Tuesday, May 10, 2011

கோ கிழிக்கும் கோடுகள் (மலேசிய இஸ். தமிழ். இல. விழா)

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06

மெல்லப்போ....

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் களை கட்ட ஆரம்பித்த பின்னர் மாநாடுகளை அரசியல்வாதிகள் ஆக்ரமிக்கும் நிலையை எனது கட்டுரைகளில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.


2002ம் ஆண்டு கொழும்பில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடந்த மாநாடு அரசியல் கலப்பற்றதாகவே நடந்தது என்பதைக் கலந்து கொண்ட அனைவரும் அறிவீர்கள். கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாகச் செயல் படுமாறு எந்த ஒரு நிலையிலும் எம்மைக் கோரவில்லை என்பதை அந்த மாநாட்டுக் குழுவின் செயலாளர் என்ற வகையில் எந்தவொரு நிலையிலும் உறுதிபடச் சொல்லுவேன்.

ஆனால் அந்த மாநாட்டு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் கட்சி பிளவு பட்டது. அது தனிக் கதை. அது குறித்து யாத்ரா 18வது இதழில் மாநாடு பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் ஒரு பந்தியில் குறிப்பிட் டுள்ளேன். அக்கட்டுரையை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பதிவேற்றம் செய்ய லாம் என்றிருக்கிறேன்.

அரசியல் தூக்கலான மாநாடாக அது நடத்தப்படவில்லை என்ற போதும் அதை வைத்து வேறு யாரும் புகழ் பெயர் பெறுவது கௌரவ அமைச்சருக்கு சந்தோசமான விடயமாக அமையவில்லை என்பதைப் பின்னால் நடந்த எல்லா நிகழ்வுகளிலும் நாம் உணர்ந்தே வந்துள்ளோம். ஆனால் அவரே யறியாமல் அவரை எந்த அளவுக்குப் பெருமைப்படுத்த இயலுமோ அதை இதய சுத்தியோடு நாம் செய்து வந்திருக்கிறோம்.

2007ம் ஆண்டு சென்னை மாநாடு பற்றிய இலங்கை இணைப்பாளர்கள் ஏற்பாடு செய்த கூட்டம் கொழும்புத் தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெற்ற போது கவிக்கோ அப்துல் ரகுமானும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் இதாயத்துல்லாவும் வருகை தந்திருந்தனர். இலங்கையிலிருந்து யாரைக் கௌரவம் செய்யப் போகிறீர்கள் என்று அவர்கள் வினவிய போது அங்கு அமர்ந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

அந்த அமைதியின் அர்த்தம் என்னவெனில் - பச்சையாகச் சொல்வது என்றால் -தமது பெயரை யாராவது சொல்ல மாட்டானா என்ற எதிர்பார்ப்புத்தான். சூழலை உணர்ந்த கொண்ட நான் எழுந்து, 2002ல் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்திய பெருமைக்குரிய ரவூப் ஹக்கீம் அவர்களையும் தமிழில் ஐந்து காப்பியங்கள் எழுதியவரும் (இப்போது ஏழு) இஸ்லாமிய இலக்கியச் செற்பாடுகளில் தொடரந்து ஈடுபட்டு வருபவருமான டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீனையும் கௌரவியுங்கள் என்று முடித்தேன். இந்த இடத்தில் ரவூப் ஹக்கீம் அவர்களின் சகோதரரும் எனது நண்பருமான ரவூப் ஹஸீர், எஸ்.எச்.எம். ஜமீல், ஜூனைதா ஷெரிப், என்.எம். அமீன், தாஸிம் அகமது போன்ற இன்னும் பலர் இருந்தார்கள்.

இக்கால கட்டத்தில் எனது சகோதரர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்தவர்களில் ஒருவராக இருந்தார். நான் அவரது அமைச்சில் கடமை செய்து வந்தேன்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் அரசியல் வேற்றுமை காட்டி சகோதரர் ரவூப் ஹக்கீமை இருட்டடிப்புச் செய்யவோ பேசாது விடவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் தயாராக இல்லை என்பதைத்தான். நாம் நெஞ்சுக்கு நேர்மையாக இவ்விடயத்தில் செயற்பட்டு வந்துள்ளோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான். எனது சகோதரர் அரசியல்வாதியே தவிர நான் இல்லை. இலக்கியவாதிகளுடனும் இலக்கிய ஆர்வலர்களுடனும் ஒன்றித்து இருக்கவும் செயல்படவும் விரும்பியவனாகத்தான் இருந்து வருகிறேன் என்பதையே வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாநாட்டின் போது வெளியிடப்பட்ட அனைத்து நூல்களையும் நீங்கள் படித்துப் பாருங்கள். அவற்றில் அனைத்திலும் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களது பெயரை நாம் பெருமையுடன் பொறித்து வைத்திருக்கிறோம்.

ஆனால் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசியல்வாதி.  தன்னை மட்டும் தவிர வேறு யாரும் பெயர் பெறவோ பேசப்படவோ கூடாது என்பது அரசியலில் சிலரின் (திருத்திக் கொள்ளப்பட வேண்டிய) அரிச்சுவடிப் பாடம். இதனால்தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு அல்லது மூன்று முக்கியஸ்தர்களை முக்கியமானவர்களாக நியமித்து அவர்களுக்குள்ளே போட்டியும் பொறாமையுமாக இழுபறிப்பட வைத்திருக்கிறது. இதை நிரூபிக்கிறது ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறங்கு முகம்’ என்ற லண்டனிலிருந்து அப்துல் ரஸாக் எழுதிய கட்டுரை. அதை நான் எழுதி யுள்ள 05.06 இலக்கக் கட்டுரையில் நீங்கள் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளலாம்.


2002 மாநாடு ஆரம்பித்த முதல் நாள் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் பேரா. சேமுமு. முகமதலியும் பொருளாளர் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீனும் எனக்கும் ஜின்னாஹ் ஷரிபுத்தீனுக்கும் தாஸிம் அகமதுவுக்கும் பொன்னாடை போர்த்த விரும்பினார்கள். நாங்கள் அதை முற்றாக மறுத்தோம். மலேசியாவிலிருந்து வந்திருந்த இக்பால் மலேசிய நினைவுச் சின்னங்களை வழங்க விரும்பினார். அதையும் மறுத்தோம்.

இறுதியாக மாநாடு நல்ல படியாக முடிந்த மூன்றாம் நாள் இரவு கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களது அரச இல்லத்தில் மாநாட்டுக் குழுவுக்கும் வெளிநாட்டுப் பேராளர்களுக்கும் விருந்து நடந்தது. இந்த விருந்து நடந்து முடிந்ததும் ஒரு சிறிய கூட்டத்தை நடத்த இந்தியப் பேராளர்கள் விரும்பினர். இந்த வேளை எம் மூவரையும் பலாத்காரமாக அழைத்த கவிக்கோ அந்த இடத்தில் மூவருக்கும் பொன்னாடை போர்த்தினார். கௌரவ அமைச்சர் எந்த விதமான சலனமும் இன்றி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். இதுதான் அவருக்கு உறைத்த இடம் என்று நான் நம்புகிறேன். இதை ஒரு விடயமாகவே நாம் கருதவில்லை. புகைப்படம் எடுத்துப் பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. இதைப் பற்றி வெளியில் எங்கும் கதைக்கவுமில்லை. ஏனெனில் எங்களுக்கு இது ஒரு பெரிய விடயமே இல்லை.

அந்தக் கணம் முதல் இன்று வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியமைக்காக நன்றி என்று ஒருவார்த்தை அவர் சொன்னதில்லை. மாநாட்டைப் பற்றிக் கதைக்கும் சந்தர்ப்பம் நேர்ந்தாலும் கூட மறந்தும் அதற்காக உழைத்த எங்களைப் பற்றி ஒரு வார்த்தை பகர்ந்ததில்லை. கவிக்கோ பொன்னாடை போர்த்தி சிலர் அமைச்சரையும் எங்களையும் பாராட்டிப் பேசினார்கள். அவர்கள் எங்களைப் பாராட்டுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அதன் பிறகு பேசிய அமைச்சரும் வேறு எதையோ பேசி விட்டு அமர்ந்து விட்டார். அன்று கவிக்கோ ஒரு பொன்னாடையை முதலில் அமைச்சருக்குப் போர்த்தியிருக்க வேண்டும். ஆகக் குறைந்தது நாங்களாவது எங்களுக்குப் போர்த்திய பொன்னாடைகளை அவருக்குப் போர்த்தியிருந்தால் ஓரளவு சரியாக வந்திருக்குமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

எனவேதான் இம்முறை நாங்கள் கழற்றி விடப்பட்டோம் என்று எம்மால் உணரக் கூடியதாக இருக்கிறது. அதற்குத் துணை போனவர்தான் குப்பப் பிச்சை முகம்மது இக்பால். அவருக்கு மனச்சாட்சி என்ற ஒன்று இருக்குமானால் அது அவரைக் குடையும். (இருக்குமானால்!)

இப்போது மலேசியா செல்பவர்கள் எவராவது பொன்னாடை போர்த்திப் பெயரெடுக்க நினைத்தீர்களோ.... அவ்வளவுதான்! அடுத்த குறூப்பில் அவர்கள் காணாமல் போக இடமுண்டு!

இவ்வருடம் ஏப்ரல் 5ம் திகதிய கூட்டம் முடிவடைந்து வந்த எஸ்எச்.எம். ஜமீல் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீனைத் தொலைபேசியில் அழைத்து, “ஜின்னாஹ் என்னை பலாத்காரமாகப் போட்டு விட்டார்கள். நீங்கள் எல்லாம் இல்லாமல் செய்ய முடியாது... இல்லையென்றால் நான் விலகி விடுவேன்.. நாளை நான் கௌரவ அமைச்சருடனும் ஹசன் அலியுடனும் பேசி விட்டு உங்களுக்குச் சொல்கிறேன்” என்றாராம். அதற்குப் பிறகு அவர் ஜின்னாஹ்வைத் தொடர்பு கொள்ளவே இல்லை. பின்னால் உள்ள ரகசியத்தை அப்போது ஜமீலினால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றே உணர முடிகிறது.

அடுத்த தினம் அவர் நிச்சயம் பேசியிருப்பார். “சும்மா பேசாமல் இருங்கள்!” என்றிருப்பார்கள். அடங்கிப் போயிருப்பார் மனிதர். அதற்கு மேல் பேசியிருந்தால் ....... ஊகித்துக் கொள்ளுங்கள்!

இப்போது குழுவில் உள்ளோரின் கதி என்னவென்று நினைக்கிறீர்கள்? சிலருக்கு சில விடயங்கள் தெரியாது. கூட்டம் கூட்டமாய் நடக்கிறது. யாரோ முடிவுகளை எங்கிருந்தோ எடுக்கிறார்கள். சும்மாயிருந்து பார்த்து விட்டு வருகிறார்கள் என்பதே நமக்குக் கிடைக்கும் தகவல்.

அரசியல் அல்லது அரசியல்வாதிகள் அல்லது தனவந்தர்கள் பின்னால் நிற்க இலக்கியம் முன்னால் நிற்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கு நேர்மாறாகவே யாவும் நடந்து கொண்டிருக்கின்றன. சின்னச் சின்ன ஆசைகளுக்காகச் சில - இலக்கியவாதிகள் என்று சொல்வோரும் துணை போவதுதான் கவலையளிக்கும் விடயம். இப்போது அரசியல்வாதிகளும் இக்பால் போன்ற கோர்ட் சூட் ஆசாமிகளும் தம்மை முன்னிலைப்படுத்தும் ஒரு இலகுவான வழியாக இஸ்லாமிய இலக்கியத்தை எடுத்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையின் தோற்றுவாய் 2007 சென்னை மாநாட்டில்தான் ஏற்படுத்தப்பட்டது.

சென்னையில் 2007ம் ஆண்டு என்ன, எப்படி நடந்தது என்பதை மாநாடு முடிந்த வந்து சிரேஷ்ட ஊடகவியலாளரும் மலேசிய மாநாட்டுக்கான இலங்கைக் குழுவின் ஊடக இணைப்பாளருமான எம்.ஏ.எம். நிலாம் எழுதி தினக்குரல் 10.06.2007 அன்று பிரசுரமான கட்டுரையை இப்போது நீங்கள் படியுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------

இலங்கைப் பேராளர்களுக்கு அதிருப்தியளித்த சென்னை இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

தமிழகத்தின் சென்னை மாநகரில் கடந்த 25,26,27 ஆம் திகதிகளில் நடைபெற்ற அனைத்துலக இஸலாமிய தமிழிலக்கிய மாநாடு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தினதும் தன்மானத்தை விலைபேசிய மாநாடாகவே குறிப்பிட்டாக வேண்டும். மாநாடு குறித்து முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனியும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. மாநாடு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப வைபவம் முதல் இறுதி நாள் நிகழ்வு வரை ஒரு சர்வாதிகாரப் போக்கையே எல்லோராலும் காண முடிந்தது.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவராக கப்டன் அமீர் அலி உண்மையாகவே ஒரு பொம்மையாகவே காணப்பட்டார். கவிக்கோ அப்துல் ரகுமானும் இலக்கியக் கழகச் செயலாளர் ஹிதாயத்துல்லாவும் அனைத்துப் பொறுப்புக்களைத் தலையில் சுமந்து சர்வாதிகாரப் போக்கிலேயே நடந்து கொண்டனர்.

மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்கள் எவரும் மதிக்கப்படாமல் தங்களது இஷ்டப்படி நடந்து அதிகாரத் தொனியிலேயே கவிக்கோவும் ஹிதாயத் துல்லாவும் செயற்பட்டமை அனைத்துப் பேராளர்களையும் வேதனையடையச் செய்தது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து நூற்றுக்கும் அதிகமான பேராளர்கள் சென்னை சென்றனர். 120க்கும் குறையாத பேராளர்கள் இலங்கையிலிருந்து வருவார்கள் என்று இலங்கை ஏற்பாட்டாளர்களும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் மாநாடு நடப்பதற்கு 10, 15 நாட்களுக்கு முன்னரே தெரிவித்திருந்த போதிலும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இலங்கைப் பேராளர் களுக்கான எந்த வசதிகளையும் இறுதி நேரம் வரை மேற்கொண்டிருக்க வில்லை.

முதலில் மே 24 ஆம் திகதி காலையில் என்னுடன் 15 பேரடங்கிய குழு சென்னை விமான நிலையம் சென்றடைந்தோம். அங்கு எம்மை அழைத்துச் செல்ல எவருமே வருகை தந்திருக்கவில்லை. என்னுடன் சில இலக்கிய வாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் இலக்கியப் புரவலர்களுமான அல்ஹாஜ் அஷ்ரப் ஹ_ஸைனும் அல்ஹாஜ் பாயிக் மக்கீனும் மௌலவி யூசுப் நஜிமுதீனும் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ_ம் கூட வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து விட்டு இரண்டு வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினோம்.

அதன் பின்னர் மாலையில் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுதீன் தலைமையில் 80ற்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தந்தனர். நாங்கள் அனைவருமே அன்று மாலை 6,7 மணி வரை தங்குமிட வசதி ஏற்படுத்தப்படாமையால் சென்னை அண்ணா சாலைப் பகுதியில் அலையும் நிலை ஏற்பட்டது.

ஹிதாயத்துல்லாவுடன் பல தடவைகள் தொலைபேசி மூலம் நானும் ஹாஜி பாயிக் மக்கீனும் தொடர்பு கொண்டதன் மூலம் மலடி பிள்ளைப் பெறுவது போன்று கஷ்டப்பட்டு என்னோடு சென்ற 15 பேருக்குமான தங்குமிட வசதி பெற்றுக் கொள்ள முடிந்தது. இந்த வசதியைப் பெற்றுக் கொள்தற்காக என்னை விட பாயிக் ஹாஜியார் மிகவும் பிரயாசைப் பட்டதை ஒரு போதும் மறந்து விட முடியாது.

மாநாட்டின் ஆரம்ப அமர்வில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமுக்கும் அமீர் அலிக்கும் மேடையில் இடமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் அவர்கள் மறக்கப்பட்டவர்களாயினர். இம்மாநாட்டின் போது அமைச்சர் ஹக்கீமும் கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீனும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியினால் பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள் என்று கவிக்கோ வினாலும் ஹிதாயத்துல்லாவினாலும் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த உறுதி மொழி நிறைவேற்றப்படவேயில்லை.

இந்த மாநாடு ஒரு சர்வாதிகாரப் போக்கிலேயே முன்னெடுக்கப்படுவதாக ஆரம்பத்திலேயே இலங்கையின் மூத்த எழுத்தாளரான மானா மக்கீன் எம்மிடம் பிரஸ்தாபித்த போது அதனை நாம் ஆரம்பத்தில் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அதன் உண்மை நிலையை அங்கு சென்ற பின்னரே நன்கு உணர்ந்த கொள்ள முடிந்தது.

மாநாட்டில் கௌரவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எமது கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன் அவமதிக்கப்பட்டமையானது இலங்கையர்கள் அவமதிக்கப்பட்ட தாகவே கருத வேண்டும். அவர் தமது பாராட்டையும் விருதையும் பெற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததை நாம் பெருமையாகவே கருதுகிறோம். தனது தந்தையாரான புலவர் ஆ.மு.சரிபுத்தீனின் புதல்வர் தந்தையின் பெயரைக் காப்பாற்றி விட்டமைக்காக எனது உளப்பூர்வமான நன்றிகளை இவ்வேளை யில் சமர்ப்பித்தாக வேண்டிய கடப்பாட்டை நான் கொண்டுள்ளேன். இலங்கை முஸ்லிம்கள் தன்மானமுள்ளவர்கள் என்பதை அவர் நிரூபித்து விட்டார்.


எம்மோடு மாநாட்டுக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் மௌலவி எஸ்.எல்.எம். ஹனிபா கூட மாநாட்டு ஏற்பாடுகள் செயற்பாடுகள் குறித்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் நடத்தப்பட்ட இலக்கிய மாநாட்டோடு இந்த மாநாட்டை ஒப்பிட்டுக் கூடப் பார்க்க முடியாதென அவர் மனந்திறந்து கருத்து வெளியிட்டார்.

இங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. புனித திருமறையை முதன் முதலில் தமிழில் வெளியிட்ட பெருமை இலங்கையர்க்கே உரித்தானதாகும். இந்திய முஸ்லிம் லீக் தலைவர் ஆ.கா. அப்துஸ்ஸமதின் தந்தையாரான அப்துல் ஹமீது பாக்கவி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட புனித குர்ஆனை இலங்கையைச் சேர்ந்த கொடை வள்ளல் என்.எம்.எம். ஹனிபா அவர்களால் அன்று 50 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. மர்ஹ_ம் என்.எம்.எம்.ஹனிபா அவர்களின் மருமகனார் அஷ்ரப் ஹ_ஸைன் கூட இந்த இலக்கிய மாநாட்டில் பங்கேற்றார்.

அன்று புனித குர்ஆன் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வியடங்கள் இந்த மாநாட்டில் மறக்கப்பட்டிருப்பது வேதனை தரக் கூடியதாகும்.

ஒட்டு மொத்தமாக இந்த இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டை நோக்கும் போது முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்ட தொன்றாகவே காண முடிந்தது.  சில அரசியல் நலன்களை தமக்காகப் பெற்றுக் கொள்ளும் ஒரு மாநாடாக இதனை மாற்றியிருந்த மையை அனைவராலும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. போதாக் குறைக்கு மாநாட்டின் முக்கிய புள்ளிகளாக தம்மைப் பகிரங்கப்படுத்திய கவிக்கோவும் ஹிதாயத்துல்லாவும் முஸ்லிம் சமுதாயத்தின் தன்மானத்தை அடகு வைத்த மாபெரும் தவறை இழைத்து விட்டார்கள்.

மாநாட்டின் இறுதி நாள் விழாவின் போது பிச்சை கேட்கும் நிலைக்குக் கூட இவர்கள் வந்து விட்டர்கள். கேட்ட பிச்சையை வழங்குவதில் கலைஞர் கருணாநிதி பெரிய அளவில் அக்கறை காட்டியதாகக் காண முடியவில்லை. தன்னிடம் கருணைதான் கூடுதலாக உள்ளதாகவும் நிதி மிகக் குறைவான தெனவும் கூறி மழுப்பல் போக்கில் அவர் உரை அமைந்திருந்ததையே நோக்கக் கூடியதாக அமைந்திருந்தது.

இலங்கைப் பேராளர்களைக் கண்டு கொள்ளாத முதல்வர்

இலங்கையிலிருந்து சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பேராளர்கள் 120 ற்கும் அதிகமானோர் மாநாட்டில் பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் கலந்து கொண்ட போதிலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கண்டு கொண்டதாகவே இல்லை. இஸ்லாமிய இலக்கிய மாநாடு என்று பகிரங்கமாகவே நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியான கலைஞர் முஸ்லிம்களை, இஸ்லாமியரை முஸ்லிம்களாகவே நினைக்கவில்லை. திராவிடர்களாக, தமிழர்களாகவே வாழுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

இது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருத வேண்டியுள்ளதாக மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ஹாஜி ஏ.எச்.எம். அஸ்வர் முதல் கொண்டு பலரும் வேதனையுடன் கருத்துத் தெரிவித்தனர்.

அஸ்வர் ஹாஜியார் தமக்குப் பேசக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஊடகத்துறை சார்ந்த தினகரன் முகாமைத்துவ ஆசிரியர் என்.எம். அமீன், நவமணி ஆசிரியர் எம்.பி.எம். அஸ்ஹர், தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம், பிரதம செய்தியாளர் எம்.ஏ.எம். நிலாம் தினகரன் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த அருள் சத்திய நாதன் போன்றோரின் பெயர்களைச் சுட்டிக் காட்டி தனது கருத்துக்களை ஆழமாகப் பதிவு செய்த போதிலும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அவர்களை மதிக்கத் தவறி விட்டனர்.

தமிழகத்திலிருந்து இலங்கை வரக் கூடிய இலக்கிய நெஞ்சங்களை இலங்கையர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுவது வழமையான கைங்கரியமாகும். அதற்குக் கிடைத்த பிரதிபலன் தான் செருப்படி போல் சென்னை மாநாட்டில் கிடைத்துள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கைப் பேராளர்களுக்குக் கிடைத்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுதீன் தமிழக பேராசிரியை பர்வீன் சுல்தானாவிடம் இலக்கிய மாநாடுகளுக்காக இலங்கையர்களை அழைக்க தமிழகத்திலிருந்து ஒருவரும் வரக் கூடாதெனவும் ஈழத்து இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் மானங் கெட்டவர்கள் அல்லவெனவும் மாநாட்டு இறுதியில் சூடாகவே முகத்திலடித்தாற் போல் கூறியதைப் பலரும் அவதானித்தனர்.

கலைஞர் கூட இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் முஸ்pம்களுக்குக் கதை சொன்னாரே தவிர அர்த்தமுள்ளதாக எதையும் கூற முன்வரவில்லை.

போதாக்குறைக்கு மாநாட்டு ஆரம்ப வைபவத்தில் கூட தமிழக நிதியமைச்சர் அன்பழகன் தமதுரையில் இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமிழ் பேசுவதாகவே தாமறிந்துள்ளதாகவும் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தமிழ்தான் பேசுகிறார்கள் என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

ஈழத்து முஸ்லிம்களின் மொழியே தமிழ்தான் என்பதை அன்பழகனால் அறிந்திருக்க முடியாத அவலம் குறித்து நாம் அழுவதா சிரிப்பதா எனத் தோன்றுகிறது.

இதுபற்றி எமது பிரதம ஆசிரியர் தனபால சிங்கம் பழ. நெடுமாறனுடன் சந்தித்த வேளை கூறிய போது அன்பழகனை நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான் எனக் கூறி விடயத்துக்கே முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

நடந்து முடிந்த இந்த ஏழாவது உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டின் மேம் பல சுவையான வேதனை கலந்த சம்பவங்களை அடுத்து வரும் வாங்களிலும் பகிர்ந்து கொள்வோம்.
-------------------------------------------------------------------------------------------------------------

இப்படியாகப்பட்ட கவிக்கோவை முன்னிறுத்தித்தான் இந்த மலேசிய விழா நடைபெறுகிறது. அவர் முன்னிறுத்தப்பட்டதாலேயே பலர் ஒதுங்கிக் கொண்டார்கள். இடையில் மீண்டும் ஒரு மாநாட்டை இலங்கையில் நடத்த நாம் எண்ணி கௌரவ ரவூப் ஹக்கீமிடம் சொன்ன போது, சிவத் தம்பி வருவாரா, கவிக்கோ வருவாரா? என்று அவர் எம்மிடம் திருப்பிக் கேட்டதை மீ;ண்டும் இந்த இடத்தில் உங்களுக்கு ஞாபகம் செய்ய விரும்புகிறேன். இவர்கள் இருவரும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்குச் செய்த சேவைகள், பணிகள் என்ன என்பதையும் நீங்கள் சற்று ஆராய்ந்து பாருங்கள்.

இந்த மலேசிய விழாவில் கவிக்கோதான் பிரதானம் என்றிருக்கும் நிலையில் இம்மாநாட்டின் இணைப்பாளர் குழுவில் மேலேயுள்ள கட்டுரையை எழுதிய நண்பர் எம்.ஏ.எம். நிலாம் ஊடக இணைப்பாளர் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்!

2007 சென்னை மாநாடு பற்றிய சில கட்டுரைகளும் பத்திரிகைத் தகவல்களும் எம்வசம் உள்ளன. அவை அவவ்வப்போது வலையேற்றம் செய்யப்படும். அவற்றைப் படித்துக் கொண்டு வருகையில் இன்னும் பல விடயங்களில் உங்களுக்குத் தெளிவு ஏற்படும்.

(அடுத்து மலேசிய மலையாண்டி எழுதிய கட்டுரை வரும்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

புகல் said...

*தமிழகத்திலிருந்து இலங்கை வரக் கூடிய இலக்கிய நெஞ்சங்களை இலங்கையர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுவது வழமையான கைங்கரியமாகும். அதற்குக் கிடைத்த பிரதிபலன் தான் செருப்படி போல் சென்னை மாநாட்டில் கிடைத்துள்ளது.* இலங்கை தமிழர்களின் மனம் வருந்தும்படி நிகழ்ச்சிகள் நடந்திருந்தால் கண்டிப்பாக அது கண்டனத்துக்குரியதே
தமிழ்தாய் மக்கள் அனைவரும் ஒருவரே அந்த தாயின் பிள்ளைகள் ஒவ்வொரும் ஒவ்வொரு நாட்டில் வாழலாம் ஆனால் இது எல்லாம் ஒரு தடை அல்ல, இந்தியா என்னும் அடிமை நாட்டில் வாழ்ந்து கொண்டு போர்காலத்தில் அப்பாவி இலங்கை தமிழர்களுக்கு உதவ முடியவில்லையே என்று இங்கு எத்தனை தமிழர்கள் வருத்தபட்டுகொண்டிருக்கிறார்கள் தெரியுமா ஏன் உயிரைகூட துறந்துயிருக்கிறார்கள் எங்கள் அன்பை நாங்கள் விளம்பரமாக்க விரும்பவில்லை, அது எங்கள் கடமை உலகில் எங்கு தமிழனுக்கு இன்னல் எற்பட்டாலும் தாய்தமிழகம் இன்னல் போக்க உரக்க குரல் கொடுக்கும். நான் தமிழ்நாட்டு தமிழன், இலங்கை தமிழன், மலாய் தமிழன், கன்னடா தமிழன் போன்ற பிரிவினைவாதம் தேவையில்லையே, தமிழை இலக்கியத்தில், கணினியில் யார் வளர்கிறார்கள் என்ற ஆரோக்கிய போட்டி இருக்கலாம் ஆளுமை போட்டி தேவையில்லை
/*இஸ்லாமிய இலக்கிய மாநாடு என்று பகிரங்கமாகவே நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியான கலைஞர் முஸ்லிம்களை, இஸ்லாமியரை முஸ்லிம்களாகவே நினைக்கவில்லை. திராவிடர்களாக, தமிழர்களாகவே வாழுங்கள் என்று அழைப்பு விடுத்தார்*/ மதம் என்ற அடையாளத்தை தொலைத்து தமிழனாய் வாழ்வோம் என்ற கலைஞரின் வாதம் சரியே, முசுலிம் மட்டும் அல்ல இந்து, கிருத்துவம் எந்த மதம் மதத்தின் பெயரால் இலக்கியம் நடத்தினாலும் இதைதான் சொல்லிருப்பார்.
நான் எந்த இடத்திலேனும் தங்கள் மனம் வருந்துபடியாக எழுதியிருந்தால் அது என்னுடைய அறியாமையே.
அறியாமைக்கு தாங்கள் மன்னிக்கவேண்டும்
நன்றி வணக்கம்!!!

Shaifa Begum said...

என்னால் நம்பமுடியவில்லை....இப்படியெல்லாமும் நடக்கிறதா..?
சேர், உஙகள் ஆக்கங்கள் படிக்கும் வரைக்கும்
எனக்கு இது பற்றி ஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.
ஆனால் இப்போது என்னால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. இலங்கை அரசியலிலும், முஸ்லிம்களுக்கிடையிலும்
இது தான் நடக்கிறது என்று தெட்டத் தெளிவாக படம் போட்டு காட்டுகிறது உங்கள் ஆக்கங்கள்.!
முதலில் உங்களுக்கு நன்றிகள்! இந்த மாதிரியான விடயங்கள் வெளிச்சத்துக்கு வருவது ஆரோக்கியமான
விடயம் தான்..ஆகக்குறைந்தது வெட்கமாவது வரும் இல்ல..?
இந்த நூற்றாண்டிலுமா பணம், பதவி, பொன்னாடைக்கு அலைந்து திரிகிறார்கள்..?கேக்குறதுக்கு பார்க்கிறதுக்கு
நல்லாவே இல்ல !
”அன்று கவிக்கோ ஒரு பொன்னாடையை முதலில் அமைச்சருக்குப் போர்த்தியிருக்க வேண்டும். ஆகக் குறைந்தது நாங்களாவது எங்களுக்குப் போர்த்திய பொன்னாடைகளை அவருக்குப் போர்த்தியிருந்தால் ஓரளவு சரியாக வந்திருக்குமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.”
எப்படி சேர் உங்களால இப்படியெல்லாம் எழுத முடியுது..? Super !

Unknown said...

கவிஞரே...

தமிழகத்திலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்து விட்டு ( நல்ல வசதியான வீடுதான் ) கு.பி இக்பாலுக்கு நட்சத்திர விடுதியில் தங்க வசதி செய்து கொடுத்தீரே உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் :-))))