்களை வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் பற்றியும் வாசகரை நோக்கிய இதழ்கள் பற்றியும் மேமன் கவி தனது உரையில் குறிப்பிட்டார்.


கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸிஸ்

யாத்ரா சஞ்சிகையின் தனித்துவம் பற்றிக் கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸிஸ்
தனது உரையில் குறிப்பிட்டார்.


முபாறக் அப்துல் மஜீத்

நிர்வாக ஆசிரியர் நாச்சியா தீவு பர்வீன் தனது உரையின் போது யாத்ராவின் மீள்வருகைக்காகச் செய்யப்பட்ட முயற்சிகள் பற்றிப் பேசிய பின்னர் கருத்துரைகள் இடம்பெற்றன. அல் ஜஸீரா பத்திரிகை ஆசிரியர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அதன் போது தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.