- 16 -
'சிட்டுக் குருவி.. சிட்டுக் குருவி சேதி தெரியுமா?', 'பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே..!', 'பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்..', 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..!', 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?', 'பூவா மரமும் பூத்ததே..!', 'வானில் முழுமதியைக் கண்டேன்..!', 'ஏரிக்கரையின் மேலே போறவளே..!' - போன்ற பழைய பாடல்களை அறியாதோரும் ரசியாதோரும் இல்லை என்று தைரியமாகச் சொல்லி விடலாம்.
அக்கால சினிமாப் படங்களைத் தூக்கி நிறுத்திய இந்தப் பாடல்கள் இந்த நிமிடம் வரை இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அவற்றின் கவிதை அழகும் மொழியின் லயமும் இசையின் கோலமும் இணைந்து மனித மனங்களின் அழகியல் நாட்டத் தாகத்தைத் தீர்த்து வைத்தமையே காரணம். அசிங்கமான இரட்டை அர்த்தங்களும் மனதைச் சுளிக்கச் செய்யும் காட்சிகளும் இல்லாமல் அருமையான, யதார்த்தமான கதைகளோடு பிணைந்து வெளிவந்த அன்றையத் தமிழ் சினிமாவில் அதே கௌரவத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்துத்தான் பாடல்களும் எழுதப்பட்டன.
இன்றும் இறவாமல் சுகமான ஞாபகத்தில் நிலை கொண்டிருக்கும் இந்தப் பாடல்களை எழுதியவர் ஒரு முஸ்லிம் கவிஞர் என்பது இன்றைய தலைமுறையில் பலருக்குத் தெரிந்திருக்காது. கவி கா.மு. ஷரீப் என்ற அந்த அற்புதமான கவிஞன் பிறந்து கடந்த வருடத்துடன் 100 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.
சினிமா என்றதுமே அந்தச் சத்தம் வந்த திக்கில் காறித் துப்பி விடவோ, கம்பெடுத்துச் சுழற்றவோ எழுந்தமானமாக முனைப்புக் கொள்கிறார்கள். சினிமா என்பது நடிகைகளில் நிர்வாணமும், வெறும் ஆடலும் கூத்தும் கும்மாளமும் சிற்றின்பமுமே என்ற மனப் பதிவே பலருக்கு இருக்கிறது. இவற்றுக்கு மேல் அதில் எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு அதில் எதுவும் இருக்கப் போவதுமில்லைத்தான்.
1948ல் அறிஞர் அண்ணா எழுதிய 'சந்திரமோகன்' என்று நாடகத்தில் கா.மு. ஷரீப் அவர்கள் எழுதிய 'திருநாடே' என்ற பாடலை முணுமுணுக்காதவர்கள் இல்லை என்கிறார் கலைமாமணி விக்ரமன். அந்தாளில் புகழ் பெற்ற 'கொலம்பியா' இசைத் தட்டுக்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். 1857ல் வெளிவந்த 'முதலாளி' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய புகழ் பெற்ற பாடல் 'ஏரிக்கரையின் மேல் போறவளே!' கலைஞர் கருணாநிதியைத் தமிழ் சினிமாவுக்குள் சேர்த்து விட்டவர் கா.மு. ஷரீப் அவர்கள்.
அப்படியானால் முஸ்லிம்களுக்கான சினிமா குறைந்தது 70 களிலாவது கருக் கொண்டிருக்க வேண்டும். குடி, கூத்து, கும்மாளம், அரை குறை ஆடை ஆட்டங்களற்ற, மக்களின் வாழ்வியலைப் பேசும் சினிமாக்கள் அனைத்தும் இஸ்லாமிய வரைமுறைக்குள் வருபவைதான். ஆயினும் மற்றொரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் சினிமா என்பது 'நடிகை', 'நிர்வாணம்' என்ற எண்ணத்தால் நிறைந்து போயிருக்கும் போது அன்றும் காதல் பேசுவது கதையின் அம்சங்களில் ஒன்றாக இருந்த காரணங்களால் மூளை காய்ந்த முல்லாக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும்.
கவி கா.மு.ஷரீப் வெறும் சினிமாக்காரர் மட்டுமல்ல என்பதை அவரது நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்டிருக்கும் மலரில் உள்ள கட்டுரைகள் மூலம் தெரிந்து கொள்ளக் கூடிதாக இருக்கிறது. பணத்துக்குப் பின்னால் அவர் அலைந்தவரில்லை. சிறுகதை நூல்கள் - 3, நவீனம் -1, நாடக நூல்கள் - 4, பயண நூல் - 1, இலக்கியக் கட்டுரை நூல் - 1 என எழுதிக் குவித்தவர். அக்கால சினிமாக்காரர்கள் கூட அவரிடம் ஒதுங்கி நின்று பேசியிருக்கிறார்கள். 'மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் என்ற சான்றிதழ் இஸ்லாத்துக்கு உண்டு. இந்தியாவில் இஸ்லாம் இந்து மதத்துக்கு எதிரானது என்ற கருத்தும் நிலவி வருகிறது. இக்கருத்துத் தவறானது என்பதை விளக்க, கவி கா.மு. ஷரீப் 'இஸ்லாம் இந்து மதத்துக்கு எதிரானதா?' என்று நூலை எழுதினார்' என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
எந்த நிலையிலும் தலையிலிருந்து அகற்றப்படாத தொப்பி, முகம் நிறைந்த, அழகாகக் கத்திரிக்கப்பட்ட தாடி, எதையும் நிதானமாக உள்வாங்கும் பார்வை, எளிமையான தோற்றம் - இவைதான் கா.மு.ஷரீப். அன்னாரது ஆளுமையும் திறமையும் இருட்டடிக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவி வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆளுர் ஷாநவாஸ், கவிஞர் ஜலாலுத்தீன், கவிஞர் உஸ்மான் ஆகிய மூவரின் பங்களிப்புடன் கா.மு.ஷரீப் அவர்களது நூற்றாண்டு மலரை முஸ்தபா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது.
கா.மு.ஷரீப் ஒரு மகா கவிஞன். இஸ்லாமிய சினிமா அல்லது முஸ்லிம்களுக்கான சினிமா அவரிலிருந்த ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் பிறந்து நூறு ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர் எப்படிப்பட்ட ஒரு பக்குவமான வாழ்க்கையை வாழ்ந்தார், கவிதைகளும் பாடல்களும் எழுதினார் என்பதிலிருந்து கற்றுக் கொள்ள முஸ்லிம் சினிமா அல்லது இஸ்லாமிய சினிமாவுக்கு நிறைய இருக்கிறது.
இஸ்லாமிய சினிமா ஓர் ஆயுதம் என்பதை இந்த நூற்றாண்டு கடந்த பின்னராவது சமூகம் புரிந்து கொள்ளும் சாத்தியம் இருப்பதால் அது குறித்து நம்பிக்கையுடன் இருந்து விடலாம். ஆனால் 'பார்த்தீர்களா.. கா.மு. ஷரீப் தாடியை வளரவிடாமல் கத்திரித்து வந்திருக்கிறார்?' என்று நமது 'அறிவுக் கொழுந்துகள்' விமர்சித்து விடுவார்களோ என்ற பயம் என்னை வாட்டி வதைக்கிறது!
நன்றி - மீள்பார்வை
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment