Sunday, September 26, 2010

கூடு கட்டத் தெரியாத குயில்கள்

ஒரு ரசனைக் குறிப்பு

ஒரு படைப்பாளி தனது படைப்பை வெளிப்படுத்தப் பயன்படுத்தியருக்கும் மொழியானது ஒரு தேர்ந்த வாசகனைத் திருப்திப்படுத்துமாக இருந்தால் அப்படைப்பு ஐம்பது வீதம் வெற்றி பெற்றதாகி விடுகிறது. சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிற நிலையை எட்டுமாக இருந்தால் அப்படைப்பு முழு வெற்றியை நோக்கியிருப்பதாகக் கூறலாம்.

இந்த இரண்டு நிலைக்குமான பிரிகோட்டுக்கு மத்தியில் சில கதைகளும் பிரிகோட்டுக்கு மேலும் கீழுமாகச் சில கதைகளும் ‘கூடுகட்டத் தெரியாத குயில்கள்’ என்ற மருதூர் ஏ. மஜீத் அவர்களின் அண்மையில் வெளி வந்த சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

1979ல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘பன்னீர் வாசம் பரவுகிறது’ வெளிவந்த போது அதன் வாசம் முழு இலங்கையிலும் பின்னர் தமிழகத்திலும் பரவியிருந்ததைப் பலர் மூலம் அறிய முடிந்தது. அத்தொகுப்பில் இடம் பெற்றிருந்த ‘பன்னீர் வாசம் பரவுகிறது’ என்கிற கதையானது வேறு சிலருக்கும் பின்னாளில் கதைகளுக்கான சார்புக் கருவாக மாறியிருந்ததை ஒரு மூத்த படைப்பாளி மூலம் நான் அறிய வந்தேன்.

அத்தொகுதி பற்றி மறைந்த எழுத்தாளர் இளங்கீரன் முதற் கொண்டு அந்தனி ஜீவா வரை பல இலக்கியவாதிகள் பத்திரிகை வானொலியில் சிலாகித்து எழுதியும் பேசியுமிருக்கிறார்கள். இரண்டு சிறு கதைத் தொகுதிகளுக்குமிடையிலான கால இடைவெளி முப்பது வருடங்களாக இருந்த போதும் மணிப்புலவரின் கதைகளைப் பற்றிப் பேச விளைகையில் அவரது முதற் தொகுதி அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த வரவேற்பையும் அவரது எழுத்தாளுமையையும் கவனத்திற் கொண்டாக வேண்டியிருக்கிறது. 1970ல் வெளியான மணிப்புலவரின் ‘கறுப்பையா’ என்ற கதையை மறைந்த அபூதாலிப் அப்தல் லத்தீப் ரஷ்ய மொழியில் பெயர்ப்பதற்குச் சிபார்சு செய்திருந்தார் என்பதும் மணிப்புலவரின் எழுத்துக்குக் கிடைத்த பூ மாலைதான்.

கூடுகட்டத் தெரியாத குயில்கள் என்ற அண்மையத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பதின் மூன்று கதைகளில் 1983, 2009 ஆகிய வருடங்களில் தலா ஒவ்வொரு கதைகள் எழுதப்பட்டுள்ளன. 2007ல் மூன்று கதைகளும் 1998, 2008 ஆகிய வருடங்களில் இரண்டு கதைகளும் 2010ல் நான்கு கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

சில விமர்சகர்கள் ஒரு படைப்பைப் பற்றிய விமர்சனத்தில் காலத்தைக் கவனத்தில் கொள்வதில்லை. மாட்டு வண்டி யுகக் கதையை மாட்டு வண்டிக் கால யுகத்தில் நின்றே பார்க்கவும், பேசவும் வேண்டும். அந்தக் கதை இன்றும் பொருந்துகிறது என்றால் அது இன்றும் ஒரு சிறப்பான படைப்புத்தான். இன்று பொருந்தவில்லை என்பதற்காக அதைக் கேலிக்குரிய ஒன்றாகப் பார்ப்பதும் பேசுவதும் அறிவீனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நாமும் மாட்டு வண்டி யுகத்தைத் தாண்டித்தான் வந்திருக்கிறோம்.

