- 19 -
காட்சி - 1
ரமளான் மாதம்! ஒரு நாள் மாலை 6.00 மணி. ஆமர் வீதி போலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சிக்னலைத் தாண்டி விடவேண்டும் என்று வந்த வண்டியால் கடக்க முடியவில்லை. சிவப்பு விளக்குச் சமிக்ஞை விழுந்து விட்டது. வேகமாக வந்த அந்தக் கார், நிறுத்தியாக வேண்டிய கோட்டுக்குள் நிறுத்த முடியாமல் ஓர் அடி தூரம் தாண்டி நின்றது. வாகனம் நிறுத்த வேண்டிய கோட்டுக்கு அப்பால் பாதசாரிகள் கடவை!
வீதியின் மத்தியில் நின்று சிவப்பு விளக்குச் சமிக்ஞை விழுந்ததும் பாதசாரிகள் கடவையில் இறங்கிய அந்த இரண்டு இளைஞர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டிக் கார் முன்னால் வருவதைக் கண்டு அதிர்ந்து பின் வாங்கினார்கள். இருவருக்கும் 16 அல்லது 17 வயது இருக்கும். அதற்குக் குறைவாக இருக்கலாமே தவிர கூடுதலாக இருக்க முடியாது. இருவர் தலைகளிலும் தொப்பி. அவர்கள் கிராண்பாஸ் வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு நோன்பு துறக்கச் செல்வதற்காகப் பாதை கடக்க முற்பட்டவர்கள்.
பின்வாங்கிய இருவரும் காரின் அருகே வெகு இயல்பாக நெருங்கிக் காரின் சாரதியின் பக்கக் கண்ணாடியைக் கீழிறக்கச் சைகை செய்தார்கள். சாரதி கண்ணாடியைக் கீழிறக்கிறதும் அவர்களில் ஒருவன் சாரதியின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். கோடு தாண்டியது குற்றம் என்று சைகையால் சொல்லித் திட்டினான். சாரதி உறைந்து போயிருக்க அவர்கள் தெருவைக் கடந்து போனார்கள் வெகு சாதாரணமாக!
அந்த வாகனத்தைப் பினனால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த எனக்கு வாகனத்தின் ஏஸியையும் தாண்டி வியர்த்தது!
காட்சி - 2
தெமடகொட - பேஸலைன் வீதியில் ஆரம்பமாகி உள்ளே செல்லும் பாதைகளில் ஒன்று. நான் அந்தப் பாதைக்குள் காரைத் திருப்பிய போது இரவு 7.30 அளவில் இருக்கலாம். அந்தத் தெருவில் இரண்டு வாகனங்கள் செல்லவும் வரவுமான இடம் உண்டு. அதாவது ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால் மற்றொரு வாகனம் செல்லுமளவு மாத்திரம் செல்ல முடியும்.
தெருவுக்குள் நுழைந்து 25 யார் கூடச் சென்றிருக்க மாட்டேன். ஒரு வீட்டின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. ஒரு புறம் நான்கு வாகனங்கள். அடுத்த பக்கம் இரண்டு வாகனங்கள். நடந்து செல்பவர்கள் நெளிந்து புகுந்து சென்று கொண்டிருந்தார்கள். என்னால் தாண்டிச் செல்ல முடியவில்லை.
அது ஒரு முஸ்லிம் திருமண வீடு. உள்ளே பெருந்தொனியில் கஸீதா ஒலித்துக் கொண்டிருந்தது. நான் 'ஹோர்ன்' அடித்தேன். கொத்துக் கொத்தான நகைகளுடன் மினுக்கப்பட்ட முகங்களுடன் அவ்வீட்டுக்குள் பெண்கள் நுழைந்து கொண்டிருந்தனர். அவ்வப்போது கோட் ஷூட் போட்ட நபர்கள் தெருவுக்கு வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தனர். ஆனால் யாருக்கும் வாகனம் ஒன்று தாண்டுவதற்குக் காத்து நிற்பது குறித்து எந்தக் கவனமும் இருக்கவில்லை.
நான் அமைதியாக, பொறுமையாகக் காத்திருந்தேன். பின்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்து நின்றது. மேலும் பத்து நிமிடங்கள் கழிந்ததும் முச்சக்கர வண்டிக்காரர் கோபத்துடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து வெளியில் வந்தார். அதற்குப் பிறகும் ஐந்து நிமிடங்கள் கழிந்து ஒருவர் வெளியே வந்து ஆர்வமில்லாத போக்கில் ஒரு புற வாகனங்களை ஒதுக்கித் தந்தார்.
காட்சி - 3
கிராண்பாஸ் வீதி முழு மொத்தமாக அந்த மதிய வேளை வாகனங்களால் நிரம்பி வழிந்தது. நான் சந்தி கடந்தால் அடுத்த தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அந்தத் தெருவிலேயே அரை மணி நேரம் கழிந்திருந்தது. சந்தியை நோக்கி மெது மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்து நின்ற ஒரு முச்சக்கர வண்டி தொடர்ந்து 'ஹோர்ன்' சத்தம் எழுப்பிக் கொண்டேயிருந்தது.
எனது வாகனத்துக்கு இடது பக்கத்தால் புகுந்து செல்ல அவர் எத்தனிக்கிறார் என்று புரிந்தது. ஆனால் ஒதுங்கி இடம் கொடுக்க வசதியிருக்கவில்லை. அப்படி நகர்த்தினால் காரின் ஒரு பக்கத்தைத் தேய்த்துக் கொண்டு செல்ல ஒரு டிப்பர் வாகனம் தயாராக இருந்தது.
அந்த இடத்திலேயே பதினைந்து நிமிடம் கழிய வாகனங்கள் நகர நானும் நகர்த்தினேன். அந்த இடைவெளிக்குள் என்னை முந்திய முச்சக்கர வண்டிக்காரர் தமிழில் என் வம்சத்தை இழுத்துக் கொழும்புத் தமிழில் தூஷணத்தால் திட்டியது மொத்தமாக மூடியிருந்த வாகனத்துக்குள்ளும் தெளிவாகக் கேட்டது. நான் எதுவும் காதில் விழாதது போல் வாகனத்தை நகர்த்தினேன்.
முச்சக்கர வண்டியில் அமர்ந்திருந்த முஸ்லிம் பெண்மணி அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல் வெட்கத்தில் முகத்தை இரு கைகளாலும் மூடியபடி குனிந்து அமர்ந்திருந்தார். முச்சக்கர வண்டி எனது வண்டியைத் தாண்டியதும் பார்த்தேன்.
பின் கண்ணாடியில் 'லாஇலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர்ரஸூலுல்லாஹ்;' என்ற கலிமா ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
வெட்கித் தலைகுனிந்தது அந்தப் பெண்மணி மட்டுமா? நாமும்தான். நம் சமூகத்தின் பொறுப்பற்ற தன்மைகள் குறித்துப் பெரும்பாலும் நாம் பேசவே தயங்குகின்றோம். அப்படிப் பேச முனையும்போது, சமூகத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள், துரோகிகள் என்பதான பார்வைகளால் துளைக்கப் படுகின்றோம். பிறர் குறைகளைப் பேசித் திரியும் சமூகம் உருப்படாது, அது பாவம் என்பதான ஹதீஸ்களை முன்னிறுத்திப் பயமுறுத்தப் படுகின்றோம்.
உண்மையில், பன்முகச் சமூக ஒழுங்கிலே நம்மவர்கள் சக சமூகத்தவர் மத்தியில் உருவாக்கும் பிம்பங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையோ, நமது குறைபாடுகளைச் சுட்டி, அவற்றைக் கதையாடலுக்கு உட்படுத்துவதன் மூலமே சமூக விழிப்புணர்வை ஊட்ட முடியும் என்பதையோ என்றுதான் நம் சமூகம் உணரும் என்றே தெரியவில்லை.
இந்நிலையில், நமது மக்களின் குறைபாடுகளைக் குறித்துத் தைரியமாக உரையாடி, விழிப்புணர்வூட்டிவரும் தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியதே என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை, எனக்கு.
Post a Comment