இனிமேல் கிணறு தோண்டினால் வரி செலுத்த வேண்டும் என்று ஒரு செய்தி
சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
செய்தியின்படி கிணற்று வரி 7500.00 முதல் 15,000.00 ரூபாய்கள் வரை நீளும்.
இது அமுலுக்கு வந்து விட்டால் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் போது ஆயிரம், இரண்டாயிரம் என்று கால ஓட்டத்தில் அதிகரித்துச் செல்லும் சாத்தியம் உண்டு.
செய்தி வெளிவந்து இரண்டு தினங்களின் பின்னர், அதிகாரிகள் மேற்கொண்ட இந்தத் தீர்மானத்தை அமைச்சு எதிர்க்கிறது என்று நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரை விட அதிகாரிகள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள், தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளுக்கு ஏசி ஏசிப் பழக்கப்பட்டுப்போன நமது
ஜனங்கள் இதற்கும் அரசியல்வாதிகளைத்தான் நொந்து கொள்வார்கள். அதில் ஐம்பது வீதம்தான் நியாயம் உள்ளது. மீதி ஐம்பது வீதமும் அதிகாரிகள் மீது உள்ளது. ஆனால் அதிகாரிகள் பற்றி மக்கள் அலட்டிக் கொள்வதில்லை. காரணம் அவர்கள் வாக்குக் கேட்டு மக்கள் காலடிக்கு வருவதில்லை.
நாடு சீரழிந்து போவதற்கும் அரசியல்வாதிகளே முழுக் காரணம் என்பதுதான் ஸ்ரீமான் பொது ஜனத்தின் தீர்மானம். கண்ணுக்குப் புலப்படாமல் கதிரையில் அமர்ந்திருந்து காய் நகர்த்தும் அரச அதிகாரிகள் பற்றி அவர்கள் கண்டு
கொள்வதில்லை.
அரசியல்வாதி கொஞ்சக் காலம் அதிகாரத்தில் இருக்கிறார், அப்புறம் அட்ரஸ் இல்லாமலே போய் விடுகிறார். ஆனால் அதிகாரி, அரசாங்கப் பணத்தில் அதாவது மக்களின் வரிப்பணத்தில் வாழ்த்து கொண்டு அதே மக்களுக்கே ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மேற்படி கிணற்று வரி பற்றிய செய்தி நமக்கு உணர்த்துகிறது.
ஏறக்குறைய 20க்கும் 30க்கும் இடைப்பட்ட காலம் அரச அதிகாரத்தில் ஓர் அதிகாரி செயல்படுகிறார். எந்த அரசியல்வாதி அமைச்சுக் கதிரைக்கு வந்தாலும் இவர்களே விதிமுறைகளை எடுத்துச் சொல்லி அவர்களை வழி நடாத்திச் செல்பவர்கள். எனவே ஒரு நாடு வில்லங்கத்தில் இருக்கிறது என்றால் அதில் 50 வீத பங்கு அரச அதிகாரிகளே பொறுப்பு. அவர்களில் திட்டமிடல் குறைபாடு, ஆளுமையற்ற தன்மை, பிழையான கருதுகோள்கள்
என்பவற்றால்தான் ஒரு நாடு நாசமாய்ப் போகிறது என்பதுதான் உண்மை.
போய்த் தொலையட்டும்!
எனது முப்பாட்டன் வழியாக, பாட்டன் வழியாக, தந்தை வழியாக வந்த சொந்த
நிலத்தில் எனக்கும் எனது மனைவி, மக்களுக்கும் குடிக்கவும், குளிக்கவும் நீர்
பெறுவதற்குக் கிணறு வெட்டுவதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு எதற்கையா வரி செலுத்த வேண்டும்?
நீர் காணி தந்தீரா? சேவையர் போட்டு அளந்தீரா? மண் வெட்டி கொண்டு குழி
வெட்டித் தந்தீரா? மண் சுமந்தீரா? சீமெந்தும் கல்லும் கொண்டு கிணற்றுச்
சுவர் எழுப்பினீரா? துலாக்கால் போட்டு நீர் இறைத்துத் தருவீரா? என்று மனோகரா படப் பாணியில் ஆவேசமாகக் கேட்க வேண்டும் போல் உங்களுக்குத் தோன்றவில்லையா?