Thursday, January 2, 2014

இலங்கை இஸ்லாமிய இயக்கங்கள் குறித்து... சில கேள்விகள்!


லரீனா அப்துல் ஹக்

இலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் குறித்த ஒரு கலந்துரையாடலில், இயக்கங்களை விமர்சிப்பது பற்றி ஒரு சகோதரர், "இவர்களுக்கு நிகராக அல்லது இவர்களை விட சிறப்பாக இஸ்லாமியப் பணியை முன்னெடுக்கும் மாற்றீடுகள் இலங்கையில் இல்லையே. அப்படியிருக்கும் போது நாங்கள் விமர்சனத்தோடு மாத்திரம் நிற்பதால் என்ன பயன். எங்களால் செய்யமுடியுமானது அவர்களின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கலாம், கட்டுரைக்கு விமர்சனம் எழுதலாம். அதை விட்டுவிட்டு வெட்டி விமர்சனம் பலன் தருமா?/" என்று கேள்வி எழுப்பினார். அவருக்கும் அவர் போன்றே யோசிக்கும் சகோதரர்களுக்கும் சில கேள்விகளை முன்வைக்க ஆசைப்படுகிறேன்:

1. இலங்கையில் இஸ்லாமியப் பணி என்பது உண்மையில் என்ன? மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஹல்காவும் உஸ்ராவும் வைப்பதும், ஒரு பத்திரிகையில் உலகின் இஸ்லாமிய நாடுகளின் அரசியல் பற்றிப் பேசுவதுமா? 

2. ஒரு பன்மைத்துவ நாட்டில் இஸ்லாத்தின் செய்தியை முன்வைக்கவும், முஸ்லிம்கள் இலங்கைச் சமூகத்தின் அருள் என்று ஏனையோரும் புரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது வேலைத்திட்டங்கள் இவர்களிடம் உள்ளனவா? இவ்வளவுகால தஃவாவில் இவர்கள் கண்டுள்ள அடைவு மட்டம் இதுதான் என்ற வெளிப்படையான ஃபீட் பேக் (feed back) ஒன்றை மக்கள் முன்வைக்க இவர்கள் ரெடியா?

3. இந்த இஸ்லாமிய இயக்கங்கள் எவையும் தமது உறுப்பினர்களின் சொந்த நிதியில் இயங்கவில்லை. மாறாக, மக்களின் நன்கொடையில் இயங்குவன. ஆகவே, மக்களுக்குப் பொறுப்புச் சொல்லவும் அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். தாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம், இலக்கை நோக்கிய தமது வேலைத்திட்டங்கள் என்னென்ன என்று அதன் உறுப்பினர்கள், ஊழியர்களுக்கேனும் முறையான தெளிவை வழங்க வேண்டும். அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள திறந்த மனதோடு முன்வர வேண்டும். ஆனால், இயக்கங்கள் இந்த விடயத்தில் எந்தளவு ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்கின்றன?

4. விமர்சனம் பலனில்லை என்றால், இந்த இயக்கங்கள் எது செய்தாலும் பரவாயில்லை என்று சும்மா இருப்பது மட்டும் பலன் தந்துவிடுமா? அல்லது பல்வேறு தளங்களிலும் முன்வைக்கப்படும் இதுபோன்ற கேள்விகளும் விமர்சனங்களும் அவர்களுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, தம்மை மீள்பரிசீலனை செய்யவும், சரியான வேலைத்திட்டமொன்றை இனியேனும் காத்திரமாக அமைத்துக்கொள்ள வேண்டியதன் தேவையை உணர்த்தவும், இருப்பவர்கள் போதிய கொம்பிடன்ஸி இல்லாதவர்கள் என இனங்காணுமிடத்து, முஸ்லிம் அல்லாதோரில் உள்ள நிபுணர்களைக் கொண்டேனும் வெற்றிடங்களை நிரப்பவும் அவர்களுக்கு உந்துசக்தியை வழங்கக்கூடும் அல்லவா? ஆக, எதையாவது செய்யட்டும் என்று வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதா, ஆக்கபூர்வமான விமர்சனம் மூலம் அவர்களின் பணியைப் பெறுமதிமிக்கதாய், காத்திரமும் வினைத்திறனும் கொண்டதாய் மாற்ற அழுத்தம் கொடுப்பதா நாளை மறுமையில் சமூகத்தின் அங்கத்தவர்களான, அதன் பொறுப்புதாரிகளான எம்மை ஈடேற்றும்?

பதில் சொல்லுங்கள்.

(சகோதரி லரீனா அப்துல் ஹக் தனது முகநூல் சுவரில் இட்டிருந்த குறிப்பு. அவருக்கு நன்றி)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

இந்தக் கேள்விகள் அடங்கிய பதிவு சகோதரர் Alif khan அவர்களுடையது. அதே கேள்விகள் எனக்குள்ளும் என்னைப்போல் பலருக்குள்ளும் இருப்பதால் என்னுடைய முகநூல் சுவரில் அவருடைய பதிவைப் பகிர்ந்திருந்தேன். அதை நீங்கள் இங்கே மீள்பிரசுரம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.