Monday, December 24, 2018

கையெழுத்து!

கைகளால் எழுதுவது குறைந்து விட்டது.

அந்நாட்களில் தமிழ் பாடம் கற்பதில் உறுப்பமைய எழுதுவது ஓர் அங்கமாக இருந்தது. அதற்கென பெரிய ரூல் அப்பிடியாசக் கொப்பிகள் இருந்தன. எழுத்துச் சீராக, அழகாக வரும் வரையில் ஆசிரியர்கள் விடமாட்டார்கள். மேல் வகுப்புக்கு வரும்போது அழகான, முத்து முத்தான எழுத்துக்கள் மாணவிகளுக்குக் கைவந்து விடும். காரணம், அவர்களுக்குப் பொறுமை அதிகம்.

கணினிக்கு முன்னர் நான் கையெழுத்தால் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எழுத்தாளர் சுஜாதா டைப் ரைட்டரிலேயே தனது கதைகளை உருவாக்குகிறார் என அறிந்து ஆச்சரியப்பட்டதுண்டு. எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத்தாளர் மானா மக்கீன் டைப் ரைட்டரில் உட்கார்ந்திருந்து ஒரு நாடகத்தை உருவாக்கி விடுவார் என்று முஸ்லிம் சேவையின் நாடகத் தயாரிப்பாளராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்த எம். அஷ்ரப் கான் அவர்கள் சொன்ன போது உண்டான ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

கடிதம் எழுதி அனுப்பும் வழக்கம் அருகிப்போய்விட்டது. அதனிடத்தை மின்னஞ்சல்களும், கைப்பேசியும், ஏன் சமூக ஊடகங்களும் கூடப் பங்கு போட்டுக் கொண்டன. கடிதம் தகவலாக மட்டுமன்றி நிகழ்வுகளைக் கோத்து, எண்ணங்களைச் சிந்தாமல், சிதறாமல் எழுதுவதற்கான பெரும் பயிற்சிக் களமாகவும் இருந்தது. கடிதத்தில் வெறும் எழுத்தை மட்டுமல்ல, உணர்வுகளையும் சேர்த்தே பதிந்திருக்கிறோம்.

அந்நாளைய இலக்கியகாரன் மிக உணர்வுபூர்வமாக தன்து படைப்பை எழுத்து மூலம் காகிதத்தில் உருவாக்கினான். அந்த எழுத்துக்களில் ஒரு நேர்த்தியும் அழகும் இருந்தது.

கணினி எழுத்தை இலகுபடுத்தித்தான் இருக்கிறது. யாராவது ஒருவர் கையால் எழுதிய பிரதியைத் தபாலிலோ, வட்ஸ்ஏபட, மெஸஞ்சர்களில் படமாகவோ அனுப்பும்போது கொஞ்சம் கோபம் வரவும் செய்கிறது. முதல் பிரதியைக் கணினியில் வைத்துக் கொண்டே நாட்கணக்கில் திருத்திக் கொண்டேயிருக்கலாம். படைப்பாளி தாளில் வெட்டிக்  குத்தித் திருப்பித் திருப்பி எழுதும் நோவினை இன்று இல்லாதாகி விட்டது. ஆனால் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்திக் கையால் மாய்ந்து மாய்ந்து எழுதும் அந்த ஆத்மார்த்த உணர்வு அற்றுப் போய்விட்டதோ என்று அவ்வப்போது எனக்குச் சந்தேகம் எழுகிறது.

நான் எனது எழுத்து முதல் மொழிபெயர்ப்பு வரை கணினித் தட்டச்சிலேயே மேற்கொள்கிறேன். என்னைப்போல்தான் இன்று பல இலக்கியப் படைப்பாளிகளும் கணினியே கதி என்று கிடக்கிறார்கள். எழுதவும் பகிரவும் வசதியாகத்தான் இருக்கிறது.

தொடர்ச்சியான கணினித் தட்டச்சு கழுத்து முதல், கைச்சந்து வரையான வலியை உடலில் உருவாக்கி விடுகிறது. மாதக்கணக்கில் அவதியுற்று, பெருந் தொகை வைத்தியர் பார்த்து, மருந்தெடுத்து, பயிற்சி செய்து வருகையில்தான் மூத்த இலக்கியவாதியான ஜவாத் மரைக்காரின் குறிப்பு பார்க்கக் கிடைத்தது. தொடர்ச்சியான கணினிப் பாவனை, இந்த வருத்தங்களைக் கொண்டு வரும் என்பது. அதிலும் குறிப்பாகத் தொடர்ச்சியான தட்டெழுத்துப் பாவனை இந்த வருத்தத்தைத் தந்து விட்டுப் போகிறது.

இப்போது இந்த வருத்தங்களைக் குறைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டே கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டால் நான்காவது நாள் கணினிப் பக்கமே நெருங்கி விடாமல் இருக்க வேண்டியிருக்கிறது.

கைகளால் எழுதும்போது இப்படியான வருத்தங்கள் யாருக்கும் ஏற்பட்டதாக நான் கேள்விப்பட்டதேயில்லை!

24.12.2018
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்