------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர். தாஸிம் அகமது
வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் மகுடத்தின் கீழ் இலங்கை கலை இலக்கிய கர்த்தாக்களை கௌரவித்து வரலாறு கண்ட பெருந்தகை கௌரவ ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆவார். முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக அவர் இருந்த போது, 1994களில் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு மணிவிழா ஒன்று அவ் அமைச்சினால்; கொழும்பில் வெகு விமரிசையாக எடுக்கப்பட்டது. அந்நிகழ்வில் பேராசிரியர் உவைஸ் அவர்களை கௌரவிக்கும் முகமாக மணிவிழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அம்மலரின் ஆசிரியர் கல்விமான் அல்ஹாஜ். எஸ்.எச்.எம். ஜெமீல் ஆவார்.
பாராட்டு, மணிவிழா மலர் வெளியீடு ஆகியவை மண்டபம் நிறைந்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இலக்கிய ஜாம்பவான்கள் மத்தியில் நிகழ்ந்தது. அந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேட்டத்தில் பெரு வெற்றி கண்டு, அயராது உழைத்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைப்புக்களை உலகறியச் செய்த பெருமகன் பேராசிரியர் உவைஸ் அவர்கள் அவ்விழாவின் போது மிகவும் அடக்கத்துடன் அமர்ந்திருந்தார். அறிஞர்களின் வாழ்த்துரைகளும், பேருரைகளும் அன்னாரை எவ்வித சலனத்துக்கும் உட்படுத்தவில்லை. அப்பெருந்தகையின் பெரும் சேவை அவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றே.
பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்கள் 1922ம் ஆண்டு கொழும்பு, காலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் பிறந்தார். தகப்பன் பெயர் மகுமூது லெப்பை தாயார் பெயர் சைனம்பு நாச்சியார் இவ்விருவருக்கும் இவர் ஒரே மகனாவார். ஆரம்ப கல்வியை ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்க முல்லையில் அமைந்திருந்த தக்ஸலா வித்தியாலயத்தில் கற்றார். அதே விததியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். புhளியைக் கற்றதன் விளைவு பிற்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டுக்கு வழி வகுத்திருக்கலாம். 1938ம் ஆண்டு தமிழ் மொழி மூலம் கல்வி பெற்ற பேராசிரியர் உவைஸ் 1946ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும்வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. ஆசிரியர் எவரும் இல்லாமலே தமிழ் கற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
1945ம் ஆண்டில் முக்கியமான நிகழ்வு ஒன்று உவைஸ் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்றது. அதே ஆண்டில் பல்கலைகழக நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை தோற்றுவிக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. நேர்முகத் தேர்வுக்குழுவில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் ஒரு உறுப்பினராக இருந்தார். நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட உவைஸிடம் சுவாமி விபுலானந்தர் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார். உவைஸுக்கும் பதிலளிக்க முடியவில்லை. சீறாப்புராணத்தைப் பற்றி விபுலானந்த அடிகள் அவர்கள் கூறியது உவைஸுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேடலுக்கு வித்திடும் சவாலாக மாறியது.