மணிப்புலவர் இயல்பாகவே மிகவும் தெளிவானதும் எளிமையானதுமான வார்த்தைகளில் எல்லாப் படைப்புகளிலும் தோன்றும் ஒருவர். இந்த எழுத்துப் போக்கானது ஒரு படைப்பை விரிந்த தளத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியது. மிகச் சாதாரண வாசகனிடத்தும் இந்த எழுத்தின் மூலம் அவருக்கு வெற்றி கிடைத்து விடுகிறது. அதே போல அளவான சொற்களில் பேசுவதால் தேர்ந்த வாசகரிடத்தும் அவர் சென்றடைந்து விடுகிறார். தாமும் குழம்பி மற்றவரையும் குழப்புவது போன்ற எழுத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பலர் தத்தளிப்பதை நாம் காண்கிறோம். இவ்வாறான தத்துப் பித்து எழுத்திலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள மணிப்புலவருக்கு அவரது தமிழறிவு கைகொடுத்திருக்கிறது.

கதை எப்படி முடியப் போகிறது என்று கதையின் கடைசித் தறுவாய் வரையும் தீர்மானிக்க இயலாதிருப்பது இக்கதைத் தொகுதியில் உள்ள பல கதைகளின் சிறப்பம்சமாகும். அதற்காகக் கதைகளை வேறு ஒரு கோணத்தில் நகர்த்திச் சென்று திடீர்த் திருப்பம் ஒன்றை மணிப்புலவர் கையாளவும் இல்லை. தான் சொல்லிக் கொண்டே போகும் சம்பவங்களினூடாகவும் எளிய வார்த்தையாடலூடாகவும் இதனை அவர் சாதிக்கிறார்.

இந்நூலில் உள்ள பதின் மூன்று கதைகளுள் மூன்று கதைகள் பாலியல் சம்பந்தப்பட்டவை. கீழ்த்தட்டு மக்களின் பாலியல் சீரழிவை இரு கதைகளும் மேல் தட்டு மனிதர்களின் பாலியலை ஒரு கதையும் சொல்கிறது. மேல் தட்டு வர்க்கத்தின் கதை உண்மையில் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. அறிவியல் வளர்ச்சியும் உயர் தொழில் வகிப்பதால் கிடைக்கும் சுதந்திரமும் எப்படி வரை முறைகளைத் தகர்க்கத் துணை புரிகின்றன என்பதைத் தெளிவாகச் சொல்லிப் போகிறது கதை. ஏனைய இரண்டு கதைகளும் கிராமங்களில் நிகழ்வதாகச் சித்தரிக்கப்படுகின்றன. மனோ நிலை சரியில்லாத பெண் ணும் ஒரு கீரைக்காரியும் முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரிக்க நேர்தல் இக்கதைகளின் கருக்களாக இருக்கின்றன.

இன்று நவீனத்துவம் பின் நவீனத்துவம் என்ற பெயரால் முகச் சுழிப்பை ஏற்படுத்தும் தலைமுறையினர் இக்கதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். எதையும் சூட்சுமமாகவும் அதே வேளை எல்லோருக்கும் புரியக் கூடியவாறு ரசனை சார்ந்த இலக்கிய நடையூடாக மனங் கோணாமல் அசூசைப் படாமல் சொல்ல முடியும் என்பதற்கு இக் கதைகள் சான்றாகின்றன.

இக்கதைகளில் வரும் கதை மாந்தர்கள் பின் தங்கிய கிராமங்களில் நமக்கு முன்னால் நடமாடியவர்கள். கல்வியும் வசதியும் வந்த பின் ‘யார் எப்படிப் போனால் நமக்கென்ன’ என்ற மனோபாவம் வளர்ந்து விட்டதால் பொதுப் பார்வைகள் இவர்களில் படுவதில்லை. மணிப்புலவர் மிகவும் அவதானிப்புக் கொண்டவர் என்பதால் இவர்கள் அவரது கதைகளில் வெகு சாதாரணமாக வந்து போகிறார்கள். ஒரு நல்ல படைப்பாளி நிச்சயமாக கூர்ந்த அவதானமுள்ளவனாகத்தான் இருப்பான்.

மணிப்புலவரின் கதைகளில் உள்ள முக்கியமான அம்சமாகக் குறிப்பிடப்பட வேண்டியது அவரது கதைகளுக்கான நிலைக் களன்கள் பெரும்பாலும் கிராமங்களாக இருப்பதே. அக்கதைகள் எழுதப்பட்ட காலப் பகுதியில் கிராமங்கள் எவ்வாறிருந்தன என்பதைத்தான் கதைகளினூடு சொல்லி நகர்கிறார். கிராமியத்தை நாட்டார் பாடல்களில் அனுபவிக்கலாம் என்று சொல்வது எப்படி உண்மையோ அதே போல மணிப்புலவரின் கதைகளிலும் ஆழ அனுபவிக்க முடியும் என்பது உண்மை. கிராமிய மணத்தோடு அம்மண்ணின் வாசனையோடு அந்தந்தக் கதைக்கே அவசியமான வார்த்தைகளினூடாகப் பயணித்திருப்பது பாராட்டத்தக்கது. கதை மாந்தர்களும் கூட அடிமட்ட மக்களாயிருப்பது மற்றொரு விசேட அம்சம். மேல்மட்ட மாந்தரது கதைகளிலும் கூடத்; துணைப் பாத்திரங்களாக வரும் சாதாரண தொழிலாளிகள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

கதைகளில் ஆங்காங்கே பழமொழிகளும் பழைய செய்யுள் வரிகளும் புராண உதாரணங்களும் மிக லாவகமாகக் கையாளப்பட்டிருப்பது மணிப்புலவரின் தமிழ் அறிவை மட்டுமன்றி அவற்றினூடாகவும் பேசலாம் என்கிற திறமையையும் எடுத்துக் காட்டுகிறது. சில இடங்களில் அவரது இலக்கிய நயம் மிகுந்த வார்த்தைகள் ரசனை விதைத்துச் செல்கின்றன. ‘கதை முடிந்து விட்டது. ஆனால் சிற்றூரில் கீரைக்காரி கதை முடியவில்லை’, ‘கிராமப்புறம் பச்சைக் குழந்தையின் வயிற்றைப் போன்றது. பாலைத் தவிர அதனால் வேறு ஒன்றையும் சீரணிக்க முடியாது’, ‘உம்மா என்பது ‘மெடம்’ என்ற பொருள் தொனிக்கும் சொல்லாகும்’, ‘பகலில் ஈயின் இரைச்சல்: இரவில் நுளம்பின் கரைச்சல்’, ‘துபாய்க் காசு மோட்டார் சைக்கிளாய்ப் பறக்கிறது’ போன்ற ரசனை மிக்க வரிகளைக் கதையுடன் சேர்த்துப் படிக்கும் போது உள்ளத்தை அள்ளிச் செல்கின்றன.

‘தரையிலே கண்சிமிட்டும் தாரகைகள்’ என்று ஒரு கதை இத்தொகுதியில் உள்ளது. கிடைக்கவிருக்கும் பணத்தை எதிர் பார்த்து வெய்யிலுக்குள் களைக்கக் களைக்க நடக்கும் கதை நாயகன் பாதையோரத்தே புல்லாங்குழலிசை வழிந்தோடுவதைக் கேட்டுத் தரிக்கிறான். உடைந்த புல்லாங்குழலிலிருந்து வரும் அந்த இசையில் மயங்கிக் குறுகிய பஸ் பயணத்துக்காக வைத்திருந்த ஆறு ரூபாய்களையும் அந்த புல்லாங் குழலை வாசித்த வயோதிபருக்குக் கொடுப்பது கதை. ஒரு கலைஞனுக்கே கலையின் மகிமையும் உன்னதமும் புரியும் என்பதை அழகுறச் சொல்லும் கதை இது. இதே போல ‘கூடு கட்டத் தெரியாத குயில்கள்’ என்ற கதை என்னளவில் ஓர் அழகான கவிதை. இந்த இரண்டு கதைகளையும் அற்புதமான குறும்படங்களாக எடுக்க முடியும்.

மணிப்புலவரின் கதைகளைப் படித்துக் கொண்டு செல்லும்போதே அந்தக் காட்சிகள் நம் அகத்திரையில் விரியத் தொடங்கி விடுகின்றன. நாம் நம்மையறியாமலேயே கதையில் ஒன்றிப் போய்விடுகிறோம். கதையை எந்தளவுக்குச் சொல்ல முடியுமோ அந்த அளவோடு அவர் நிறுத்திக் கொள்கிறார். இவ்வளவுதான் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கதை சொல்வதுவும் ஒரு நல்ல படைப்பாளியின் குணாதிசயம்தான். கதை ஜவ்வாக இழுபட்டுப் போகும் போது அது அலுப்பைத் தந்து விடும். தவிர, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு செய்தியை நமக்குச் சொல்லுகின்றன. வெறும் காட்சிகளை விரிப்பதுடன் கதைகள் முடிவடையவில்லை என்பது ஆறுதலளிக்கும் விடயம்.

கதை சொல்லிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. மணிப்புலவரின் பாணியும் தனித்துவமானது. அவருடன் நெருங்கிப் பழகினால் அவர் நம்முடன் சாதாணமாகக் கதைப்பது போலவே அவரது கதைகளின் வார்த்தைப் பயன்பாடும் அமைந்திருக்கிறது. அவருடன் கதைத்துக் கொண்டிருப்பது எப்படி அலுப்புத் தட்டுவதில்லையோ அதே போலவே அவரது கதைகளும் அலுப்புத் தட்டுவதில்லை.

மணிப்புலவரின் சமகால எழுத்தாளர்கள் சிலர் தமது கதைகளில் தென்னிந்தியக் கதாசிரியர்களிடமிருந்து கடன் வாங்கிய ‘தேஜஸ்’, ‘ஜ்வாலை’, ‘லாகிரி’, ‘ஊழித்தாண்டவம்’ போன்ற சொற்களைக் கையாள்வதை இப்போதுதான் தவிர்த்து எழுத ஆரம்பித்துள்ளார்கள். மணிப்புலவரின் கதைகளில் அவ்வாறான சொற்பிரயோகங்கள் எவையுமே கிடையா. நமது சொற்கள் கொண்ட பேச்சும், நமது மண் வாசனையும், நமது பழக்க வழக்கங்களும் மாத்திரம் அவரது கதைகளில் கலந்து மணம் வீசுகின்றன. அது நமது கிணற்றில் நமது துலாவில் இறைத்துக் குளிப்பது போன்ற ஒரு சுகமான அனுபவம் என்று சொல்வது பொருந்தும்.

சில கதைகளின் தலைப்புகளை ஓர் இலக்கியப் பார்வையோடு அவர் வைத்திருந்தாலும் அவற்றைச் சுருக்கமாக வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ரசனைக் குறிப்பு எழுத வந்த நான் இதைச் சொல்வது பொருத்தமில்லை என்பது எனக்குத் தெரியும். புத்தகத்தின் பின்புற அட்டையில் இருக்கும் அவரது புகைப்படத்தில் அழகாகவும் இளமையாகவும் அவர் இருப்பதைப் பார்த்துக் கண்ணேறு பட்டு விடக் கூடாது என்பதற்காக மட்டுமே இதனைக் குறிப்பிட்டேன்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: