Showing posts with label Prophet Muhammad. Show all posts
Showing posts with label Prophet Muhammad. Show all posts

Sunday, February 5, 2012

மீலாதுன்னபி தினம்



நெருப்பெடுக்கும் பாலை நிலம் படுத்திருக்கும்
நீசர்களும் பூசல்களும் நிறைந்திருக்கும்
இருட்கிடங்காய் வரலாறு சித்தரிக்கும்
இதயத்து நிலப்பரப்பு மதுவெறிக்கும்
உருவத்து வழிபாடும் உயிர்க் கொலையுமாக
உன்மத்தங் கொண்டோர்கள் உலவுங்காலை
அருட்பிழம்பாய் அவதரித்தார் முஹம்மத் இந்த
அகிலமெலாம் அருள் ஒளியாய் ஆனதன்றே

குலப்பெருமை கொண்டிருந்தார் - கோஷ்டியாகி
குருதியிலே குளித்தெழுந்தார் பிறந்ததோ பெண்
குலக்கொழுந்தே யானாலும் குழியிலிட்டார்
கொடுமைகளே கொள்கையென் றார்த்தாரிடையே
வலம் வந்தார் வள்ளல் நபி வாஞ்சை சொன்னார்
வல்லவனில் தக்வாவைக் கொண்டார் மட்டும்
நலங்கண்டார் என்றுரைத்தார் நங்கையர்தம்
நலங்காத்தார் விதவைக்கும் வாழ்வு தந்தார்

கல்லெறிந்தார் கஸ்தூரிமேனி ரத்தக்
காடாக - ஆனாலும் கருணை செய்தார்
பொல்லாத மூதாட்டி குப்பை போட்டாள்
பூமேனி அழுக்காகப் பொறுமை காத்தார்
கல்லாத காட்டரபி கைகள் தொட்டுக்
கடுமுழைப்புக் காகநல் வாழ்த்துச் சொன்னார்
வல்லாரால் வறியவரின் வாழ்வு ஓங்க
வாழ்வியலின் தத்துவங்கள் விதந்துரைத்தார்