Sunday, November 18, 2018

'தம்பியார்' - ஓங்கி எழும் எதிர்க் குரல்!


'தம்பியார்'  - ஓங்கி எழும் எதிர்க் குரல்!

எங்கே, எப்போது சந்தித்தேன் என்பது ஞாபமில்லாத போதும் முதல் சந்திப்பிலேயே மனதில் ஒட்டிக் கொண்டவர் டாக்டர் அஸாத். சந்தித்த அன்றே கவிதைக்காரனாகவே அவர் அறிமுகம் செய்யப்பட்டது ஞாபகம் இருக்கிறது.

அவரது முதலாவது கவிதைத் தொகுதி வெளியீடு, பெரும்பாலும் பின்னால் வந்த எனது எல்லா நூல்களினதும் வெளியீட்டு நிகழ்வுகள், ஏனைய நூல் வெளியீட்டு நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் என்று அவ்வப்போது அவரைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களூடே அவருடனான நட்பும் அழகிய கவிதைகளைப் படிப்பது போன்ற அனுபவங்களையே எனக்கு வழங்கியிருக்கின்றன.

ஆயிரமாயிரமாய்ச் சமூக வலைத்தளங்களில் கொட்டப்படும் தமிழ்க் கவிதைகளுள் வெகு சிலவே நமது கவனத்தைக் கவருகின்றன. அவ்வாறு கொட்டப்படும் கவிதைகளுள் - எனது கண்ணில் படும்போது நான் தவறாமல் வாசித்து விடும் கவிதைக்காரர்களுள் டாக்டர் அஸாத் அவர்களும் ஒருவர். அவருடனான அறிமுகமே அவரது கவிதைகளை நோக்கி என்னை இழுத்துச் சென்றாலும் அவருடைய கவிதைகளைத் தவறவிடாமல் வாசிக்கத் தூண்டுவது அவர் கவிதைகளில் அவர் பேசும் விடயதானங்கள்.

இலக்கியம் மக்களுக்கானது என்ற முடிவு எப்போதோ எடுக்கப்பட்டு விட்டது. எனவே இலக்கியப் படைப்புகள் யாவும் மக்களை, மக்களது பிரச்சனைகளை, அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களை பொது வெளியில் கொண்டு சேர்க்கும் கைங்கரியத்தைச் செய்யத் தொடங்கின. புதுக்கவிதை தோற்றம் பெற்ற பிறகு அவை பாரிய அளவில் மக்கள் பிரச்சனைகளையும் மனிதாபிமானத்தையும் தூக்கிப் பிடித்தன.

நவீன கவிதைகள் என்ற பெயரோடு பின்னால் வந்த ஒரு திருப்பம் இந்த நோக்கிலிருந்து பிறழ்ந்து எல்லாவற்றையும் பேசலாம் என்று நடைபோடத் தொடங்கின. சும்மா தேமே என்று அமர்ந்திருக்கும் போது ஓர் பழுத்த இலை விழுதல், ஆகாயத்தில் மேகம் நகர்தல், மழைபெய்தல், குளிரடித்தல் என்று உண்டாகும் உணர்வுகளைப் பெரிது படுத்தி - அவை பேச ஆரம்பித்தன. நவீன கவிதைகள் என்றால் சொற்களைப் புணர்த்தி எழுதுவது என்றொரு மயக்கமும் வந்து சேர்ந்தது.

அண்மையில் வெளியான எனது தேவதைகள் போகும் தெரு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறு குறிப்பில் தற்போதைய கவிதைப் போக்குக் குறித்து நாவலாசிரியரும் சிறந்த சிறுகதையாளரும் கவிஞருமான ஆர். எம். நௌஷாத் 'எனதான இரவு, உனதான மூக்கு என்றெல்லாம் கவிதைகள் படித்து நமதான முடிமயிர் கொட்டுண்ட இந்த வேளையில்...!' என்று சொல்கிறார். இதற்குமேல் அவை பற்றிப் பேசவேண்டியதில்லை.

இவை கவிதைகள் இல்;லை என்றோ குற்றம் என்றோ இங்கு நான் குறிக்க வரவில்லை. ஓர் உன்னதமான கவிஞன் இலக்கியம் மக்களுக்கானது என்ற நோக்கில் செயற்படும்போது அவனது கவிதைகளும் மக்களுக்கானவையாகவும் மகத்துவம் மிக்கவையாகவும் மாறிவிடுகின்றன. அந்த வகையில் புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குள் மக்களுக்கான கவிஞனாக அஸாத் ஹனிபா திகழ்கிறார் என்பதை அவரது கவிதைகள் மூலம் நாம் கண்டு வருகிறோம்.

இன்று வெளியிடப்படும் 'தம்பியார்' என்ற இந்தக் கவிதைத் தொகுதி ஆஸாத் ஹனிபாவின் 3ஆவது கவிதைத் தொகுதி. இதற்கு முன்னர் 'ஆத்மாவின் புண்', 'பிரேத பரிசோதனைகள்' என்ற தலைப்புகளில் இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

'தம்பியார்' கவிதைத் தொகுதியை நான் முழுமையாகப் படித்து விட்டேன் என்பதை அஸாத் ஹனிபாவுக்கும் சபைக்கும் மனச்சுத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். குறித்தளவு பக்கங்களைப் படித்து விட்டு நூல் நயம் செய்யாமல் முழுவதையும் படித்து விட்டு நூல் நயம் செய்வது அபூர்வமாக நடைபெற்றுவரும் சூழலில் நான் முழுவதையும் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன் என்பதையிட்டு அஸாத் ஹனிபா மகிழ்ச்சியடைய வேண்டும்.

197 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 180 பக்கங்களில் 77 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. நான் இதுவரை நூல்நயமோ, விமர்சனமோ, திறனாய்வோ செய்த நூல்களில் வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்ட முதலாவது நூல் இதுதான்.

இக்கவிதைகளை எனது வசதிக்கேற்ப முஸ்லிம் சமூகம் பற்றிய கவிதைகள் - தமிழ் சமூகம் பற்றிய கவிதைகள் - முஸ்லிம், தமிழ் சமூகம் பற்றிய கவிதைகள், பொதுவான கவிதைகள் என நான்கு வகைகளுக்குள் அடக்கியிருக்கிறேன். பெரும்பான்மை சமூகம் பற்றி ஏதுமில்லையா என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழுவது நியாயம். இவற்றுள் பெரும்பாலான கவிதைகள் அந்தச் சமூகத்தின் முன்னால் நின்றுதான் சுட்டுவிரல் நீட்டியபடி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையைச் சொன்னால் இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளையும் அவை பேசும் விடயங்களையும் குறித்துப் பேச எனக்குக் குறைந்தது ஒரு மணித்தியாலம் தேவைப்படும். அதற்கான வாய்ப்பு ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சாத்தியமற்றது என்பதால் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

இவரது கவிதைகள் மானுடம் என்ற அடித்தளத்தில் நின்றபடி கேள்விகளை எழுப்புகின்றன. அவை வில்பத்துக் குறித்துப் பேசும் அதே வேளை மியன்மார் அகதிகள் குறித்துப் பேசுகின்றன. அம்பாறைக் கலவரம் குறித்துப் பேசும் அதே வேளை சிரியா குறித்துப் பேசுகின்றன. புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர் நடந்த கொண்டாட்டம் பற்றிப் பேசும் அதே வேளை காஷ்மீர் கோவிலுக்குள் சிதைக்கப்பட்ட சிறுமி பற்றிப் பேசுகின்றன. தம்புள்ளைப் பள்ளி பற்றிப் பேசும் அதே வேளை ஜெரூசலம் பற்றிப் பேசுகின்றன. காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் பற்றிப் பேசுகின்றன, முள்ளிவாய்க்கால் பற்றிப் பேசுகின்றன. துரத்தப்பட்ட முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றிப் பேசுகின்றன. தேசிய அரசியல், சிறுபான்மை அரசியல் பற்றிப் பேசுகின்றன. ஹலால் பிரச்சனை பற்றியும் ஹபாயா பிரச்சனை பற்றியும் பேசுகின்றன.

77 கவிதைகளிலும் குறைந்தது 66 விடயங்கள் பற்றிப் பேசுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு செய்தி இருக்கிறது என்பதுதான் இங்கே ஈண்டு குறிப்பிடத் தக்கது. வெறும் அழகியலை வைத்துக் காலமோட்டும் கவிஞராக அல்லாமல் சமூக, தேசிய, சர்வதேசிய மனிதாபிமானப் பார்வையுடன் அவர் எழுந்து நிற்கிறார்.

அஸாத் ஹனிபாவுடன் பேசுபவர்கள், பழகுபவர்கள் அவரின் அப்பாவி முகத்தையும் குழந்தைச் சிரிப்பையும் கண்ணியமான பேச்சுப் போக்கையும் பார்த்து அவரைப் பற்றி அவர் ஒரு மென்மையான மனிதர்  என்ற ஒரு முடிவுக்கு வருவார்கள். ஆனால் அவரது கவிதைகள் அந்த முடிவுக்குரியவை அல்ல என்பதை இந்த நூலைப் படித்ததும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

ஏறக்குறைய சொல்வதானால் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தீக்குச்சியின் உரசல் இருப்பதை நான் உணர்கிறேன். சிறுமை கண்டு பொங்கும் கடும் கோபத்தைக் கவிதைகளினூடு அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். சிறுபான்மைகளுக்கெதிராக நடந்த கொடுமைகளை மிகத் துல்லியமாக வரலாற்றுப் பதிவாக்கி வைத்திருக்கிறார். எல்லாக் கொடுமைகளுக்கும் எதிராக கவிதை கொண்டு ஒரு கூரிய வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார். இதைவிடப் பொருத்தமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு கவிதையையும் ஒரு சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வெட்டலகாக (பிளேட்) ஆகப் பயன்படுத்துகிறார். இதனால் என்ன நடக்கிறது என்றால் அவர் கவிதைகளைச் சொல்லிச் செல்லும் அவரது மொழி மூலம் அவர் என்ன மனோ நிலையில் நின்று பேசுகிறாரோ அதே மனோ நிலைக்கு நம்மையும் ஆளாக்கி விடுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் அவர் தட்டி விடும் தீக்குச்சி நமது மனங்களுக்குள் ஒரு காட்டுத் தீயாய்ப் பரவ ஆரம்பிக்கிறது.

புன்மையை எதிர்த்து நிற்பதும் அநியாயத்துக்கும் அத்து மீறல்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புவதுதான் நேர்மையான ஒரு கவிஞனின் உன்னத பண்பு. அந்தப் பண்பை இந்நூலில் அடங்கியிருக்கும் பெரும்பாலான கவிதைகளில் நீங்கள் கண்டடைய முடியும்.

மானுட மேம்பாட்டுக்கான போராளியாக, அநீதிக்கெதிராக எழுந்து நிற்கும் உள்ளத்தவராக, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தக்காரனாகத் தனது மூன்றாவது கவிதைத் தொகுதியிலேயே பிரகாசிக்க ஆரம்பித்து விட்டார் அஸாத். இந்தக் கொடுப்பினை முப்பது கவிதைத் தொகுதிகளை வெளியிட்டாலும் சிலருக்குச் சித்திக்காமலேயே போய்விடுகிறது.

குறைந்த வார்த்தைகளில் பேசுவது கவிதை. ஒரு நல்ல கவிதை வாசகனுக்குள் இறங்கும் போது அவனின் சிந்தையில், உணர்வில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் அவனைது ஆவியையும் உடலையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. சிறந்த கவிதையொன்றின் சில வரிகள் ஒரு நூலில் எழுதப்பட வேண்டிய அகக் காட்சியை உண்டு பண்ணி விடுகிறன. சாப்பேறுகள் என்றொரு கவிதையின் இறுதி நான்கு வரிகள் இப்படி முடிகின்றன.

'இங்கு எல்லாமே
பிழையான இடத்தில்தான் உள்ளன
மனிதர்கள் மட்டுமல்ல -
கற்சிலைகளும்தான்!'

பெரும்பான்மையின் அடாத்தான செயற்பாடுகள் குறித்துப் பேசும் இந்தக் கவிதையில் ஒரு நீண்ட காட்சிப் படிமத்தை உருவாக்கி விட்டுச் செல்கிறார். இந்தத் தொகுதிக்குள் இருக்கும் அநேகமான கவிதைகளின் சாராம்சமாகவே நான் இந்த வரிகளைப் பார்க்கிறேன்.

இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த போது பெரும்பான்மையினருக்கு பீடித்த - இன்னும் குணப்படுத்த முடியாத நோய்களில் ஒன்று இந்தத் தேசம், இந்த நிலம் முழுவதும் தங்களுக்கானதே என்று நிறுவ முயன்றது. இதற்காகவே வரலாறு புரட்டிப் புரட்டி எழுதப்பட்டு, அது பாடப் புத்தகங்கள் வரை சென்று வரலாறு என்ற பாடம் கட்டாய பாடமாக ஆக்கப்பட்டது. அது மாணாக்கருக்கு கணித, விஞ்ஞான பாடங்களை விடப் பெரும் சவாலாக மாறிற்று. ஒவ்வொரு அரசனும் பிறந்தது முதற்கொண்டு அவனது அனைத்து செயற்பாடுகளும் வருடங்கள் ரீதியாக எழுதப்பட்டன. இந்த விபரங்களை ஒவ்வொரு மாணவனும் மனனமிடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. வரலாற்றுப் பாட நூல்களை நீங்கள் கையில் எடுத்துப் பார்த்தீர்களானால் அதன் விபரீதத்தை நீங்கள் உணரலாம்.

இந்த வழிமுறையை இவர்கள் இஸ்ரேலிலிருந்து கற்றிருக்க வேண்டும். அங்குதான் அறபிகளின் நிலத்தைப் பிடித்துக் கொண்ட யூதர்கள் தமது மாணாக்கரின் பாட நூல்களில் அது தங்களது பூமி என்ற வரலாற்றை எழுத ஆரம்பித்தனர்.

இது இப்படியே போய்க் கொண்டிருக்க 2009 நடுப்பகுதியிலிருந்து வேறொரு முன்னெடுப்பு ஆரம்பித்தது. எங்கெல்லாம் இராணுவ முகாம்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஓர் அரச மரத்தை நடுவதும் அதன் அருகே கௌதமரின் சிலையொன்றை வைத்து விடுவதும். இது விரிவடைந்து பொதுப் பணி இடங்களில், அரச நிறுவனங்களில், தரிசு நிலங்களிலெல்லாம் இதே செயற்பாட்டின் நீட்சி சென்று கொண்டேயிருக்கிறது.

இது குறித்துப் பேசும் ஒரு கவிதையை இங்கு தருகிறேன். அந்தச் செயற்பாட்டுக்காக மட்டுமன்றி இக்கவிதையை அவர் சொல்லிச் செல்கின்ற அழகுக்காகவும் தெரிவு செய்திருக்கிறேன்.

கௌதம புத்தரை முதன்முதலில்
பாடப் புத்தகத்தில் நான் பார்த்தேன்
மிகவும் சாந்தமாக இருந்தார்
எந்த சந்தேகமும் அவரில் இருக்கவில்லை

அவரின் சீடர்களோ
புத்தகத்தை மட்டுமல்ல -
வரலாற்றையும் கிழித்துக் கிழித்து
மீள எழுதிக் கொண்டிருக்கிறார்கள்

புத்த பெருமான்
வீதியின் இருமருங்கிலும்
புழுதிபடியும் சிலையாகவும்
முச்சக்கர வண்டிகளின்
தரிப்பிடச் சந்திகளில்
காட்சிப் பொருளாகவும் இருந்தார்

அவருக்காக
எமது பூர்வீக நிலமெங்கும்
படைமுகாம்களை அமைத்தனர்
பின்னர் அவற்றை
விகாரைகளாக மாற்றிக் கொண்டனர்

இராணுவச் சிப்பாய்கள்
அன்று காவல்நின்ற
அரச அலுவலகங்களில்
இன்று பாதுகாப்புக்காக
சிலைகள்தாம் உள்ளன

வைப்பதற்கும் இருப்பதற்கும் இடமின்றி
இறுதியில் அவரை
வைத்தியசாலையில் அனுமதித்தனர்

ஒவ்வொரு விடுதிகளுக்குள்ளும்
வெளியிலும்
புத்தர் பகவான்
நோயாளிகளுக்காக
இரவு பகலாகத் தியானத்தில் உள்ளார்

பிரசவ கட்டிலிலிருந்து
பிரேத அறைவரை
அவர்தான் மருத்துவம் செய்கிறார்.

இந்தக் கவிதையை எழுந்தமானமாகப் பார்த்து விட்டு கௌதம சித்தார்த்தரை கவிஞர் அவமதிக்கிறார் என்று கருதினால் அது முழு முட்டாள்தனம். கௌதமர் அவமானப்படுத்தப்படுவதற்கு எதிரான குரல்தான் இந்தக் கவிதை. புத்தரை முன்னிறுத்தி அவர் அவர்கள் ஏதோ நமக்குச் சொல்ல வருகின்றனர். அதைத்தான் அஸாத்தும் சொல்ல வருகிறார்.

இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள் அநேகமானவும் 95 வீதமான கவிதைகளும் எதிர்க் குரலாகவே ஒலிக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

இதே விதமாக முஸ்லிம்கள் தமது மார்க்கத்தைத் தவறாகப் புரிந்து நடக்கின்ற, அல்லது பேச்சில் மார்க்கத்தை சரியாகப் பேசிக் கொண்டு 'தொழுவது அல்லாஹ்வுக்காக.. வைக்கோல் திருடுவது மாட்டுக்காக' என்ற பாணியில் நடந்து கொள்வது பற்றி உள்ளார்ந்த கிண்டலும் கோபமுமாய் இந்தத் தொகுதிக்குள் சில கவிதைகள் இருக்கின்றன.

இந்த வகையில் ஏமாளி இந்த நோன்பாளி என்ற தலைப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று இருக்கிறது. ஒருவரைப் பற்றிப் புறம் பேசுவது இறந்த மனிதனின் தசையைப் புசிப்பதற்கு ஒப்பானது என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள். இங்கு இக்கவிதையில் அதைச் சொல்லும் விதத்தைப் பாருங்கள்..

கண்ணியமிக்க புனித நாட்களில்
நானும் பகலில் உண்ணவில்லை
இறந்து போன இனிய நண்பனின்
மாமிசத்தைத் தவிர
சத்தியமாய் எதையுமே புசிக்கவில்லை

எச்சில் துளியுமின்றி
தாகத்தைத் தாங்கிக் கொண்டேன்
பச்சைப் பள்ளிக்குள்
பிறர் நடத்தைகளைக் கழுவி
அதை மட்டுமே
ஐவேளை பருகிக் கொண்டேன் இவ்வாறு தொடரும் இந்தக் கவிதை சப்பென முகத்தில் அறைந்து விட்டுப் போகிறது.

மார்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் மூடத்தனங்களில் மூழ்கிக் கிடப்போரின் நடவடிக்கைகளையும் ஆஸாத் தொட்டுக் காட்டுகிறார். அசேதன மார்க்கம் என்ற கவிதையில் இப்படிச் சொல்கிறார்...

பிரசவத்துக்கு மருத்துவ மனை
இனித் தேவையில்லையாம்
முதலிரவுக் கட்டிலில்
வீட்டில் பிரசவம் பார்ப்பது
பிழையா என்கிறாள்
உடலில் ஒட்டிய நவீன அபாயாக் காரி..

உடலில் ஒட்டிய நவீன அபாயாக் காரி என்ற வார்த்தையில் ஒலிக்கும் குசும்பு அவதானிக்கத் தக்கது. கவிதையின் சாரம் அதற்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்தான் கவிதையின் குரலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் நஞ்சுக் கொடி என்ற கவிதை. அந்தக் கவிதையில் காட்சிச் சித்தரிப்பு மூலம் முஸ்லிம் சமூகத்தின் மூடத்தனத்தைச் சொல்லிச் செல்லும் அழகு பிரமாதமானது. கவிதை நூலின் 49ம் பக்கத்தில் உள்ள அந்தக் கவிதையை நீங்கள் கட்டாயம் படித்து விட வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்து ரசித்த, என்னை ஆவேசத்துக்குள்ளாக்கிய ஒரு கவிதைத் தொகுதி இது. ஏறக்குறைய எனது சிந்தனைப் போக்கையொத்த சிந்தனைப் போக்கு டாக்டர் அஸாத்திடம் இருப்பது அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசமாக நான் உணர்வது என்னவெனில் எனது எழுத்துக்களில் அதிகம் கிண்டலைப் பயன்படுத்துகிறேன். அஸாத் அதை வேறொரு விதத்தில் கையாள்கிறார். அநேகமாகவும் நோகாமலே ஊசி போட்டு விடுகிறார். போட்ட பிறகுதான் வலிக்க ஆரம்பிக்கிறது.

இலக்கியத்தில் வைத்தியத் துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காப்பியக்கோ ஜின்னாஹ், தி. ஞானசேகரன், எம்.கே. முருகானந்தன், தாஸிம் அகமது, ச.முருகானந்தன் என்று நீளும் பட்டியலில் அஸாத் எம். ஹனிபாவும் இணைந்து கொள்கிறார். வைத்தியர்களின் இலக்கியப் பங்களிப்புக் குறித்து ஒரு தனி நூல் எழுதப்படலாம். இன்னும் புதுமைப்பித்தன் கதைகளில் சமூகப் பார்வை என்று தலைப்புக் கொடுத்துக் கொண்டிராமல் இப்படியொரு தலைப்பில் பல்கலைக்கழக மாணாக்கருக்கு ஓர் ஆய்வைச் செய்வதற்கும் பேராசிரியர்கள் வழிகாட்டலாம் - சாத்தியமும் மனமும் இருந்தால்!

அஸாத் ஹனிபாவின் கவிதைகளில் குறைகளே இல்லையா என்று ஒரு கேள்வி வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் கவிதை வெளிப்பாட்டுக்கென்று ஒரு மொழி உண்டு. கருத்தும் இல்லாமல், நோக்கமும் இல்லாமல், மொழியழகும் இல்லாமல், சொல்லிச் செல்லும் வழியும் அறியாமல் அஸாத் ஹனிபாவின் கவிதைகள் சிக்கல்படவில்லை. ஆனால் ஒரு சில கவிதைகளில் மேலதிகச் சொற்களும் வாக்கியங்களும் இருக்கவே செய்கின்றன. கவிதை குறித்து ஓர் ஆழ்ந்த தெளிவு அவரிடம் உண்டு. எதிர்காலப் படைப்புகளில் அவற்றை அவராகவே தவிர்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

அசேதன மார்க்கம் என்ற தலைப்பிலான ஒரு சில முஸ்லிம்களின் மூடத்தனத்தைப் பேசும் கவிதையை அவர் இப்படி முடித்திருப்பார். 'என்னையும் அவர்கள் - உற்றுப் பார்க்கிறார்கள் - அவர்களின் தீர்ப்பை நானறிவேன்.' மூட நம்பிக்கை அல்லது பகுத்தறிவுக்குப் பொருந்தாத விடயங்கள் குறித்து எதிர்க் கருத்து இருந்தால் உடனே 'மார்க்கத்துக்கு முரணானவன்' என்ற தீர்ப்பை எழுதுவார்கள் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.

அது உண்மைதான். கவிதைகளைப் படிப்பார்கள். அப்புறம் கவிதை நூலின் தலைப்பைப் பார்ப்பார்கள். ;தம்பியார்' என்றிருக்கும் தலைப்பு அவர்களுக்கு 'நம்பியார்' என்று தெரியும்!

(18.11.2018 அன்று கொழும்பு - தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட நயவுரை)




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Azaath M Haniffa said...

மிகச் சிறந்த எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் நயவுரை மூலம் அவரது எழுத்தின் மீதான தரத்தை மேலும் விளங்கிக் கொள்ள முடியும். நல்வாழ்த்துகள்!