Saturday, May 7, 2011

மலேசிய இலக்கிய விழாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம்

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 05.06


புகைப்படக் கூட்டம்

குப்பப்பிச்சை இக்பால் நடத்தும் மலேசிய இலக்கிய விழாவுடன் சம்பந்தப்பட்ட நேற்று நடத்தப் படவிருந்து ஒத்திப் போடப்பட்ட இலங்கைக் கூட்டம் இப்போதுதான் முடிவடைந்த நிலையில் இது எழுதப்படுகிறது.

கட்சித் தலைமையகத்தில் நடந்த (மலேசியர் கவனிக்கவும்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் நடந்த இன்றைய கூட்டத்தில்தான் கௌரவ அமைச்சர் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்ததாக அறிந்தோம். இலவச விமானச் சீட்டுக்களுக்குரியோர் அழைக்கப் பட்டிருந் தார்கள் போல் தெரிகிறது. அநேகமாக விமானச் சீட்டுக்கள் இன்று அமைச்சரால் வழங்கப்பட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கும். அமைச்சர் வரும் வாய்ப்பைப் புகைப்படம் எடுக்காமல் தவற விடவே மாட்டார்கள் குழுவினர். நாளை காலை அநேகமாக தினகரன் பத்திரிகையில் நீங்கள் ஆகக் குறைந்தது அந்தப் படங்களை அல்லது படங்களில் ஒன்றைக் காணலாம். தவறினால் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் காண முடியும்.

கட்டுரைகள் படிப்போரும் உரை நிகழ்த்தும் கலாநிதி அனஸ் அவர்களும் கவிதை படிப்போரும் இன்று சமூகமளித்திருக்க வாய்ப்புண்டு. குழுவில் உள்ள இரண்டொருவர் தவிர்ந்த ஏனையோர் இதில் கலந்து கொண்டிருந்தார்கள் என்று நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. புகைப்படத்தைப் பார்த்தால் தெரிநிது விடும்.

குழுவில் உள்ள சிலர் சற்று முன்னதாகக் கட்டம் கட்டமாகப் புறப்பட்டுச் செல்வதாகத் தெரிகிறது. ஹாஷிம் உமர் வேறாகவும் நண்பர் நிலாம் ஹாஜி பாயிக் அவர்களுடன் வேறாகவும் செல்வதாக அறியக் கிடைக்கிறது. செயலாளரைக் கைவிட்டு விட்டு அவரது ஆசிரியரும் இணைப்பாளருமான மருதூர் மஜீதும் கௌரவ ஹஸன் அலியும் தனித்து முன்னரே செல்கிறார் களாம். மற்றவர்களின் பயணத்தை விட இவர்களது பயணம் சற்று அவதானிக்கத் தக்கது. அனேகமாக மருதூர் மஜீத் தனக்கும் கவிதை படிக்க ஒரு வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காக கௌரவ ஹஸன் அலி மூலம் வேண்டு கோள் விடுக்கலாம் என்பது நமது எதிர்வு கூறல். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

அல்லது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் திட்டமாக இருக்கலாம். காயல்பட்டணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் கௌரவ. ரவுப் ஹக்கீமை முன்னிலைப்படுத்துவான் வேண்டி பேராசியரர் சாபி மரைக்காரை மடக்கு வதும் ஒரு நோக்கமாக இருக்கக் கூடும். (மலேசிய விழாவைப் போலவே அதையும் அரசியலாக்கும் திட்டம்)

(குழுவில் உள்ள மருதூர் ஏ மஜீத், எஸ்.எச்.எம்.ஜமீல், தாஸிம் அகமது ஆகியோர் ஒரு அரங்கிலாவது தலைமை, நோக்கர் என்று ஏதாவது ஒன்றில் குந்தாமல் விடவே மாட்டார்கள் என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்.)

காத்தான்குடியிலிருந்து அநேகமான வர்த்தகர்கள் இக்குழுவில் செல்ல இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக நிந்தவூரைச் சேர்ந்தவர்கள். மூன்று நாள் இலவச உணவு, தங்கலோடு நான்காம் நாள் தமது வர்த்தகத்தை முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களோடு அவர்கள் ஏறிவிடுவார்கள். இவர்களுக்குத்தான் அந்த விழாவில் இலக்கிய விளக்கம் வழங்கப்படவிருக்கிறது.

இது தவிர, கொழும்பைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தோரும் சுற்றுலாவுக்காகச் செல்வதாக அறியக் கிடைத்தது. இறுதிக் கட்டத்தில் 29,000 ரூபாய் முதல் 30,000 வரை விமானச் சீட்டு விலை எகிறிப் பறக்கிறதாம். பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்தும் ஆறு பேர் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று பல்கலைக் கழக வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.

மலேசியச் செய்தி

மலேசியாவிலிருந்து நமக்குக் கிடைத்த செய்தியின் படி சகோதரர் பி.எச். அப்துல் ஹமீத் இறுதி நாள் நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளராகக் கலந்து கொள்கிறார். இது நமக்கு ஒரு முக்கியமான செய்தியல்ல என்ற போதும் இலங்கைக் குழுவினருக்கு முக்கியமானது. பலரை விழாவுக்குச் சேர்த்துக் கொடுத்த சகோதரி புர்க்கான் பீக்கும் மேடையில் ஒரு வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

வெளிநாட்டோருக்கும் குறிப்பாக மலேசியருக்கும் மாநாட்டுக்குச் செல்லும் குறிப்பிட்ட சில இலக்கியவாதிகளுக்குமான செய்தி.

இன்று எனது மின்னஞ்சலுக்கு லண்டனிலிருந்து சகோதரர் அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் அனுப்பியிருந்த கட்டுரை இது. இந்தக் கட்டுரை ஏறாவூர் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சகோதரர் அகீல் அர்ஷாத் அவர்களது முகப்புத்தகத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தது. விரும்பிய வர்கள் அதற்கும் விஜயம் செய்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

குப்பப் பிச்சை முகம்மது இக்பால் முற்று முழுதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே விழாவை ஒப்படைத்திருக்கிறார் என்பதே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது.
இனிக் கட்டுரையைப் படியுங்கள். இனிமேல் வரும் கட்டுரைகளைச் சுருக்கமாக நாம் எழுதுவதற்கும் நீங்கள் புரிவதற்கும் இக்கட்டுரை உங்களுக்கு உதவும்.

---------------------------------------------------------------------------------------------------------


மு.கா.வின் இறங்கு முகம்!

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் - அந்தக் கணக்கு சரியென்றே வருகிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், சரிவாகவே இருக்கிறது. இப்படியே போனால் - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு இது நல்லதொரு உதாரணமாகப் போய்விடும்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் தேய்மானம் அல்லது அந்தக் கட்சி கண்டுவரும் வீழ்ச்சி பற்றிய கதைகள்தான் இவை!

மு.கா. தன்வசம் வைத்திருந்த பல சபைகளையும், உறுப்பினர் எண்ணிக்கை யினையும் கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் போது இழந்திருக் கின்றது. குறிப்பாக, மு.கா.வின் இருதயம் என்று கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் அந்தக் கட்சியின் பிடியில் இருந்த சம்மாந்துறைப் பிரதேச சபை ஐ.ம.சு. முன்னணியிடம் பறிபோயிருக்கிறது. இவை தவிர – மட்டக் களப்பில் கிட்டத்தட்ட மு.கா. வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது. அங்கு மு.கா.வின் வசமிருந்த காத்தான்குடி மற்றும் ஏறாவூர் சபைகள் பறி போயிருக்கின்றன.

மு.கா.வுக்கு கடந்த காலங்களிலும் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அதை வெளிப்படையாக அந்தக் கட்சி ஏற்றுக் கொண்டதில்லை. 'எமக்கு கடந்த முறையை விடவும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாகக் கிடைந்துள்ள போதும், வாக்குவீதம் அதிகரித்திருக்கிறது' என்பது போன்ற தலை கிறுகிறுக்கும் வரைவிலக்கணங்களினூடாக தமது சரிவினை அந்தக் கட்சியின் தலைமைத்துவம் பூசி மெழுக முயற்சிக்கும்!

ஆனால், இம்முறை மு.கா. ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது, தமது தோல்வி மற்றும் சரிவுகள் குறித்து ஆராய்வதற்காக பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நடத்துவதென்பதே அந்த முடிவாகும். அதற்கிணங்க மு.கா.வின் பிரதேச அமைப்பாளர்கள், உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்களை அழைத்து இது தொடர்பில் கருத்தறிவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேற்சொன்ன சந்திப்பினை கடந்த மாதம் கொழும்பில் நடத்தினார்கள். ஆனாலும், அது முழுமையான வெற்றியைத் தராமையினால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மு.கா. தலைவர் சென்று அந்தந்த மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து அங்கேயே பேசுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி அம்பாறை மாவட்டத்துக்கு மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வருகை தந்திருந்தார்.

துறைமுக அதிகாரசபையின் ஒலுவில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த மு.கா. தலைவரை அம்பாறை மாவட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மு.காங்கிரஸினர் சந்தித்துப் பேசினார்கள். இதன்போது கட்சியின் பின்னடை வுக்குப் பிரதான காரணமாக மு.கா. தலைவரிடம் சில விடயங்கள் முன் வைக்கப்பட்டன. அவை:

மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மு.காங்கிரஸ் ஈடுபடுவதில்லை.

மு.கா. இளைஞர்கள் பலர் மிக நீண்டகாலமாக தொழில் வாய்ப்புகளின்றி இருந்து வருகின்ற போதும் அவை குறித்து கட்சி கரிசனை எடுப்பதில்லை.

தேர்தல் காலங்களில் தலைவருக்கும் - ஆதரவாளர்களுக்குமிடையிலான உறவு பேணப்படவில்லை.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கை களுக்கு உதவு நிதிகள் வழங்கப்படவில்லை.

இப்படி, கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவைகளைக் கூறிக் கொண்டு போனால் நீண்ட பட்டியலொன்று வரும்.

மேற்சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் உண்மையாகும். மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு அல்லது ரவூப் ஹக்கீம் மு.கா.வின் தலைமையினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதன் பின்னர், மு.கா. ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எந்தப் பிரதேசத்திலும் அந்தக் கட்சி சொல்லிக் கொள்ளத்தக்க அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. தவிரவும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதிலும் ஹக்கீம் சிரத்தை காட்டவில்லை.

இதேவேளை, மு.கா.வின் அரசியல் எதிராளிகளான அமைச்சர்கள் அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோர் அவர்களின் பகுதிகளில் அசுரத்தனமான அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, தமது ஆதரவாளர் களில் கிட்டத்தட்ட பெருமளவான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பது மு.கா. ஆதரவாளர்களின் ஆதங்கமாகும்!

இவை தவிர, ஒவ்வொரு பிரதேசத்திலும் மு.கா. தலைவர் ஹக்கீம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை கட்சியின் முக்கியஸ்தர்களாக நியமித்து அல்லது போஷித்து, அவர்களுக்கிடையில் தலைமைத்துவப் போட்டியினை உருவாக்கி விட்டுள்ளதாகவும், கட்சி - பிரதேச ரீதியாகப் பின்னடைவு கண்டு வருவதற்கு இது முக்கியமான காரணமென்றும் – ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப் படுகிறது.

மேலும், மறைந்த தலைவர் அஷ்ரப் ஒவ்வொரு பகுதியிலும் கட்சியின் மத்திய குழுக்களை அமைத்து – அந்தக் குழுக்களின் முடிவுகளுக்கிணங்கவே அந்தந்தப் பிரதேசத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தார். ஆனால், மு.கா.வின் தலைமைப் பதவியினை ஹக்கீம் பொறுப்பெடுத்துக் கொண்டதன் பிறகு – கட்சியின் மத்திய குழுக்கள் இதுவரை மறுசீரமைக்கப்படாமல், செயலிழந்து விட்டன. இதுவும் - கட்சி வீழ்ச்சியடைவதற்கானதொரு காரணம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரொருவர்!

மு.கா.வின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்ட தலைவர் ஹக்கீம் சில உறுதி மொழிகளையும், தீர்மானங்களையும் வெளியிட்டதாக அறியக் கிடைக்கிறது. அவைகளில் சில:

வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

அபிவிருத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓவ்வொரு பிரதேசத்திலும் இடைக்காலக் குழுவொன்று அமைக்கப்படும். (இதில் கட்சியின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்,

உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரசாரக்குழு அங்கத்தவர்கள் அடங்குவர்). இந்தக் குழுவினூடாகவே கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இப்படி – தலைவரின் உறுதி மொழிகளும், தீர்மானங்களும் நீள்கின்றன.

உண்மையாகவே, ஒரு கட்சியின் தலைவரிடம் அழுது, புரண்டு கேட்கும் விடயங்களல்ல இவை! தனது கட்சியின் வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒரு தலைமைத்துவம் இவைகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹக்கீம் இவற்றினைச் செய்வதில் பின்னடித்தே வருகின்றார். மிகச் சரியாகச் சொன்னால் மு.கா.வின் மறைந்த தலைவர் அஷ்ரப் - ஊற்றி வைத்த எரிபொருளில் தான் மு.கா. எனும் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள்.

