Tuesday, March 17, 2015

அவனன்றி அணுவும் அசையாது!


 - 15 -

மஞ்சமாமாவின் கதையை இன்று நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தக் கதை முழுக்கவும் உண்மைகளால் ஆனது. சம்பவங்களுக்குக் கற்பனை சேர்த்தும் எழுதலாம். தப்பில்லை! கற்பனை சேர்க்காமல் எழுதும் போது சுவை குன்றி விடுவதாக பலரும் நினைப்பதுண்டு. எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

மஞ்சமாமாவின் கதை எழுத்து வடிவில் வருவதற்கு முன்னே கதையை எழுதியவர் எனக்குச் சொல்லி விட்டார். எழுத்தில் வந்த பிறகு அது தரும் தாக்கத்தை விட அவர் அக்கதையைச் சொன்ன விதமும் அதில் உறைந்திருந்து எழுந்து எனது கன்னத்தில் அறைந்தது போன்ற முடிவும் இன்று வரை மறக்க முடியாதது. ஓர் இலக்கியக்காரனான என் மனதிலேயே அது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தியிருக்குமானால் நாதாரண வாசகர்களுக்கு எத்தகைய தாக்கத்தை உண்டு பண்ணும் என்ற எண்ணம்தான் இது பற்றி எழுதத் தூண்டியது என்று சொல்வேன்.

எல்லோராலும் பேசப்படுகின்ற, நல்லதும் அல்லதும் பற்றிப் பேசப்படுகின்ற, தீர்ப்புகள் வழங்குவதற்கு வாய்ப்பான ஓர் அம்சமாக இஸ்லாம் இன்று மாறிவிட்டது. தான் எப்படி இருக்கிறேன்? என்ன செய்கிறேன்? எனது பண்புகளில் எவை சரியானவை? நான் யாருடன் எதைப் பேசுகிறேன்? எதற்காகப் பேசுகிறேன்? போன்ற வினாக்களை நாம் அதிகம் நம்மை நோக்கிக் கேட்டுக் கொள்வதில்லை!

நம்மளவில் நாம் புனிதராக இருப்பதை விட்டு விட்டு யாருடையவாவது முதுகைச் சுரண்டிப் பார்ப்பதில்தான் பெரும்பாலும் பொழுதைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். தெரிந்ததை வைத்துக் கொண்டு தெரிந்து கோள்ள வேண்டி அம்சங்களை முழம் போட்டு அளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மஞ்சமாமாவின் ஒரேயொரு கேள்வி என்னை அதிர வைத்து விட்டது. ஆழச் சிந்திக்கத் தூண்டியது. நாம் நமக்குள் வழங்கிக் கொண்டிருக்கும் தீர்ப்புக்களைப் பார்த்து எள்ளி நகையாட வைத்து விட்டது. எனது அறிவைப் புடம் போட்டது. சிந்தனையைத் தெளிவு படுத்தியது.

கிராமப்புறங்களில் மாட்டுப் பட்டி வைத்திருக்கும் நபர்கள் - இதன் காரணமாகவே செல்வந்தர் என்று கருதப்படுபவர்களும் இருக்கிறார்கள் - தங்கள் மாடுகளைப் பராமரிக்க ஒரு 'மாட்டுக் காரன்' அல்லது 'காலைக்காரன்' இடம் பொறுப்புக் கொடுப்பார்கள். இந்த மாட்டுக்காரர்கள் அல்லது காலைக்காரர்கள் கிராமங்களிலிருந்து பல மைல்கள் தூரத்தில் பசுமையான மேய்ச்சல் நிலம் உள்ள காட்டுப் பகுதியில் மாட்டுக் காலைகளை வைத்திருப்பார்கள். காலைக்காரர்களிடம் பலருடைய மாடுகள் பொறுப்பில் இருக்கும்.

அவர்கள் அநேகமாகவும் படிப்பறிவு உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். இத்தனை கன்றுகள் பிறந்தால் அதில் ஒன்று அவர்களுக்குக் கிடைக்கும். மற்றப்படி தினமும் அவர்கள் பசுக்களில் கறக்கும் பாலை வியாபாரிகள் நேரடியாக வந்து பெற்றுச் செல்வார்கள். அந்த வருமானமும் அவர்களுக்கு உண்டு. இதைக் கொண்டுதான் அவரது குடும்பம் நகரும். பசுக்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்கள், கன்றுகளுக்கு இட்டிருக்கும் பெயர்கள், அவற்றைச் சொல்லி மாடுகளை அழைக்கும் அழகு எல்லாம் எழுதி மாளாதவை.

மஞ்சமாமா ஓர் உம்மி! பகலில் காடு இரவில் வீடு. இதுதான் அவரது வாழ்க்கை. சில வேளைகளில் இரவிலும் கூட காலையோடு அமர்ந்திருக்கும் பரணில் தங்கி விடுவார். வெள்ளிக் கிழமை, பள்ளிவாசல் என்று எந்தத் தொடர்பும் அவருக்குக் கிடையாது. தானும் தன் ஏழ்மை மிக்க குடும்பமுமாக ஊரில் ஓர் இடத்தில் அவர் வாழ்ந்து வந்தார். வீடும் காடும் மாடும்தான் அவரது வாழ்க்கை. தன்னளவில் நேர்மையாக, யாருடனும் எந்தச் சிக்கலும் இன்றித் தன்பாட்டில் வாழ்ந்து வந்தவர். பெண் பிள்ளைகள் நிறைந்த குடும்பம்.

ஊர் உலகத்தில் என்ன கோலாகலம் நடந்தாலும் அவருக்கு அது பற்றிய அக்கறை கிடையாது. யார் யாருடன் கோபம், யார் தேர்தலில் நிற்கிறான் - தோற்கிறான், வெல்கிறான், பாடசாலையில் யார் அதிபராக இருக்கிறார்,  யார் ட்ரஸ்டியாக இருந்து பள்ளிவாசலை நிர்வகிக்கிறார் என்பதெல்லாம் அவரைப் பொறுத்த வரை அவசியமற்ற சமாச்சாரங்கள்.

ஒரு நாள் ஜூம்ஆவுக்குப் பள்ளிக்குள் நுழைந்த கதாசிரியர் அங்கே மஞ்சமாமா அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போகிறார். இப்போது எழுத்தாளரின் மனசில் ஒரு கேள்வி பிறக்கிறது. 'மஞ்சமாமாவுக்குத்தான் ஒரு இழவும் தெரியாதே.. என்ன ஓதித் தொழப் போகிறார்?' என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்வி எழுத்தாளரை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. எப்படியாவது இதை மஞ்சமாமாவிடம் கேட்க வேண்டும்.. ஆனால் எப்படிக் கேட்பது?

இரண்டு வாரங்களுக்குப் பிறகு கதாசிரியர் மருதூர் ஏ மஜீத் மஞ்சமாமாவை அகஸமாத்தாகத் தெருவில் யாருமற்ற இடத்தில் சந்திக்கிறார். கேள்வி மனதுக்குள் இருந்து துள்ளத் துள்ள அடக்கிக் கொண்டு மஞ்சமாமாவிடம் சுகம் விசாரித்துக் கொண்டு வந்து 'அன்றைக்குப் பள்ளிக்குள் கண்டேனே...?' என்கிறார். மஞ்சமாமா சிரிக்கிறார். 'அதுசரி... ஓதல் கீதல் ஒன்டும் தெரியாம எப்பிடித் தொழுதீங்க?' அஸ்திரத்தை எடுத்து விட்டார்.

அதற்கு மஞ்சமாமா சொன்னார் பாருங்கள் ஒரு பதில்... அதுதான் முக்கியமானது!

'எனக்கு ஓதத்தெரியாதென்டு அல்லாஹ்க்குத் தெரியாதா?'

எழுத்தாளர் வாயடைத்து நிற்க மஞ்சமாமா நடையைக் கட்டினார்.

அடுத்த வாரம் மஞ்ச மாமா மௌத்தாகிப் போனார்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: