Sunday, May 29, 2011

இரத்தத்தை உறைய வைக்கும் கதைகள்


28.05.2011 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு விழாவில் “ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவருமான தி.ஞானசேகரன் அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை.

அஷ்ரப் சிஹாப்தீனின் நூலான “ஒரு குடம் கண்ணீர்” ஈழத்து இலக்கியச் செல்நெறியில் ஒரு முக்கியமான இலக்கிய ஆவணம். ஈழத்து இலக்கியம் இதுவரை சந்தித்த நூல்களை விட இந்த நூல் உள்ளடக்கத்தில் வித்தியாசமானது. உருவச் சிறப்பு வாய்ந்தது.

உலகின் சகல தர்மங்களும் மீறப்பட்ட அதர்மங்கள், அநியாயங்கள், அத்துமீறல்கள், ஆகிவற்றுள் சிக்குண்டு, சித்திரவதைகள், ஜீவமரணப் போராட்டங்களில் சீரழிந்துபோன அப்பாவி மக்களின் கதைதான் இந்த ‘ஒரு குடம் கண்ணீர்’. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து முடிந்த அல்லது நடந்து கொண்டிருக்கிற மனிதவதையின் கதை இது.

இத்தகைய பொருள்கொண்ட கவிதைகள் சிலவற்றை “பாலஸ்தீனக் கவிதைகளாக பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தந்திருக்கிறார். அதேபோன்று பேராசிரியர் சிவசேகரம் தந்திருக்கிறார். வேறும் சிலரும் தந்திருக்கலாம்

இங்கே அஷ்ரப் தருவது கவிதைகள் அல்ல. கதை வடிவிலுள்ள ஆவணங்கள். ஆவணமாகவும் இலக்கியமாகவும் தன்னை வெளிப்படுத்தும் கதைகள். ஒரு சிறுகதையோ என மயக்கம் தருமளவுக்கு இலக்கியப் பெறுமானம் வாய்ந்த ஆவணங்கள்

இந்தக் ஆவணங்கள் யாவும் உண்மைக் கதைகள். இந்தக்கதைகளை வாசிக்கும்போது எமக்குப் பெரும் மனக் குமுறல்களும் பெரும் சோகங்களும் ஏற்படுகினறன. இக்கதைகள் இரத்தத்தை உறைய வைக்கின்றன. இந்தக் கதைகளில் அஷ்ரப் எவ்விதமான கற்பனையையும் கலந்து விடவில்லை. ஆனால் அவை சொல்லப்படும் முறையில் சம்பவங்கள் அமைக்கப்பட்ட முறையில் அவை இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்று விடுகின்றன.

இங்கேதான் அஷ்ரப் தான் ஒரு கைதேர்ந்த எழுத்தாளன் என்பதை எமக்கு உணர்த்துகிறார்.

அஷ்ரப் ஒரு சிறந்த படைப்பிலக்கியவாதி. அவர் தனது ‘சைத்தூன்’ என்ற கவிதையை எழுதியபோது இலக்கிய உலகம் புருவத்தை உயர்த்தி அவரை ஓர் சிறந்த கவிஞராக இனங்கண்டுகொண்டது. தொடர்ந்து ‘காணாமல்போனவர்கள்,’, ‘உன்னை வாசிக்கும் எழுத்து’ (மொழிபெயர்ப்பு,) ‘என்னைத்தீயி்ல் எறிந்தவன்’ (அரச சாகித்திய விருது பெற்ற நூல்) ஆகிய கவிதை நூல்களின் சொந்தக்காரர். சிறுவர் நூல்கள் மூன்றினை வெளிக்கொணர்ந்தவர். ‘தீர்க்கவர்ணம்’ (பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு) ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்வரை (பயண நூல்) ஆகியவற்றின் சொந்தக்காரர்.

2002ல் அகில உலக இலக்கிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை செயலாளராக இருந்து வெற்றிகரமாக நடத்தியவர். இவ்வருட ஆரம்பத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இருந்து திறமையாகத் தொழிற்பட்டவர் இத்தயை இலக்கியத் தகைமைகளும் இலக்கிச் செயற்பாடுகளும் கொண்ட அஷ்ரப் ‘ஒருகுடம் கண்ணீர் என்ற இந்த ஆவண நூலை இலக்கிய தரத்தில் வழங்கியிருக்கிறார்.

நவீன இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அதிலே இரண்டு பகுதிகள் இருப்பதைக் காணலாம். ஒன்று புனைவு இலக்கியம். மற்றது புனைவுசாரா இலக்கியம் புனைவு இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, நாவல் என்பன அடங்கும். புனைவுசாரா இலக்கியத்துள் கட்டுரைகள் அடங்கும். இந்த இருவகை இலக்கியங்களுமே வாசகனின் கவன ஈர்ப்பைப் பெறவேண்டும். அந்தப் படைப்பில் வாசகன் ஒன்றிப் போகவேண்டும். வாசகன் ஒருவன் கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றை வாசிக்கும்போது அதிலே அவன் ஒன்றிப்போகிறான். ஆனால் கட்டுரை ஒன்றை அவன் வாசிக்கும்போது அது அவனைப் பெரும்பாலும் ஒன்றச் செய்வதில்லை. இதற்குக் காரணம் என்னவென்று யோசித்துப் பார்ப்போமானால் அந்தப் படைப்பின் மொழிநடை வேறுபாடே காரணம் என்பது தெரியவரும். இன்னுமொரு விதமாகச் சொல்லப்போனால் கதை கவிதை எழுதும் நடையில் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை.


கதை கவிதை நாவல் எழுதும் எழுத்தாளனுக்கும் கட்டுரைகள் எழுதும் எழுத்தாளனுக்கும் அவர்களது மொழிநடையில் எப்போதுமே வித்தியாசம் இருப்பதைக் காணலாம். இரு சாராருக்கும் இடையில் மொழியைக் கையாளும் திறன் வேறுபட்டதாக இருக்கும், புனைகதை எழுதும் எழுத்தாளன் ஒருவன் புனைகதைசாரா படைப்பு ஒன்றை எழுதும்போது அவனது மொழிநடையில் வித்தியாசம் இருக்கும். மொழி நடையில் அழகியல் இருக்கும். அந்தப்படைப்பில் ஓர் ஈர்ப்பு இருக்கும்.

இந்த நூல் ஓர் ஆவணப் பெறுமானம் பொருந்திய நூலாக இருந்தபோதிலும், ஓர் படைப்பிலக்கியவாதியால் எழுதப்பட்டதால் இது புனைகதை நூலுக்குரிய அழகியல் அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

இன்றைய பின்னவீனத்துவத்தின் கட்டுடைப்புகள் படைப்பு இலக்கியங்களில் மாத்திரம் நிகழ்வதில்லை. கட்டுரைகளிலும் இடம்பெறுவதைக் காணலாம்.

பல கட்டுரைகள் பல்வேறு காத்திரமான விடயங்களைத் தாங்கிவந்த போதும் எடுத்துரைப்பு முறையில் ஏற்படுகின்ற குறைபாட்டினால், அழகியல் அம்சம் குறைந்து அக்கட்டுரை வாசகரின் கவன ஈர்ப்பைப் பெறமுடியாமல் போய்விடுகிறது.

அதேவேளை புனைகதைப்படைப்பாளி ஒருவர் தாம் சொல்லவந்த கருப்பொருளினை விளக்குவதற்கு தகுந்த கருத்துக்களையும் தரவுகளையும் அந்தப் புனைகதைக்குள் சுவைகுன்றாமல் புகுத்திவிடவும் முடியும். உதாரணமாகக் கூறுவதானால், Tale of two cities என்ற ஆங்கில நவீனத்தில் அதன் ஆசிரியர் Charles Dickens பிரான்சிய அரசியற் புரட்சி பற்றிய தரவுகளை விவரணமாக்கியிருப்பதைக் காணலாம்.

இவ்வாறான பின்னவீனத்துவக் கட்டுடைப்புகள் புனைகதை இலக்கியத்துள்ளும் நடைபெறுகின்றன புனைகதைசாராப் படைப்புகளுள்ளும் இடம்பெறுகின்றன.

இங்கு புனைகதைசாராப் படைப்பொன்றில் கட்டுடைப்புச்செய்து அதற்கு இலக்கிய அந்தஸ்த்தினை வழங்கியிருக்கிறார் அஷ்ரப் சிஹாப்தீன்

இந்த நூலுக்குச் சிறப்பானதொரு முகவுரையை வழங்கியுருக்கிறார் பேராசிரியர் எம். எஸ். எம் அனஸ் அவர்கள்

அதில் ஒருபகுதி பினவருமாறு அமைகிறது. “இனமோதல் இந்த யுகத்தின் பாரிய யதார்த்தமாக மாறியுள்ளது. குறைந்தது 48 நாடுகள் இனத்தேசியவாத மோதலில் அல்லது சண்டையில் சிக்குண்டுள்ளன.

இந்த மோதல்களில் வன்முறை, கொலை, தீவைப்பு, சொத்துக்களை அழித்தல் கற்பழிப்பு, என்ற எல்லாவகை அநீதிகளும் நடைபெறுகின்றன. மற்றுமொரு புறத்தில் இராணுவத்தின் தலையீட்டால் பலசந்தர்ப்பங்களில் குடிமக்கள் கலகங்கள் வெடித்துள்ளன. உகண்டாவிலும் கௌத்தமாலாவிலும் இராணுவம் ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்றது. ருவண்டா, பாகிஸ்தான் ,இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா உட்பட பல நாடுகளில் முடிவுறாத பிரச்சினைகளாக இவை தொடர்வதைக் காணமுடியும், இவையெல்லாவற்றிலும் நிகழும் மனித உரிமை மீறல்களூம் மனிதச் சீரழிவுகளும்தான் இன்று உலகை முடிவுறாத சோதனைக் களமாக்கியுள்ளது.”

அஷ்ரப் சிஹாப்தீன், இந்த நூலை காத்தான்குடிப் பள்ளிவாசலில் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தாய்மாமன் செய்யது ஷரிபுத்தீன், அவரது பிஞ்சுப்புதல்வன் அஜ்மல் ஷரிபுத்தீன், மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலான நூற்றொரு பேருக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்

இந்தநூல் சம்பவங்களின் சோகங்களையும் நிகழ்ந்துள்ள அநீதிகளையும் ஒன்றுதிரட்டி உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைச் சிந்திக்கச் செய்கிறது.

புனைகதை சாராப் படைப்பொன்றில் கட்டுடைப்புச் செய்து அதற்கு இலக்கிய அந்தஸ்த்தினை வழங்கியிருக்கும் அஷ்ரப் சிஹாப்தீனை நான் மனந்திறந்து பாராட்டுகிறேன்.

அஷ்ரப் இந்த நூலை வெளிக்கொணர்ந்ததன் மூலம் ஈழத்து இலக்கிய உலகில் தனது பெயரை ஆழமாகவே பதித்துள்ளார் அவருக்கு எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

ஆஹா... !! திரு. ஞானசேகரன் அவர்களின் முன்னுரை அற்புதம்..பலபக்கமான தேடல்களில் மூழ்கி
எழும்பிய ஒரு அலசல்.ஒரு அறிமுக உரை என்பதையும் தாண்டி பல கோணங்களில் என்னைத் தொட்டது எனபதிலும் சந்தேகமில்லை..அறியாத பல விசயங்கள், சந்தேகங்களுக்கு விடை தேடிக் கொடுத்த திரு. ஞானசேகர் அவர்களின் உரைக்கு பலகோடி.நன்றிகள்..“ஒரு குடம் கண்ணீர்” இன் சிறப்பு அழகாக சொல்லப்பட்டது.மொத்தத்தில் அலட்டல் இல்லாத அலசல்..அருமை !

”நவீன இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அதிலே இரண்டு பகுதிகள் இருப்பதைக் காணலாம். ஒன்று புனைவு இலக்கியம். மற்றது புனைவுசாரா இலக்கியம் புனைவு இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, நாவல் என்பன அடங்கும். புனைவுசாரா இலக்கியத்துள் கட்டுரைகள் அடங்கும். இந்த இருவகை இலக்கியங்களுமே வாசகனின் கவன ஈர்ப்பைப் பெறவேண்டும். அந்தப் படைப்பில் வாசகன் ஒன்றிப் போகவேண்டும். வாசகன் ஒருவன் கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றை வாசிக்கும்போது அதிலே அவன் ஒன்றிப்போகிறான். ஆனால் கட்டுரை ஒன்றை அவன் வாசிக்கும்போது அது அவனைப் பெரும்பாலும் ஒன்றச் செய்வதில்லை. இதற்குக் காரணம் என்னவென்று யோசித்துப் பார்ப்போமானால் அந்தப் படைப்பின் மொழிநடை வேறுபாடே காரணம் என்பது தெரியவரும். இன்னுமொரு விதமாகச் சொல்லப்போனால் கதை கவிதை எழுதும் நடையில் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை.”

சேர்.. வாழ்த்துக்கள்.. மற்ற அதிதிகளின் உரைகளையும் கேட்க ஆவலாக உள்ளோம்..
சீக்கிரமாக பதிவேற்றம் பண்ணுங்கள்...