இன்னொரு புறம், தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் செல்லும் ஒருவராக மு.கா. தலைவரை அரசியல் எதிராளிகள் விமர்சிப்பதுண்டு. இதில் ஏதோவொரு வீதத்தில் உண்மையும் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்துக்கு வந்து போன மு.கா. தலைவர் - மீண்டும் பொதுத் தேர்தல் விடயமாகத்தான் அந்த மாவட்டத்துக்கு வந்திருந்தார். தலைவரின் இவ்வாறான நடவடிக்கை மக்கள் மத்தியிலும் கசப்புணர்வினை ஏற்படுத்தியிருக்கிறது.

மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களையும், தற்போதைய அமைச்சர் ஹக்கீமையும் மக்கள் ஆதரிப்பதற்கிடையில்; பாரிய வித்தியாசத்தைக் காண முடிகிறது. அஷ்ரப்புக்காகவும், அவரின் கொள்கைகளுக்காகவும் மக்கள் அப்போது மு.கா.வை ஆதரித்தனர். ஆனால், இப்போது – மு.கா.வுக்காகவும், மு.கா.வின் இருப்புக்காகவும் ஹக்கீமை மக்கள் ஆதரிக்கின்றார்கள்! அஷ்ரப் காலத்தில் மு.கா. தொண்டர் களோ, ஆதரவாளர்களோ தமது தலைவரை பெரும்பாலும் கசப்புணர்வோடு விமர்சித்தது கிடையாது. ஆனால், இன்று ஹக்கீம் மீது மு.கா. தொண்டர்களே கடுமையான கசப்பையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.

இவ்வாறான காரணங்களால் மு.கா.வுக்கும் அதன் தலைவர் ஹக்கீமுக்கும் இப்போது கடுமையானதொரு இறங்குமுகம் உருவாகத் தொடங்கியுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (முன்பு அ.இ.முஸ்லிம் காங்கிரஸ்) பல உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியதோடு, அதிகளவு உறுப்பினர்களையும் வென்றிருக்கிறது. மக்கள் காங்கிரஸுக்கு இது நல்லதொரு ஏறுமுகமாகும். மு.கா. மீதான கசப்புணர்வு அதன் எதிராளிகளை இவ்வாறு வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், றிசாத் கட்சியினர் - மு.கா. போல் தமது சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்கிற கேள்வியுமுள்ளது.

எவ்வாறிருந்தபோதும் - மு.கா. தலைமையின் பலவீனம், அல்லது அசிரத்தைப் போக்குக் காரணமாக அந்தக் கட்சி வீழ்ச்சியடைந்து வருவதாக கட்சியின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டு கவனிக்கத் தக்கது. இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிக உயர்வாக இருந்தபோதும், கடந்த மு.கா.வின் வாக்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இப்படியே போனால் - கட்சி கடைசியில் கட்டெறும்பாகி விடும் என்று மு.கா.வின் உயர்மட்டத்து ஆட்களே கவலைப்படுவதைப் பிழையென்று சொல்லிவிட முடியாது!

இவைதவிர, மு.கா. தலைவர் ஹக்கீம் பொறுப்பெடுத்துள்ள நீதி அமைச்சில் அண்மையில் சில முக்கிய நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் - அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் அம்பாறை மாவட்டத்து முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டர்களால் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு மிக அதிகமான வாக்குகளை வழங்கும் மாவட்டத்திலுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாமற்றதொரு நடவடிக்கையாகும் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாணசபை உறுப்பினரொருவர்!

ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் திருப்திப்படுத்தும் போதுதான் - கட்சி கட்டிக் காக்கப்படும். கட்சி இருந்தால்தான் - தலைவர், செயலாளர், எம்.பி.கள் எல்லோரும்...!

பொல்லாப்புகள் வந்துவிடும் என்பதற்காக 'ஆமை சுடுவது மல்லாத்தி' என்கிற உண்மையினைச் சொல்லாமலிருக்க முடியாது!!

-----------------------------------------------------------------------------------------------

குப்பைப்பிச்சை முகம்மது இக்பால் என்ன எந்தப் பிச்சை கூட்டம் நடத்தினாலும் அதை அரசியலாக்கினால்தான் இப்படியொரு கட்சியும் கூட்டமும் இருக்கிறது என்று மக்களுக்கு ஞாபகம் வரும்!

(சகோதரர் அப்துர் ரஸ்ஸாக்குக்கு எமது நன்றி!)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Sahmy said...

Thank you for your articles