இணைத் தலைமை வகித்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் கவிஞர் சோ.பத்மநாதன்
2000 ம் ஆண்டு ஜனவரியில் ‘யாத்ரா’ முதலாவது இதழ் வெளிவந்தது. கவிதைகளுக்கான இதழாகப் புத்தாயிரத்தில் வெளிவந்த தமிழ்ச் சஞ்சிகை இது. கவிதை இதழாக இதுவரை 19 இதழ்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவ்வாண்டு அதாவது 2012 ஜனவரியிலிருந்து அது கலை, இலக்கிய இதழாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.
இலங்கையில் தமிழில் வெளிவந்த கவிதைச் சஞ்சிகைகளின் ஆயுட்காலம் மிக மிகக் குறைவானது என்பதை நமது தமிழ் இலக்கியப் பரப்பு நன்கறியும். நான் அறிந்த வரை கவிதைக் கையேடாகச் சாய்ந்தருதிலிருந்து என்.ஏ. தீரன் - ஆர;.எம். நௌஷாத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘தூது’ - 16 இதழ்கள் வெளிவந்தன. தற்போது கவிதைக் கையேடாகத் திருகோணமலையிலிருந்து எஸ்.ஆர். தனபாலசிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு ‘நீங்களும் எழுதலாம்’, 22 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு சஞ்சிகை என்ற அளவில் ‘யாத்ரா’ மாத்திரமே 19 இதழ்களைத் தொட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.
‘யாத்ரா’, ஒரு கால ஒழுங்கில் வெளிவந்ததில்லை. தைப்பூசம், பொங்கல், சித்திரைத் திருநாள், நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள், நபிகளார் பிறந்த தினம், கிறிஸ்மஸ், மற்றும் சர்வதேச விசேட தினங்கள் பற்றி வெளிவரும் கலண்டர் கவிதைகளை ஏற்றுக் கொள்ளும் சஞ்சிகையால் வேண்டுமானால் கால ஒழுங்கில் வெளிவர முடியுமே தவிர, நல்ல கவிதைகளைக் கொண்டு ஒரு கவிதைச் சஞ்சிகை கால ஒழுங்கில் வெளிவர முடியாது என்பது எனது முடிபு.
கவிதையானது தனக்குரிய மொழியையும் கவிஞனையும் தேடிக் கொண்டு எப்போது வெளிக் கிளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்காக ‘யாத்ரா’ சுமந்து வந்த கவிதைகள் யாவும் மிகவும் அற்புதமானவை என்று நான் மறுவார்த்தையில் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.
வசன கவிதை தோற்றம் பெற்ற பிறகு கவிதை எது, கவிதை அல்லாதது எது என்ற சிக்கலும் தோன்றி விட்டது. எனவே இந்த இடத்தில் - அற்புதமான கவிதை, அழகானய கவிதை, நல்ல கவிதை, கவிதை, சாதாரண கவிதை, பரவாயில்லைக் கவிதை என்று ரகம் பிரிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. ‘யாத்ரா’ சுமந்து வந்த கவிதைகளில் எழுபது வீதமானவை வாசகர்களினால் ‘நல்ல கவிதைகள்தாம்’ என்று ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக அமைந்திருந்தன என்பதில் நமக்கும் ஒரு திருப்தியும் ஆறுதலும் இருக்கிறது.
‘யாத்ரா’ தனது முதலாவது இதழிலிருந்தே மொழி பெயர்ப்புக் கவிதைகளைச் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறது. அவற்றில் அநேகமானவை சிங்களக் கவிதைகள். அனுர கே. எதிரிசூரிய, அய்வோ விராந்த பெர;னாண்டோ, சந்தியா குமாரி லியனகே, விஜயரத்ன தேனுவர, என்.எம். நாளக்க இந்திக்க, செனிவிரத்ன கே. பண்டார, :தம்பகொட ஜினதாச, மஞ்சுள வெடிவர்த்தன, அனோமா ராஜகருண, தர்சினி ஜெயசேகர, என்.டீ. விதான ஆரச்சி, ஜகத் சந்தன அதிகாரி, சரத் விஜேசுந்தர, சமந்த பிரதீப், திலின வீரசிங்க, ஜயந்த தெனிபிட்டிய, தரங்க சம்பத் ஹேவகே, பியன்காரகே பந்துல ஜெயவீர, தனிகா அத்துக்கோறள, சமந்த இலேபெரும, ஜகத் சந்தன அதிகாரி, ஆரியபால ஆரச்சி. தர்மசிரி பெனடிக்ட், பிரகீத் குணதிலக்க, செனரத் கொண்ஸால் கோரள, விகும் ஜினேந்திர, குமார ஹெட்டியாரச்சி ஆகியோரது சிங்களக் கவிதைகளைக் கவிஞர் இப்னு அஸூமத் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.
இவர்களில்; அனுர கே எதிரிசூரிய, அய்வோ விராந்த பெர்னாண்டோ ஆகியோர் தவிர வேறு யாருக்கும் ‘யாத்ரா’வில் தமது கவிதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த தகவல் தெரியாது. சஞ்சிகையின் ஆசிரியரான எனக்கும் அவர்களைத் தெரியாது. பொதுவாக சிங்கள இலக்கியப் பரப்பில் அறியப்பட்ட ஒரு சிலரைத் தவிர, அநேகர் புதியவர்கள். இப்னு அஸூமத், கவிதை எழுதியவர் புதியவரா பழையவரா பெயர் பெற்றவரா இல்லையா என்ற வேலிகளைச் சட்டை பண்ணாமல் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவரும் நல்ல சிங்களக் கவிதைகளைத் தேர்ந்து மொழிபெயர்த்துத் தந்துள்ளார். ‘யாத்ரா’ முதலாவது இதழில் வெளிவந்த கவிதையை யார் எழுதினார்கள் என்ற விபரம் இல்லை. முல்லைத்தீவுச் சமரில் இறந்து கிடந்த ஒரு பெண் போராளியின் உடலைக் கண்டு அரச படை வீரன் ஒருவனுக்கு எழுந்த உணர்வே கவிதையாகியிருக்கிறது.
:கோமோ ஜோ - சீனா, குளோர்டியா லார்ஸ் - எல்சல்வடோர், ஸீரா அன்டெஸ் - கியூபா, ஹாரிஸ் ஹாலிக் - பாக்கிஸ்தான், ஜோஸே உடோவிச் - சுலோவேனியா, கிறிகோர் விட்டெஸ் - குரோஷியா, லால்சிங்டில் - பஞ்சாபி, ம்தேஜ் ;போர் - சுலேவேனியா, யொவான் டுசிச் - சேர;பியா, மிலாயே கொனஸ்கி - மஸிடோனியா, கூரீதத்தா மற்றும் மஹ்மூது தர்வேஸ், நிஸார் கப்பானி ஆகியோரின் கவிதைகளைப் பேராசிரியர் சி. சிவசேகரம் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இவை தவிர தனது கவிதைகள் மூலமும் அவர் பெரிதும் பங்களித்துமுள்ளார்.
அத்னான் அலி ரிழா, ஹாமித் அப்துர் ரஹ்மான், அப்துர்ரஹ்மான் பர்ஹானா, அப்துர் ரஸ்ஸாக் ஹூஸைன் ஆகியோரது கவிதைகள் அறபு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமானவை. ஏ.சி,ஏ. மஸாஹிர் இவற்றை மொழிபெயர்த்து வழங்கினார;. ஃபைஸ் அகமட் ஃபைஸ், ஆகா ஷாஹித் அலி, அலி சர்தார் ஜஃப்ரி மற்றும் பாரசீகக் கவிஞர்களான நிமாயூஷிஜ், மெஹ்தி அஹ்வான் சேல்ஸ், லீஸா ஸூஹைர் ஆகியோரது கவிதைகளைப் பண்ணாமத்துக் கவிராயரும் பென் ஒக்ரி, ஸைத் ஷாகிர் அல் ஜிஸி, கே.எம். ஸைதா ஆகியோரது கவிதைகளை எம்.கே.எம். ஷகீபும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். றீஸன் றோல் என்ற தமது நண்பரான ஸ்பானியக் கவிஞரின் கவிதைகள் சிலவற்றை கவிஞர் ஏ. இக்பால் அவர்களும் அம்ரிதா ப்ரீதம் எழுதிய கவிதையொன்றை கெக்கிராவ ஸூலைஹாவும் மொழிபெயர்த்துள்ளனர்.
இவற்றுடன் யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்த்த பாக்கிஸ்தான் பெண் கவிஞர் கிஷ்வர; நஹீத், இன்குலாப் மொழிபெயர்த்த சுபாஷ் முக்யோபாத்தியாய், ஜலீஸ் மொழிபெயர்த்த இஸ்ரேலியக் கவிஞர் ஏலி ரெண்டான் ஆகியோரது கவிதைகளும் ‘யாத்ரா’வில் இடம் பெற்றுள்ளன.
‘யாத்ரா’ வில் இடம் பெற்று வந்த மற்றொரு முக்கிய அம்சம் படைப்பாளிகள் அறிமுகம். அவரவர் ஈடுபாட்டுக்கும் நமக்குக் கிடைத்த தகவல்களுக்கும் இயைபாக கவிஞர்கள் பற்றிய தகவல்கள் கட்டுரைகளாகவும் குறிப்புகளாகவும் இடம்பெற்று வந்துள்ளன. புரட்சிக் கமால் சாலிஹ், அண்ணல், எம்.சி.எம். சுபைர், அப்துல் காதர் லெப்பை, அலி சர்தார் ஜப்ரி, ஆ.மு ஷரிபுத்தீன் புலவர், முகம்மது காஸிம் புலவர், பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றிய கவிஞர் ஆறுமுகம், ஆகா ஷாஹித் அலி, ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இப்னு அஸூமத், என்.ஏ.தீரன், என். நஜ்முல் ஹூஸைன், அக்கரை மாணிக்கம், ஏ.எம்.எம். அலி, வி.ஏ.ஜூனைத், மஹ்மூது தர;வேஷ், மெஹ்தி அஹ்வான் சேல்ஸ், கவிஞர் அபூபக்கர், கலையன்பன் ரபீக், தவ்பீக் ரபாத், காத்தான்குடி பௌஸ், ஷார்ல் போதலயர், நற்பிட்டிமுளை பளீல், இர்ஷாத் கமால்தீன், கிண்ணியா அமீர் அலி, சு.வில்வரத்தினம், கைஃபி அஸ்மி, மருதூர் ஏ மஜீத் ஆகியோர் 19 இதழ்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அன்பு ஜவஹர்ஷா, பாவலர் பஸீல் காரியப்பர், பண்ணாமத்துக் கவிராயர், அல் அஸூமத், மு. சடாட்சரன், திக்குவல்லைக் கமால், அன்பு முகையதீன், மருதமைந்தன், தாஸிம் அகமது, அனுர கே. எதிரிசூரிய, மருதூர;க் கனி, ஜவாத் மரைக்கார், இந்திய சாஹித்ய அகடமியின் செயலாளராகவிருந்த மலையாளக் கவிஞர் பேரா. கே. சச்சிதானந்தன் ஆகியோரின் செவ்விகளும் இடம்பெற்றுள்ளன.
கவிதை இலக்கியம் தொடர்பான கட்டுரைகளும் ‘யாத்ரா’வில் இடம்பெற்று வந்துள்ளன. ‘ஹைக்கூ கவிதை’ - இந்திரா பார;த்தசாரதி, ‘தமிழ்க் கவிதை - நேற்றும் இன்றும் இனியும்’ - செ. யோகநாதன், ‘பங்கரிலிருந்து பல்கலைக் கழகம் வரை’ - சமுத்ர வெத்தசிங்க (தமிழில் - இப்னு அஸூமத்), ‘கவிதை’ - ஏ. இக்பால், ‘குறும்பா’ - அல் அஸூமத், ‘புதுக்கவிதையில் இஸ்லாமிய புராணவியல் படிமங்கள்’ - எம்.எச்.எம். ஷம்ஸ், ‘ஒலிநயமும் திறனாய்வுக் கொள்கைகளும்’ - கே.எஸ். சிவகுமாரன், ‘சுபத்திரன் கவிதைகள் - ஓர் அறிமுகக் குறிப்பு’ - லெனின் மதிவானம், ‘குறிஞ்சித் தென்னவன் - ஓர் அறிமுகக் குறிப்பு’ - அந்தனி ஜீவா, ‘கவிதைத் திறனாய்வு’ - கே.எஸ். சிவகுமாரன், ‘சாதாரண பொதுமகனைப் பொருட்படுத்தாத போக்கால் கவிதை உலகம் இருண்டு வருகிறது’ - க. இரகுபரன், ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய்’ - மருதமுளை ஹஸன் மௌலானா, ‘சின்னச் சின்னச் சிங்களக் கவிதைகள்’ - இப்னு அஸூமத், ‘காசி ஆனந்தன் ஆக்கங்கள் ஒரு நோக்கு’ - (சுடர் சஞ்சிகை), ‘மறக்க முடியாத மக்கள் பாடகன் கோவிந்தசாமித் தேவர் - அந்தனி ஜீவா, ‘புவலர் மணி பெரியதம்பிப் பிள்ளையின் கவிதையியல் நோக்கு’ - ஹஸன் மௌலானா, ‘துரத்தப்பட்ட கவிஞன் அப்தாப் ஹூஸைன’; - (தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்), ‘சிறைப்பட்ட கவிதைகள் - பிரசன்ன அதிகாரி (தமிழில் - இப்னு அஸூமத்), ‘நிமாயூஷிஜூம் பாரசீகக் கவிதையும்’ - (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்), ‘மக்கள் கவிதைகளும் அவர் தம் வாழ்வும்’ - கொங்கிதொட்ட பிரேமரட்ன (தமிழில் - கவிஞர் ஆறுமுகம்), ‘பொரஸ்ட் - தோமஸ் இரட்டையர்கள்’ - எம்.பி. மத்மலுவ் (தமிழில் - மாஞ்சோலை ஏ.கே. ரஹ்மான்) ‘கவிதை மதிப்பீடு’ - நபீலா முக்தார் (தமிழில் - மாஞ்சோலை ஏ.கே. ரஹ்மான்) ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ - சிதம்பரப்பிள்ளை சிவகுமார், ‘கவிதைகள் , தீர்க்கதரிசிகள், அரசியல் - ரேச்சல் கல்வின் (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்) ‘தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் தூதுக் கவிகளில் காகம்’ - மருதூர் ஏ மஜீத், ‘இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ - ஏ.எம். சமீம், ‘எம்.ஏ. நுஃமானின் நிலம் எனும் நல்லாள்’ - றமீஸ் அப்துல்லாஹ், ‘அறபுக் கவிதை - ஆன்மாவினுள் ஒரு துரிதப் பார்வை’ - காஸி அல்குஸைபி (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்). இவற்றுள் ஒரு சில கட்டுரைகள் இணையம் மற்றும் சஞ்சிகைகளிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை.
வ.அ.இராசரத்தினம் தமிழாக்கிய தூர்சீனாவின் பூவரசம்பூ, தீன் குறள், மைலாஞ்சி, எழுதாத உன் கவிதை, உயிர்த்தெழல், இருத்தலுக்கான அழைப்பு, நீ வரும் காலைப் பொழுது, வேட்டைக்குப் பின், அழகான இருட்டு, பண்டாரவன்னியன், தூண்டில் இரைகள், பூமிக்கடியில் வானம், ஆயிரத்தோராவது வேதனையின் காலை, எலும்புக்கூட்டின் வாக்குமூலம், திருநபி காவியம், ஓவியம் வரையாத தூரிகை, மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் ஆகிய கவிதை நூல்கள் பற்றிய விமர்சனங்களும் நயக்குறிப்புகளும் இடம்பெற்றிருக்கிறன.
மேலே சொல்லப்பட்ட தகவல்களில் அதிக அளவில் முஸ்லிம் நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். எனது நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்தாளரான ஒரு தமிழ் நண்பர் இது பற்றி ஒரு முறை என்னிடம் வினாத் தொடுத்தார். “நீங்கள் ஒரு பங்களிப்பை யாத்ராவுக்கு வழங்காமல் இந்த வினாவைத் தொடுப்பது நியாயமற்றது” என்று அவருக்கு நான் பதில் சொன்னேன்.