Wednesday, September 8, 2010

‘தீர்க்க வர்ணம்’


அஷ்ரஃப் சிஹாப்தீனின்
‘தீர்க்க வர்ணம்’
ஒரு வெட்டு முகம்

- கலைவாதி கலீல் -

அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘தீர்க்க வர்ணம்’ என்ற நூல் என் கரம் எட்டியது. ‘தினகரன்’ வாரமலரில் அவர் வாராவாரம் எழுதி வந்த பத்தி எழுத்துக்களின் தொகுப்புத்தான் இந்நூல். 236 பக்கங்களைக் கொண்ட 68 பத்திகளைக் கொண்ட இக்கனதியான பத்தி எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பத்தி ((Colomn) நூலின் மூலம் மூன்று விடயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே பெறுமானம் மிக்க கவிதைகளையும் ஓரிரு சிறுகதைகளையும் எழுதியிருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனால் வெகு நேர்த்தியாகப் பத்திகளையும் எழுத முடிந்திருக்கிறது என்பது பிரதானமான ஒன்று. இரண்டாவதாக செம்மையான தமிழ் மொழி உச்சரிப்புடன் கம்பீரமான - அதே வேளை மென்மையான - ஒலிவாங்கிக்கேற்ற குரல்வளம் கொண்ட அறிவிப்பாளராக மட்டுமே; பெரும்பாலோரால் அறியப்பட்ட அஷ்ரஃப் சிஹாப்தீனின் இலக்கிய மீள் பிரவேச வெற்றி உலா. மூன்றாவதாக, வெகு சிரமதி;தின் மத்தியில் ஒரு கவிதைச் சஞ்சிகையை வெளிக் கொண்ர்ந்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்று இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தலைவிதியின் படி தொடர்ச்சியாக வெளியிட முடியாத நிலையிலும் கூட, அடிக்கடி நூல்களைப் பிரசவித்துக் கொண்டிருக்கின்ற தற்றுணிவும் ஆளுமையும்.

வேறு சில காரணங்கள் இருப்பினும் அவையெல்லாம் சிறியவைகளே என்பது என் கருத்து.

‘வால் அளவு’ என்று மகுடமிடப்பட்டுள்ள முதலாவது பத்திக்கும் இறுதியில் இடம் பெற்றுள்ள ‘எதிர் வினை’களுக்கும் இடையில் ஓர் அழகிய ஒழுங்கமைப்பும் ஒற்றுமையும் இருப்பதனையும் இந்நூலில் அவதாக்க முடிகிறது.

இந்தப் பத்தி எழுத்து இருக்கிறதே... இது இலக்கியந்தானா அல்லது இலக்கியத்தின் ஒரு வகைப்பட்டதா.. அல்லாவிடில் அறிவியல் வகைப்பட்டதா.. அதுவும் இல்லாவிடில் இலக்கியம் செய்து தோல்வி கண்டவனின் மன உழைச்சல்களைப் போக்கும் ஒரு வடிகாலா... என்ற வாதப் பிரதிவாதங்கள் இன்றும் எம் இலக்கிய உலகில் உலா வரத்தான் செய்கின்றன.

நானும்கூட ஒரு பத்தி எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து நின்று போய்விட்ட ‘சிரித்திரனி’ல் எனது பத்தி எழுத்துக்கள் வெளிவந்துள்ளன. யாழ்ப்பாண நாளிதழான ‘ஈழுநாடு’, ‘பாமிஸ்’ சஞ்சிகை, ‘தினகரன்’ போன்றவை எனது பத்தி எழுத்துக்களைச் சுமந்திருக்கின்றன. எனவே பத்தி எழுத்துக்ள என்றால் என்ன என்பது எனக்கு ஓரளவு தெரியும்.

எமது இலக்கிய உலகைப் பொறுத்த வரை பத்தி எழுத்துக்கள் பெறுமானம் மிக்க ஒன்றாகக் கருதப்படவில்லை. பத்தி எழுத்தாளரான கே.எஸ். சிவகுமாரன் “நான் ஒரு பத்தி எழுத்தாளன்தானே” என்று கூறிக் கொள்வார். பத்தி எழுத்தை உயர்த்துகிறாரா, தாழ்த்துகிறாரா என்று சிந்திக்கப் புகின், “தானே” என்ற இறுதிச் சொல்லிக் மூலம் அவரது எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியும். “உங்கள் பத்தி எழுத்துக்கள் ஆழமில்லையே!” என்று கே.எஸ்ஸிடம் கேட்’ட போது, “எத்தனை அடி ஆழம் இருக்க வேண்டும்?” என்று மறுவினா தொடுத்தவர்தான் கே.எஸ்.

கே.ஏ. அப்பாஸ் (இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஒப் இன்டியா), புகழ் பெற்ற ஆசிரியராகத் திகழ்ந்த குஷ்வந்த் சிங் (தற்போது வயது 96) போன்றோர் சர்வதேசத் தரம் வாய்ந்த பத்தி எழுத்தாளர்களே.

நமது நாட்டைப் பொறுத்த அளவில் கே.எஸ். சிவகுமாரன், அந்தனி ஜீவா, புலோலியூர் இரத்தின வேலோன், தெணியான், அல் அஸ_மத், மேமன் கவி, கே.விஜயன் ஆகியோர் இன்னும் பத்தி எழுத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கே.எஸ். ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். அதன் தராசில் நின்றே அஷ்ரஃப் சிஹாப்தீனின் பத்திகளை ஆராய வேண்டியுள்ளது.

அஷ்ரஃப் ஏற்கனவே தினக்குரலில் ஒரு பத்தியை எழுதி வந்தவர்தான். துரதிர்ஷ்டமாக அதனை என்னால் வாசிக்க முடியவில்லை. ‘தீர்க்க வரணத்’தைக் கூடத் தொடராக வாசிக்கக் கிடைக்கவில்லை. நூலாக வெளிவந்த பின்னர்தான் முழுமையாக வாசிக்க முடிந்தது. ஒரு முறையல்ல, இரு முறையல்ல, மூன்று முறை வாசித்தேன். அவரது பத்திகள் என்னை அவ்வாறு வாசிக்கத் தூண்டின என்றுதான் கூற வேண்டும். பத்தியின் சில குறிப்பிட்ட பகுதிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். சில பந்திகளை வேகம் வேகமாக வாசித்தேன். சிலவற்றை நின்று நிதானித்து வாசித்தேன். அந்த அளவுக்கு இந்தப் பத்தி எழுத்துக்கள் என்னை வெகுவாக ஆட் கொண்டன. அதற்கு மூன்று காரணங்களை முன் வைக்கலாம்.

“இறுக்கம் - சுருக்கம் - சுவை” என்று சுருக்கமாகவே கூறிவிடலாம். சொற்செட்டும் இறுக்கமும் இவரது பத்திகளில் விரவிக் கிடக்கின்றன. “வளவளா” என்று எழுதிவிட்டு வெட்டி வெட்டிச் செப்பனிடுகிறாரா என்று பார்த்தால் அவ்வாறும் தோன்றவில்லை. எழுதும் போதே இறுக்கமாக எழுதி விடுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. மற்றொரு விடயம் பத்தியைத் தொடங்கும் பாங்கு. இது ஒரு தனிக் கலை என்றே கூறவேண்டும்.

ஒரு கட்டுரையை எழுதும் போது முதற்பந்தியே வாசகனை வாசிக்கத் தூண்டும் வண்ணம் அமைந்து விட வேண்டும். எடுப்பும் சொற்பிரயோகமும் வாசகனை ஈர்க்க வேண்டும். முதல் வரியும் முதல் பந்தியும் வாசகனைக் கவராவிட்டால் அவன் கட்டுரையைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ‘ஜோலி’களைப் பார்க்கச் சென்று விடுவான்.

அஷ்ரஃபின் ‘எடுப்பு’ வெகு நேர்த்தியாக இருக்கிறது. அவ்வாறே முடிப்பும்! அதாவது ‘நறுக்’கென்று முடித்து விடுகிறார். ‘நறுக்’கென்ற சொற்பிரயோகத்தின் மூலம் இறுதிப் பகுதியை அஷ்ரஃப் எவ்வாறு செப்பனிட்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இது அவரது இயல்பா அல்லது ‘எடிற்’ செய்திருக்கிறாரா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ‘நறுக்’கென்று முடிக்கும் பாங்கு அவருக்கே அலாதியானது.

இப்பத்திகள் மூலம் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். அதற்காக மூன்று காரணங்களை முன் வைக்கலாம்.

01. பத்திக்காக அவர் எடுத்துக் கொண்ட கரு (Theme அல்லது Plot)

02. எழுத்து நடை (Presentation) சொல்லுகின்ற விதம். (இந்த இடத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் கூற்றொன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். “எவ்வளவு கடினமான, சீரணிக்க முடியாத கருத்துக்களையும் சொல்லுகிற விதமாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ள வைக்கலாம்” என்று ‘ஜே‘ கூறுகிறார் அஷ்ரஃப் சொல்லுகிற விதமாகச் சொல்லுகிறார்.

03. எடுப்பும் முடிப்பும். விசேடமாகப் பத்தியை முடிவுக்குக் கொண்டு வரும் பாங்கு. அது அலாதியானது, தனித்துவமானது, மனதைக் கவருவது அல்லது நெருடுவது.

இந்த மூவகைக் கருத்தியல் அடித்தளத்தில் நின்று ‘தீர்க்க வர்ணத்’தை விமர்சிக்கப் புகுந்தால் உண்மையில் தனி நூல் ஒன்றையே எழுதவேண்டியேற்படும் என்று கூறி வைப்பதில் நான் பின்நிற்கப் போவதில்லை.

‘தீர்க்க வர்ணத்’தில் உள்ள பத்திகளிற் பல பல்வேறு கதைகளைக் கூறுகின்றன. அவை உள்நாட்டுக் கதைகள், தமிழ்க் கதைகள், வெளிநாட்டுக் கதைகள், நாடோடிக் கதைகள் என்று பல வடிவங்கள் எடுத்துள்ளன. கவிதைகள், கவிஞர்களைப் பற்றியும் கூறியுள்ளார். அறிவியல் ரீதியான விடயங்களிலும் கைவைத்துள்ளார். நகைச் சுவை ததும்ப எழுதுவதில் சமர்த்தராகத் திகழ்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன். உண்மையில் உரையாடும் போது கூட நகைச்சுவையுடன்தான் உரையாடுவார், அது ‘சீரியஸா’ன விடயமாயிருந்தால் தவிர!

உலகப் பெருங்கவிஞர்களைப் பற்றிக் கூறியிருக்கிறார். நாம் அறியாத - அல்லது அதிகம் அறியாத ஆபிரிக்கக் (கறுப்பினக்) கவிஞர்களைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

மினிக் கதைகளைப் பற்றிய ஆசிரியரின் கருத்தும் குறிப்பிடத் தக்க ஒன்றாக அமைந்திருப்பது அவதானிக்கக் கூடியது.

“பிறையும் பிச்சைக்காரர்களும்” என்ற பத்தி மூலம் பிறை பற்றியும் பிறையைப் பிரபல கவிஞர்கள் எவ்வாறு கையாண்டுள்ளார்கள் எனப் பிரஸ்தாபித்துள்ளார். இன்றைய நவீன இலக்கியவாதிகளால் மறக்கப்பட்ட ஏறாவூர் புரட்சிக் கமாலின் வார்த்தைக் கீற்றான ‘பொன்னரிவாள்’ நினைவூட்டப்படுகிறது. கவிஞர்களின் வாயில் பிறை படும்பாடுகள் கோடிடடப்பட்டுள்ளன.

இஸ்ரேலியர்களின் மூர்க்கத்தனத்துக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராகப் போராடிய பலஸ்தீனக் கூடார்ந்த சித்திரக்காரர் (Caricatcherist) நஜி அல் அலி பற்றிய தேடலும் தகவல்களும் நம்மைப் பிரம்மிக்க, வியக்க வைக்கின்றன.

அதேவேளை நம்நாட்டிலுள்ள ‘எல்லாம் தெரிந்த’ மேதாவிலாச எழுத்தாளர்கள் ( Masters of all subjects) சிலரையும் தனது பத்தி மூலம் சாடியிருக்கிறார் சிஹாப்தீன். இந்த உணர்ச்சி மயமான கோபம் ஓர் எழுத்தாளனுக்குத் தேவைதான். அவரது சில குறியீடுகளின் மூலம் அந்த எழுத்தாளர்களை நம்மால் இனங்காண முடிகிறது.

அஷ்ரஃப் சிஹாப்தீன் தொட்டுச் செல்லாத ‘சப்ஜக்’டே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரும்பாலும் எல்லா விடயங்களிலும் கை வைத்திருக்கிறார்.

கலை, இலக்கியம், நுண்கலை, சினிமா, வானொலி, வரலாறு, சமூகம், பொருளாதாரம், மதம் அல்லது மார்க்கம் என்று இன்னோரன்ன விடயங்களில் ஒரு வரியாவது சேர்த்துக் கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.

இலங்கை எழுத்தாளர்களான எம்.ஏ.நுஃமான், எம்.எச்.எம். ஷம்ஸ், லெ.முருகபூபதி, கவிஞர் அப்துல்காதர் வெப்பை, தேசிக விநாயகம்பிள்ளை, ஐ.சாந்தன், அல் அஸ_மத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தாஸிம் அகமது, மருதுர் ஏ. மஜீத், எஸ்.ஐ.நாகூர்கனி, வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம்.ஸதக்கா, எஸ். நளீம், ஓட்டமாவடி அறபாத், நான் உட்படப் படைப்பாளிகளுடன் இலக்கிய ஆர்வலர்களான எம்.எம்.சுஹைர், எம்.எம். அபுல் கலாம், றஸீன் மாஸ்டர் ஆகியோரது பெயர்களெல்லாம் இந்தப் பத்திகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றன.

ஆங்கில மற்றும் பிற மொழி எழுத்தாளர்களான ஷியாம் செல்லதுரை, மேரி ஆன் மோகன்ராஜ் (இருவரும் நம் நாட்டைச் சேர்ந்த - வெளிநாட்டில் வசிப்பவர்கள்), லூயிஸ் போர்ஹே, பத்வா துகான், பாரசீகக் கவிஞர் உமர் கையாம், மஹ்மூது தைமூர், சுபீர் சுக்ளா, திரையுலக மேதை சத்யஜித்ரே, இன்குலாப், ஷம்ஷ_ர் ரஹ்மான், பி.கே. பாறக்கடவு, பெஞ்சமின் ஸபானியா, லோப்டன் ஹியாஸ் போன்றோர் பற்றியெல்லாம் பெறற்கரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் தமிழக எழுத்தாளர்கள் சிலரும் இப்பத்திகளில் வலம் வந்து போகிறார்கள். கலைஞர் மு. கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், கவிக்கோ, கவிஞர் வாலி, தென்கச்சி சுவாமிநாதன், சாரு நிவேதிதா, கவிஞர் nஐயபாஸ்கரன் என்று இப்பட்டியல் தொடர்கிறது.

ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தையே (ஏன் முழு உலகையுமே) தன் காந்தக் குரலால் ஈர்த்து வைத்திருந்த பிரபல இந்திய (பின்னாளில் பாக்கிஸ்தான்) பாடகி நூர்ஜஹான் பற்றிக் கூறியுள்ளார். அதே வேளை இலங்கையின் புகழ் பெற்ற முஸ்லிம் பாடகி நூர்ஜஹானையும் விட்டு வைக்கவில்லை. அத்துடன் மதுரக் குரல் மன்னன் கே.ஜே. யேசுதாஸ் (எஸ். பாலச்சந்தரின் ‘பொம்மை’ என்ற படத்தில் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ எனும் பாட்டின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர்), ஹரிசரன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்றோரெல்லாம் இவரது பத்திகளில் உலா வருகிறார்கள்.

‘சினிமா’ என்று வரும்போது இந்திய மற்றும் சர்வதேசத் திரைப்படங்களையெல்லாம் தொட்டுச் சென்றிருக்கிறார் நூலாசிரியர். உலகப் புகழ்பெற்ற ஜப்பானியத் தயாரிப்பாளரும் டைரக்டருமான அகிறா குரோஸவா, இந்திய யதார்த்த சினிமாவின் தந்தை என்று வர்ணிக்கப்படும் சத்யஜித்ரே ஆகியோரைப் பற்றியெல்லாம் சுட்டிக் காட்டியுள்ளதோடு தன்னை ஆட்கொண்ட இரு பெரும் ஹொலிவூட் நடிகர்களைப் பற்றித் தனிப் பத்திகளிலே விபரித்துள்ளார். ஒருவர் சார்லி சாப்ளின். மற்றவர் சார்ள்ஸ் புரொன்ஸன். (என்னைக் கவர்ந்த ஆங்கில நடிகர் சார்ள்ஸ் ஹெஸ்டன் (Ten commentments, Ben - Her) போன்ற பிரமாண்டத் திரைப்படங்களில் நடித்தவர். சார்ள்ஸ் புரொன்ஸனுக்காக அவர் இட்ட தலைப்பு, ‘தன்னை ரசிக்காத நடிகன்’. அற்புதம்!

ஒரு காலத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்த நளீமிய மாணவரான அஷ்ரஃப் தனக்கு விருப்பமான விளையாட்டுத் துறையையும் விட்டு வைக்கவில்லை. தன்னைக் கவர்ந்தவர்களான தென்னாபிரிக்க கிரிக்கட் அணித் தலைவர் ஹன்சே குரென்யே, குறுந்தூர ஓட்ட வீராங்கனை மேரியன் ஜோன்ஸ் பற்றியும் இவரது பத்திகள் சோக ராகம் மீட்டுகின்றன.

பிரபல சரித்திர நாவலாசிரியர் கல்கி (இரா.கிருஷ்ண மூர்த்தி) பற்றி ஒரு தனிப் பத்தி எழுதியிருக்கிறார் ‘கல்கியின் கனவு’ என்ற மகுடத்தில். அதில் ‘தியாக பூமி’ என்ற நாவல் திரைப்படமானதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு ஞாபகம், கல்கியின் ‘பொய்மான் சரடு’ என்ற நாவல் ‘பொன் வயல்’ என்ற பெயரிலும் ‘கள்வனின் காதலி’ என்ற நாவல் அதே பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. ‘கள்வனின் காதலி’யில் சிவாஜியும் பானுமதியும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒமர் கையாமின் புகழ் பெற்ற ‘வெய்யிற்கேற்ற நிழலுண்டு’ பாடல்கூட இப்படத்தில்தான்.

‘மறக்க முடியாத மரபுக் கவிதைகள்’ என்ற பத்தியில் அந்த நாட்களில் சிந்தாமணியில் கவி புனைந்து புகழ் பெற்றிருந்த கவிஞர்களின் பெயர்களைத் தந்திருந்தார். அது ஒரு நீண்ட பட்டியல். ஆனால் நூலாசிரியர் சிலரை மறந்து விட்டார். காரணம் அவர் ‘சிந்தாமணி’யுடன் நின்று கொண்டமையே.

‘இதயத்தை அசைக்கும் இசை’ என்ற மகுடத்தில் (நூலில் ‘த’ விடுபட்டு விட்டது) எழுதப்பட்டுள்ள பத்தியில் ஹிந்தி இசையுலகையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நூலாசிரியர். உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரான நௌஷாத் அலியில் ஆரம்பித்து ஓ.பி. நய்யார், சலீல் சௌத்ரி, சீ.ராமச்சந்ரா, ஷங்கர் ஜெய்கிஷன், கல்யாண்ஜி - ஆனந்ஜி, எஸ்.டி.பர்மன் என்று ஒரு நீண்ட பட்டியலையே தந்துள்ளார். ஹிந்தி இசையுலகின் மதுரக் குரல் மன்னர்கள், மன்னிகள் பற்றிய பட்டியல் ஒன்றையும் இணைத்துள்ளார். நூர்ஜஹான், சுரையா, ஷம்ஸாத் பேகம், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, முகம்மது ராஃபி, தலாத் முகம்மது, முகேஸ், மன்னாடே, கிஷோர் குமார், மகேந்திர கபூர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

அவ்வாறே ஹிந்திப் பாடலாசிரியர்களையும் விட்டு வைக்கவில்லை நூலாசிரியர். மஹ்ரூஜ் சுல்தான் பூரி, ஸாஹிர் லூதியானவி, ஷகீல் பதாயுனி, ஆனந்த பக்ஷி, ஹஸ்ரத் ஜெய்ப்பூரி, ழஷநே;திரா போன்ற இன்னும் சிலர் பற்றிப் பிரஸ்தாபித்துள்ள அஷ்ரஃப், தலாத் மெஹ்மூத், முகம்மது ராஃபி, லதா, ஆஷா போன்ஸ்லே போன்றோரது குரல் லாவண்யத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார். இவர்களது குரல்களின் பாணி, பாங்கு, மென்மை, தன்மை, வேறுபாடு போன்றவை பற்றியும் விபரித்துள்ளார்.

ஒவ்வொரு பத்திக்கும் ஆசிரியர் வைத்துள்ள தலைப்புக்கள் அற்புதமானவை. ‘தீர்க்க வர்ணம்’ என்ற தலைப்பே தித்திக்க வைக்கிறது. ‘வால் அளவு’, ‘அடையாத தாள்’, ‘ஆன்மாவின் காவலர்கள்’, ‘பெருவாய் மொழி’, ‘மெய் எனும் பொய்’, ‘மாண்புறுவார் மகிமை’, ‘புன்னகையின் சூரியன்’, ‘தன்னை ரசிக்காத நடிகன்’, ‘வில்லங்க வினாக்கள்’, ‘இலவச இறக்கைகள்’, ‘இலை மறை பழம்’, ‘குறுந்தகவற் குசும்புகள்’, ‘இதயத்தை அசைக்கும் இசை’, ‘வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்’, ‘துணியிலா மனிதனாய்த் துடித்தல்’ போன்ற தலைப்புகள் சிலாகிக்கத் தக்கவை.

‘டாக்காவின் வெளிச்சம்’ என்ற பத்தியில் பங்களாதேஷின் புகழ் பெற்ற எழுத்தாளர் ஷம்ஸ_ர் ரஹ்மான் பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர், ‘நிவ்யோர்க் டைம்ஸ்’ பத்திரிகை ஷம்ஸ_ர் ரஹ்மானின் மரணச் செய்தியை வெளியிடும் அளவு பிரபல்யம் வாய்ந்தவராக இருந்துள்ளார். அவரை ஆசியக் கண்டத்தவரான நாம் அறிந்து கொள்ள முடியாத போனது ஏன் என்று தெரியவில்லை என்று வருந்துவது நம்மையும் வாட்டுகிறது. வங்காள மொழிக்குப் பெரும் கீர்த்தியைத் தந்தவர் தாகூர். அதனைச் சிதைவுறாமல் காத்தவர் ஷம்ஸ_ர் ரஹ்மான் என்கிறார்.

‘கண்ணீர்க் கோடுகள்’ என்ற பத்தியில் ‘அல் கப்பாஸ்’ பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து வெளியே வந்த பிரபல பலஸ்தீன் கூடார்ந்த சித்திரக்காரரான நஜி அல் அலியை எவ்வாறு கொன்றான் என்று விபரித்துள்ள நூலாசிரியர், அவரை எழுத்தறிவற்ற அரபிகளின் அரசியல் ஆசானாக, அடக்கு முறைக்குச் சிரம் பணியாத இளைஞர்களின் வழிகாட்டியாக, சமரசம் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக, துரத்தப்பட்ட மக்களின் ஆன்மாவாகவெல்லாம் இருந்தார் என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார்.

கொழும்பு வாழைத் தோட்டம் பற்றித் ‘துணியிலா மனிதனாய்த் துடித்தல்’ எனும் பத்தியில் குறிப்பிடும் நூலாசிரியர் இலங்கையின் முதல் தமிழ்த் தினசரியான ‘தினத் தபால்’ (1928), ‘தோழன்’, ‘முஸ்லிம் லங்கா’, ‘இனமுழக்கம்’, ‘இஸ்லாமிய தாரகை’ (தாரகை), ‘தினபதி’, ‘சிந்தாமணி’, (‘ராதா’, ‘தந்தி’), என்பனவும் வாழைத்தோட்டத்திலிருந்தே வெளிவந்தன என்று கலைஞர் கம்பளைதாசனை மேற்கோள் காட்டிக் கூறும் போது நமக்கு வியப்பாக இருக்கின்றது. இலங்கையின் முதலாவது தமிழ்ச் சிறுகதைத் தொகுதியான ‘ஐதர்ஷா கதைகள்’ (1935) இங்கிருந்தே வெளிவந்திருக்கிறது. நாடகக் கலைஞர்களான சுஹைர் ஹமீட், கம்பளைதாசன், கே.ஏ.ஜவஹர், கலைச் செல்வன், எஸ். அழகேசன், டி.கலைதாசன், எஸ்.சிவராமன், கே.எம்.ஏ. சுபியான் போன்றவர்களும் இம்மண்ணைச் சேர்ந்தவர்களே. எச்.எம்.பி. முஹிதீன் கூட என்று அறிகிறேன். றோயல் கல்லூரியும் வாழைத்தோட்டத்தில் இருந்ததாக அறிகிறேன்.

‘வித்தியாசமான விரல்கள்’ என்ற பத்தியில் வருகின்ற ‘தொம்பே’ என்பது அவனது பெயர்...’ என்று தொடங்கின்ற ஒரு குட்டிக் கதை அல்லது சம்பவத்தை நூலாசிரியர் எழுதாமல் தவிர்த்திருக்கலாம். நகைச் சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும் அது அருவருப்பாயுள்ளது. அஷ்ரஃபின் ‘இமேஜை‘ பாதிக்கும் என்பது எனது கருத்து.

சட்டத்தரணிகள் பற்றிய கதைகள் சுவையாகவும் சம்பூரண நகைச் சுவைத் தன்மையுடையனவாகவும் அமைந்திருக்கின்றன. வேறு சில விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கவும் தூண்டுகின்றன. ‘செம்மறி ஆடுகள்’ என்ற பத்தியில் கண்ணி வெடிகள் பற்றிக் கூறுகிறார். அங்கு ஒரு புதுக் கவிதை முளைக்கிறது. “போலியோச் சொட்டருந்தி - விளையாடச் சென்றவனை - தூக்கி வந்தார்கள் - கால் ஒன்றை இழந்திருந்தான் - மிதி வெடியில்! (நெஞ்சைப் பிழிகிறது!)

நூலின் அமைப்புப் பற்றியும் சொல்ல வேண்டும். ஆங்கிலப் புத்தகங்களுக்கு நிகராக அச்சிடப்பட்டுள்ளது. ‘பளிச்’ என்ற வெள்ளைத் தாளில் அல்லாது மங்கல் வெள்ளை (Off white) தாளில் அச்சிடப்பட்டுள்ளது. அது கூட ஒரு வகைக் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. முகப்போவியமும் கறுப்பு வெள்ளைதான். அதில் நூலாசிரியரின் முகம் காணப்படுகிறது. கையில் எடுத்து வைத்துக் கொள்ள இதமாகவும் இருக்கிறது நூல்.

இலத்திரனியவியல் ஊடகவியலாளரான அஷ்ரஃப் வானொலி அனுபவங்களை மேலும் சில பத்திகளாகப் பதிவு செய்திருக்கலாம். வானொலி ‘அரி’விப்பாளர்கள் விடும் உச்சரிப்புப் பிழைகளை (அல்ல... அல்ல... கொலைகளை) நகைச் சுவை வடிவில் சாடியிருக்கலாம். (இன்று மளை நாட்டில் காளையும் மாளையும் நள்ள மலை பெய்யும்.)

ஒரு காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ‘இன்ஸான்’ என்ற வார ஏட்டின் சாதனைகளையும் அதன் சாதக பாதகங்களையும் ஒரு பத்தியில் வடித்திருக்கலாம். அதன் கீர்த்தி மிக்க ஆசிரியர் அப+தாலிப் அப்துல் லத்தீஃப் பற்றியும் கூறி வைத்திருக்கலாம். அறபு, வடமொழி உச்சரிப்புகளுக்குக் குறியீடு (லிபி) வழங்கியவர் அவர்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழைத்தோட்டத்திலிருந்து வெளிவந்த காலை, மாலைத் தினசரியான ‘தினத் தபால்’ பற்றியும் பிரஸ்தாபித்திருக்கலாம். இலங்கையில் வெளியான முதலாவது தமிழ்த் தினசரியைப் பற்றி இன்றைய வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். நகைச்சுவை உணர்வுள்ளவரான நூலாசிரியர் தனது பிரயாண அனுபவங்களையும் எழுத்தில் வடித்திருக்கலாம். இவையெல்லாம் எனது மனக் கவலைகள்.

பிரபல எழுத்தாளர் மு.பொ. கூறுவது போல, “மொத்தத்தில் இந்நூல் ஒருவர் சலிப்புற்றிருக்கும் போது தன்னை உயிர்ப்புவைக்கப் படிக்க வேண்டிய நூல். எவ்வாறு மேற்கு நாட்டு ஆதி இலக்கியங்களான கண்டபறிக் கதைகளும் டெகமறன் கதைகளும் நெடும் பயணம் செல்வோர் தமது பயணக் களைப்பகற்றி உயிர்ப்புறவும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தனவோ அவ்வாறே தீர்க்க வர்ணமும் அமையும் என்பதில் சந்தேகமில்லை - உங்கள் வாழ்க்கைப் பயணத்தில்!

என் கருத்தும் இஃதே!

-கலைவாதி கலீல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: