இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அண்மையில் ‘மௌனத்தின் புன்னகை’ என்த தலைப்பில் வானொலி நிகழ்ச்சியொன்றினை பிறை எப்.எம். வானொலி ஊடே ஒலிபரப்பியது. ஒலிபரப்பப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதான அங்கமாக நாடகங்கள் அமைந்திருந்தன. முஸ்லிம் சமூகத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளை வெவ்வேறு கோணங்களில் இந்நாடகங்கள் படம் பிடித்துக் காட்டின. இந்நாடகங்களில் நடித்த ஒரு கலைஞன் என்ற வகையில் இது பற்றிய எனது கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நான் செவ்வி காணப்பட்டேன். இந்தச் செவ்வி ‘எங்கள் தேசம்’ பத்திரிகையின் ஏப்ரல் 15 - 30, 2011 இதழில் 13ம் பக்கம் இடம்பெற்றுள்ளது.
1. வானொலி நாடகம் இஸ்லாமிய சமூக விழுமியங்களை இலகுவாக எடுத்துக்கூறுவதற்கான காத்திரமான ஊடகம் என்பதை மௌனத்தின் புன்னகை நிகழ்ச்சியில் இடம்பெற்ற இருபது நாடகங்களும் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளன?
எனக்குக் கிடைத்த தகவல்களின் படி அதாவது அவற்றில் நடித்த ஒரு நடிகன் என்ற வகையில் என்னோடு பேசியவர்களது கருத்துக்களின்படி பரவலான நேயர்களை இந்நாடகங்கள் கவர்ந்துள்ளன. ஒரு கதையை அல்லது கட்டுரையை அல்லது கவிதையை ஒருவர் படித்தால்தான் அது என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நீண்ட நெடுங்காலமாக நாடகங்களுக்கு மனித சமூகத்தில் பெரு வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. நாடகமே சினிமாவாகவும் சின்னத் திரையாகவும் மாறியிருக்கிறது. அவை எப்படி மனிதர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்பதை நான் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை.
வானொலி நாடகங்களுக்கு அன்று முதல் இன்று வரை இருந்து வந்த மதிப்புக் குறைந்து விடவில்லை. முஸ்லிம் வானொலி நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கேட்டு வந்த நேயர்களையும் அவை சமூகத்தில் உண்டு பண்ணிய தாக்கங்களையும் நான் அறிவேன். இலங்கை முஸ்லிம்கள் நாடகம் என்ற கலை வடிவத்தை மொத்தமாகக் கைவிட்டு விட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. கலை வடிவங்களில் நேரடியாக மக்களைச் சென்றடையும் ஒன்றுதான் நாடகம். இதை உணராத படியால் அல்லது இது பற்றிய விழிப்பு இல்லாத படியால் நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெறுமனே பத்திரிகைகளில் எழுதியும் வெளியிட்டும் வருகின்றோம்.
இந்த நாடகங்கள் ஒலிபரப்பான பின்னர் ஒரு பெரிய அலை வானொலி நாடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தினை நேரடியாக எனக்கு உணரக் கூடியதாக இருந்தது. இந்த அலை வரவேற்பு அலை மட்டுமல்ல. அதைப் பொதுவாகத் தாக்க அலை என்றுதான் சொல்லுவேன். ஒரு பிரச்சினையைச் சுற்றிய சமூக நியாயங்களை நாம் எடுத்துக் காட்டும் போது மக்கள் கூட்டம் அதை வரவேற்கிறது. அது நியாயப் பிறழ்வு கொண்டவர்களைப் பாதிக்கவும் யோசிக்கவும் வைக்கிறது. எனவே இந்நாடகங்கள் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
இந்த நாடகங்களின் அதிர்வு இன்னும் சமூகத்தில் இருப்பதை அவ்வப்போது பாராட்டி வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் நான் உணர்கிறேன். நாடகங்கள் ஒலிப்பரப்பாகி பல வாரங்கள் சென்ற பிறகும் கூட சில நண்பர்கள் நேரில் கண்டவுடன் இதுபற்றி என்னுடன் கதைக்கிறார்கள். வேறு தேவைகளுக்காகப் பேச ஆரம்பிக்கும் நண்பர்கள் இதையும் சேர்த்தே கதைக்கிறார்கள் என்பது இந்நாடகங்கள் இன்னும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன என்பதற்குச் சாட்சியாகும். இதற்குப் பிறகும் இவ்வாறான நாடகங்கள் ஒலிபரப்பாகாமல் போய் விட்டாலும் இந்த இருபது நாடகங்களையும் கேட்டவர்கள் தமது வாழ்நாளில் இதை மறக்க முடியாத அனுபவமாகக் கொள்வார்கள் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.