Sunday, September 26, 2010

தீர்க்க வர்ணம்


ஓர் இரசனைக் குறிப்பு

- தாஸிம் அகமது -

அஷ்ரஃப் சிஹாப்தீனின் தேடலின் ஆழத்தையும் நிறையத் தகவல்களையும் உள்ளத்தைக் கவரும் எழுத்து நடையையும் முன்னிறுத்திக் கொண்டு நம் முன் வந்தருக்கிறது தீர்க்க வர்ணம் என்ற அவரது பத்தி எழுத்துத் தொகுப்பு நூல். தினகரன் வாரமஞ்சரியில் ஏறக்குறைய பதினாறு மாதங்களாகத் தொடராக அவர் எழுதி வந்த போது பலர் பத்திரிகையைக் கையிலெடுத்ததும் முதலில் இதனைப் படித்து வந்ததை நான் அறிவேன்.

தமிழில் இதுவரை அறியப்பட்ட பத்தி எழுத்துக்கள் பெரும்பாலும் அரசியல் தொடர்பானவையாகவே இருந்து வந்துள்ளன. இன்னும் சிலர் இலக்கியம், பொது விடயங்கள் என எழுதி வந்திருந்த போதும் ஒரு நூலாகத் தொகுப்பதற்கான சாதக நிலையும் தகவல்களும் கொண்டவையாக அவை இருக்கவில்லை. தீர்க்க வர்ணம் நூலில் இடம் பெற்றுள்ள தகவல்களும் தனி நபர் விடயங்களும் சம்பவங்களும் எழுத்து நடையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. காலத்தையும் தாண்டி நின்று பேசவல்லதாக இவரது பத்திகள் இருப்பதால் அவை நூலுருவாக வருவதற்கு வாய்ப்பாகப் போய் விட்டது.

அண்மையில் நடந்த ‘தீர்க்க வர்ணம்’ வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்திய பேராசிரியர் சபா ஜெயராசா குறிப்பிட்டது போல் இப்பத்திகள் இலக்கிய வடிவத்துக்குள் வந்திருக்கின்றன. அதை இன்னொரு வகையில் குறிப்பிடுவதானால் தனது பத்திகளை அவர் இலக்கிய ரசத்துடன் பிசைந்து நமக்குத் தந்திருக்கின்றார் என்று சொல்ல முடியும்.

இருநூற்று இருபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 68 பத்திகள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு விதமான தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளைச் சார்ந்த பலரைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. நாம் அறிந்த மற்றும் அறியாத விடயங்கள் பலவும் நம்மைக் கவரும் வகையில் சொல்லப்பட்டிருக்கின்றன. சில பத்திகள் வாய்விட்டுச் சிரிக்கும் வகையிலும் சில வாசித்து முடித்ததும் மனத்துயரைத் தருவதாகவும் எழுதப்பட்டிருப்பது அஷ்ரஃப் சிஹாப்தீனின் எழுத்து வல்லமைக்குச் சான்றாக அமைகின்றது.

‘செம்மறி ஆடுகள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு பத்தியை நான் உதாரணத்துக்குத் தர முடியும். இளம்பிள்ளை வாதம் பற்றி அப்பத்தியைத் துவங்கி, சொட்டு மருந்து பற்றி என்னிடம் தகவல் பெற்றதைச் சொல்லி வரும் அவர் நாட்டில் நிலவும் கண்ணி வெடி அபாயத்துடன் அதைத் தொடர்பு படுத்தி விடுகிறார். போலியோவானது தடுக்கக் கூடிய இயற்கைக் குறை என்பதைச் சொல்லும் அவர் நாமாகவே கண்ணி வெடியை விதைத்துக் கால்களை இழப்பதைத் தொட்டுக் காட்டுவது சிலாகித்தக்க எழுத்து வன்மையாகும். அத்துடன் அவர் நின்று விடவில்லை. இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை வந்திருந்ததையும் அவர்கள் கண்ணி வெடியிலிருந்து தம்மைக் காக்கத் தமக்கு முன்னால் செம்மறி ஆடுகளை நடக்கவிட்டதையும் கண்ணி வெடியில் ஆடுகள் சிக்கி இறந்தால் அவை அன்றைய உணவாகப் பயன்படுத்தப்பட்டன என்ற தகவலையும் தருகிறார்.

இந்தப்பத்தி முத்தாய்ப்பாக ஆப்;கானிஸ்தான் நோக்கி நகர்வது இன்னும் சுவாரஸ்யத்தைத் தருகிறது. அங்கு மேலைத்தேயத் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னரும் ஆண்களை முன்னால் நடக்கவிட்டுப் பெண்கள் பின்னால் நடந்து வருவதையிட்டு ஆச்சரியப்பட்டு அப்பெண்ணிடம் கேட்கிறாள்:- “ஒரு காலத்தில் ஆண்களுக்குச் சமமாக நடந்து வருதற்காகக் கிளர்ச்சி செய்தீர்களே... இன்னும் அதே அடக்குமுறைக்குள்தானா இருக்கிறீர்கள்?” அந்தப் பெண் வெகு சாதாரணமாகப் பதில் சொல்கிறாள். “இப்படி நடந்து வருவதற்குக் காரணம் கண்ணி வெடிகள்!” என்று. இத்தகைய அழகுடன் நகர்த்திச் செல்லும் அஷ்ரஃப் சிஹாப்தீன் பத்தியின் இறுதியில் ஒரு நீதியைச் சொல்கிறார் இவ்வாறு: ‘ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு புத்திசாலித்தனமான பெண் இருக்கிறாள்.’

இலங்கை அமைதிப்படை செம்மறிகளைப் பயன்படுத்தியதைப் போல பெண்கள் ஆண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சூசகமாகவும் கருத்துச் செறிவோடும் தகவல்களோடும் ரசனையோடும் அஷ்ரஃப் சிஹாப்தீன் சொல்வது போல வேறு யாரும் எழுதி நான் படித்தது கிடையாது. இத்தனை விடயத்தையும் தாளின் ஒரு பக்கத்துக்குள்ளேயே எழுதுவதற்கு அஷ்ரஃப் சிஹாப்தீனால் மட்டுமேதான் முடியுமோ என்று கேட்கத் தோன்றுகிறது.

நூலுக்கு மதிப்புரை வழங்கியிருக்கும் மு.பொன்னம்பலம் அவர்கள், ‘பல்வகைக் குணக் கலவைகளை வெளிப்படுத்தும் இப்பத்திகள் சில என்னை லயிக்க வைத்துள்ளன. சில அதிர்ச்சியைத் தந்தவையாய் அமைந்தன. சில இன்துயரைக் கவிய வைத்தன’ என்றும் ‘மொத்தத்தில் இந்நூல் ஒருவர் சலிப்புற்றிருக்கும் போது தன்னை உயிர்ப்புற வைக்கப் படிக்க வேண்டிய நூல்’ என்றும் சான்று பகர்கிறார்.
நீங்களும் தீர்க்க வர்ணம் நூலைப் படித்து ரசியுங்கள். ஒரே வாசிப்பில் மனதைப் பாரமாக்கவும் இலகுபடுத்தவும் இதயம் மலர்ந்து சிரிக்கவும் வைக்கின்ற மாயரசனை மிக்க இத்தொகுப்பு நூல் தமிழ் எழுத்தில் ஒரு முன்னோடி இலக்கியப் பகிர்வாகும்.


தினக்குரல்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: