Sunday, September 26, 2010

குரல் வழிக் கவிதைகள்


“கவிதைப் புத்தகங்களை யாராவது எனக்குத் தந்தால் அவற்றை முன்னால் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். திறக்க மாட்டேன். அந்தக் கவிதைப் புத்தகம் என்னை என்ன செய்யுமோ என்ற அச்சம். சில சமயம் கவிதைப் புத்தகம் - அதனுடைய அற்புதமான படைப்புத் தன்மை என் எழுத்தை ஊமையாக்கி விடும். சில சமயங்களில் அதன் வெற்றுத் தன்மை கோபத்தை ஏற்படுத்தும். கவிதையைப் படிக்கிறத்துக்கு முன்னால நான் தயங்கித்தான் படிக்கிறேன்.”

கவிஞர் இன்குலாப் இவ்வாறு ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

கவிஞர் அல் அஸ_மத் அவர்கள் நூல் வெளியிடுவது தெரியும். அந்த நூலின் பின்புற அட்டையில் அவரைப் பற்றி நான்தான் எழுதியிருக்கிறேன். புத்தகம் அச்சிட்டு முடிந்ததும் ஒரு பிரதியை எனக்குத் தந்தார். பெற்றுக் கொண்டேன். திறந்து கவிதைகள் அமைந்துள்ள முறை, புத்தகத்தின் அழகிய கட்டடைப்பு, பின்புற அட்டையில் நானே தெரிவு செய்த அவரது படம் எல்லாவற்றையும் ரசித்தேன். “நூலுக்கு நீங்கள்தான் நயவுரை வழங்குகிறீர்கள்” என்றார். அதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

புத்தகத்தைத் திறந்து கவிதையொன்றினைப் படிக்க ஆரம்பித்த போது இன்குலாப் சொன்னது போல் அக்கவிதை என்னை ஊமையாக்கி விட்;டது. புத்தகத்தை மூடி விட்டேன். இவ்வாறு ஆறு கவிதைகள் அளவில் அரை குறையாக வாசித்து வாசித்து இடையில் புத்தகத்தை மூடி வைத்து விட்டேன். இந்தப் புத்தகத்துக்கு நயவுரை வழங்கும் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டது நான் செய்த முதலாவது பிழை என்று உணர்ந்தேன். கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத நான் வானம் ஏறி வைகுந்தம் போக நினைப்பது அறிவீனம் என்றுணர்ந்தேன்.

கவிதை சொல்வது ஒரு கலை என்று நான் சொல்லுவேன். கவிதை சொல்வது என்பது ஒரு தற்காப்புக் கலை மாதிரி என்று கொண்டால் - சிலர் சோடிக்கப்பட்ட அட்டைக் கத்திகளோடு வந்து ஆடுவார்கள். சிலர் கைகளை மட்டும் பயன்படுத்திப் பயங்காட்டுவார்கள். சிலர் தும்புக் கட்டுப் பொல்லுகளைக் கொண்டு வந்தும் ஆடுவார்கள். உண்மைக்குண்மையாக கலையை அதன் மரியாதையுடன் நேர்மையாக ஆடும் வெகு சிலருள் கவிஞர் அல் அஸ_மத் அவர்களும் ஒருவர்.

இந்தக் குரல்வழிக் கவிதைகள் நூலில் அடங்கியிருக்கும் அனைத்துக் கவிதைகளும் வானொலி, தொலைக்காட்சி, மேடைகள் ஆகியவற்றில் பாடப்பெற்றவை. தனிப்பட்ட சிலரின் நூல் வெளியீடுகளில் பாடப்பட்ட கவிதைகளும் பல உள்ளன. மேமன் கவியின் ‘யுகராகங்கள்’, அன்புமுகைதீனின் ‘மாதுளம் முத்துக்கள்’, அன்புடீனின் ‘முகங்கள்’, சுலைமா ஏ.சமியின் ‘வைகறைப் பூக்கள்’, எம்.வை.எம். மீஆதுவின் ‘கலைமலர்’ சஞ்சிகை மற்றும் ‘நபிமொழி நாற்பது’, இளநெஞ்சன் முர்ஷிதீனின் ‘ஒரு வாசகனின் வாசகங்கள்’, ஜின்னாஹ் ஷரிபுதீனின் ‘பாலையில் வசந்தம்’ மற்றும் ‘முத்து நகை’, நஜ்முல் ஹ_ஸைனின் ‘பனித்தீ’, அஸீஸ் நிஸாருத்தீனின் ‘பூங்கா”, மௌலவி ஸைபுத்தீன் ஸாஹிப் - தீன்ஷா அவர்களின் ‘வள்ளல் நபியின் வார்ப்புகள்’, மு.பஷீரின் ‘மீறல்கள்’, எம்.எச்.எம்.ஷம்ஸின் ‘கிராமத்துக் கனவுகள்’ அனிஸ்டஸ் ஜெயராஜாவின் ‘கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்’ மற்றும் ‘அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள்’ஆகிய நூல்கள் மற்றும் சஞ்சிகைகளின் வெளியீட்டு விழா மேடைகளில் பாடப்பட்ட கவிதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. இவற்றைப் பார்த்த பிறகு எனக்கு மனதில் பெரியதொரு ஏக்கம் வந்தது. எனது மூன்று விழாக்களிலும் கவிஞரைப் பேசச் செய்ததால் எனது பெயரிலான ஒரு நல்ல கவிதையை இழந்து விட்டேன். ‘யாத்ரா’ முதலாவது இதழ் வெளியீட்டு விழாவில் கவியரங்குத் தலைமை இவர்தான். அந்தக் கவிதை இந்நூலில் இல்லை. இதற்காக நான் அவர் மீது எனது கோபத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தினகரன் ஆசிரியர் அமரர். சிவகுருநாதன் முதுகலைமாணி பெற்றதற்கான பாராட்டு விழா, நாகூர்கனியின் பாராட்டுவிழா, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களுக்கான பாராட்டு விழா, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி அவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மு.மேத்தாவுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு விழா ஆகியவற்றில் பாடப்பட்ட பாராட்டு மற்றும் வாழ்த்துக் கவிதைகளும் அடங்கியுள்ளன.

சில்லையூர் செல்வராசன், என்.எஸ்.எம்.ராமையா, துரை விஸ்வநாதன் ஆகியோரது மறைவு குறித்து நடத்தப்பட்ட நிகழ்வுகளில் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதைகளும் உள்ளன. இவற்றுக்கு அப்பால் கம்பன் விழாக் கவிதை மேடை, தமிழோசை மன்ற அங்குரார்ப்பண விழா ஆகியவற்றிலும் வெளி மேடைகள் சிலவற்றில் பாடப்பட்டவையும் அடங்குகின்றன.

நான் குறிப்பிட்ட வரிசை அல் அஸ_மத்தின் நூலில் கவிதை இடம் பெற்ற வரிசைதான். நான் சிரேட்டங்களைப் பின்னாலும் கனிஷ்டங்களை முன்னாலும் சேர்த்துப் பட்டியல் தயாரித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டிக் கூட்டம் முடிந்ததும் யாரும் என்னைத் துரத்த வேண்டாம்.

‘இன்றிருந்தால் உமறு’ என்று ஒரு கவிதை இந்நூலில் உள்ளது. நான் அதைப் படித்துக் காட்டப் போவதில்லை. இரவுச் சாப்பாட்டுக்குப் பின்னர் அந்தக் கவிதையைப் படிக்குமாறு உங்களுக்குச் சிபார்சு செய்கிறேன். ‘செந்தமிழைக் காக்க வல்ல கவிஞர் யாரோ’ என்று ஒரு கவிதை உண்டு. காலையுணவுக்கு முன்னர் இக்கவிதையைப் படிப்பது நல்லது.

வாழும் சிறந்த தமிழ் அறிஞர்களில் கவிஞர் அல் அஸ_மத் அவர்களும் ஒருவர். தமிழ்க் கவிதை இலக்கணங்க@டாக அர்த்தமும் தமிழ் ரசனையும் கொண்டு கவிதை சொல்லத் தெரிந்தவர். மரபிலும் புதுக்கவிதை என்கிற வரவிலும் அவர் தேர்ந்தவர். ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளர், அற்புதமாகச் சிறுகதை படைக்கும் தகைமையாளர் என்று இன்னும் பல சிறந்த சிறந்தவுகளுக்குரியவர்.

அல் அஸ_மத் அவர்களிடம் உள்ள திறமைகள் அளவுக்கு அவர் பேசப்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவரிடம் பகட்டுக் கிடையாது. தனக்கு வெளிச்சம் விழ வேண்டுமென்ற எண்ணம் கிடையாது. குரலுயர்த்தித் தர்க்கம் உண்டு பண்ணி முன் வரிசையில் இடம் பிடிக்கும் வித்தை தெரியாது. தன்னை யாரும் பேசவில்லையே என்கிற ஆதங்கமும் கிடையாது. ஏனென்றால் அவர் வெறுங் குடம் கிடையாது.

இரண்டு வகையான இலக்கியப் படைப்பாளிகள் இருக்கிறார்கள். முதல் பிரிவு பல்கலைக் கழகம் போகாத மற்றும் போனாலும் பல்கலைக் கழகக் கல்விசார் தொழிலில் ஈடுபடாதவர்களைக் கொண்டது. இதற்குள்தான் நமது மகத்தான படைப்பாளிகள் இருக்கிறார்கள். இந்தக் குழுமத்துக்குள்தான் அல் அஸ_மத், தெளிவத்தை ஜோஸப், டொமினிக் ஜீவா, ஜின்னாஹ் ஷரிபுத்தீன் போன்ற இன்னும் பல நூறு படைப்பாளிகள் உள்ளடங்குகின்றனர்.

இரண்டாவது வகையினர் யாரென்றால் முதலாம் பிரிவில் உள்ளவர்களின் இலக்கியத்தை முன்னிறுத்திப் படித்து விட்டு அதன் தாக்கத்தில் எழுதிப் பார்ப்பவர்கள். பிறகு பல்கலைக் கழகக் கல்விசார் தொழிலுக்கு வருவதன் மூலம் தாம் யார் யாரையெல்லாம் படித்து பட்டம் பெற்றார்களோ அவர்களைப் அலட்சியப்படுத்தியும் அவர்களது படைப்புகளைக் கண்டு கொள்ளாமலும் கீழே தள்ளி விட்டு முதலிடத்தைப் பிடித்துக் கொள்பவர்கள். இதற்கு அவர்களது பல்கலைக் கழகப் பதவி பெரிதும் துணை புரிகிறது. இப்படியானவர்களது மாணவ அடிப் பொடிகள் இலகுவாகச் சித்தியடைவதற்கு ஒரு வழியாகப் பயன்படுத்தும் தமது எழுத்துக்களைப் பற்றிய பிதற்றல்களை முதலிடத்தைப் பிடிப்பதற்காக அவர்களைக் கொண்டே பிரசாரப்படுத்துவதன் மூலம் நேர்மையற்ற முறையில் முன்னிடத்தை அடைவது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் - தமிழில் எம்.ஏ. பட்டத்துக்குப் படிக்க வேண்டும் என்றால் கவிதை இலக்கணம் முக்கியம். அவ்வையாரின் வெண்பாக்களைப் படித்துவிட்டு ஏனைய புவலர்கள் மற்றும் தற்காலக் கவிஞர்களது வெண்பாக்களையும் படித்து அதே போல எழுதிப் பார்ப்பது. ஓரளவு தேறிவிட்டால் யாருடைய வெண்பாக்களைப் படித்துக் கவிதை எழுதிப் பார்த்தார்களோ அவர்களை விஞ்சிப் போய் விட்டதாகப் பாவ்லா பண்ணுவது. முன்னைய படைப்பாளிகளை விட்டு விட்டு உதாரணத்துக்குத் தனது வெண்பாக்களை மாணவர்களுக்கு வழங்கிப் பார்ப்பது. மாணவன் என்ன செய்வான். அவனுக்குச் சித்தியடைய வேண்டுமென்றால் ஆசிரியரின் கவிதையை உலக அற்புதமாகச் சித்தரித்து எழுதத் தொடங்குவான். இங்கேதான் துவங்குகின்றன படைப்பாளிகளின் மீதான துயரங்கள்.

பிறகு நவீன கவிதையும் எழுதத் தொடங்குவார்கள். ‘நாய் மூத்திரம் பெய்த சட்டி’, ‘ஊமை ஆடிய கனவு நடனம்’, ‘வெள்ளாமை வெட்டினவனின் சிறுவாலும் அக்கச்சியாவின் பாவாடை நாடாவும்’, ;நாய் சப்பிய எலும்புத் துண்டில் ஒட்டிய சாணி’, ‘ஆகாயத்தில் ஓடிய நட்சத்திரத்தின் பாதையில் எச்சில் துப்பியவன்’ என்றெல்லாம் அர்த்தமற்ற பிதற்றல்கள் அரங்கேறும். எல்லாவற்றிலும் அவர்கள் முன்னணியில்தான் நிற்பார்கள்.

நாளொன்று நோன்பின் நரகம் அவர்க்கிடையில்
வீழும்பூ வானிடைத்த வெட்டு

நோன்பைத் துறந்திடற்கு நோற்றோர்க் குதவிடுதல்
நோன்பின் பலனீயுந் தொண்டு

நோன்பாரின் வாய் மணத்தை நுண்கத்தூ ரிக்கப்பால்
ஏற்பான் இறைவன் மகிழ்ந்து

ஈகை வளர்க்கும் ஈது என்ற தலைப்பில் அல் அஸ_மத் அவர்களின் குறட்பாக்கள் இவை. இவை போல எழுதுவதற்கு இன்று கவிஞர்களைக் காண முடியாது. நான் மேலே சொன்ன கடதாசிப் பண்டிதர் கூட்டத்துக்கும் வல்லமை கிடையாது. ஆனால் அஸ_மத் அவர்களைப் போன்றவர்கள் ஒரு கவிதை நூலை வெளியிட்டு ஏதாவது ஒரு போட்டிக்கு அனுப்பினால் அதை நிறுப்பவர்கள் இந்தப் போலிகள்தாம். ‘அக்கச்சியாவின் பாவாடை நூல்’ ‘மாடு மிதித்த சாணி’ என்று எழுதியவன் போட்டியில் நடுவராக இருப்பான். அஸ_மத் போன்றவர்கள் ஆயுசுக்கும் ஒரு பரிசைக் காண முடியாது.

இன்னொரு விடயத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். இவ்வாறு நேர்மையற்ற தராசுகளில் நிறுப்பவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. காரணம் தராசு எப்போதும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களிடம் நிரந்தரமாக இருப்பதுதான். இந்த நிலை முதலில் மாற வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். அடுத்த அம்சம் உண்மையான படைப்பாளிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாமை. எழுதுகின்ற எல்லோரும் ஒவ்வொரு குட்டித் தீவின் ராஜாக்களாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆளுக்காள் பொறாமைப்பட்டுக் கொண்டு வெறுப்பை வளர்த்துக் கொண்டு திரிகிறார்கள். எழுதுகின்ற பலரது இடுப்புகளில் கண்ணுக்குத் தெரியாத பட்டாக் கத்திகள் அல்லது குத்துவாள்கள் சொருகப்பட்டிருக்கின்றன. தனது எழுத்தை விட இன்னொரு படைப்பாளியின் எழுத்தை யாராவது புகழ்ந்தால் அந்தப் பட்டாக் கத்தியைச் சட்டென உருவி ஒரே வீச்சாக வீசி விடுகிறார்கள். இந்தக் கெட்ட மனப்பாங்கும் பொறாமைப் போராட்டமும் போலிகளுக்கும் பல்கலைக் கழகங்கள் சார்ந்தோருக்கும் வசதியாகப் போய் விடுகிறது.

அல் அஸ_மத் போன்ற ஆளுமையுள்ள, அப்பாவிகளான படைப்பாளிகள் இதற்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். ஒதுங்கியிருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தர்மம் பற்றிய அவரது அற்புதமான குறட்பாக்கள் சிலவற்றையும் நாம் பார்க்கலாம்.

குதிரையிவர்ந் தண்டிக் கொடைவேண்டி னாலும்
அது கொடுத்தல் வேண்டும் அளி

வலக்கைசெய் தர்மம் இடதறியா தார்க்கு
நிழலீவான் ஏகன் நிறைந்து

தழலணையும் தண்ணீரால் தான்செய் பாவத்தை
அழிக்கும் அறமென் றறி

முற்சமூக மொன்று முறிந்தத துலோபத்தால்
அச்சுறுத்து கின்றேன் அளி

கருமி வணங்கிடினும் கல்வியறி வில்லாத்
தருமனையே ஏற்பான் தகை

அல்லாஹ்வின் நாமத்தால் யாசித்தும் ஈயாதான்
பொல்லா மனிதப் பதர்

அல் அஸ_மத் அவர்களின் கவிதைகளை வானொலி, தொலைக் காட்சிகளில் அறிவிப்பாளர் தேர்வில் உச்சரிப்புக்குப் பயன்படுத்தினால் நல்ல அறிவிப்பாளர்களைத் தேர்ந்து எடுக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். இப்போது அறிவித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கொடுத்து ஒரு மீள் தேர்வு நடத்தினால் கொஞ்சம் ‘லொள்ளர்’களைக் கழற்றி விட முடியும். நாம் நிம்மதியாக செய்திகளையும் அறிவிப்புகளையும் பார்க்கவும் கேட்கவும் முடியும் என்று நினைக்கிறேன்.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் அநேக கவிதைகள் இஸ்லாம் பற்றிப் பேசுகின்றன. வானொலி, தொலைக் காட்சியில் மீலாது, இரு பெருநாட்கள் என்று கவியரங்கங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகின்ற கவிஞர் அஸ_மத் அவர்கள். பொதுத் தலைப்புகளிலும் சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன. வகவம் கவிதை மேடையில் ஒரு காலத்தில் கோலோச்சியவர்களுள் இவரும் ஒருவர். டாக்டர் தாஸிம் அகமதுவின் தலைமையில் வெகு ஜோராகத் தலை நகரில் மணம் வீசிய இந்த வகவம் பல ஆயிரம் நல்ல கவிதைகளின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. இந்த மேடையில் ‘குறும்பா’ வில் கவிஞர் எழுதிப் பாடிய சில கவிதைத் துளிகளை உதாரணத்துக்குத் தரலாம். இலங்கையில் குறும்பா வடிவத்தில் வெற்றி பெற்றவர்களில் கவிஞர் அஸ_மத் அவர்களுக்குத் தனி இடம் உண்டு. கவிதை என்ற தலைப்பில் அவர் எழுதிய சில:

கவிதையின்னும் வளரவில்லை நாட்டில்
கண்துடைப்பாய்ச் சிலவுண்டாம் ஏட்டில்
காரணங்கள் கூறிக்
கருத்துகளும் மாறிக்
கவிஞர்களே வீழுகிறோம் கேட்டில்

ஒருபாட்டாற் கோலுயர்ந்து ஆளும்
ஒருபாட்டாற் கோலஃதே தாழும்
உயர்கவிஞன் நாவில்
உலகமொரு கோவில்
உதிருஞ்சொல் ஒவ்வொன்றும் ஆளும்

எதுகவிதை எனவேண்டாம் காண்டம்
ஏன்கவிதை என்பதுதான் வேண்டும்
எதுகையுடன் மோனை
இலையெனினும் பேனை
இதயத்தின் ஆழத்தே தோண்டும்

‘பூபாளம்’ என்றொரு கவிதையேட்டை நடத்தி ஓய்ந்த அல் அஸ_மத் வானொலி முஸ்லிம் சேவையில் ‘கவிதைச் சரம்’ என்ற நிகழ்ச்சியை நான்கு வருடங்களுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார். பாவலர் பஸீல் காரியப்பர் நடத்தத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி அவரது பயணச் சிக்கல் காரணமாக அல் அஸ_மத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று கவிதைத் துறையில் தொடர்ந்து ஈடுபடும் பலர் அந்தப் பாசறையில்தான் வளர்ந்தார்கள். இவரது தலைமையின் கீழ் நானும் அவ்வப்போது வானொலியில் கவிதை படித்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் அல்லாத இருவர் மிகச் சிறந்த தமிழ் உச்சரிப்பாளர்கள் என்று நான் ஒரு மதிப்ப்Pடு வைத்திருக்கிறேன். அதில் ஒருவர் அல் அஸ_மத் அவர்கள். மற்றவர் நண்பர் கலைவாதி கலீல் அவர்கள். கவிதையை மட்டுமன்றித் தமிழையும் அச்சொட்டாகவும் தெளிவாகவும் இவர்கள் உச்சரிப்பார்கள்.

அல் அஸ_மத் அவர்கள் ஒன்பது காவியங்களைப் படைத்திருப்பதாக அண்மையில் சொன்னார். அவை இன்னும் வெளிவரவில்லை என்றே அறிகிறேன். அதாவது எழுதி எழுதி வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். பதினைந்து பக்கங்களில் காவியம் எழுதியர்களைத்தான் பேராசிரியர்களும் சிஷ்யக் குஞ்சுகளும் பட்டியல் போட்டுப் பரபரப்புக் காட்டுகின்றனர். பேராசிரியர் படிக்கத் தொடங்கிய காலத்தில் போட்ட பட்டியல்தான் இன்று வரைக்கும் பட்டியல். அதற்கு மாறாக ஒரு மாணவன் உண்மை கண்டு எழுதினால் அவனால் எப்படிப் பரீட்சை சித்தியடைய முடியும். பேராசிரியர் மூன்றாவது கண்ணைத் திறந்தால் அவன் தொலைந்தான். நூறு பக்கங்களிலிருந்த நானூறு பக்கங்களுக்குக் காவியங்கள் படைத்தவர்கள் இருட்டுக்குள் இருக்கிறார்கள். அப்படிச் சொல்வதை விட இருட்டுக்குள் இருத்தி வைத்திருக்கிறார்கள். இவர்கள் வெளியே வந்தால் பலருடைய சாயம் வெளுத்துப் போகும்.

அல் அஸ_மத் அவர்களின் கவிதைகளை அதிகம் எடுத்தாண்டு பேச என்னால் இயலவில்லை. அவை எனது எண்ணங்களை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. சில வேனை அடங்காக் கோபத்தை மூட்டுகின்றன. அந்தக் கோபம் சில வேளை என்னை அத்து மீற வைக்கும் என்று நான் பயப்படுகிறேன். பெருநாள்களில் அவர் பாடிய கவிதைகள் முஸ்லிம் சமூக இலக்கியத்தின் சொத்துக்கள். இஸ்லாமிய இலக்கியம் என்றால் என்ன என்று கேட்பவர்கள் இந்தக் கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும்.

உலகத்தில் எந்நாட்டில் உண்டாம் சாந்தி
ஓடுகிற கணமெல்லாம் யுத்தம்தானே
கலகத்தில் நாமெல்லாம் பிறந்து வாழ்ந்து
கலக்கத்தில் தானே வீண் மரணிக்கின்றோம்
உலகமெலாம் முஸ்லீம்கள் ஒன்றாய் நின்றே
உத்தமரெம் ரசூல்மன்னர் வார்த்தை போற்றித்
தவறாது சாந்தியெனக் கூறித்தானும்
தங்காது போனதென்ன அந்தச் சாந்தி?

அஸ்ஸலாமு அலைக்குமென நபிமார்வேந்தர்
அமைத்த சொல்லில் அர்த்தமில்லை என்றா அர்த்தம்
முஸ்லிம்கள் நாமின்றெம் உம்மிநாதர்
முன்வைத்த தத்துவத்தை மறந்தே விட்டோம்
பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டுப்
பூமானார் கூறியதைத் துறந்தே விட்டோம்
கண்ணைப்போல் நமைக்காக்கும் தத்துவத்தைக்
கபடத்தார் குருடாக்கக் குருடாய்ப்போனோம்

அல் அஸ_மத் அவர்களின் இஸ்லாமியக் கவிதைகளைப் படித்த போது எனது மனக்கண் முன் நிழலாடியவர் பெருங் கவி புரட்சிக் கமால் அவர்கள். அதே எண்ணம். அதே போக்கு. அதே நோக்கு. அதே கவிதை இறுக்கம். அல் அஸ_மத் புரட்சிக் கமாலின் மறுவடிவம்.

பேராசிரியப் பண்டிதர்களின் பட்டியலில் புரட்சிக் கமால் இருப்பதில்லை. அவரது அழகுத் தமிழ்க் கவிதைகள் பற்றி யாரும் பேசுவதும் இல்லை. நீங்களும் அதே அழகுத் தமிழில் அழகுக் கவிதை தருகிறீர்கள். அவரைப் போலவே நீங்களும் பட்டியலில் இல்லை. யாரையாவது பணங் கொடுத்துப் புத்தகங்களும் கொடுத்து உங்கள் கவிதைகளை ஆய்வு செய்யச் சொன்னால் கூட ஆய்வு செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் பேராசிரியப் பண்டிதர்கள் மாணவனைச் சுட்டெரித்து விடக் கூடும். (காசு கொடுத்துப் பேசவைக்க நீங்கள் ஒப்ப மாட்டீர்கள் என்பது வேறு விடயம்.)

போகட்டும். இஸ்லாம் குறித்த முஸ்லிம்கள் குறித்த உங்கள் கவிதைகளை மேலும் மேலும் வரவேற்கிறோம். இப்போதெல்லாம் பரம்பரை முஸ்லிம்களாக வந்த நாங்கள் இயக்கங்களாலும் மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ளாத முரண்பாடுகளாலும் சண்டையிட்டு இரத்தஞ் சிந்துவதை எதிர்த்துக் குரல் கொடுக்க உங்களைப் போன்ற வருகை முஸ்லிம்கள் பெரிதும் துணைபுரிந்து வருகிறார்கள். நீங்கள் இந்த இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தைத் தெளிவுறப் புரிந்து விளங்கி வந்தவர்.

திருட்டுத் தராசுகளில் உங்களின் கவிதையும் எழுத்தும் பாரங்குறைந்து விடுவது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இறை கற்பனையில் அவனுடைய தராசில் அது மிகவும் பாரமானதாய் இருக்கும். இறைவனின் தராசில் தப்பான எடைக்கற்கள் இருக்காது.

குலப்பெருமையில் திழைத்திருந்த அறபிகளை மாற்றி நபிகளார் நிறைவு செய்து வைத்த இஸ்லாத்தில் தொழுகைக்கு அழைக்க அபீசீனியாவிலிருந்து பிலால் வந்தார். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தமிழ்க் கவிதைப் பெருமகனாக நீங்கள் வந்திருக்கிறீர்கள். இதை விட உங்களுக்கு வேறு என்னதான் வேண்டும்.

26.09.2010
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

alex paranthaman said...

//முன்னைய படைப்பாளிகளை விட்டு விட்டு உதாரணத்துக்குத் தனது வெண்பாக்களை மாணவர்களுக்கு வழங்கிப் பார்ப்பது. மாணவன் என்ன செய்வான். அவனுக்குச் சித்தியடைய வேண்டுமென்றால் ஆசிரியரின் கவிதையை உலக அற்புதமாகச் சித்தரித்து எழுதத் தொடங்குவான். இங்கேதான் துவங்குகின்றன படைப்பாளிகளின் மீதான துயரங்கள்//

மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள்...

//திருட்டுத் தராசுகளில் உங்களின் கவிதையும் எழுத்தும் பாரங்குறைந்து விடுவது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.//

நிதர்சனமான ஆக்கம்....

கவித்தோழன் said...

சரியாச் சொல்லியிருக்கின்றீர்கள். அதிகாரத்தை தம் வசம் வைத்திருப்பவர்களினால் மூத்தவர்களே இருட்டடிப்புச் செய்யப்படும் போது இளையவர்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்லவே. இதற்கு என்னதான் தீர்வு ? ஏன் யாரும் இதனைக் கண்டு கொள்ளாது இருக்கிறார்கள் ? திறமைகள் வெளிச்சத்துக்கு வரும்போது போலிகள் காணாமல் போய்விடும் அல்லவா ? உங்களைப் போன்ற அனுபவத்தில் முதிர்ந்த திறமையான மூத்தவர்கள் ஒன்றிணைந்து இதற்கு ஒரு வழி சொல்லக் கூடாதா ? அனுபவம் இல்லாத ஆனால் ஆற்றல் மிகுந்த இளையவர்களை வளர்த்தெடுப்பதிலும், பாதுகாப்பதிலும் மூத்தவர்களினது பங்களிப்பு முக்கியம் அல்லவா ?

தாமுண்டு தமது பாடுண்டு என்று தமது பேரையும் புகழையும் தக்க வைத்துக்கொண்டு வாயடைத்திருக்கும் பல மூத்தவர்களின் மத்தியில் உங்களைப் போன்ற ஒரு சிலர் இருட்டுக்குள் இருக்கும் உண்மைகளை துணிச்சலுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இளையவர்களுக்கு தைரியமூட்டுகிறது. உங்கள் கருத்துக்கள் எல்லாத் திக்கிலும் எதிரொலிக்க வேண்டும் என்றும் அல் அஸூமத் போன்ற உண்மையான திறமைசாளிகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.