Monday, April 1, 2013

பிக்குகள் : கவனம்!




அனுராதபுர ஸியாரத்தில் ஆரம்பித்து தம்புள்ளை பள்ளிவாசல், ஹலால் விவகாரம், முஸ்லிம் பெண்களின் ஆடை, பகிரங்க மேடைகளில் இன விரோதத்தை விதைக்கும் பேச்சுக்கள் என்று பெப்பிலியான பெஷன்பக் கடை உடைப்பு வரை நடைபெற்ற மக்கள் விரோதச் செயற்பாடுகளில் பௌத்த பிக்குகள் பகிரங்கமாகச் செயற்படுவதை தௌ்ளத் தெளிவாக இலங்கை மாத்திரமன்றி முழு உலகமுமே பார்த்து வருகிறது.

சமூக விரோதச் செயற்பாடுகளில் நாட்டில் இனக்குரோதத்தைப் பரப்பி ஒரு கலவரத்தை உருவாக்க முயலும் காரியங்களில் ஈடுபடும் இந்தப் பிக்குகளுக்கு எதிராக குற்றங்களுக்காக சான்றுகள் இருந்தும் எந்த வகையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப் பிரிவில் 'தெயட்ட கிருள' வுக்கு எதிராக தெருவில் டயர் எரித்தார்கள் என்று இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.

பௌத்த பிக்குகளுக்கு இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களிடம் மாத்திரமன்றி சிறுபான்மை மக்களிடத்தும் ஒரு மரியாதை இருந்து வருகிறது. பிக்குகளில் ஒரு சாரார் நடந்து கொள்ளும் விதம் காரணமாக கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளும் பிக்குகளும் கூட எதிர்காலத்தில் நாகரிக சமூகத்தில் அவமதிக்கப்படவும் அலட்சியப்படுத்தப்படவுமான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் கடைகளில் கொள்வனவு செய்யாதீர்கள் என்ற கோஷத்தை அவ்வப்போது பிக்குகள் முன்னெடுத்து வந்ததை மாணவப் பருவத்திலிருந்து நான் கண்டு வந்திருக்கிறேன். இருந்து விட்டு அவ்வப்போது முஸ்லிம் கடைகளில் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவ்வப்போது மாட்டிறைச்சி மாடு அறுக்க வேண்டாம் என்றும் பிக்குகளே முன்நின்று துண்டுப் பிரசுரம் விநியோகிப்பார்கள். சில நாட்களில் அக்காட்சிகள் மறைந்து விடும்.

சிஹல உறுமய அமைப்பு கட்சியாகி அரசியலில் ஈடுபட்ட போது பொதுமக்களின் விருப்பமின்மை வெளிப்படுத்தப்பட்டது. சுகபோகமும் அரசியல் வாழ்வையும் துறந்த கௌதம சித்தார்த்தரைப் பின்பற்றுவோர் கௌதம சித்தார்த்தர் எதைத் துறந்தாரோ அதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்ற கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் பல பிக்குகளைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பலர் சிறைகளில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அரசியல் முதற்கொண்டு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதெல்லாம் கௌதம சித்தார்த்தர் துறக்கச் சொன்ன பேராசையின் பாற்பட்டதென்பதை யாரால் மறுக்க முடியும்?



ஒரு காலத்தில் லெப்பைமார் கண்ணேறுக்குத் தண்ணீர் ஓதிக் கொடுத்து வந்ததுண்டு. நீரில் ஓதி ஊதிவிட்டு எச்சில் தெறிக்காமல் அந்நீரில் மூன்று முறை துப்புவதை நான் கண்டுள்ளேன். அது பலாய், முஸீபத்துக்களை, ஷெஷய்த்தானை விரட்டும் என்ற ஐதீகம். அது ஒருகாலம். இப்போது பள்ளிவாசல்களில் லெப்பைகள் இல்லை. எங்காவது அச்சிலம் கட்டும் ஓரிருவர் இருக்கக் கூடும்.

இந்தத் தகவலை மனதில் வைத்துக் கொண்டுமான் முஸ்லிம் கடைகளில் உணவில், தேனீரில் மூன்று முறை துப்பி விட்டுக் கொடுக்கிறார்கள் என்று ஒரு பிக்கு கண்டியில் அப்பட்டமான ஒரு பொய்யை ஜனத்திரளுக்கு மத்தியில் சொல்லிச் சென்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் தொண்ணூறு வீதமானோர் அந்தக் கூற்றை ஒரு போதும் நம்பியிருக்க மாட்டார்கள். சுத்தமான ஓர் உணவை உண்ண வேண்டுமென்றால் முஸ்லிம் ஹோட்டல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே இவ்வாறு பொய் சொல்வது பௌத்த தர்மத்தின்பாற் பட்டதா என்பதை உணர்வதற்கு முன்னர் இதுவரை காலம் முஸ்லிம் கடைகளைத் தேடிச் சென்று சாப்பிட்ட சிங்களப் பொதுமகனின் பொதுப் புத்தி அதனை ஏற்றுக் கொள்ளுமா என்பதைப் பற்றியாவது அந்தப் பிக்கு சிந்திக்காதது பரிதாபமே!

முஸ்லிம் பெண்களின் அபாயா ஆடை சம்பந்தமாக பிக்குகள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கிய வேளை 'ஒரு இனத்தின் ஆடை சம்பந்தமாக எதிர்ப்புத் தெரிவிக்க மற்றொருவருக்கு உரித்து இல்லை' என்று கருத்துத் தெரிவித்த பௌத்த படிப்பாளி ஒருவர் 'அவர்களது ஆடைகளில் துர்வாடை வீசினாலன்றி அது பற்றிக் குறை சொல்ல முடியாது' என்றார்.


இந்தக் கருத்து வெளிப்பாட்டுக்குப் பின்னர் பிடி நழுவுவதை உணர்ந்த பிக்குகளில் ஒருவர் முஸ்லிம் பெண்களது ஆடைகளில் துர்நாற்றம் வீசுகிறது என்று ஒரு போடு போட்டார். அருகே ஒரு பிக்கு வந்தால் ஒரு முஸ்லிம் பெண்மணி மரியாதை நிமித்தம் அவர் அருகே கூடச் செல்ல மாட்டாள். அதே போன்று எதிரே பெண்ணொருத்தி வந்தால் அனைத்துப் புலன்களையும் அடக்கியாள வேண்டிய பிக்கு ஒதுங்கிச் செல்ல வேண்டியதும் முறைதானே. அப்படியிருக்க பெண்வாசமே இல்லாமல் வாழவேண்டிய பிக்குகள் எதற்காக முஸ்லிம் பெண்களின் அபாயாவை முகர்ந்து திரிய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. முஸ்லிம்கள் - ஆண்களும் பெண்களும் சிறு நீர் கழித்தால் கூட சுத்தம் செய்து கொள்பவர்கள் என்பது உலகறிந்த விடயம். சுத்தம் என்பது நம்பிக்கையில் பாதி என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுநீரைக் கூடக் கழுவாதவர்கள் இவ்வாறு சுத்தத்துடன் வாழ்பவர்களைப் பார்த்து துர்நாற்றம் வீசுகிறது என்று சொன்னால் அது 'படா தமாசு' தானே!

பர்மாவில் வாழும் முஸ்லிம்களை வெட்டியும் எரித்தும் கொல்லும் காட்டுமிராண்டிக் கூட்டத்தில் பிக்குகள் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதை ஊடகங்களில் வெளிவரும் புகைப்படங்கள், ஒளிப் பதிவுகள் மூலம் முழு உலகமுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. கைகளில் தடிகள், கத்திகள், துப்பாக்கிகளோடு புத்த பிக்குகள் மனிதக் கொலையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அஹிம்சை போதித்த புத்த பெருமானுக்குப் பெரும் அவமானம் அல்லவா? தொழில்நுட்பம் வளர்ந்து ஓர் இடத்தில் நடக்கும் விடயத்தை ஒரு வினாடியில் உலகம் முழுக்கப் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இக்காட்சிகளை வயது வித்தியாசமின்றி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சிறார்கள் உட்பட.

சிறுபான்மைக்கு எதிராக பிக்குகள் எப்படிப்பட்ட மனித விரோ செயல்களில் நியாயமற்ற செயல்களில் ஈடுபட்ட போதும் அதைக் கண்டு கொள்ளச் சட்டமும் அரசும் முன்வரவில்லை என்றால் அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அது சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பாகவே அமையும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிக்குகளின் ஆடைகளில் சமூக விரோதிகள் சிறுபான்மையினரின் கடைகளையும் வீடுகளையும் கொள்ளையிடுவதற்கும் உடைத்து நொருக்குவதற்குமான் வாய்ப்பை இந்த நாட்டின் சட்டமும் அரசும் ஏற்படுத்திக் கொடுக்கிறது என்றே கொள்ள வேண்டும். அதே போல பிக்குகளாக உள்ள பிறழ் மனத்தினரும் கூட இவ்வாறான செயல்களில் மேலும் மேலும் ஈடுபடுவதற்கு ஊக்கம் வழங்குவது போலாகிவிடும்.


இந்த நாட்டின் பிரதமர் எஸ்.டபிள்யூ. பண்டாரநாயக்கவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவரும் ஒரு பிக்குதான் என்பதை நம்மால் மறந்துவிட முடியவில்லை.

பழக்கமற்ற மனிதர்களைக் கண்டால் பாய்ந்து கடிக்கும் வெறிநாய்கள் உள்ள வீடுகளில் வாயிற் கதவுகளில் 'கடிநாய் கவனம்!' என்றோ 'நாய்கள்: கவனம்!' என்றோ ஓர் அறிவிப்புப் பலகை இடப்பட்டிருப்பது வழக்கம்.

தெருவில் ஒரு பிக்கு நடந்து சென்றால் அவர் பாதையைப் பார்த்தவாறே ஒரு காற்றைப் போல் நடந்து கடந்து செல்வார். இப்போது அவ்வாறு பிக்குகள் வருவதைக் கண்டால் 'பிக்குகள்: கவனம்!' என்ற வாசகம் சிந்தையில் தோன்ற, நாம் ஒதுங்கிப் பாதையின் அடுத்த கரைக்குத் தாவிச் செல்லுமளவு மனம் நம்மை எச்சரிக்கிறது!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Unknown said...

அருமையான கட்டுரை