எனக்குள் நகரும் நதி - 20
'தாம் செய்வது தப்பு என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்!'
அண்மையில் என்னை நட்புக் கருதிச் சந்திக்க வந்த சகோதரர் தொடர்ந்தார்.
'பாவமான காரியத்தைச் செய்கிறோம் என்பதையும் உணர்ந்தேயிருக்கிறார்கள். தாம் செய்வற்றை மிகவும் அவதானமானவும் நுணுக்கமாகவும் மேற்கொள்கிறார்கள். ஹலால் ஹராம் விடயத்தில் அவர்கள் எல்லோருமே மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் என்று தெரிந்தும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறீர்களே? என்று கேட்டால் 'எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் சோறு போடுவீர்களா?' என்று ஒற்றைக் கேள்வியை நம்முன்னால் வீசுகிறார்கள்!'
சகோதரர் அரச ஊழியர். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்த அவதானங்களை மேற்கொள்ளும் அரச ஊழியர். ஒரு பிராந்தியத்தின் மூன்று குக்கிராமப் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத, மார்க்க விரேத விடயங்களைப் பற்றிய தகவல்களை என்னுடன் கவலை தோய்ந்த முகத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
கஞ்சா, போதை லேகியம் மற்றும் விபசாரம் ஆகியன வியாபார மயமாகி அமோகமாக நடந்து கொண்டிருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். போதைதரும் வஸ்துக்களின் வியாபாரத்தில் பெண்களும் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமான விசயம். ஆபத்தான வியாபாரமாக இருந்தாலும் அவர்கள் தைரியத்துடனும் கெட்டித் தனத்துடன் ஈடுபடுவதையும் அது குறுகிய ஈடுபாட்டில் நிறையப் பணத்தை ஈட்டிக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது என்பதையும் அந்தச் சகோதரர் குறிப்பிட்டார்.
குற்றம் உறுத்தாத மனோநிலை வளர்ந்த பிறகு அதிலிருந்தும் கிடைக்கும் மேலதிக பணத்திலிருந்தும் மேலும் மேலும் தீங்குகள் பரவ ஆரம்பிக்கின்றன. பின்னர் பணம் என்ற ஒன்றுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்குரிய தயார் நிலைக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். குறிப்பாக அவர்களது பிள்ளைகள் இவற்றைப் பார்த்தும் கேட்டும்தான் வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவோ சமூகத்துக்கு உரமானவர்கவோ எப்படி வளர முடியும்? இவ்வாறான சூழலுக்குள் வளரும் ஒரு நல்ல பிள்ளையும் கூட சந்தேகத்துக்குரிய பிள்ளையாகவே நோக்கப்படும் அபாயம் உண்டு.
சமூகத்தின் வறிய நிலை பற்றிய தொட்டுக் காட்டல்கள் மேற்கொள்ளப்படும்ம் போதெல்லாம் 'முற்றாக வறுமையை ஒழித்து விட முடியாது' என்றும் 'எல்லாக் காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் ஒரு சாராரிடம் வறுமை நிலவிக் கொண்டேயிருந்திருக்கிறது' என்றும் படிப்பாளிகள் சிலர் கணக்குக் காட்டி விட்டு நழுவி விடுகின்றனர். அது சரியாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
அப்படியானால் வாழ்வின் சகல துறைகளிலும் தெளிவும் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கும் சூழலில் சக மனிதன் வாழ்வு குறித்த அக்கறை வளர்ச்சியடையவில்லை என்றல்லவா அர்த்தமாகி விடுகிறது. வாழ்வின் நவீன முன்னேற்றங்களால் மனிதாபிமானம் மட்டும் பின் தங்கி இருக்கிறது என்றால் அது பூரணத்துவமான வளர்ச்சி அல்ல என்றல்லவா அர்த்தப்படும்?
சிறப்புற்ற நடுநிலமைச் சமுதாயம் என்று பெயர் பெற்ற இஸ்லாம் என்ற வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தில் இவ்வாறான இழிநிலை அடியோடு அழிந்து விடாதிருந்தாலும் பெரிய அளவில் நிலவுவதற்கு இடமில்லை அல்லவா? அப்படியாயின் தவறு எங்கேயிருக்கிறது? அதைக் கண்டு பிடிப்பவர்கள் யார்? அதற்கான மாற்றுத் திட்டங்களை வகுப்பது யார்? செயல்படுத்துவது யார்? நான் என்னளவில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக இருக்கிறேன் என்ற நமது அளவுகோல் முடிவுடன் வாழும் நாம் அனைவரும் இந்த நிலைக்கு ஜவாப்தாரிகள் இல்லையா?
லட்சக் கணக்கான புத்தகங்கள் வருகின்றன, பத்திரிகைகள் வருகின்றன, நடந்தும், எழுதியும், பேசியும் தஃவா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்க்கப்பணி, அடிப்படை மனிதப் பணி என்ற பெயரால் கோடிக் கணக்கான அறபுப் பணம் பல பகுதிகளிலும் இறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய நிலையில் மேம்பட்டிருக்கும் தஃவாப் பணி இடம் பெறாத, அடிப்படை மனித உதவி என்ற பெயரால் பணம் இறைக்கப்படாத ஒரு கால கட்டத்தில் இத்தகைய பெருமளவிலான இழி நிலை முஸ்லிம் சமூகத்தில் இருந்தது கிடையாது.
அரசியல் விவகாரமாகட்டும், மார்க்க விவகாரமாகட்டும்... ஒவ்வொருவரும் தம்மை முற்படுத்திக் கொள்ளவும் தமது அணியை நியாயப்படுத்திக் கொள்ளவும் தமது குழுவுக்கு வெள்ளையடிக்கவும் விவாதம் நடத்தவுமே நமக்குக் காலம் சரியாக இருக்கிறது. அற்பமான ஒற்றை வசனத்துக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரம் பேர் கூடி ஆளுக்கொரு அர்த்தம் கொடுத்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எதுமுக்கியம், எது முக்கியமல்ல என்ற தெளிநிலைக்கு அப்பால் நின்று 'நீ சொல்வது பிழை - நான் சொல்வது சரி' என்பதில் தொங்கிக் கொண்டு அடிபிடிப்படுகிறோம்.
இவற்றையெல்லாம் கடந்து சமூக ரீதியான விடயங்களை முற்படுத்தி ஒன்று படுவதன் மூலமே இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்க முடியும்.
முஸ்லிம் சமூகம், இஸ்லாம் என்று வந்து விட்டாலே உனது இஸ்லாம், எனது இஸ்லாம் என்று பாகுபாடு துவங்கி விடும் சூழலில் இதுவெல்லாம் என்று சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை.
நன்றி - மீள்பார்வை
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment