அலையழிச்சாட்டியம்
- அல் அஸூமத் -
சுவர் மீது கடமை நோன்பு கிடக்கும் மணிக்கூடு, 'நான் ஏழாகி விட்டேன்' என்று என்னை அடித்தெழுப்பியது.
குடல் மூச்சுடன் எழுந்து கட்டில்மீது இருந்த போது, மனைவி தேனீருடன் அண்மி நின்றாள்.
'போய்க் கொலைக்காட்சியை - அட, தொலைக் காட்சியைப்போடு' என்று பணித்தது காட்சியவா.
ஓர் ஆங்கிலப் பாடலின் முன்னிசைக் களவில், சுடலைப் பேய்களின் அச்சுறுத்தும் குரலில், 'ஷேடம், ஷீடம், ஷாடம், ஷூடம், ஷேடம், ஷீடம், ஷாடம்,ஷூடம்' என்று வையத்தை உருட்டி 'விஷேடம் டீஈஈஈஈஈஈஈஈஈஈ வீஈஈஈஈஈஈஈ' என்ற இழுப்போடு தமிள் நிகழ்ச்சி தொடங்கியது.
ஓர் ஓலை விரிய, 'இன்ரு நமதே' எனப் பெண் குரல் அறையப் பொழுதறிவித்தல் நடந்து முடிய, அதே பெண் குரல் ஓர் அரிய அறிவுரையையும் திணித்தது.
இன்னொரு முறையும் 'ஷேடம், ஷீடம்' உருண்ட பிறகு, 'நியூஸ்ஸெய்தி' இடம் பெற்றது.
'வன்கம்! முத்லில் தலிப்பு செய்திகள்,' என்றவாறு வேறொரு பெண்மணி எழினியில் முறைக்க, 'சி.பி.ம.நரசிம்ம ராவி' எனப் பெயர் காட்டப்பட்டது.
தலிப்பு செய்திகள் வேறொரு பெண் குரலில் காட்சிகளுடன் தோன்றின:-
'தலிப்பு செய்திஹால். மென்னாரிலிருந்த கெல்முனைக்கு கெருவாடு கொண்டு செல்லும் எனுமதியை எரசாங்கம் தடி செய்திருப்பதாக ஸ்வாதாரமிச்சர் அரிவித்தார்.'
தெலுங்குப் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இடை வெட்டி, 'அக்கிய தேஸ்ய கச்சிப் பிரைநிய்கல் வவனியா பணயம் - பயணம்!' என்றார்.
'நிலையத்தை மாற்றித் தொலையடா!' என்று சீறியது எனது தமிழ்.
'கட்டுப்பெட்டிச் சனல்' பிடிபட்டது.
'.... மதர்லேண்டில் நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நெதர்லேண்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, நம்நாட்டு அரசாங்கக் கட்சியே பெரும் பான்மை பெற்றிருப்பதால், நெதர்லேண்டுக்கே வந்து ஆட்சி அமைக்கும் படி அந்நாட்டு அரசாங்கம் வேண்டியிருப்பதாக அறிய வருகிறது. உலகிலேயே அதிக மகிழ்ச்சி யுடன் சிறுபான்மையினர் வாழும் நாடு இலங்கைதான் என்று :பிரிட்டிஷமேரிக்க ஜனாதிபதி :புஷ்பிளேயர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்கிறார். இலங்கையில் மொழிப் பிரச்சினையோ இனப்பிரச்சினையோ பயங்கர வாதப் பிரச்சினையோ இல்லை என்றும், இங்கே உள்ள தெல்லாம் வட - கிழ - தென் பிரச்சினையே என்றும், இந்தத் திசைப் பிரச்சினையை ஊட்டி வளர்க்கும் 'நோவே'ப் பிரதி நிதிகளை உலகத்தை விட்டே துரத்த வேண்டும் என்றும், சகல உரிமைக் கட்சியும் கொள்கை விடுதலைக் கட்சியும் கூட்டறிக்கை விட்டிருக்கின்றன - மன்னிக்கவும், விட்டிருக்கிறது.
'என்ன தலையிடியா?' என்று நகைத்தது உள்ளுணர்வு. 'வானொலியிடம் புகலடைந்து பார்!' என்றும் அறிவுறுத்தியது.
காட்சிக் கருவியின் எரிச்சலால், 'விஷேடம் எஃபெம்' சிறிதே வன்மையோடு திறந்து கொண்டது. 'கெடுகுறிமணி'யின் கொலைக் குரல் வெடித்ததோடு, அடுத்த அறையில் உறங்கிக் கிடந்த எங்களின் குழந்தை மகள் அச்சத்தோடு வீறிட்டாள்!
'ஐயோ புள்ள.....' என்று நிலைகுலைந்து ஓடிய மனைவியோடு நானும் ஓடினேன்.
அழமுடியாது மூச்சடைக்க நடுங்கிக் கொண்டு கிடந்த செல்வத்தை வாரியெடுத்த அவள், ..தங்ங்ங்கம்... தங்ங்ங்கம்... இல்லடா... ராஜா... ம், ம், ம்ம்ம்...' என்றெல்லாம் தோளில் கிடத்தி முதுகில் தட்டி ஆறுதற் படுத்தினாள்.
'அந்த எழவு சனியன் ரேடியோவ நிப்பாட்டித் தொலைங்களேன்பா!' என்று கெடுகுறி மணியை வெல்லும் பேய்க்குரலில் மனைவி என்மீது பாய்ந்தாள்!
அந்தப் பாய்ச்சலை முன்னறியாதிருந்த நிலையில் நான் போய் அந்த இழவுமணியனைக் குறைத்த பிறகு இவளுடைய வசவு இன்னும் நன்றாக என்னை எரித்தது:-
'மனுசங்க மாதிரியாப் பேசுறானுங்க! வெசம் புடிச்சிப் போயில்லியா அலறிக்கிட்டுச் சாஹ்றானுங்க.... ...ச்சீ!... .....அம்ம்ம்மா... அம்ம்ம்மா, இல்லடா தங்கம்| ஒங்கள ஒண்ணுமே சொல்லல ராஜாத்தி!... புள்ள பயந்து கியந்து நோய்கீய் புடிச்சிக்கிட்டா இவிய்ங்களா வந்து பாப்பாய்ங்க.. அஞ்சே அஞ்சி பாட்ட வச்சிப் போட்டுக் கிட்டு நாள் பூரா அஞ்சடிச்சிக்கிட்டுக் கிடக்கிறானுங்க| என்னத்தையோ அடச்சிக்கிட்டு அவனுங்க கத்துறத வீடான வீட்டில போட வேணாம்னா இந்தாளு கேக்கவா செய்யிறது? காலங் காத்தாலேயே கருமாதி வீடுமாதிரி!...'
நாளேடுகளில் செய்திகளை மேலெழுந்தவாரியாகவாவது அறியலாம் என்றுதான் வானொலியை மூடாமல் இவளது வாயையும் மூடமுடியாமல் நிலத்தைப் போலிருந்தேன். கெடுகுறிக் கத்தல் நின்றதோடு வழவழத்தார் நாளேடுகளோடு வந்தார்:-
'வணகம்!... மீண்டும் ஒரு ... அதாவது இன்றைய இனிய நாளுக்காக... உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!... ' என்று தொடங்கினார் உமிழ்நீர் வழவழத்தார். 'அதாவது இப்போது பத்திரிகைச் செய்திகள் இடம்பெறுகிறது. இன்ரு - அதாவது முப்பத்தி ஐந்து அதாவது முப்பது -ஐந்து - இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டாம் ஆகிய இன்ரு வெளிவந்த... பத்திரிகைகளில் ... அதாவது நாளேடுகளின் முக்கிய அதாவது பிரமாத அதாவது பிரதான செய்திகளை உங்களுக்கு... தர... தயாராகின்றோம். அதாவது நீங்கள்... வீட்டிலிருந்தபடியே இன்ரும் பத்திரிகை கேட்கலாம்! இன்ரைய பார்வைக்காக... ஏராளமான நாளேடுகள்... அதாவது பத்திரிகைகள் வந்திருக்கிறது. வீரகரணம், தினகரணம், கரணக்குரல், கரணச்சுடர் ஆகிய நான்கு பத்திரிகைகள் மட்டுமே இன்ரு எமக்கு... கிடைத்திருக்கிறது. முதலாவதாக வீரகரணம் பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்;. அந்த வகையில், இதன் முக்கிய - பிரதான - தலைப்பு.... செய்தியாக, ஒரு படைவீரர் ஒருவரின் ஒரு துப்பாக்கி ஒன்ரு.... தானாகவே வெடித்ததில் அதாவது தற்செயலாக வெடித்ததில், முப்பத்தி இரண்டு பேர் மரணம்.... நாப்பத்தி ஐந்து பேர் படு...காயம் என்ரு ஒரு முக்கிய தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. அதைப் போலவே அரிசி விலை... பன்னிரண்டு மடங்கு குறைந்திருப்பதாகவும் எரிபொருள் அதாவது பெட்ரோல், டீஸல், மண்ணெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றின் விலை பதினேழு மடங்கு கூடியிருப்பதாகவும் ஒரு முக்கிய செய்தி - பிரதான செய்தி பெட்டி கட்டி வந்திருப்பதாக தெரிகிறது.... இன்னும் அதைப் போலவே, ....ம்.... அதைப்போலவே, பிரபல மந்திரி அதாவது பிரதம் மந்திரி சவ்தி அரேபியா வுக்காக ஒரு... ஒரு உள்நாட்டுப் பயணத்தை... அதாவது வெளிநாட்டு விஜயத்தை... கடைப்பிடித்திருப்பதாகவும் ஒரு முக்காத அதாவது முக்கியமல்லாத செய்தி இடம் பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. உபதலைப்பில் அதாவது தலைப்புக்கு... கீளே, சிறிய எளுத்தில், 'கைலஞ்சம் அதாவது கைலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பிடிப்பதற்காக.... கணனி வெடி அதாவது கன்னி வெடி வாங்குவதற்காக' என்றும் வந்திருக்கிறது. அதைப் போலவே, இம்முறை விசகம் அதாவது வீசாகம் பெருநாளை அதாவது பண்டிகையை முன்னிட்டு... நாட்டின் இலட்சக்கணக்கான பகுதிகளிலிருந்தும் அதாவது பல பகுதிகளிலிருந்தும் இலட்சக் கணக்கான மக்கள் - பொது மக்கள் படையெடுத்து அதாவது படைதிரண்டு வருவதாகவும் அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள்... பலப்படுத்தப் பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி ஒன்ரு பிரசவிக்கப்பட்டு அதாவது பிரசுரிக்கப்பட்டிருப்பதாக... தெரிகிறது. அதைப்போலவே, சிறப்பு 'ளூனா', கொளும்பு எனும் வாக்கியத்தில் அதாவது சொல்லில் இருப்பதால், கொளும்பு நகரமானது, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்தே தமிளர்களின் வதிவிடமாக இருந்ததென்ரும் ஒரு தமிளாராய்ச்சி தெரிவிப்பதாக ஒரு முக்கிய செய்தி ஒன்றும் கீளே வந்திருக்கிறது. ஒரு விளம்பரம் ஒன்ரின் பிறகு அடுத்த செய்தியை பார்ப்போம்.'
வானொலியை மூவிட்டு கழிப்பறைக்குப் போய் வந்தேன். வந்த பிறகு, வானொலியைத் திறந்து வேறொரு நிலையத்தைத் தேர்ந்தேன்.
'ஈஈஈது ஊங்ங்ங்கள் அடக்க்க்க முடியாத :டார்ளிங் தமிள் ஏஃபேஏஏஏம்!' என்று கழுதித்தது ஒரு வன்குரல். '.....வணக்க்கம்! அதாவதிபொதுங்கள்கொருபூதிய.... பூதிய தமிள் - பாடலை - தருவதன்... மூலம் - எங்கநியள்ச்சி யளை யாரபிக்கிறோம்... இனிமேலிதேபாடலைமணித்... யாலதுகைந்துமுறை... யாவதுநீங்ளேட்டுமகீஈஈஈலவும்!... இன்ருமாலைகுளிபாடல் வெறுகதகபாளைய்ய்யபாடலா கியிடும்! இதன் பிறகுவே - ரெவருமிதைபு - தீயபடலென்ரு ...சொந்தங்கொண் - டாடமூ - டீயாது! அதபாடலெழுது களை கவிபேர்சர் வீரவாளியறியதாக சொலபடுகிறது - தாலியறுவெலும - ஹோதைமானதி - மரய்யோன்னிய திலிருந்து அதாவதிதை நேயர்களுகாக நாங்கதான்மு தன்..முதலாக தருஹ்றோம்! இதோந்தபாடல்பாடியிர் பவர்ர்ர் ஆஆஆகுடல்நாதனிசைய்ய்ய் தகர - டப்பன்! ஈஈஈதோ கேட்டாருங்கள்ள்ள்!'
'சாரப்பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்! - இந்த
நாறத்தீனி வயித்துக்குள்ளே கொண்டாட்டம்!...'
'என்னை ஏன் கடிக்கிறாய்?' என்று சினந்தன என்னால் கடிக்கப்பட்ட எனது பற்கள். 'வேண்டுமானால் வேறொரு நிலையத்தை நாடிப்பார்!'
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூதானே இனிப்பு என்று மறுபடியும் விஷேடம் எஃபெம்!
ஒரு திறனாய்வு தொடங்கியது. ஒரு சொல்லில் மறுமொழி தரக் கூடாது. அம்மறுமொழியில் பிற மொழிச் சொல்லே வரக் கூடாது என்று, பிறமொழிச் சொற்களா லேயே திறனாய்வு நெறிகளை விளக்கியது பெண்குரல்.
கொல்லைப்பட்டி அழகேசு தொலையுரையாடியில் முந்திக் கொண்டார்.
'எங்கள் அளகேசு வந்து விட்டீர்களா?'
'ஹீஹீ... ஹீ... ஆமாக்கா! வணக்கம்'
'வணக்கம்! மாலைக்குள் எப்படியாவது ஏளெட்டு முறையாவது நீங்கள் எங்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு விடுவீர்கள், அப்படித்தானே?'
'ஹி...ஹீ...ஹீ!'
'ஞ்சரி! போட்டியை ஆரம்பிப்போமா, அளகேசு?'
'சரிங்கக்கா!'
'நீங்கள் என்ன தொளில் செய்கிறீர்கள், அளகேசு?'
'வாகனம் ஓட்டுறேன்க்கா!'
'ஞ்சரி. என்ன வாகனம் ஓட்டுகிறீர்கள்?'
'வேன் ஒன்று வச்சிருக்கிறேன்க்கா!'
'ஹோ... ஹோ.. ஹோ...! ...வேண் என்று பிறமொளிச் சொல்லைப் பாவித்து விட்டீர்கள்! நீங்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்!'
'வேன், வான் - அப்புடீன்னுதானே தமில்ல சொல்றோம்,'
'இல்லை! அது ஆங்கிலச் சொல்!'
'அப்ப தமில்ல எப்புடீக்கா சொல்றது?'
'ஏன் மோட்டார் ஊர்தி என்றிருக்கலாமே?'
'பெண்டாட்டி உதைத்தாலும் உனக்கு நாணம், சூடு, உணர்ச்சி எதுவுமே கிடையாது, போ!' என்று இளித்தது எனது மூளை.
மறுபடியும் :டார்லிங் தமிள் எஃபெம்மிடமே புகலடைந்தேன்.
'எந்தவி - டயத்தையும் முந்தித்தருவதூங்கள் :டர்லிங் தமிள் எஃபேம் மட்டுமே. நாங்களே முதல் - வன்ன்ன்! இதோங்கள்கான அவசரசெய்தியறிகையிதன் தோப்பாசிரியர் நியூஸ்ஸ்ஸ் மாமா! சரிபார்- தவர் லூஸ்ஸ்ஸ் மாமா! வாசிபவர் முதலாவது பெணறிவிபாளினி ரேஸ்ஸ்ஸ் மாமீஈஈஈ!'
'வணஹம்! டாடடடடடடட டுடுடுடுடுடுடு! டடடடடடடடடிடடி டிட்டிட்டி. கட கட கட குடு குடு குடு இடி யிடி யிடி யிடி யிடி. டொரலட்டு டொட்டு, டர்ர லர லர லர பர பர பர பர டமீக்கிடிம்மீடும்மீ டும்மு டும்மு டுமுக்கிடி!...'
ஆண் அறிவிப்பாளரை வென்ற விரைவுப் பெருமையில் ரேஸ் மாமி வணஹத்தைக்கூட மறந்துபோய் ஓடிவிட்டார்.
'ஓரு..... ஒரு.... ஒரு.... ' என்றவாறே ஓர் இழுபறிக் குரல் புதிதாக அறுக்கத் தொடங்கியது. '...அதி.. முக்கியமான... ஒரு... செய்தியை... உங்களுக்கு தர... இப்போது... நாங்கள்.... தய்யாராகிக்... கொண்டிருக்கிறோம்.... அதாவது.... இன்ரு... அதிகாலை.... அதாவது... குறிப்பாக ஏளு மணி.... அளவில்... கொளும்புவிலிருந்து... சற்று... தொலைவில்... அதாவது... கொளும்புக்கு அண்மையில்... ஒரு... அதாவது... ஒரு குண்டு வெடிப்பு.... வெடித்ததில்.... சுமார்... ஆறுபேர்... வரையில்.... கொல்லப்பட்ட தாக.... அதாவது மரணமடைந்ததாக.... தெரியவருகின்றது... இந்த வைபவத்தின்போது... அதாவது விபத்தின்போது... இன்னும் ஸ்தலத்திலேயே... எமது நிருபர்... இருக்கிறார்.... இப்போது அவர்... நேயர்களுக்காக... தேச... அதாவது... சேத... விபரம் பற்றி... நேயர்களுக்காக... தொலைபேசியில்... விபரங்களை... எடுத்துரைப்பார்... சிறிசேன?'
செய்தியாளர் சிரிசேன அழகாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இனிய சிங்களத்தில் கூறி முடித்தார்.
'அடடா, இவ்வளவு இனிமையான மொழியை பாரதி கேட்காமல் போய்விட்டானே!' என்று நொந்து கொண்டது எனது உள்ளுணர்வு.
'ஸ்த்தூத்தி, சிறிசேன!... அதாவது... எமது... நிருபர்... சிறிசேன... கூறியதை... இப்போது... நேயர்களுக்காக... தமிளில்... தருகிறோம்... அதாவது... இன்ரு... காலை...'
'மூஞ்சி கழுவல்லியாப்பா?' என்றாள் மனைவி.
'இந்த நியூஸ் முடியட்டும்,' என்றேன்.
'அதுதான் சிரிசேன அழகா சொல்லிட்டதேப்பா, வாங்க!'
'இந்த... விபத்து... பற்றிய... ஒரு... ஒரு... கலந்துரையாடலை... இப்போது... நேயர்களுக்காக... நாம்... ஏற்பாடு... செய்துகொண்டு... இருக்கிறோம்... மேலதிக... தகவல்களுக்காக... அதாவது.... நேயர்கள்... ஏதாவது கேட்க... விரும்பினால்... கேட்பதற்காக.... எம்முடனேயே.... இருங்கள்... எமது தொலை பேசி.... இலக்கம்... ஆறாறாறி... ஏளேளெளி... அதுவரையில்... ஒரு... சுபர்பட.... பாடலை.... கேட்டு... மகிழுங்கள்...'
'சாரப்பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்!....'
புலன்கள் செத்துப்போன நிலையில் வானொலியை அடக்கிவிட்டுப் போய் முகம் கழுவி வந்து மேலுமொரு தேநீரோடு தொலைக் காட்சியை இயக்க, விஷேடம் டீவியில் நரசிம்மராவி இன்னுமே வன்கொலை செய்து கொண்டிருந்தார்.
'...சுமர் அய்ந்தண்டுக் கலமாக நோய்வைப் பட்டிருந்த அவர், நேட்ரு முன்தினம் கொலிசெய்யப் பட்டதக புலிஸ்மாதிபர் கூர்னர். கொலியலிகள் கண்டிவிலும் மாத்தளைவிலும் ஒளிந்துள்ளதகவும் ஆரம்பகட்ட விசரணைகளும் பெச்சு வார்த்தைகளும் முடிவுட்ரதகவும், நீதி மன்ர நடிமுறிகள் பின்பட்ரப்படுவதகவும் அவர் மேலும் தெரிவித்தர்... இன்ரு நாடளுமன்ரத்தில் ஐக்கியேஸியக் கச்சி வெளிநடுப்பு செய்ததக எமது செய்தி நிருபர் தெரிவிக்கின்ரர். இதை அனித்து ஊடகங்களும் கண்டித்துள்ளது. நாடல் மன்ரம் எதிரரும் பதினௌhம் தீய்தி குடுமென்ரு சபைநகர் அறிவித்துள்ள பொதிலும், நாளை மர்தினம் பார்ளு மன்ரம் குடுமென்ரு சர்வச்சி மாநட்டில் அமிச்சர் குர்நார். மாஜனைக்கிய முண்ணி இதை சர்வேஸ்ஸமுகத்திற்கு அறிவித்துள்ளனர். ... கல்வி பொது தரதர சாதர்ணதர பரிச்சை நாளை அரம்பமாகின்ரது.... தென்னிந்திய ரமேஷ்வரத்தில் மெலூம் பல அஹ்திகள் முகமிட்டிருப்பதக தமிள்நட்டு செய்திகள் கூர்கின்ரது.'
புதிதாக ஓர் ஆண் குரல் பின்னணியில் வந்தது:-
'தெண்ணிந்தியாவிழுள்ள இறாமேஸ்வறம் எண்ணும் ஊறிள், இளங்கை அகதிகழ் மேளும் மேளும் அதிகறிப்பதாகத் தமிழ் நாட்டுச் செய்திகள் வழுவான ஆதாரங்களுடன் கூறுகின்றன. இளங்கையிலிருந்து மேளும் பள அகதிகழ் வறக்கூடுமெண்றும் எதிர்க்கட்சித் தலைவர் உறைத்தார்.'
வெளியட்டுச் செய்தியில், இலங்கை நட்டின் கிரிகட்டணி ஒவ்வொரு முறையும் வெட்ரி அடைவதற்குர்ய மாட்டுத் திட்ரமொன்றை கொண்டு வரவிர்ப்பதக வெளிநட்டமிச்சர் இன்ரு குர்யதகவும் கூறப்பட்டது. வெளிநட்டுச் செய்திகளின் பிறகு நரசிம்மராவி அதே முறைப்புடன் மறைந்தார்.
தொடர்ந்து ஒரு வணிகாறிவித்தல்:-
'என்ர கொம்பனிய நான்தானே காப்பாத்த வேணும்? அதனாலதான் நம்ம நாட்டில உள்ள அநேகமான ஆக்களைப் போல (ஆ-மாடு) நானும் நாக்கு வலி மூக்கு வலி வந்திட்டா 'பிஸடோஸ்' சாப்பிடுறன்!' என்றுநெஞ்சிலடித் துத் தனக்குத்தானே உரையாடிக் கொண்டே தடுமாறினார் ஒருவர்.
அடுத்ததாக, அறுபதகவைக் கட்டைப் பாட்டி ஒருவர், இருபது அகவையினளின் திருமணப் புனைவு களோடு 'கண்றாவிச் சமையல்' காட்டத் தொடங்கினார்.
'இன்னக்கி ஒங்களுக்கு, கருவாடு எப்பிடிப் பொரிக்கிறதுன்னு சொல்லித்தரப் போறேன்| கவனமாக் கேட்டுக்கங்க!'
'சமையல் பாக்குறீங்களா?' என்று மனைவியை அழைத்தேன்.
'ஆ...மா!' என்று நீட்டி முழக்கினாள் அவள். 'எனக்குக் கருவாடுன்னா என்னான்னு கூடத் தெரியாதுதானே!...'
'...மீனப் புடிச்சி வெட்டி, உப்புப் போட்டுக் காய வச்சம்னா, அததேங் கருவாடு| இத கருவாடு காயவைக்கிற இடத்திலயும் வாங்கலாம்| கடயிலயும் வாங்கலாம். கருவாடு நல்ல :டேஸ்டா இருக்கும்! சொல்லக்குள்ளயே வாய் ஊறுது!... இப்ப நல்லாப் பாத்துக்கங்க... இதுதேங் கருவாடு. இத வந்து, வெங்காயம். இதுவந்து, எண்ணெ. கடல எண்ணெ. இதுவந்து மொளகாப் பொடி. இதுவந்து எலுமிச்சங்கா. இதுவந்து கத்தி. இதுவந்து வாணலி. இத மறந்துட்டனே, இது வந்து கரண்டி.....'
விளக்கம் முடிந்து கருவாடு பொரிகையில், அவரை எப்போதும் அரித்துக்கொண்டேயிருக்கும் மச்சினன் நினைவுக்கு வந்து விட்டதைப்போல், ஒரு மச்சான் பாடலை ஊதித் தள்ளினார். அந்தப் பாடலோ, கருவாட்டுக் கலம் நிறைய அவரது உமிழ் நீரை வெளிக் கொணர்ந்து நிறைத்துவிட்டது.
தேர்தலுக்காக ஒருவர் தோன்றி இளநகை செய்தார். 'என்னா ஹத?... இந்த தய்னம் காண்டா முர்கம் கட்டெறும்புல போட்டி உடுவ்து! பாத் செய்ங்க! நாங்கதான் வரோணும்!...' என்று உமிழ் நீர் கூட்டினார்.
தேர்தல் வேட்டைகள் முடிந்தவுடன், விஷேடம் டீவீயில் காதுல பூ தொடங்கியது. காட்சிகள் வேறு உரையாடலுக்கேற்பத் தோன்றத் தொடங்கின:-
'வெகு விரைவில்... உங்கள் நபர்வண் விஷேடம் டீவீயில் நீங்கள் ஓஓஓவலுடன் எதிர்பார்க்கும் 'மாவாஞ்சலி' அல்லது 'கனவாஞ்சலி'! போர்த்துக் கொண்டே நடிக்கும் போர்த்துக்கேய நடிகரும் இட - வலமாய் பார்த்துக் கொண்டே நடிக்கும் பார்த்தம்மாவும் இணைந்த, நடிப்புப் பயிற்சி பெறுகிற உப்பற்ற காவியம்... 'மாவாஞ்சலி' குளந்தை எளுத்தாளரின் பதினேளாம் ஆண்டுப் படைப்பூ! மட்டும் விஷேட வில்லன்கள் நகரத்திலிருந்து பாளடைந்த கிராமத்து வீடுகளுக்குப் போய் சதி திட்டம் மட்டும் கொல குற்றங்களை தீட்டும் பிரம்ம்ம்மாண்ட தய்ய்யாரிப்பூ! கான தய்யாராகுங்கள் - சின்ன வெல்லி திரிய்யில்!
இரண்டாவது காட்சிக்கான பாடல் தொடங் கியது:-
'கூளங்கள் கூளங்கள் கூளங்கள்ள்ள்ள் -
குப்பை கூளங்கள்!
டகான் டுகாஸ் டகட டுகாஸ்!
பென்னே எனதுப் புதுக் கூளம் எருதூஊஊ!....'
ஐம்பதடி உயரமான ஓர் எருமைக் கல்லின்மீது ஏன் அதில் ஏறினாள் என்றுநாம் விழிக்க, ஒருத்தி நின்று பாடுகிறாள். 'தண்டம்' பாலைக் குடித்தவுடன் எலும்பாவதாகக் காட்டுவார்களே, அப்படிப்பட்ட ஒரு தோற்றம் கையெலும்புகளை நீட்டி நீட்டி அவள் அறைகூவல் பாடுகிறாள். அந்த எலும்புக்கூடு விழுந்து விட்டால் பிடிக்க வேண்டுமே என்பதைப் போல, இருபது முப்பது ஆண் - பெண் கூடுகள் சூழநின்று நெளிகின்றன.
'வாரநாட்களில் எதிர்பாருங்கள்! சிந்திக்கவே தேவையற்ற நேயர் பெருமக்களுக்காக - கூளங்கள்! மட்ரும் காதுலபூ நிகழ்ச்சிக்காக விஷேடமாக இறக்குமதி செய்யப்பட்டது! காண தயாராகுங்கள்!'
'எதிர்பாருங்கள்! வாயால் சிந்திக்கும் மேடை நாடகம்! 'கனபேருக்காக!' பெண்கள் கணவருக்காகவே வாழவேண்டும் என்றும் அப்படி வாழாவிட்டால் காவிய நாயகர்கள் அப்பெண்களை தண்டிப்பார்கள் என்றும் காட்டும் இந்தியக் கலாசாரத்தின் ஒரு துளி - கனபேருக்காக!..'
வகைவகையாகப் பெண்கள் கண்ணீர் கொட்டும் பண்பாட்டால் வீடு இழவு வீடாகுமுன், பிற்பொழுதில் வரவிருந்த ஓர் எழினிக் காட்சியின் பாடல் நல்ல வேளை யாகக் குறுக்கிட்டது. பாடிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் கால்களிலிருந்து தலைவரைக்குமாக மூக்கால் நக்கிக் கொண்டிருந்தான் ஒரு புதிய ஆண் நாய் அகன்.
குடித்த தேநீரை குடல் மேலெழுப்பும் என்பது போல் இருந்ததால், வேறும் நிலையங்களுக்குப் போனேன். உருவம் தொலைக்காட்சியில் நாட்டிறைமை விளக்கம் நடந்து கொண்டிருந்தது. சரச சல்லாபம் தொலைக்காட்சி யில், பொழுது கொல்லும் இளைஞர் நிகழ்ச்சி வன்னாட்சி செய்து கொண்டிருந்தது. மறுபடியும் விஷேடம் டீவீக்கு வந்த போது-
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவரோ எனும் ஐயம் எழும்படியான ஒரு நரம்புப் பெண், ஆறகவைச் சிறுமியின் உடைக்குள் இறுக்கமாகப் புகுந்திருந்து செயற்கை இளிப்புடன் உரையாடினார்:-
'ஹாய்!... 'ஹூ போடு!' இய்யா...! நீங்ளும் இத்ல பார்ட்டேக்குப் பண்லாம். ஸோ, கண்டிஷன் நம்பர் வன்:- நீங்க, :டான்ஸே பட்ச்சிர்க்க குடாது! கண்டிஷன் நம்பர் டூ:- பார்ட்டேக்குப் பண்றவுங்க, ரஃப்ஃபான :ட்ரெஸ்ஸஸ் மட்டுமே :ட'ரெஸ் பண்கிட்டு வர்ணும்! ஸோ பண்ற :டான்ஸல, யாரோட :ட்ரெஸ் ஹெவியா கிழிய்தோ :தெயார் யூ ஆர், அவுங்களுக்குத்தான் ஃபர்ஸ்ட் பிரைஸ்! அப்றொம், கிழிய்ற மாதிரிக்கு செகண்டு அன்டு தர்டு பிரைஸஸ்! இது நியூ வேவ் :டான்ஸ்! இந்த ப்ரோ:க்ராமுக்கு 'ஹூ போடு!' ன்னு நேம் பண்ணீர்க்காங்க! ஒங்ளுக்கு புடுக்குமோ புடுக்காதோ என்க்குத் தெர்யாது, என்க்குன்னா :பர்தம் புடுக்காது! ஐ ஆல்வேய்ஸ் லைக் அன்டு லவ்வு நியூ வேவ் :டான்ஸ்! ஸோ வீ வில் மீட் எவ்றி ஸட்டர்டே நைட்! :பாய்!'
பின்வருகை கூறிய அக்காட்சி முடிவடைந்ததும், அந்தப் பெண்மணிக்குச் சிறிதுமே மிகையற்ற உடலமைப் போடும், வெளிக்கொணரியலாளர்மீது வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தும் தலை, உடைப் புனைவுகளோடும் உளறுவாய்த் தம்பி ஒருவர் வழிந்தார்.
'இவனை உனக்கு நினைவிருக்கிறதா,' என்றது உள்ளுணர்வு.
'ஏனில்லாமல்?' என்று புன்னகைத்தேன் நான். 'எங்களூர் இறைவணங்கில் ஒன்றுக்குத் திருவிழா அறிவிப்பாளராக வந்து, 'இந்தக் கோவிலில் அரிய பல மூர்த்திரங்கள்... அதாவது முகூர்த்தம் என்றும் சொல்வார்கள்-' என்று நூல் சுற்றியவரை எவ்வாறு மறப்பேன்,'
'..வருகிற வாரம் அதாவது இன்னும் ஏழெட்டு நாட்களுக்குள் - ஒன்லி வன் வீக் - எதிர்வரவுள்ள தேர்தலை அதாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு - இதைப் பாராளுமன்ரத் தேர்தல் என்ரும் சொல்வார்கள் - நாங்கள் ஒரு போட்டியை... அதாவது உங்களுக்குப் போட்டி என்றால் என்னவென்று தெரியும் என்று தெரியும் என்று நினைக்கிறேன்! ஏனென்றால் நான் போட்டி என்று சொன்னதை பலர் பார்ட்டி அதாவது விருந்து பார்டி என்று நினைத்துக் கொள்ளக் கூடும். சரி விடயத்துக்கு வரலாம் என்று நினைக்கிறேன்! ஆம்... ஆமாம், அதாவது ஒரு போட்டியை தேர்தல் நடந்து முடிந்த பிறகு அதாவது இரவில் நடத்த - நடாத்த என்ரும் சொல்லலாம் - நாங்கள் நேயர்களுக்காக அதாவது உங்களுக்காக நடத்த தீர்மானித்து இருக்கிறோம். அதில் உங்களுக்காக -அதாவது முழுக்க முழுக்க உங்களுக்காகவே மிக, மிக, மிக ஏராளமான பரிசுகள் வெகுமதிகள் - பிரைஸ் - காத்திருக்கிறது. அவைகள் எல்லாமே முற்று முழுக்க உங்களுக்கேதான்...'
'என்னைப் போடு, நான் இனிமையாக உரையாடு வேன்,' என்று வானொலி எனக்குக் குறிப்புரைத்ததைப் போல் செயற்பட்டேன்.
'.....ஆட்ட்ட்டகாசம்ம்ம்!.. .....ஆதிர்ர்ர்ரடீஈஈஈ...! குண்ண்ண்டாஆஆஆட்டம்ம்ம்!... இன்ரு மால்ல்லை தாயாராகுங்கள்ள்ள்!....' என்று அது பேயாய்க் கத்தியதைக் கேட்டு, எங்கே எங்கள் பிள்ளை மறுபடியும் வசைமாலை இட வைத்துவிடுவானோ என்ற அச்சத்தால் அதன் வாயைச் சிறியதாக்கினேன்.
'டிங் டாங்!' என்று ஒற்றுமை கூறிய பிறகு, 'யேn ஏயடயசபசைநறயெய ஆழஅஅல'என்ற ஆங்கிலப் பாடல் அடுத்த வீட்டுப் பையன்களைக் கெடுப்பதற்கும் தமிழ்த் தோற்றம் பெறுவதற்கும் கண்கள் மூடி வியர்க்கத் தொடங்கியதால், 'அம்மா' வானொலிக்கு மாறினேன். கால்மணிக் கூறாகப் போராடியும் நிலையம் கட்டுக்குள் அடங்க மறுத்தது. அது எப்போதும் அப்படித்தான். தனக்கிருந்த தொண்டையைக் கண்ட கண்ட காட்டுக் கத்தல்களுக்கெல்லாம் விற்றுத் தின்று விட்டு இன்று தனது குரலை வெளிப்படுத்திக் கொள்வதற்குத் தொண்டையில் இடமில்லாமல் ஊமை யாகிக் கொண்டிருக்கிறது!
வளர்ந்து கொண்டிருந்த வெறுப்பு அதன் எல்லையைக் கடக்கு முன்பாக, அதன் குரல் அழுகையாகக் கேட்கத் தொடங்கியது:-
'....(டர்ர்ரர்ர்) மேலாண் பேர்ளே, ஸோர்ளே... ஆகவே..... (உஷ்ஷ்ஷ்) கன்னியம் மிக்க (ஸ்ஸ்ஸ்..) கணான்களே... அல்லாஹ்வின் ஷஹோதரர்கலே! (பர்ர்ர்ர்) முஸ்லிம்கல் என்று... (ஸ்ஸ்ஸ்ஸ்..) சொல்லப்படக்கூடிய வர்கலாகப்பட்டிருக்கும் (ட்ர்ம்ம்..) முஸ்லிம்கலாகிய நாங்கல்... (ஹர்ர்ர்) உயர்வான (ஹர்ர்ர்) சிரப்பான (ஙொய்ங்ங்ங்) கன்னியமான... (டிஸ்ஸ்ஸ்) ...ஒரு வலியை (ம்ம்ம்) கொன்ரவர்கலாக... (குஸ்ஸ்ஸ்) இருந்துகொண்டு இருக்குகின்றோம்.... (பஸ்..பஸ்..பஸ்..) நாங்கல் எல்லாம் (ஜர்ர்ர்) அல்லாஹ்வுக்கு நன்டி ஷெல்ல வேண்டும்!...'
'வேற வேலை இருந்தால் போய்ப் பாரடா, வெறுமாண்டீ!' என்று அறையே பிளிறியதால் நிலையத்தை மாற்றினேன்.
'நேர்ர்ர்ர்ரத்தை சரீ பிளை பார்த்துக் கொள்வோம்! நேர்ர்ர்ரம் சரிய்ய்ய்யாக ஏளணி ரெண்ண்ண்டு நிமீஈஈஈடம்! ஹி...ஹி...ஹி.... எட்டணி இரண்ண்ண்டு நிமிடம்ம்ம்! இந்த நேர்ர்ர்ர அறிக்கையை உங்களுக்கு இலவசமகத் தருவது... 'சீலின்கையும் பிடுங்கிக் கொள்வோம்' எனும் பொய்யுறுதிக் கூட்டுத்தாபனம்! ச்சரி... ப்லொமினா அடுத்த நிகள்ச்சிக்குப் போவோமா? ஹி...ஹி...ஹி...!'
'என்ன ஜொல்லு வேண்டிக் கிடக்கு?'
'சும்மா ஒரு ஜொல்லுக்குத்தான்! ஹிஹிஹி.. ச்சரி... நேயர்களே! இனியாவது நிகள்ச்சிக்கு வருவோம்! வானொலியரலாற்றிலேயே நாங்கதான் முதன் முதலாக விவாதங்கலை தொடக்கிவைத் தோமென்பதுல கறிந்த விடைய்ம்! அதிலும் நமது தமிள் மக்களுக்கு தேவை... யான... அத்தியா வஷ்யமான ஸ்வாஸ்யமான விடைங் களையே நாந்தேர்ந்தெடுப்பதுவளக்க- மதிலும்- இன்ரு அதாவதின்ரு சிறுவரினத்தையொட்டி பூதுமையான தொருவீவா தரங்கை... தொடக்கி வைக்க தையாராயிருக் கின்ன்ன்ரோம்ம்ம்! அனைவர்மே இதில்ல்ல் சாதிமத பேதமின்ரி அதாவது வயதுபேதமின்ரி பங்குபட்ரி மகீள முடிய்ய்ய்யும்! இதோங்கள்கான தலாய்ப்பூ - ஏகபதி விரதைஐஐஐ யார்ர்ர்? :டய்யானாவா? :பூலான் :தேவியா? எம்மோடு தொடர்பு கொள்ள வேண்டிய முகஅஅஅ வரிஇஇஇ அதாவதுதொலைபேசியிலகம் - ஏளெட்டியாறி ஆறெட்டியேளி!'
'டிங் டாங்!'
'உலகிலேயே அதிசிறந்த நீரால் தயாரிக்கப்படும் பால்மா - வாட்டர் மில்க்! உங்கள் குழந்தைகளின் சளிக்கு - வாட்டர்மில்க்! குறைந்த விலைக்கும் அதிக லாபத்துக்கும் - வாட்டர்மில்க்! எளுவது வீதம் புரோட்டீனும் நாற்பது வீதம் இரும்புச் சத்தும் பதினைந்து வீதம் எச்சைவீ எதிர்ப்புச் சத்தும் கொண்ட தேசீய சொத்துக்களுள் ஒன்ரு- வாட்டர் மில்க்! அறிவுள்ளோர் மட்டும் பருகுவது - வாட்டர் மில்க்! இது ஒரு நோய்லாந்துத் தயாரிப்பு!'
'டிங் டாங்'
'இதோ ஒரு தொல்பேசியழைப்பு!... ஆஹா, நம் அளகேசு அவர்கள்! வணகம்! வணகம்!... வணகம்.... வணகம்..! காணோமே..! வணக்க்கம்!.... ...வன.... கம்!... வண....'
'ஹலோ?'
'வணகம்!'
'வணக்க்ம்ணா!'
'வணக்கம் அளகேசு!'
'கண்டு புடிச்சுட்டீங்களேண்ணா!'
'ஹிஹிஹி... ! அதுக்கெல்லாம் எங்களிடம் மந்திர சக்தியுண்டு! சுகமா இருக்கிறீங்களா?'
'நல்ல்லா சொகமா இருக்கிறேண்ணா! பிலோமி னாக்கா சொகமா இருக்கிறாங்களாண்ணா?'
'நான் நல்ல சுகம், அளகேசு! நீங்கள் எப்படி?'
'நல்ல நல்ல சொகமக்கா!'
'வீட்டில?'
'எல்லாரும் நல்ல சொகமக்கா!'
'உங்கட நண்பர்கள்?'
'அவுங்களும் நல்ல சொகமா இருக்றாங்கக்கா! ஒங்கட வீட்டில?'
'எல்லாரும் நல்ல நல்ல சுகம்! உங்கட நண்பிகள்?'
'ஹிஹிஹி!... ரொம்ப சொகமா இருக்கிறாங் கக்கா!'
'உங்கட நாய்க்குட்டி?'
'ஐயோ அதையேங்கேக்றீங்கக்கா! அது நேத்து ராத்திரி திடீர்னு செத்துப் போய்ச்சக்கா!'
'ஐய்யய்யோ!... அனுதாபங்கள், அளகேசு! இத நீங்கள் காலமயே சொல்லியிருந்கீங்களெண்டா, இன்ரக்கி ஒரு அரைநாள் நிகள்ச்சியா நாயரங்கம் ஒன்ரையே வச்சிருப்போமே! ஞ்சரி! பறுவாயில்லை| நாளைக்கே அதை வைக்கிறோம்! ஓக்கேயா?'
'ரொம்ப ரொம்ப நண்டிங்கக்கா! இன்னைக்கி மாதிரி என்னைக்குமே நாஞ் சந்தோஷப் பட்டது கெடையாதுங்கக்கா! அம்புட்டு சந்தோஷம்னா! :டார்ளிங் தமுல் எஃபெம்னா எனக்கு உசுருதாம் போங்க! அஞ்சாறு வருஷமா நான் ஒங்க வாடிக்கையாலனா இருந்தாலும் இன்னைக்கிதான் ஒரு வெசயத்த ஒங்ககிட்ட சொல்லப் போறேன்! ஒரு சின்ன ரேடியோவ வாங்கி அத ஒரு தொப்பியில வச்சி தச்சி ஏந் தலைலயே கட்டி வச்சிருக் கிறேன், அண்ணா! யாரும் பாத்தாங்கன்னா தொப்பி போட்ட மாதிரித்தான் இருக்கும்! தொறந்தா நம்ம :டார்லிங் எஃபெம்தான்! அக்கா! அடடாடா, என்ன அலகா பாட்டுப் Nபுhடுறீங்க! அந்த மத்த அக்கா சேதி வாசிக்கிறதும் மத்த அண்ணா வெலயாட்டு சேதி வாசிக்கிறதும் - ஆஹாஹா! என்னா சுறுசுறுப்பு போங்க! ஒலகத்துல யாருமே இம்புட்டு அலகா தமுல் சேதிய இங்கிலீஸ்ல வாசிச்சது இல்ல! எனக்குன்னா ஒண்ணும் வெளங்காது தான்| ஏன்னா நான் இங்கிலீஸூ படிக்கல்லீங்களே! வெளங்காட்டிப் போனாலும் சேதி கேட்ட திருப்தி இருக்குதுங்களே, அது பத்தாதா! வெலயாட்டு சேதின்னா சூப்பரோ சூப்பரு போங்க! வெலயாடுறவுங்க கூட இம்புட்டுக் கஷ்டப்பட மாட்டாங்க! இன்னொண்ணுஞ் சொல்லணும், அக்கா! யால்ப்பாணத்தில இம்புட்டு சண்ட நடந்துங்கூட அங்கவுல்லவுங்கலகூட சந்தோசமா பாட்டு கேக்க வச்சிருக்கிறீங்களே, நீங்க கில்லாடிதாம் போங்க! அப்பொறம் ஏலெட்டுவயசுப் புல்லங்கல் கிட்ட கூட எவ்வளவு பெரிய சேதியெல்லாங் கதைக்கிறீங்க! ஒங்க தெறமய சொல்றதுக்கு மிச்சமா ஒண்ணும் வேணாம், லெச்சக்கணக்கா செலவலிச்சி, ஆயிரக்கணக்கானவுங்க அரும் பாடுபட்டு ஒலச்சி, தியாகம் பண்ணி வலத்தெடுத் ததுன்னு சொல்றாங்கலே, இந்த அம்மா வானொலி, அவுகலயே நம்ப லெவலுக்கு எறங்கி வரப் பண்ணிப் புட்டீங்கலே, அப்பறம் என்னாங் கக்கா, அண்ணா...!
'ரொம்ப ரொம்ப சந்தோஷம், அளகேசு! இப்ப நிகழ்ச்சிக்கு வருவோமே! :டயானாவா? :பூலான் தேவியா?'
'ஐயையோ அவங்கலப்பத்தி எனக்கொரு மண்ணுந் தெரியாதுங்கண்ணேன்! எனக்கு முக்கியமா ஒரு பாட்ட மட்டும் போடுங்க!'
'ஞ்சரி, அளகேசு! நீங்க யாருக்காக இந்த பாடலை கேக்க போறீங்க அல்கோசு? அடடா! வாய் தவறிட்டுது அளகேசு! கோபிச்சுக் கொள்ளாதீங்க!'
'அதுக்கென்னாங்க!... இந்த பாட் டோட எலுத்துகல எலுதினவருக்கும் மற்றும் வரிகல எலுதின வருக்கும் சரி, பெல பாத்த வருக்கும் மற்றும் மொத மொத வாசிச்சி பாத்தவருக்கும் அப்பறம் இச அமச்சவருக்கும் மற்றும் நடிச்சவருக்கும் மற்றும் பாடுனவருக்கும் :டைரக்ட றுக்கும் அப்பறம்... இந்த பாட்ட இதுக்கு முந்தி கேட்டவுங்களுக்கும் ஒங்க ரெண்டு பேருக்கும் மற்றும் எல்லாத்துக்குமா கேக்கிறேன்!'
'பாடல் என்னவென்று நீங்கள் சொல்ல வில்லையே!'
'பாத்தீங்களா!... எங்க பதிமூனாவது புல்லை யோட பொறந்த நாலு இன்னைக்கிதான் வந்திருக்குது. இதுனால, 'ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராஜா'ங்கிற பாட்டப் Nபுhடுங்க!'
'அய்ய்யய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓ!....... ரொம்ப கவலையாய் இருக்கிறதே, அளகேசு! அதாவது இந்த பாடல்... எங்கள் கைவசம் இல்லையே! சரி.... பரவா யில்லை| அதையும் விட சுபர் பட சுபர் பாடல் ஒன்ரு இருக்கிறது!' அதை ரொம்ப சுபராகத் தருகிறோம்!'
'சாரப் பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்!...'
வானொலியை அடித்து மூடிவிட்டு அழுதேன். குலுங்கிக் குலுங்கி அழுதேன். இதற்கு முன்னர் உண்டாகியிராத துன்ப நோயால் ஆட்கொள்ளப்பட்டவனைப் போல் அழுதேன். 'செத்துப் போய் விடலாமா' எனும் முரண் தூண்டுதலோடு அழுதேன்.
அப்போதே வேறுமோர் அழுகை கேட்டு நிமிர்ந்தேன். எவருமே எனக்கு முன்பாய் இலர். மனைவி அடுபுலத்தில்| குழந்தை உறக்கத்தில்.
'நான்தான்' என்றது தொலைக் காட்சிப் பெட்டி. 'நீ தமிழ் வளர்க்கப் பிறந்தவன். தமிழால் பேரன்புடன் வளர்க்கப்படுபவன். மனிதன் போராடி வெல்ல வேண்டுமே தவிர, இறந்து போக நினைக்கலாமா? கூடாது. ஆனால் நான் செத்துப் போகலாம்!'
என் கண்களின் முன்பாகவே தொலைக்காட்சிப் பெட்டி கரைந்து புகையாகியது!
'கடவுளே!' என்று தலையில் கைவைத்தாள் அப்போதுதான் வீட்டுக்குள் வந்த தங்கை, 'அநியாயம் அண்ணே... இனிமேப்பட்டு அண்ணிக்கு டீவியும் பாக்கேலாமப் போயிறிச்சே! எம்புட்டு நாடகம் இருக்கு! டீவிக்குப் பதிலா இந்தக் காட்டுக் களுத ரேடியோ தொலைஞ்சி போயிருந்தா என்னவாம்!'
'இஞிமேப்பட்டு அஞ்ஞிக்கி ஜீவீயும் பாக்கேஜாம போய்றிச்சே!...' என்று எரிந்து விழுந்தேன் நான். 'வீடான வீட்ல இனிமேலயாவது அழுகையும் ஒப்பாரியும் இல்லாம இருக்கட்டும்!'
'நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?' என்றது வானொலிப் பெட்டி. 'தொலைக் காட்சியாள் அறிவில் இளையவள்| முன்பின் எண்ணிப் பாராமல் தற்கொலை செய்து கொண்டாள்! மூத்தவள் நானும் அறிவற்றுப் போக வேண்டுமா? அப்பனே, எழுத்தாளா! அழாதே! தமிழின் இனிமைக்குக் கேடுவராமல் தமிழில் உரையாடுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
'தமிழருக்காக ஒரு போராட்டம் வர முடியும் என்றால் தமிழ்ப் பேசுவதாகச் சொல்வோரிடமிருந்து தமிழைப் பாதுகாக்க ஒரு போராட்டம் வராமலா போய்விடும்?
(யபத்ரா - 20 - டிஸம்பர் - 2009)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment