Friday, February 10, 2012

மரபு - ஜெயபாஸ்கரன் கவிதை


தமிழ் இலக்கியத்தில் இன்று அதிகமாக எழுதப்படுவது கவிதை. அதாவது கவிதை என்ற பெயரில் பல வார்த்தைக் கோலங்கள் எழுதப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை அரைகுறைகளாகவே தென்படுகின்றன. அதாவது ஒரு முழுமையான கவிதையைக் காண்பது அரிதாக இருக்கிறது.

இந்தக் கருத்தை எனது சொந்த இரசனையை வைத்தே சொல்கிறேன். வசன அடுக்குகளும் வார்த்தைக் கோலங்களிலும் மயங்கிக் கிடக்கும் நபர்கள் என்னுடன் முரண்படலாம் என்பதற்காகவே இவ்வாறு சொல்கிறேன். ஒரு படைப்பு ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான கருத்தை வழங்கக் கூடியது.

கோஷ்டியில் உள்ளவர் என்பதால், நட்பின் பெயரால், தன்னைப் பற்றி உயர்வாகப் பேசும் நபர் என்பதால், ஒரு தேவையின் பேராலெல்லாம் ஒரு முழுமையற்ற படைப்பு உலக இலக்கியத்தைத் தாண்டிப் போய்விட்டதாகப் புல்லரித்துப் போய்க் கிடப்பதையும் பார்க்கிறோம்.

ஆயிரமாயிரம் கவிதைகளைப் படிக்கிறோம். அவை எல்லாமே நமது நெஞ்சில் நிலைப்பதில்லை. ஞாபகத்திலும் வருவதில்லை. லட்சத்தில் ஒன்றாக, ஆயிரத்தில் ஒன்றாக அவை எங்கோ ஒரு இடத்தில் உயிரற்றுப் போய்க் கிடக்கின்றன.

ஒரு நல்ல கவிதை தன்னைப் பற்றிப் பேசத் தூண்டக் கூடியது. தன்னைப் படித்தவர் நெஞ்சுக்குள் கிடந்து சதா துடித்துக் கொண்டிருப்பது. தன்னைப் படைத்தவனை காலாதி காலத்துக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பது.

அவ்வாறு சில கவிதைகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. அவை படைத்த கவிஞனை ஞாபக அடுக்குகளில் மறக்காமல் வைத்திருக்க உதவுகின்றன.

எனக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவர் ந. ஜெயபாஸ்கரன். அவரது “நானும் நீயும்” என்ற கவிதையைப் பல அரங்குகளில் படித்துக் காட்டியிருக்கிறேன். அவரையும் அக்கவிதையையும் அறிமுகப்படுத்தி நான் தினகரனில் எழுதிய பத்தி “தீர்க்க வர்ணம்” நூலில் “இலை மறை பழம்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

ஜெயபாஸ்கரன் கவிதைத் தொகுதி 2002ல் வெளி வந்தது. அவரது கவிதை நூல் ஒரு குறுகிய காலப் படிப்புக்கு எனக்கு இரவல் கிடைத்தது. அத் தொகுதியிலிருந்து சில கவிதைகளை புகைப்படப் பிரதியெடுத்தேன்.

மிக எளிமையான வார்த்தைகளில் சுருக்கெனத் தைக்கும் வகையில் அவரது கவிதைகள் பேசும். அவரது மற்றொரு கவிதையை இங்கு பதிவிடுகிறேன். இக்கவிதையின் தலைப்பு “மரபு”.

ஏதாவதொன்றை
எனதறையில்
எங்காவது வைத்துவிட்டுத் தேடுவது
அன்றாட வேலைகளில்
ஒன்றாகிவிட்டது எனக்கு

நீண்ட நேரத் தேடலுக்குப் பின்
கிடைக்கும் ஒவ்வொன்றும்
முந்தைய தேடுதலில்
கிடைத்திருக்க வேண்டியதாக
இருந்து தொலைக்கின்றன.

வியர்த்துச் சொட்டச் சொட்ட
எனக்கு நானே புலம்பியபடி
எதையாவது தேடிக் கொண்டிருப்பதை
சமையல் அறை ஜன்னல் வழியே
பார்த்துப் பரிகசிப்பது
பிடித்தமான வேலையாகி விட்டது
என் மனைவிக்கு

சமையலறையில்
என் கண்களைக் கட்டி விட்டாலும்
எந்தப் பொருளிலும் விரல் படாமல்
கேட்ட பொருனைக் கேட்ட மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன் என்று
சவால் விடவும் செய்கிறாள் அங்கிருந்து

அவளிடம்
சொல்லிக் கொள்வதில்லை நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
அங்கேயிருக்கிறாய் என்று!

-------------------------------------------------------------------------
நன்றி - ஜெயபாஸ்கரன் கவிதைகள்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

rajamelaiyur said...

அழகான கவிதை பகிர்வு நன்றி

Shaifa Begum said...

அழகான , எளிமையான கவிதை..அருமையாக இருக்கிறது..நீஙகள் சொன்னதில் 100 வீதம் உண்மை இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி சேர்..

AH said...

உங்கள் கருத்துக்கு இந்த கவிதை நல்ல உதாரணம்...

Lareena said...

சுருக்கென்று தைத்தது கவிதை மட்டுமா? அது தனக்குள் பொத்தி வைத்திருக்கும் "பெண்" பற்றிய யதார்த்தமும்தான்!

எஸ்.மதி said...

உண‌ர்வை வருடும் வரிகள் மிக அருமை வாழ்த்துக்கள்...