Sunday, August 23, 2015

கௌரவத்துக்குள் பதுங்கிக் கிடக்கும் பொறாமை!


 - 25 -

'சில வாரங்களாக குத்பா பிரசங்கம் எதுவும் நிகழ்த்தவில்லை. குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் பேராவலை நோக்கி எனது நபுஸூ உந்திக் கொண்டேயிருக்கிறது' என்பது மாதிரி ஒரு பதிவொன்றை இட்டிருந்தார் எனது முகநூல் நண்பர்களில் ஒருவர். அவரது பதிவின் சாராம்சம் என்னவெனில் நீ குத்பா கேட்டுக் கொண்டிருப்பவன் அல்லன், பிரசங்கம் நிகழ்த்த வேண்டிய ஒரு முக்கியஸ்தன் என்ற ஆசை கொண்ட உணர்வு.

அவர் ஓர் இளம் ஆலிம். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பதிவைக் கண்ட உடனே எனக்கு அவர் மீது பெரும் மரியாதை உண்டானது.

பெரும்பாலும் புத்திஜீவிகளையும், பெரும் ஆலீம்களையும், பிரசாரகர்களையும், துறை சார் விற்பன்னர்னையும் ஆட்டி வைக்கும் ஆசை இது.  உள்ள மனதின் கள்ள மடிப்புக்குள் அமர்ந்து கொண்டு அவ்வப்போது எட்டிப் பார்க்கும் இழிவார்ந்த பண்பு. சாதாரணமானவர்களை இந்த நோய் பாதிப்பதில்லை.

அதே வேளை ஒரு நட்சத்திர அந்தஸ்தஸ்துக்கு எனது ஆன்மா ஆசைப்படுகிறது என்பது இந்த நோய் பிடித்தோரில் அநேகருக்குப் புரிவது இல்லை. புரிந்தாலும் கூட அதைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெரிதும் முயற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. விதிவிலக்குகளும் இல்லை என்று இல்லை.

பத்திரிகை ஒன்றில் ஒருவரது படைப்பாக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் பார்க்கும் சிலர் படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் மறந்து விடுகிறார்கள். ஒரு சிலருக்கோ அந்த எழுத்தாக்கத்தை எழுதியவர் மீது ஒரு பொறாமை ஏற்படுகிறது. பொறாமையின் விகிதாசாரத்துக்கேற்ப அந்த எழுத்தாக்கத்துக்கான விமர்சனம் விஷமாகக் கக்கப்பட ஆரம்பிக்கிறது. அதி உச்ச பொறாமையில் அதை எழுதியவரின் பாட்டன் காலம் தொடங்கி இன்று அவரது இறுதிக் குழந்தை வரை பிய்த்து உதறி எறிகிறார்.

இது எழுத்துத் துறையோடு மட்டும் சார்ந்தது அல்ல. எல்லாத் துறைகளிலும் இந்தப் பிரச்சளை உண்டு. குறிப்பாக இஸ்லாமிய பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் இத்தகைய நோயைக் கண்ணுறவும் கேள்விப்படவும் நேரும் போது ஒரு புறம் கோபமும் மறுபுறம் வேதனையும் ஏற்படுகிறது.

ஓர் அமைப்பு பொது அம்சம் சார் விடயமொன்று குறித்து ஒரு பயிற்சி நெறி நடத்தியது. அமைப்பு சார் ஒருவர் இதை ஏற்பாடு செய்து எனது தலைமையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு இரண்டு தினங்கள் நடந்தது. முதல் நாள் காலை அமைப்பு சார் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் அடுத்த தினம் மாலை மீண்டும் வந்து சான்றிதழ்கள் கையளிக்கும் வரை நிகழ்வில் அவர்கள் குறுக்கிட மாட்டார்கள். இப்படித்தான் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது.

ஆனால் முழு நாளும் அமைப்பு சார் மற்றொருவர் பின்னால் அமர்ந்திருப்பதை அவதானித்தேன். என்னதான் நடக்கிறது என்று மேலதிகமாக ஒருவரை நியமித்திருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சியின் மறு கட்டம் ஆரம்பமாகியது. வளவாளர்கள் தமது கடமையைச் செவ்வனே நடத்திக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை என்னோடு இணைந்திருந்த அமைப்பின் அங்கத்தவர் காலை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர் காதுக்குள் ஒரு தகவல் சொன்னார்.

காலை நிகழ்ச்சி தொடங்கு முன் 'பின்னால் அமர்ந்திருந்த நபரு'க்கு 15 நிமிடம் பேசக் கொடுக்க வேண்டும் என்றார் அவர். அது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றேன் நான். இல்லை, அவர் ஆசைப்படுகிறார் என்றார் நண்பர். இந்த சபஜக்டுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றேன் நான். ஆம். அது தெரியும். ஆனால் அவரையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்றார் நண்பர். மன ஆசையை அடக்க முடியாதவர் எப்படி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கேட்டேன் நான். நண்பர் மிகவும் புரிந்துணர்வு கொண்டவர். அவரது வேண்டுகோளையேற்று பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என்ற ஒப்பந்தத்துடன் அழைத்து வரப்பட்டார் அவர். ஆனால் நாற்பது நிமிடங்கள் பேருரை ஆற்றி விட்டுத்தான் ஓய்ந்தார்.

இந்த மாதிரி ஆசைகளைச் சின்னச் சின்ன ஆசைகள் என்று சொல்லி விட முடியாது. ஆன்மாவோடும் மனப் பக்குவத்தோடும் சம்மந்தப்பட்ட விடயம் இது. ஆசைகளை அறுத்துத் திருப்தியுற்ற ஆத்மாக்களிடம் இந்தப் பண்பு குடிகொள்வது இல்லை. அந்த ஆத்மா இதை வளர விடுவதும் இல்லை. எங்கு நசித்து நாற்றமெடுக்கும் குப்பை இருக்கிறதோ அங்கேதான் புழுக்களும் பூரான்களும், தேள்களும் பிறப்பெடுக்கின்றன.

தன்னளவில் பக்குவமாக இருத்தல், தன்னையே உசாவுதல், சகலரையும் சமமாக மதித்தல், பிழையானதை அழகிய முறையில் சுட்டிக் காட்டுதல், நிறைகளைப் பாராட்டுதல் போன்ற நற்குணங்கள் வாய்க்கப் பெறின் இந்த நோய் நம்மை அண்டுவதற்கு நியாயம் இல்லை. பொறாமை; என்ற குப்பையிலிருந்தே இந்த இழிய புழுக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதைத் தெளியப் புரிந்து கொண்டால் யாவும் நலம்.

முகநூலின் இளம் வயது ஆலிம் நண்பரைப் பிற்காலங்களில் காணக் கிடைக்கவில்லை.  'திறந்து பேசும் மனதை அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கிறான், பாராட்டுக்கள் என்று அவருக்கு ஒரு பின்னூட்டம் இட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: