பட்டாம் பூச்சிக் கனவுகள்
**************************
றிஜான் முஹம்மது
பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி. வாசிப்புக் காலம் : 05-04-2016 – 07-04-2016 (அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்துக் காலங்கள்) ^_^
வாசித்த ஏனைய நூல்களைவிட “பட்டாம் பூச்சிக் கனவுகள்” தொகுதி தனித்தன்மை வாய்ந்திருக்கிறது. நூல் வெளியீட்டில் அடியேன் பங்கேற்ற நிகழ்வையும் எண்ணி இன்புறக் கூடிய சுவையை வாழ்வில் புகைப்படங்கள் மூலமாக ஊட்டிக் கொண்டே இருக்கிறதை நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.
பன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் எனும் ஆளுமை, எனக்கு காலம் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னிலையில் வகிப்பவர், என் பேரன்புக்கும், தனி மதிப்புக்கும் பொருத்தமானவர். நூலானது கையில் தவண்ட பொழுதினில் உச்சி நுகராமல் விட்டேனே என சிறு வருத்தம் இருந்ததை தற்போது மறைக்க மனம் இடம் விடுவதாயில்லை. வாசகனுக்கு அதிருப்தியற்ற மனநிலை, அமைதியற்ற சூழல் இவ்விரண்டுமே திறந்துவிட்டிருக்க வேண்டும் என கருதும் நிலைப்பாட்டிலே இருந்தேன்.
அலுவலகத்தில் இன்டெர்னல் ஒடிட்டினால் ஹெட் லொக்ட் ஆகியிருந்த சமயம் எனக்கு டிராபிக் சிவப்புச் சமிக்ஞையைப் போல் என் உளஅலைவுகளை குறுகிய விட்டத்துக்குள் நிறுத்தி நூலின் எட்டுச் சிறுகதைகளின் சொல்லலங்காரங்கள், சீன் செட்டிங்க்ஸ் எனும் தகைமைகளால் தளர்ந்த மனத் தெவிட்டலின் சீரமைப்புக் காரணிகளாக திகழ்ந்தது மட்டுமில்லாமல் என் நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்ய நேர்ந்தது.
பெரும்பாலும் உள்ளடங்கிய எட்டுச் சிறுகதைகளும் குத்துச்சண்டை பிடித்துப் பிறகே நூலினுள் ஏறி சாவகாசமாக நிமிர்ந்திருக்க வேண்டும். காரணம் ஏராளமான போற்றத்தக்க சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல இலக்கியப் பிரசவம் நாளுக்குநாள் எம்மை நெருங்கிக்கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை, தாய்த் தமிழிலும் சரி ஏனைய நம் புழக்கத்தில் உள்ள மொழிகளிலும் சரி. ஏதோ லாபாயில் கிடைத்தது போலில்லாமல், போலி இல்லாமல், (இப்படியானவைகள்தான் குறுகிய காலத்துக்குள் செம்மை இழந்துவிடுவது) மனக்கோட்பாடுகளுடன் ஊன்றி தெரிவுக்குழு நியமித்தே எட்டுத் தரமான சிறுகதைகள் மூலமாக எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் பட்டாம் பூச்சிக் கனவுகள் தொகுதியை நிலை நிறுத்தியிருக்கிறார்.
றிஜான் முஹம்மது
மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பற்றி ஓய்வுபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழக உப பதிவாளர்-மன்சூர் ஏ. காதர் அவர்களின் முன்னுரையில் கூறி இருப்பார்: “இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேகமான மண்வளத்தையும் காலநிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண்வளத்தையும் வேறொரு காலநிலையையும் கொண்ட இன்னொரு சுற்றாடலுக்கு கொண்டு போய் மீள்நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும்.”
இதனைக்கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக சிந்திக்கும் போது வெற்றிகரமான ஓர் இலக்கிய ஆக்கம் பொழிபெயர்க்கப்படுமாயின் பரவலான சிந்தனைத் திறன் அனுபவத்தோடு குழாமிட்டிருக்க வேண்டும், சர்வதேச நடப்புகளில் ஒத்துப்போகும் வண்ணம் வார்த்தையை முன்நிறுத்த வேண்டும். கதைத் தெரிவைப் போலவே நேருக்கு நேரான காட்சிப் பிணைப்புகளும் மிகைப்படுத்தலில்லாத பாத்திரக் கையாளல்களும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இவைகளை என் கணிப்பில் கனகச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது “பட்டாம் பூச்சிக் கனவுகள்”.
“மரணம் பிறக்கும், மற்றதில் இறக்கும் மீண்டும் மிரட்டும்” போன்றதொரு அலைவரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போதும் ஒன்றோடு ஒன்று கைலாகு ஆகும் சம்பவமும் இதில் இல்லை என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன். சொற்றொடரின் உச்சரிப்பில் பிரதிபலிக்கும் காட்சி பிம்பங்கள் குறித்த நேர வரையரையைத் தாண்டி மற்றதையும் வாசித்து விட்டு ஆடிட்டிக்கு திட்டமிடுவோம் எனும் மனப்பாங்கை இத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் தந்திருந்தது. அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்து நேரங்களில் என்னைச்சுற்றி இருப்பவர்கள் ஏதோவொரு (உறுதியான உண்மை முகநூல்) சொடுக்குகளை இயக்கிக்கொண்டிருக்கும் சமவெளியிலேயே “பட்டாம் பூச்சிக் கனவுகள்” நூலைப் படிக்கக் கிடைத்தது.
- எ கோண்ஸா புக் ஹே ரெஜான் பாய்..?
- பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர், பச்சோந்திக் குடியிருப்பு எனும் சிறைச்சாலை, நிலப்பகுதி முழுவதும் முதுகுகளில் பல் வர்ணம் காட்டும் பச்சைப்புள்ளிகளுடனான பச்சோந்திக் கூட்டங்கள். இதனை ஸெய்னப் கடப்பதைப் பற்றி யூகிக்கும் வேளையிலேயே எங்கள் டிரைவரின் வினவுதல் காதில் விழுந்தது.
ஒரு சிறு புன்னகைத்ததும்பலுடன், அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் பொறுக்கிய ஹிந்தியில் ஓரிரு சொல்லில் பதில். மீண்டும் முந்தி முறைத்தோடும் வேக வரையறையை மீறிய வாகனங்களின் போக்குவரத்து சப்தத்தில் நிசப்தம் என நகர்கிறது.