(“யாத்ரா - 22” வது இதழ் ஜூலை - டிஸம்பர் இதழாக 120 பக்கங்களுடன் )
இம்முறை ஆசிரிய தலையங்கம் இது.
அரச தேசிய சாஹித்திய விருது
--------------------------
இவ்வருட அரச தேசிய சாஹித்திய விழாவில் பத்துத் தமிழ் நூல்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. வருடாவருடம் தேசிய சாஹித்திய விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் ஏற்படும் அதிருப்தி அலைகள் இம்முறை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
2011ம் ஆண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் சஞ்சிகைகள், இணையம், மேடைகள் ஆகியவற்றில் அவ்வாண்டு விருதுகள் குறித்துச் சர்ச்சைகளும் அதிருப்திகளும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டடிருந்தன.
இந்த நாட்டில் வெளியிடப்படும் நூல்களில் ஏறக்குறைய 50 வீதமானவை முஸ்லிம் படைப்பாளிகளால் எழுதி வெளியிடப்படுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் தேசிய சாஹித்திய விருது வழங்கல்களின் போது இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்களின் நூல்களே விருதுகளுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழில் எழுதும் முஸ்லிம் படைப்பாளிகள் இந்த நிலை குறித்து மிகவும் மனக்கிலேசம் அடைந்திருந்தார்கள். வாய்திறந்து வெளியே சொன்னால் எப்போதாவது கிடைக்கும் ஒரு வாய்ப்புத் தமக்கு மறுக்கப்படலாம் என்ற பயத்தில் உள்ளக் குமுறலுடன் பலர் மௌனம் காத்து வந்துள்ளனர். இதனால் இவ்விடயம் குறித்து அரச மட்டத்துக்கு எடுத்துச் சொல்வது பற்றியும் முஸ்லிம் படைப்பாளிகளின் நூல்களுக்குத் தனியே விருது வழங்குவது பற்றியும் ஆலோசனைகள் நடந்ததை நாம் அறிவோம்.
சில தனி நிறுவனங்களும் அமைப்புக்களும் தமது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நூல்களுக்கும் தமக்குப் பிடித்த படைப்பாளிகளுக்கும் வருடாவருடம் ஒரு வகைப்படுத்தலை மேற்கொண்டு விருது வழங்குவதில் அக்கறை காட்டுகின்றன. நூல்கள் அனுப்பப் பத்திரிகைகளில் தரப்பட்ட இறுதித் திகதி முடிவதற்கு முன்னரே சில அமைப்புகள் விருதுகளைத் தீர்மானித்துவிட்டு அறிவித்த வேடிக்கைகளையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததுண்டு.
இவ்வாறான வெட்கக் கேடுகளுக்குள் அரச தேசிய சாஹித்திய விருது வழங்கல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று இந்தத் தேசத்தின் பிரஜையான ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் கிடையாது.
இம்முறை இலங்கைப் படைப்பாளிகளுள் ஐந்து தமிழருக்கும் ஐந்து முஸ்லிம்களுக்குமாக மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் முஸ்லிம் படைப்பாளிகளிகளின் நீண்ட நாட் கவலை தீர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காகக் கலாசார அமைச்சையும் கலாசாரத் திணைக்களத்தையும் பாராட்டுகிறோம்.
அதேவேளை, அடுத்த வருடம் வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.
(தமிழர்கள் அறுவர், முஸ்லிம்கள் ஐவர் என்பதே சரியானது)
“யாத்ரா -22” வது இதழில் தாழை மதியவன்,கெகிராவ ஸூலைஹா,எம்.எல்.எம். அன்சார், எம்.ரிஷான் ஷரீப், யோகேஷ், கவிஞர் அபி, அமல்ராஜ் பிரான்ஸிஸ், கடையநல்லூர் பி.எம். கமால், கிண்ணியா ஏ.எம்.எம். அலி, கெகிராவ சஹானா, ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.மஞ்சுள வெடிவர்தனவின் சிங்கள மொழிக் கவிதையை லறீனா அப்துல் ஹக் மொழிபெயர்த்துள்ளார்.
ஓட்டமாவடி அறபாத்தின் “செல்லனின் ஆண்மக்கள்”, யோ. கர்ணனின் “அவதூறுகளின் ராஜாக்களிற்கான ஈழு பாடம்”, ஆஷிக் அகமட் மொழிபெயர்த்த “ஒரு ஸலாம் என் வாழ்வை மாற்றியது” ஆகியன அவர்களின் வலைத் தளங்களிலிருந்து அனுமதியுடன் இதழில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போலவே சிவேதிகா என்ற முகமறியாச் சகோதரியின் “சுற்றுலா” முகநூலில் இருந்து அதை இணைத்திருந்த நண்பரின் அனுமதியுடன் பெறப்பட்டது.
“லண்டன் தமிழ் வானொலியும் அறியப்படும் இலக்கிய ஆளுமைகளும்” - அமல்ராஜ் பிரான்ஸிஸ், “வேர் விடும் விதைகள்” - மர்ஸூம் மௌலானா, “கோல்டன் ஸ்லம்பர்ஸ் - திரைப்படத்தினூடாக கம்போடியத் திரைப்படத் துறை” - இப்னு அஸூமத், “சாதிக்கத் துடிக்கும் இளைஞன்” - ஏ.பி. மதன், “காலக் கணிதம்” - ஜின்னாஹ் ஸரிபுத்தீன், “மலாய் மொழிக் கவிதைகள்” - மேமன் கவி --- ஆகியன கட்டுரைகள். அஷ்ரப் சிஹாப்தீனின் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்”- பஸ்லி ஹமீத், அன்புடீனின் “நெருப்பு வாசல்” - சிறுகதைத் தொகுதி பற்றிய சிறு குறிப்பு என்பனவும் அடங்கியுள்ளன.
அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த “எனது கௌரவக் கொலை”, சுதாராஜ் எழுதிய “யுத்தங்கள் செய்வது”, ப.ஆப்தீன் எழுதிய “ஒரு பிடி சோறு” ஆகியன சிறுகதைகள்.
மற்றும் “பொருள்விளங்கா உருண்டையும் பின் நவீனத்துவக் கவிதையும்”,“ஈழத்து முஸ்லிம் படைப்பிலக்கிய மாநாடு”- ஏ.பீர் முகம்மது மற்றும் “யாத்ரா - 21” பற்றி கே.எஸ். சிவகுமாரன் மற்றும் தெளிவத்தை ஜோஸப் ஆகியோர் எழுதிய பத்திரிகைக்குறிப்புகளுடன் அஜமியின் அஞ்சறைப் பெட்டியும் இணைகிறது.
எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் கொழும்புப் புத்தகக் கடைகளில் (பூபாலசிங்கம் - செட்டியார் தெரு மற்றும் வெள்ளவத்தைக் கிளைகள், தெமட்டகொட வீதி இஸ்லாமிக் புக் சென்டர் ஆகிய கடைகள்)
பின் அட்டை விளம்பர அனுசரணை -
நன்றி - மாத்தளை பீர் முகம்மத்
சல்மான் ட்ரேடிங்,
(பிரபல கவரிங் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்)
229 - 1 -1 -14 சந்தோஷ் பிளாஸா, மெயின் வீதி, கொழும்பு - 11