(மார்ச் 2017 - தீராநதி சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணல். நேர்கண்டவர் பவுத்த ஐயனார்)
** எழுத்துலகிற்கு வரக் கூடிய சூழல் உங்களுக்கு எப்படி உருவானது? உங்களின் குடும்பப் பின்னணி பற்றியும் சொல்லுங்கள்.
என்னுடைய தாய்வழிப் பாட்டனார் ஒரு புலவர். அவரது பெயர் அப்துஸ்ஸமது ஆலிம். அவர் சில குறுங்காவியங்களைப் பாடியிருக்கிறார். தவிர புத்தக வியாபாரியாகவும் இருந்துள்ளார். பெரும்பாலும் அவை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள். சிறுவனாக இருந்த போதே இவற்றைச் சத்தமாக வாசிக்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையும் பாட்டனார் தரும் நூலைச் சத்தமாக வாசிப்பேன். அவர் இரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் எனக்கு 25 சதம் அன்பளிப்பாகத் தருவார். அன்றைய நிலையில் ஒரு இறாத்தல் சீனியின் விலை 18 சதங்கள். எனக்குத் தரப்பட்ட பணத்தை நான் ஓர் உண்டியலில் சேமித்து வந்தேன்.
அதேவேளை எனது தாய்மாமன்கள் இருவர் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களும் நல்ல வாசகர்கள். அவர்கள் வாசிக்கும் எல்லா நூல்களையும் நானும் வாசிக்கத் தொடங்கினேன். இப்படியே ஆரம்பித்து ஊர் நூலகத்துள் நுழைந்தேன். அங்கே சமது என்ற சகோதரர் நூலகராயிருந்தார். அவர் நல்ல நூல்களைத் தெரிந்து எனக்கு வாசிக்கத் தருவார். இப்படி வளர்ந்த வாசிப்புத் தாகம் என்னை முதலில் கவிதையின்பால் உந்தியது.
** நீங்கள் வானொலி, தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோது அங்கு இலக்கிய ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட முடிந்ததா?
அரச வானொலிதான் அந்நாட்களில் தனித்துவ ஊடகமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பகுதிநேர அறிவிப்பாளனாக 1986 இறுதிப் பிரிவில் நான் இணைந்தேன். 1986க்கு முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சேவை - 1 அறிவூட்டல், கலை, இலக்கியம், வாழ்வியல், தொழிலியல் பற்றிய விடயங்களை உள்ளடக்கியும் சேவை - 2 சினிமாப் பாடல்களை மையப்படுத்திய விளம்பர சேவையாகவும் செயற்பட்டன. ஆயினும் கூட வர்த்தக சேவையில் பல்வேறு தமிழ்க் கலை, இலக்கியம் சார் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகியே வந்திருக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு நேயர் படையே இருந்து வந்திருக்கிறது. இலங்கை வானொலி தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியிருந்த பணி மகத்தானது. இருந்த போதும் இது குறித்த ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.
இது தவிர தினமும் ஒரு மணி நேரம் முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இதற்கென தனிச் சேவை ஒன்று இயங்கி வருகிறது. தமிழ்ச் சேவையில் தெரிவாகும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள் இந்த ஒரு மணி நேரத்தையும் இன்று வரை அலைவரிசையில் வழங்கி வருகிறார்கள். அதே போல கல்விச் சேவை என்றும் ஒரு சேவை உண்டு. இதில் ஒரு வருடம் நான் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமையாற்றியிருக்கிறேன்.
எல்லா சேவைகளிலும் பல்வேறு வகையான இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்திருக்கின்றன, வருகின்றன. அந்த நிகழ்ச்சிகள் சிலவற்றை தொகுத்தும் தயாரித்தும் அவற்றில் அதிகம் பங்கு கொண்டும் வந்திருக்கிறேன்.
வானொலி, தொலைக் காட்சிச் செய்தி வாசிப்பாளராக மட்டுமன்றி வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தும் வந்திருக்கிறேன்.
ளு இலங்கையின் இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதில் மூத்த படைப்பாளிகளில் பேராசிரியர். நுஃமான், சோலைக்கிளி அளவிற்குப் பரவலாக யாரும் தமிழகத்தில் தெரியவில்லையே?
அதற்குக் காரணம் நாங்கள் இல்லை. பேராசிரியர் நுஃமான், நோலைக்கிளி ஆகியோரின் நூல்கள் தமிழகத்தில்தாம் முதலில் வெளியாகின. பேராசிரியர் நுஃமான் அறியப்படுவதற்கு மற்றொரு காரணம் அவர் இலங்கையின் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் என்பதும் கூட. உங்களுக்கு இவர்கள் இருவரையும் தெரிகிறது. இன்னும் சிலருக்கு இவர்களைத் தெரியாமல் வேறு இருவரைத் தெரிந்திருக்கிறது. இன்னும் சிலர் பேஸ் புக் வந்த பிறகு அதில் கவிதை எழுதும் தமது நட்பு வட்டத்துள் இருக்கும் இலங்கை நபர்களை மாத்திரம் தெரிந்திருக்கிறது. பெண்கள் வட்டத்தில் முகநூல், இணையத் தளங்கள், தொலைபேசி ஆகியவற்றினூடாகச் சிலரைத் தெரிகிறது. இதில் துயரம் என்னவெனில் தமக்குத் தெரிந்தவர்கள் மாத்திரம்தான் இலங்கைக் கவிஞர்கள், இலங்கைத் தமிழ்க் கவிதையை வளர்த்தவர்கள் என்று அவரவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதுதான்.
இந்த நிலை தமிழ் முஸ்லிம் கவிஞர்களுக்கு மாத்திரம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. பொதுவாகத் தமிழ் மொழியில் எழுதும் பல நூறு படைப்பாளிகளுக்கும் தமிழகத்தைப் பொறுத்த வரை இந்தக் கதிதான். அவரலர் அறிமுக வட்டத்துக்குள் மாத்திரம் அவரவர் அறியப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் இலங்கைப் படைப்பாளிகளுக்குள் தமிழக, இந்தியப் படைப்பாளிகளின் அறிமுக விகிதம் அதிகம். நானறிந்த காலத்திலிருந்து இந்திய எழுத்தாளர்களைத்தான் நாங்கள் அதிகம் படித்து வருகிறோம். அவர்களது நூல்களை இறக்குமதி செய்கிறோம், வாங்கிப் படிக்கிறோம். ஆனால் எங்களது நூல்களை நாங்களே கொண்டு வந்து உங்களைப் படிக்கச் சொல்ல வேண்டும் அல்லது அங்குள்ள ஒரு வெளியீட்டாளரிடம் கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும். இறக்குமதி செய்வதற்கும் அனுமதி இல்லை என்று அறிகிறேன்.
** அரபு இலக்கியங்கள மொழிபெயர்க்கும் ஆர்வம் எப்படி வந்தது?
அறபு இலக்கியம் என்றைக்குமே உயர்ந்த இலக்கியமாக இருந்து வந்திருக்கிறது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. முதன் முதலில் ஆங்கிலத்தில் ஈராக்கிய எழுத்தாளரான மஹ்மூத் சயீத் எழுதிய 'புகையிரதம்' என்ற கதையைப் படிக்கக் கிடைத்தது. அந்தக் கதை என்னைப் படாத பாடு படுத்தி விட்டது. ஆர்வம் மிகுதியால் அதை மொழிபெயர்ப்புச் செய்து சென்னையிலிருந்து வெளிவந்த 'சமநிலைச் சமுதாயம்' இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் கதை பிரசுரமாகியதும் யாரோ ஒரு நண்பர் அதை ஒரு குறும்படமாக எடுக்க அனுமதி கேட்டதாக சஞ்சிகை ஆசிரியர் ஜாபர் சாதிக் என்னிடம் தெரிவித்தார்.
அந்தக் கதையின் வீரியமும், கலை நயமும் என்னை வெகுவாகக் கவரவே மஹ்மூத் சயீத் பற்றித் தேடத் தொடங்கினேன். மேலும் அவரது மூன்று கதைகள் கிடைத்தன. அவற்றையும் மொழிபெயர்த்தேன். தொடர்தேடலில் கஸ்ஸான் கனபானியின் 'காஸாவிலிருந்து ஒரு கடிதம்', சூடானிய எழுத்தாளர் தையிப் ஸாலிஹ் அவர்களின் 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' ஆகிய முத்தான கதைகள் கிடைத்தன. மேலும் ஒமர் அல்கித்தி எழுதிய - லிபியத் தலைவர் கேர்ணல் கடாபியின் மறுபக்கத்தைக் காட்டும் 'நெடுநாள் சிறைவாசி என்கிற கதை.. இப்படியே எனது மொழிபெயர்ப்புத் தொடர்ந்த போது இவற்றை ஒரு தொகுதியாகப் போட்டு விடலாமே என்கிற எண்ணம் வந்தது. எனவே பத்துக் கதைகளைத் தொகுத்து 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' எனும் தலைப்பில் 2011ம் ஆண்டு வெளிக் கொணர்ந்தேன்.
2011ல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுதிக்கான தேசிய சாஹித்திய விருது இந்த நூலுக்கு 2012ல் வழங்கப்பட்டது.
** தமிழில் அரபு இலக்கியங்களின் அறிமுகம் மிகக் குறைவு. அனேகமாக அரபு இலக்கியங்களை அதிகம் தமிழில் மொழிபெயர்த்தது நீங்களாகத்தான் இருக்க முடியும். எந்த அடிப்படையில் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.?
அறபு இலக்கியங்களை ஆங்காங்கே பலரும் உதிரிகளாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தளவில் யாரும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அறபுக் கவிதைகளை முதலில் எம்.ஏ.நுஃமான், பண்ணாமத்துக் கவிராயர் ஆகியோர் பெருமளவில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர வேறு சிலரும் சில கவிதைகளை மொழிபெயர்த்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
சிறுகதைகளைப் பொறுத்தவரை, ஒரு சிலர் சில கதைகளை மொழிபெயர்த்துள்ளதாக அறிய வந்தேன். ஆனால் அறபுச் சிறுகதைகள் ஒரு தொகுதியாக வெளி வந்தது எனது 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' ஆகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எந்த அடிப்படையில் கதைகளைத் தேர்கிறீர்கள் என்பது உங்களது வினாவில் இரண்டாம் பகுதி. உண்மையில் அடிப்படை என்ற ஒன்றை நான் அளவு கோலாகக் கொள்ளவில்லை. கதையின் கலை நயம், அதன் கட்டுமானம், சொல்லிச் செல்லும் விதம், சொல்லப்படும் அம்சம் ஆகியன என்னைக் கவரும் பட்சத்தில் அது எனது தெரிவுக்குள் வந்து விடுகிறது.
** அரபு இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்குமான ஏதாவது வகையில் தொடர்பு உள்ளதா?
அறபுக் கலாசாரம், இஸ்லாமிய கலாசாரம் என்பன தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் காலாகாலமாய் இருந்து வருகிறது. இந்தத் தொடர்புக்கு அப்பால் வணக்கமுறைகள், இஸ்லாமிய மார்க்கக் கடமைகள், சட்டங்கள் ஆகியன பெரும்பாலும் எந்த மொழி பேசும் முஸ்லிமுக்கும் பொதுவானவையே. இவை இலக்கிய வடிவங்களில் வருகின்ற போது எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானவையாகவே இருக்கும்.
பொதுவாக எந்த இலக்கியத்தைப் பார்த்தாலும் மனித இயல்புகள், நடத்தைகள், உணர்வுகள் யாவும் ஒரு மாதிரியே இருப்பதாய் உணர்கிறேன்.
** 'ஒரு குடம் கண்ணீர் ' தொகுப்பில் இடம் பெற்றுள்ள உண்மைக் கதைகளை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கும் இலங்கை இனப் படுகொலைகளுக்கும் தொடர்பு உள்ளதா?
நேரடியாக இல்லை. இந்த நூலை நான் எழுத நினைத்தது வேறு வடிவில். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எல்லாப் பிரிவுகளிலிருந்தும் ஒவ்வொரு ஆணை அல்லது பெண்ணை நேர்கண்டு மையப் படுத்தியே எழுத விரும்பியிருந்தேன். வெளியிடப்பட்டால் நமது படிப்பாளிகளுக்கிடையே கடும் விமர்சனங்களை எதிர்நோக்கும் என்பதையும் அதற்கப்பால் உயிராபத்தை ஏற்படுத்தவும் கூடும் என்று நினைத்தேன். அத்துடன் தகவல் சேகரிப்பதில் நீண்ட காலம் எடுக்கும் என்பதும் அதற்காக நிறைய அலைய வேண்டியிருக்கும் என்பதையும் கூட தவிர்ப்புக்கான காரணமாகச் சொல்லலாம்.
சித்திரவதை, அரசியல், அதிகாரம், வல்லரசு - ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மரித்தோர், தப்பிப் பிழைத்தோர் பற்றிய சம்பவங்களின் தொகுப்பே இந்த நூல். ஒரு சுந்தரமான அழகிய வாழ்வையும் உலகத்தையும் பார்க்க விரும்பும் மக்களில் அதற்கான வாய்ப்பிழந்த துர்ப்பாக்கியம் மிக்கவர்களைப் பற்றிப் பேசுகிறது.
இந்நூலின் என்னுரையில் 'ஆங்காங்கே இலங்கையையும் நாம் தரிசிக்கலாம்' என்றவாறு ஒரு வசனம் பயன்படுத்தியிருப்பேன். இன, மத, தேசம், பால் கடந்து துன்பப்படும் மக்கள் அனைவர் சார்பிலும் இது பேசுகிறது.
ளு உங்கள் நூல்களைப் படித்த பிறகு இலங்கைப் போரில் இஸ்லாமிய மக்கள் பட்ட துன்பங்களை உணர முடிகிறது. கவிதைகள், கட்டுரைகள் கதைகள் எல்லாமே துயரங்களின் ஆவணங்களாகத் தெரிகிறது. குறிப்பாக 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' நூலில் தொகுக்கப்பட்டுள்ள கவிதைகள். இது உலகிற்குத் தெரியப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்டதா?
திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு தொகுப்பு அல்ல அது. இந்தத் தொகுப்புக்குப் பின்னால் ஒரு கதையே உள்ளது. இனங்களுக்கிடையிலான முறுகலின் போது, கலவரங்களின் போது பல முஸ்லிம் கவிஞர்களால் கவிதைகள் புனையப்பட்டன. இக்கவிதைகளைத் தொகுத்து 'மரணத்துள் வாழ்வோம்' தொகுப்புப் போல கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை என்னிடம் முதலில் தெரிவித்தவர் சகோதரர் ஷகீப் அவர்கள். அப்போது அவர் 'சரிநிகர்' சஞ்சிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து இத்தொகுப்புக்கான கவிதைகளை அனுப்புமாறு ஷகீபும் நானும் பத்திரிகைகளில் எழுதினோம். அதை வெளியிடும் பணச் செலவை நான் பொறுப்பேற்றேன். ஆனால் கிடைத்த கவிதைகள் எங்கள் முயற்சியைப் பின்னடைய வைத்தன. ஆயினும் தனிப்பட்ட முறையில் பல கவிதைகளையும் அவ்வப்போது வந்த சிறு சிறு தொகுப்புக்களையும் நான் சேகரித்து வைத்திருந்தேன்.
2002ம் ஆண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றை அரச செலவில் நடத்தத் தீர்மானிக்கப்பட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் (இவர் பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்) ஹஸன் அலி அவர்கள் இந்த முயற்சியை ஞாபகமூட்டினார். எனவே மாநாட்டின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக அதை நாங்கள் மேற்கொண்டோம்.
ஆனாலும் கூட இனப்பிரச்சினையில் முஸ்லிம்கள் கண்டு கொள்ளப்படாதது போல இந்தத் தொகுப்பையும் யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. பிரான்ஸிலிருக்கும் நண்பர் ஸ்ராலின் இந்நூலுக்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
பவுத்த ஐயனார் தம்பதி
** தங்களின் மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், கவிதைகளில் தெளிவான மொழிவளத்துடன் உள்ளது. இதை எப்படி அடைந்தீர்கள்?
இலக்கியத்தின் உயிர் நாடியே மொழிதானே! ஒரு விடயத்தைச் சொல்வதில், பொதுவாகச் சொல்லுவது, பொருத்தமான சொற்களில் சொல்வது, அழகிய முறையில் சொல்வது, தெளிவாகச் சொல்லுவது, இறை யாவும் அடங்கலாகச் சொல்வது என்று பல படைப்பாளிகளின் எழுத்துக்களில் நாம் படித்தே வந்திருக்கிறோம். சொல்ல வரும் விடயத்தை எப்படி - தூக்கலாகவும் இல்லாமல், குழப்பமாகவும் இல்லாமல் - சிறப்பாகச் சொல்கிறோம் என்ற வித்தை தெளிந்து விட்டால் நம்மை வாசிக்கும் வாசகர் எல்லை விரிவடையும் என்பது எனது நம்பிக்கை.
நான் ஓர் ஒலிபரப்பாளனாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். செய்தி வாசிக்கும் போது முதலில் உனக்கு அது புரிந்திருக்க வேண்டும் என்று எமது மூத்த ஒலிபரப்பாளர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
இது போக, பண்டிததத் தனமாகவும் நவீன முறையில் எழுதுகிறேனாக்கும் என்று சற்றுத் தூக்கலான சொற்களைக் கொண்டு கோமாளித்தனம் பண்ணுவதும் என்னிடம் இல்லை. அதை முற்றாக நான் மறுதலிக்கிறேன். அதற்காக மற்றவர்களை நான் விமர்சிப்பதாகக் கருதக்கூடாது. சாதாரண சொற்களைக் கொண்டு எல்லோரையும் கவரும் விதத்தில் எழுத முடியும் என்பதே எனது நிலைப்பாடு.
** அரபு தேசத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் சார்ந்த எழுத்துக்களைக் கொடுத்துள்ளார்கள். இலங்கை இனப் படுகொலை குறித்து ஒரு படைப்பாளியாய் என்ன நினைக்கிறீர்கள்?
மனித உரிமை மீறல் என்பது படைப்பாளியாக மட்டுமல்ல, ஒரு சாதாரணமான, மனச்சாட்சியுள்ள மனிதனுக்கும் மனித உரிமை மீறல்தான். இந்த மனித உரிமை மீறல்கள் பன்முகம் கொண்டவை. இது பற்றி மேலும் பேச முனைவது அர்த்தமற்ற விவாதங்களில் கொண்டு சேர்க்கும். இன்று வரை இந்த மீறல்கள் பற்றி எமது படைப்பாளிகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
** இலங்கைத் தமிழ் படைப்பாளிகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லுங்கள்?
இலங்கையில் சராசரியாக வாரத்துக்கு ஒரு நூல் வெளியாகிக் கொண்டுதானிருக்கிறது. அன்று தொட்டு இன்று வரை இங்கும் ஒரு மகத்தான படைப்பாளிகள் வரிசை உண்டு. அகதிகளாகச் சென்ற புதிய தலைமுறையில் பலர் மிகச் சிறப்பான படைப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மேற்கு நாடுகளுக்குக் கொண்டு சென்ற பெருமை இவர்களுக்கு உண்டு.
'தமிழகத்தை விட வீச்சு நிறைந்த கவிதைகள் இலங்கையிலிருந்தே வெளிவருகின்றன' என்று ஒரு போது கவிஞர் இன்குலாப் சொல்லியிருக்கிறார்.
** போருக்கு முன்பும் இப்போதும் இலங்கை மக்களின் நிலை என்னவாக உள்ளது?
இப்போது போரற்ற தேசம். குண்டு வெடிப்பு, தெருவோரச் சோதனைச் சாவடிகள் போன்றவை நீங்கி ஓர் ஆசுவாசம் இருக்கிறது என்பது கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் ஆங்காங்கே முளைக்கும் புத்தர் சிலைகளும் பாதுகாப்பின் பெயரால் கைப்பற்றப்பட்டிருக்கும் பெருநிலப் பரப்புகளும் சிறுபான்மையினருக்கு பெரும் உறுத்தலைத் தருபவை. இவை தாண்டி முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் அவ்வப்போது இடம் பெற்றே வருகின்றன. பெரும்பான்மை அரசியல்வாதிகளின் எதிர்கால அதிகாரக் கனவுள்தாம் இவற்றில் அரைவாசிச் சிக்கல்களுக்குக் காரணம் என்றும் உணரக்கூடியதாக இருக்கிறது.
திருமதி சந்திரிக்கா அம்மையார் காலத்தில் யுத்தத்திற்காகத் தினமும் செலவிடப்படும் கோடிக் கணக்குத் தொகை தொலைக்காட்சியில் காட்டப்பட்டதுண்டு. யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பொருளாதார நிலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விட வில்லை. மஹிந்த அரசின் தான்தோன்றித் தனமான செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் ஓரளவு இலங்கை வாழ் மக்களின் வாழ்வில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நீண்ட காலங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் பிரமர் லீகுவான்யூ இலங்கை வந்த போது 'விரைவில் சிங்கப்பூரை நான் இலங்கை போல் மாற்றுவேன்!' என்று சொன்ன வார்த்தைகளை நினைத்து வருந்தி வாழவேண்டியிருக்கிறது.
** பவுத்தம் என்பது அன்பை போதிக்கும் மார்க்கம். பவுத்தர்கள் அதிகம் வாழும் இலங்கை போரின் கொடூரம் கொண்ட பூமியாக ஏன் மாறியது.?
எந்த மார்க்கம்தான் அன்பைப் போதிக்கவில்லை? மனிதனின் பேராசையின் விளைவுகள்தாம் யுத்தமும் சிக்கல்களும்.
முடி துறந்துதான் சித்தார்த்தன் காடு சென்றார், தவமியற்றினார். போதனை செய்யப் புறப்பட்டார். ஆனால் இப்போது இலங்கை பௌத்த சாதுக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து ஆட்சியாளர்களாக மாறும் முரண் நடந்து கொண்டிருக்கிறது.
பெரும்பான்மையின் பெயராலும் அவர்களது மதத்தின் பெயராலும் அத்துமீறுவது காலாகாலமா பல தேசங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மதகுருக்களும் இதற்கெனப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மதகுருக்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தி அன்பையும் காருண்யத்தையும் வளர்ப்பதற்குப் பதிலாக வன்மத்தை வளர்த்தால் அமைதி எப்படி நிலவப்போகிறது?
** சமீபத்தில் நடந்த உலக இஸ்லாமிய மாநாடு பற்றிச் சொல்லுங்கள்.
1966ல் கிழக்கிலங்கையில் மருதமுனை என்ற ஊரில் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வு விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகம் உலகளாவிய ரீதியில் மாநாடுகளைத் தமிழகத்தில் நடத்தி வந்தது. அதன் நான்காவது மாநாடு அல்லாமா எம்.எம். உவைஸ் போன்றவர்களது முன்னெடுப்புடன் 1979ல் இலங்கையில் நடைபெற்றது. இதே வேளை தமிழகத்தில் இயங்கும் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகமும் சிற்றிலக்கிய மாநாடுகளை முஸ்லிம்கள் செறிந்து வாழும் தமிழகக் கிராமங்களில் நடத்தி வர ஆரம்பித்தது.
1999ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டோரில் சிலர் ஒன்றிணைந்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தோம். காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் இவ்வமைப்பின் தலைவராகவும் நான் செயலாளராகவும் இயங்கி வருகிறோம். இவ்வமைப்பைக் கொண்டு 2002ம் ஆண்டு இலங்கையில் ஓர் உலக மாநாட்டை நடத்தினோம். இம்மாநாட்டுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அரச நிதியைப் பெற்றுத் தந்ததோடு அவரே தலைமையும் வகித்தார்.
1966ல் தொடக்கம் பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களின் ஆய்வுத் தொடக்கமானது 2016ல் ஐம்பது வருடங்களை நிறைவு செய்வதால் இதனை முதலில் ஒரு பொன்விழாவாக நடத்தலாம் என்று ஆரம்பித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோரின் உறுதுணையுடன் அவர்களது தலைமையிலேயே உலக மாநாடாக மாற்றிச் சிறப்பாக நடத்தி முடித்தோம்.
தமிழகத்திலிருந்து சுமார் 40 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
** நீங்கள் சமீபத்தில் சென்னை வந்திருந்த போது தமிழகத்தின் வரலாறு காணாத ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடந்தது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உண்மையில் வாழ்வில் நான் கண்ட ஒரு பெரிய, நிதானமான, பண்பாடும் ஒழுக்கமும் மிகுந்த ஒரு போராட்டம் இது. எதற்காகப் போராடினார்கள் என்பதற்கு அப்பால் எப்படிப் போராடினார்கள் என்பதைத்தான் நான் முழுவதுமாக அவதானித்தேன். அந்த நிகழ்வில் எழுத்தாளர் ஆதரவை வழங்குவதாக என்னையும் கவிஞர் ஜலாலுத்தீன் அழைத்துச் சென்றிருந்தார். உடல் நலக் குறைவாக இருந்த போதும் அந்நிகழ்வில் ஒரு மணி நேரம் செலவளித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
இளைய சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்ற நமது பொதுப் புத்தியில் வலிக்க அறைந்திருக்கிறார்கள். சமூகப் பற்று, கலாசாரத்தைப் பேண வேண்டும் என்கிற உணர்வு, எல்லாமே கேலியும் கிண்டலும் அல்ல என்கிற தெளிவு, தமது போராட்டத்தை அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்று தாம் கருதியோரைக் கண்டு கொள்ளாத அல்லது தள்ளி வைத்த நுணுக்கம் இவையெல்லாம் அவதானிக்கக் கிடைத்தவை. இளைஞர் சமூகத்தின் மீது நம்பிக்கையையும் மனத்தில் திருப்தியையும் ஏற்படுத்தியவை. அவர்களை வாழ்த்துகிறேன்.
** நீங்கள் வெளியிட்ட 'யாத்ரா' கவிதைச் சஞ்சிகை பற்றி...
2000ம் ஆண்டில் துவங்கப்பட்டது 'யாத்ரா' கவிதைச் சஞ்சிகை. தமிழ்க் கவிதை, சிங்கள மொழியுட்பட வேற்று மொழிகளில் வெளிவந்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு, கவிஞர்கள் பற்றிய குறிப்பு, நேர்காணல், கவிதைகள் பற்றிய கட்டுரைகள் போன்றவற்றை உள்ளடக்கி 19 இதழ்கள் வெளிவந்தன். ஒன்றிலிருந்து 8 வரையான 'யாத்ரா' இதழ்களை 2002ம் ஆண்டு புதுக் கல்லூரியில் கவிஞர் இன்குலாம் விமர்சனம் செய்து உரை நிகழ்த்தியுமிருந்தார்.
சொந்தப் பணத்தில் அதை வெளியிட்டு வந்தமையால் ஒரு கால வரம்புக்குள் இதழ்கள் வெளிவந்திருக்கவில்லை. தவிர, பிரசுரிப்பதற்கு வரும் கவிதைகள் முதலில் என்னைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு பெருமளவு பொய்த்துப் போனது. எனவே அதை நிறுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
நன்றி - தீராநதி
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment