Saturday, December 1, 2012

சென்பிரான்ஸிஸ்கோ செல்லும் ஸ்தெப்பன்வூல்ஃப்

Samuel Shimon



சென்பிரான்ஸிஸ்கோ செல்லும் ஸ்தெப்பன்வூல்ஃப்

- சாமுவெல் ஷிமொன் -

டிஸம்பர் 1999ம் ஆண்டு ஹீத்ரோ விமான நிலையத்திலுள்ள புத்தகக் கடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். ஜேர்மன் எழுத்தாளர் ஹேமன் ஹஸ்ஸே எழுதிய ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலின் புதிய நேர்த்தியான பதிப்பு அங்கு  விற்பனைக்கிடப்பட்டிருந்தது. பிரதியொன்றின் விலை ஒரு பவுண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிறந்த அந்த நாவலின் மூன்று பிரதிகளை நான் வாங்கிக் கொண்டேன்.

விமானத்தில் அதை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது அமெரிக்கன் எயார்லைன் வழங்கிய உணவையும் பானத்தையும் அதிகம் உட்கொண்டதால் நித்திரை மயக்கமாக இருந்ததை உணர்ந்தேன். எனவே நாவலை அருகே வைத்துவிட்டு ‘ஐ கொட் மெய்ல்’ என்ற என்ற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அந்தப் படத்தை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. டொம் ஹென்க்ஸ் போன்ற அதிசிறந்த நடிகர் சலிப்பு ஏற்படுத்தும் அந்தப் படத்தில் நடித்திருப்பதையிட்டுக் கவலையாக இருந்தது.

எனக்கு அருகேயிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண்மணியின் பார்வை ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலில் பதிவதை அவதானித்த நான் ‘அதைப் படிக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன். ஒரு பெரிய புன்னகையை என்னை நோக்கிச் சிந்திய அப்பெண்மணி சொன்னார்:-

“நிச்சயமாக.... ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ போன்ற நாவலை மீண்டும் படிக்கக் கிடைப்பது மகிழ்ச்சிதானே!”

அந்த நாவலின் பிரதியை அவருக்குக் கொடுத்துச் சொன்னேன்:-

“இதை நீங்கள் எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். எனது பிரயாணப் பைக்குள் நான் இன்னும் இரண்டு பிரதிகள் வைத்திருக்கிறேன்.”

“இதே புத்தகமா?”

- அவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஆம்... இதே புத்தகம்!”

நிவ்யோர்க் வந்தடைந்ததும் யேல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பலஸ்தீனக் கல்வியியலாளரான எனது நண்பரைச் சந்திப்பதற்காக மத்திய ரயில் நிலையத்திலிருந்து நியூஹெவன் செல்லும் ரயிலைப்பிடித்தேன். அது ஒரு தூரப் பயணமல்ல. எனவே வாசிப்பதற்குப் பதிலாக நிவ்யோர்க்கின் புறகர்ப் பகுதிகளைக் கண்டு ரசிப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ எனக்கு ஞாபகம் வந்தது. எனது பைக்குள் இருந்த இரண்டு பிரதிகளில் ஒன்றை எடுத்து யேல் பல்கலைக்கழகப் பூங்காவில் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு பல்கலைக் கழகத்தின் யூதக் கற்கைகளுக்கான பிரிவுக்குள் நுழைந்து அதன் தலைவரைச் சந்தித்தேன். ஒரு நாளைக்கு முன்னர் எனது பலஸ்தீன் நண்பருடன் அவரைச் சந்தித்த போது என்னை மதிய விருந்துக்கு அவர்அழைத்திருந்தார். 

மாணவர் உணவகத்தில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் மேசை நடுவில் கிடந்த ஹேர்மன் ஹெஸ்ஸேயின் நாவலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அது ஒரு மிகச் சிறந்த நாவல் என்றும் அதன் எழுத்து நட்பமும் உத்தியும் தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகவும் சொன்ன அந்த மாணவன் அந்நாவல் முதலில் 1924ல் வெளியிடப்பட்டதென்றும் 1926ல் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்றும் சொன்னான். அவனது ஆர்வத்தை மெச்சிய நான் அப்பிரதியை அவனுக்குக் கொடுத்துச் சொன்னேன்:-

“நான் வீட்டில் இன்னொரு பிரதி வைத்திருக்கிறேன்.”

என்னிடமிருக்கும் பிரதியை யாருக்கும் கொடுப்பதில்லை என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.

நியு ஹெவனில் எனது கடைசி நாள் இரவு நோர்வேஜியக் கல்வியியலாளர் வீட்டில் கழிந்தது. நான் சென்பிரான்ஸிஸ்கோ செல்வதை அறிந்த அப்பெண்மணி, நிவ்யோர்க்கிலிருந்து ரயில் மூலம் சென்பிரான்ஸிஸகோ செல்வது ஒரு ஆனந்தமான பயணமாக இருக்கும் என்று சொன்னார். மூன்று அல்லது நான்கு நாள் பயணமானது கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரை போவது என்று என்றார்.

“குன்றுகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், நகரங்கள், கிராமங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். எட்டு மாநிலங்களின் நதிகளைக் கடந்து செல்லும் இன்பமான பயணமாக இருக்கும்.”

மகிழ்ச்சி தரும் தூர ரயில் பயணத்தை நினைத்துக் கொண்டு ‘நிவ்யோர்க்கிலிருந்து சென்பிரான்ஸிஸ்கோ செல்ல நான் வைத்திருக்கும் விமானப் பயணச்சீட்டை நான் என்ன செய்வது?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். சில கணங்கள் தயங்கியபின்னர் பென்சில்வேனியா ரயில் நிலைய பாருக்குள் நுழைந்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் பாரிலிருந்து வெளியேறிய நான் விமானப் பயணச் சீட்டைக் கிழித்தெறிந்தேன்.

“நான்கு நாட்களில் ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ படிப்பதற்குப் போதிய அளவு நேரம் கிடைக்கும்.”

அப்படித்தான் நான் நினைத்தேன்.



ரயிலில் நான் அமர்ந்ததும் எனக்கேற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை விவரிப்பது கடினமானது. கடந்த காலங்களில் ஹொலிவூட் படங்களில் மிக நீளமான புகையிரதங்களைக் கண்டு ரசித்திருக்கிறேன். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து திரைப்படத்தில் பார்ப்பதுபோலவே கண்முன்னால் தெரியும் பென்ஸில்வேனியா புகையிரத நிலையத்தையும் பிரயாணிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு ஓர் இளம் பெண் நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர் ஆசனத்தில் வந்து அமர்ந்தாள். பிறகு லத்தீன் அமெரிக்க முகபாவம் கொண்ட ஒரு பெண் - இளம்பெண்ணின் தாய்- கண்ணீருடன் ஜன்னலூடாக தனது மகளை முத்தமிட்டாள். மகளிடம் அப்பெண் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தாள். அந்த இளம்பெண் விவாகரத்துச் செய்து பிரிந்திருக்கும் தனது தந்தையிடம்  செல்கிறாள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

“கலிபோர்னியாவில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்... நிவ்யோர்க்கில்தான் நான் வளர்ந்தேன்.”

- ஜெனிஃபர் என்னிடம் சொன்னாள்.

“பார்த்து... பார்த்து... கவனமாக...!”

ரயில் நகர ஆரம்பித்ததும் முகத்தை ஜன்னலோடு சேர்த்து வைத்துக்கொண்டிருந்த தனது தாயாரைப் பார்த்துச் சத்தமிட்டு எச்சரித்தாள் அந்த இளம் பெண். பென்ஸில்வேனியா ரயில் நிலையத்திலிருந்து நகர்ந்த புகையிரதம் அமெரிக்காவின் நீளிரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இடவசதி மிக்க ஆசனத்தில் அமர்ந்தபடி என்னிடமிருந்த ‘ஸ்டெப்பன்வூல்ஃப்’ இறுதிப் பிரதியை எடுத்து விரித்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். ஆபிரிக்க அமெரிக்க இளைஞனொருவன் திடீரென எமது ரயில் பெட்டிக்குள் நுழைந்தான். இருபது வயது மதிக்கத்தக்க அவன் மிக நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தான். ரயில் பெட்டிக்குள் இருப்போரின் முகங்களைப் பார்த்தவாறே திரும்பத் திரும்ப ரயில் பெட்டிக்குள் நடந்தபடி பொதுவில் சத்தமிட்டுப் பேசிக்கொண்டிருந்தான். அவன் ஒரு எழுத்தாளன் என்றும் நூல்களை வெளியிடுவது சிரமமான விடயம் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னான்:-

“வெளியீட்டாளர்கள் ஒரே மாதிரியான எழுத்தாளர்களின் மோசமான புத்தகங்களையே அச்சிட்டு வெளியிடுகிறார்கள்.”

நடிகர் Sidney Poitier ரின் இளவயதுத் தோற்றத்தை அவனில் நான் கண்டேன். பயணிகள் விரும்பினால் தனது கதைகளில் சில பகுதிகளைப் படித்துக் காட்டுவதாகவும் அவற்றை நாங்கள் மிகவும் விரும்புவோம் என்றும் சொன்ன அவன் அதற்குப் பகரமாக நாங்கள் விரும்பினால் மட்டும் சிகரட் வாங்குவதற்காக - அதிகமாக இல்லை - சில நாணயங்களைத் தந்தாலே போதும் என்றும் சொன்னான்.

தனது கையில் வைத்திருந்த நூலைத் திறந்து படிக்க ஆரம்பித்தான். முதல் வசனத்திலேயே எமது கவனத்தைக் கவர்வதற்காக நாடகப் பாணியில் அந்த வசனத்தைப் படித்துக் காட்டினான். பயணிகள் கண்களை உறுத்துப் பார்த்தபடி உறுதியான குரலில் அவன் அதைப்படித்துக்காட்டியது உண்மையில் நன்றாகத்தான் இருந்தது. அவன் வாசித்துக் காட்டிய வசனங்கள் இவைதாம்:-

“நான் கையில் பிடித்திருந்த குவளையில் வீட்டுச் சொந்தக்காரி  மீண்டுமொருமுறை நிரப்ப விரும்பினாள். நான் எழுந்துகொண்டேன். இன்னும் அருந்துவதற்கு எனக்கு வைன் தேவையில்லை. நட்சத்திரங்களினதும் மொஸார்ட்டினதும் தங்கத் தடயம் பிரகாசித்துக் கொண்டிருக்க அழிவற்ற ஒரு நிலையை நான் உணர்ந்தேன். வெட்கமோ, பயமோ சித்திரவதை அவஸ்தையோ இல்லாமல் ஒரு மணிநேரம் என்னால் மூச்சு விட்டு நிலைக்க முடிந்தது.

குளிர்ந்த தென்றல்காற்று மழையைத் துரத்திக் கொண்டிருக்க யாருமற்ற தெருவில் நான் இறங்கினேன். தெருவிளக்குகளில் விழுந்த மழைத்துளிகள் கண்ணாடித் துண்டுகளைப் போல் சிதறி விழுந்து கொண்டிருந்தன. இனி, இப்போது... எங்கே போவது...?”

ஒரு கணத்தில் இந்த வசனங்கள் எனக்குப் பரிச்சயமற்றவையல்ல என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இதே போன்ற வரிகளைச் சற்று நேரத்துக்கு முன்னர் எங்கேயோ படித்த்தான உணர்வு. எனது ஆசனத்தில் அமைதியாக நான் உட்கார்ந்திருந்தேன். இளைஞன் தொடர்ந்து வாசிப்பதைச் சற்று நிறுத்திவிட்டுத் தனது பெயர் ஹரி ஹொல்லர் என்று சொன்னான். அந்த இளைஞன் வாசித்த வரிகள் ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலில் உள்ளவை என்பது சந்தேகத்துக்கிடமின்றி எனக்குப் புரிந்தது.

பதினைந்து அல்லது இருபது நிமிட வாசிப்புக்குப் பிறகு பயணிகள் எல்லோரும் கைகளைத் தட்டி அவனுக்குத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். அவன் என்னருகே வந்த போது என்னிடமிருந்த புத்தகத்தை அவன் பார்வை படாதவாறு மறைத்துக்கொண்டேன். அவனை வாழ்த்திவிட்டுச் சொன்னேன்:-

“நீ வாசித்த பந்திகள் மிகவும் அருமையாக இருந்தன.”

“செய்வதற்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கிறது. எனக்கு நேரம் இருந்திருந்தால் இவற்றை மீண்டும் எழுதியெடுத்திருப்பேன்.”

“நீ சொல்வது சரி. இந்த வசனங்கள் கொஞ்சம் பழையன போலத்தான் தெரிகிறது.”

- சொல்லி விட்டுச் சிரித்தேன்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

- சற்று அதிர்ந்துபோய்க் கேட்டான்.

“இல்லை.. ஒன்றுமில்லை. நீ இதை நீண்ட காலத்துக்கு முன் எழுயிருப்பாய் என்று நினைத்தேன்.”

எனக்கு முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஜெனிஃபர் கேட்டாள்:-

“நாம் எப்போது ஸெக்ரமென்டோ வுக்கு வருவோம்?”

“அடுத்த வாரம்!”

- இளைஞன் சிரித்துக்கொண்டே சொன்னான்;. 

அவன் நகர்வதற்கு முன்னர் டன்ஹில் சிகரட் பக்கற் ஒன்றைக் கொடுத்தேன். பெற்றுக் கொண்ட அவன் புன்முறுவலுடன் சொன்னான்:-

“அமெரிக்காவில் ஆங்கிலேயரின் சிகரட்!”

சிக்காகோவில் மற்றொரு ரயிலுக்கு மாறவேண்டியிருந்ததால் ஆறு மணி நேரம் அங்கே தரிக்க வேண்டியிருந்தது.  அடுத்த ரயில்தான் அடுத்துவரும் இரண்டரை நாட்களின் பின் எம்மை சென்பிரான்ஸிஸ்கோவுக்கு எடுத்துச் செல்லும். அந்த ரயில் இல்லினொயிஸ், அயோவா, நெப்ரஸ்கா, கொலராடோ, உத்தா, நெவாடா மற்றும் கலிபோர;னியா ஆகிய மாநிலங்களை ஊடுறுத்துச் செல்லும். சிகாகோவில் என்னுடன் இருக்கும்படி ஜெனிபரிடம் கேட்டேன். புதிய எந்தவொரு நபருடனும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தனது அம்மா சொன்னதாக அவள் என்னிம் சொன்னாள்.

“உன் அம்மா சொன்னது சரிதான். இரண்டு பேரும் ஒரு பிட்ஸா சாப்பிடுவோம் வருகிறாயா?”

“நான் ஒரு புதிய நபருடன் செல்கிறேன் என்று தெரிந்தால் எம்மா செத்தே போய்விடுவார;”

என்று சொன்னபடி என்னுடன் வந்தாள். ஸெக்ரமென்டோவில் தந்தையாருடன் சேர்ந்திருப்பதற்காகவே செல்வதாகச் சொன்னாள் ஜெனிஃபர். அவளுடைய மேற்படிப்பைத் தன்னுடன் தங்கியிருந்து மேற்கொள்ளும்படி தந்தையார் கேட்டுக் கொண்டதாகச் சொன்னாள்.

“அம்மாவை அவர் நேருக்கு நேர் சந்திக்க விரும்பவில்லை.”

“அப்பாவை விட அம்மாவுடன் இருப்பதுதான் நல்லது.”

- பிட்ஸா சாப்பிடும்போது சொன்னேன்.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“நான் எதையும் அர்த்தப்படுத்தவில்லை. நீ உனது தாயாரை மறந்து விடக் கூடாது.”

புகையிரத நிலையத்தை நோக்கித் திரும்பியதும் ஜெனிஃபர் தொலைபேசியை நோக்கிச் சென்றாள். நான் தூரத்தே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அமைதியாப் பேசிக் கொண்டிருந்த அவள் சற்று நேரத்தில் தொலைபேசி இணைக்கப்பட்டிருக்கும் ; சுவரை உதைத்துக் கோபத்துடன் கதைப்பது தெரிந்தது. ரிசீவரை அடித்துக் கொளுவிவிட்டு அவள் வெளியே வந்த போது கண்களில் நீர் துளிர்த்திருந்தது.

“நீ ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?”

- அவளைத் தொடாமலே கேட்டேன்.

“உங்களோடு பிட்ஸா சாப்பிட்டதற்காக அம்மா கடும் கோபப்பட்டார். இதற்காக அவர் தற்கொலை செய்து கொள்ளப்போகிறாராம்.”

கண்களைத் துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்துச் சொன்னாள்:-

“இனிமேல் உங்களோடு பேசமாட்டேன் என்று அம்மாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன். தயவு செய்து நீங்கள் என்னைத் தனியே விடுங்கள்.”

“நிச்சயமாக... ஆனால் இப்போது நாம் ரயில் நிலையத்திலிருக்கிறோம்.”

“நீங்கள் நல்ல மனிதர் என்றால் என்னை ஸெக்ரமென்டோ செல்லும் ரயிலில் ஏற்றி விடுங்கள்.”

இருவருமே அதே ரயிலில்தான் பயணிக்கப்போகிறோம் என்று அவளுக்குச் சொன்னேன். சென்பிரான்ஸிஸ்கோவை அடைவதற்கு முன் அந்த ரயில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே தரிக்கும் என்று புரிய வைத்தேன்.

சென்பிரான்ஸிஸ்கோ செல்லும் ரயிலில் நான் புதிய பயணிகள் குழுவொன்றைச் சந்தித்தேன். சமந்தாவும் நிகலும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். லாஸ்வெகாஸில் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காகச் செல்லும் பயணம் அது. தொழிலின்போது தனது ஒரு கண்ணையிழந்த அமெரிக்கரான நோர்மன் சென்பிரான்ஸிஸ்கோ செல்கிறார். அவுஸ்திரேலியச் சுற்றுலாப் பயணியான ஒரு இளம் பெண் இரண்டு அமெரிக்க இளம் பெண்களுடன் சேர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். மூவரும் பாடகர்களாக அறிமுகமாகும் நோக்குடன் சென்பிரான்ஸிஸ்கோ செல்கிறார்கள். மற்றொரு இளம் அமெரிக்கரும் பயணத்தில் எம்முடன் இணைந்தார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எமது ரயில் பெட்டிக்குள் இருபதுக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

உறங்கும் வேளை தவிர்ந்த நேரங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மார்கரிட்டா (மென்பானம்) அருந்தினோம். ரயில் ஆறுகளைக் குறுக்கறுத்துச் சமவெளிகளையும் குன்றுகளையும் நகரங்களையும் கடந்து சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு இடங்களைக் கடக்கும் போதும் வெய்யிலாகவும் மேக மூட்டமாகவும் இருந்ததுடன் சில இடங்களில் கடும் மழையும் பொழிந்தது.

நோர்மி என்கிற நோர்மன் எனக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார். ‘நீங்கள் அமெரிக்க நடிகர் ஜிம் ஹரிஸனைப்போல் இருக்கிறீர்கள்’ என்று அவருக்குச் சொன்னேன்.

“நான் தபாற் காரியாலயத்தில் கடமையாற்றியவன். ஒரு எழுத்தாராக இருப்பதற்கும் தபாற் கந்தோரில் வேலை செய்வதற்குமிடையில் பெரிய வேற்றுமைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”

- நோர்மன் சொன்னார;.

சமந்தா சிரித்துக் கொண்டே ‘லூ’ செல்வதாகச் சொன்னாள்.

“சமந்தா எங்கே போகிறாள்?”

- நோர்மன் கேட்டார்.

“ஒன்றுக்குப் போவதை ஆங்கிலேயர் ‘லூ’ என்று சொல்வார்கள்.”

- நான் பதில் சொன்னபோது நோர்மன் சிரித்து விட்டுச் சொன்னார்:-

“இந்தப் பயணத்தில் நாம் புதிய சொற்களையும் கற்றுக் கொள்கிறோம்.”
- சொல்லிச் சிரித்தார்.

“நானும் ‘லூ’ போகிறேன்.”

- நோர்மனும் எங்களை அனைவரையும் பார்த்துத் தமாஷாகச் சொல்லிவிட்டு கீழ்த் தளத்துக்குச் சென்றார்.

அடுத்தநாட் காலை ரயில் கொலராடோ மாநிலத் தலைநகரான டென்வருக்கு வந்து சேர்ந்தது. அங்கே அந்த ரயில் அரை மணி நேரம் தாமதிக்கும் என்று அறிந்து கொண்டேன். ரயில் நிலைய உட்புறங்களையும் வெளிப்புறப் பகுதிகளையும் படம் பிடிப்பதற்காக என்னுடைய கமராவை எடுத்துக் கொண்டு வெளியேறினேன். டென்வரில் வசிக்கும் அமெரிக்க இத்தாலிய நண்பர் ஒருவர் இந்த ரயில் நிலையம் பற்றி நீண்ட காலத்துக்கு முன் எனக்கு எழுதியிருந்தார்.

ரயில் பயணத்தில் நாளையும் நீங்கள் என்னுடன் இருப்பீர்களா என்று நான் திரும்பி வந்ததும் நோர்மன் என்னிடம் கேட்டார்.

“நான் சென்பிரான்ஸிஸ்கோவுக்குப் போகிறேன் என்பதை மறந்து விட்டீர்களா?”

மன்னிப்புக்கோருவதைப் போலத் தன் தலையை அசைத்துக் கொண்ட நோர்மன் தாழ்ந்த குரலில் சொன்னார்:-

“எனது சொந்த விடயங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனது குடும்ப விவகாரம்...!”

“நிச்சயமாக நோர்மன்... என்னால் ஏதும் ஆகுமென்றால் நிச்சயமாக.”

கீழ்த்தளத்திலுள்ள உணவகத்துக்குச் சென்று மார்கரட்டா மென்பானக் கலன்களையும் சில பிளாஸ்டிக் குவளைகளையும் ஐஸ் கட்டிகளையும் வாங்கிக் கொண்டு வந்தேன். வெளிப்புறக் காட்சிகளைக் கண்டு களிக்கவென ரயிலுடன் இணைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் அமர்ந்திருந்து கொலராடோ மாநிலத்தின் சமவெளிகளும் குன்றுகளும் நிறைந்த வெளிப்புறக் காட்சிகளைக் கண்டு களித்தோம். வெளிப்புறக் காட்சிகளை பயணிகள் நன்கு கண்டு களிக்கக் கூடிய வகையில் அந்த ரயில் பெட்டி கண்ணாடிகளால் அமைக்கப்பட்டிந்தமையால் ரயிலின் கடைசிப் பகுதி மலைக் குகையிலிருந்து வெளியே வருவதையும் ரயிலின் முன் பகுதி மற்றொரு மலைக் குகைக்குள் நுழைவதையும் பார்த்து ரசிக்க முடிந்தது.

தனது குடும்ப விவகாரத்தை என்னுடன் கதைப்பது பற்றி இடைக்கிடையே நோர்மன் நட்புடன் எனக்குச் சொல்லிக் கொண்டார்.

“இது உங்களுக்கும் எனக்குமிடையிலான விடயம். எல்லாருக்கும் இது தெரிய வருவதை நான் விரும்பவில்லை.”

அவர் அவ்வாறு சொல்லும் ஒவ்வொரு முறையும் நான் ஆம் என்பது போல் தலையாட்டிக் கொண்டேன்.

சமந்தாவும் நிகலும் பதினெட்டு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து பார்த்துவிட்டு இறுதியாகத் திருமணம் செய்வதென்று முடிவெடுத்திருந்தார்கள். அந்த மகிழ்ச்சியில் சமந்தா கையில் ஒரு வீடியோ கமராவை வைத்துக் கொண்டு எந்நேரமும் எம் எல்லோரையும் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தாள். அடிக்கடி பாட்டுப்பாடி ஆடினாள். அவளும் சில மார்கரிட்டாக்களை வாங்கிக் கொண்டு வந்து கூச்சலிட்டாள்:-

“லாஸ் வெகாஸ்.... இதோ உனக்கு....”

பிறகு எனது பக்கம் திரும்பினாள்.

“அன்பே சத்தாம்... நீங்களும் மார்கிரட்டா போட்டியில் கலந்து கொள்கிறீர்களா?”

நாங்கள் எல்லோரும் சிரித்தோம். நோர்மன் அவளுக்குத் தனது பதில் மூலம் சூடு போட்டார்:-

“எனது நண்பர் சத்தாம் என்றால் நீதான் மார்கிரட் தட்சர்!”

“சத்தாமை விட தட்சர் ஆயிரம் மடங்கு சிறந்தவர்.”

நான் நோர்மனிடம் சொன்னபோது, அவர் அதற்காகக் வருத்தப்பட்டுச் சொன்னார்:-

“மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்களைப் பாதுகாப்பதற்காக அவ்வாறு சொன்னேன்.”

சிரிப்பிலும் மார்கரிட்டாக்களிலும் அதை மறந்து விட்டோம்.

சூரியன் இறங்கிக் கொண்டிருந்தான். நோர்மன் ஒவ்வொரு கண்ணாடி ஜன்னலூடாகவும் உற்றுப் பார்த்துக் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் என்னை அழைத்தார்.

“இங்க வாங்க.. என்னிடம் வாங்க சாம்...”

நான் விரைவாக அவர் அருகே சென்றேன். 

“அங்கே பாருங்கள்... கண்களைத் திறந்து நன்றாகப் பாருங்கள்...  அப்படியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருங்கள்...”

நோர்மன் சில குன்றுகளைச் சுட்டிக் காட்டிச் சொன்னார்:-

“நாம் அருகே வந்து கொண்டிருக்கிறோம். ஆம்.. நாம் மிக நெருங்கி விட்டோம். ரயில் இதை விட வேகமாகப் போக வேண்டும் என்று நினைக்கிறேன்..”

எனக்கு அருகே அமர்ந்திருந்த நோர்மனைப் பார்த்தேன். அவ்; மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அவரது பார்வையற்ற இடது கண்ணையும் பார்த்தேன்.

“நீங்கள் சரியாக ஜிம் ஹரிஸனைப்போல் இருக்கிறீர்கள்.”

அவரைப் பார்த்துச் சொன்னதும் அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்:-

“நல்லது.. நல்லது... என்னை அவரது நாவல்களை வாங்கவைக்க முயற்சிக்கிறீர்கள்.”

சொல்லிக் கொண்டு வந்தவர; சட்டென எனது வலது கரத்தைப் பற்றி:-

“அங்கே பாருங்கள்... ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. அதோ அங்கே பாருங்கள். ஆமாம். அந்தக் கற்பாறைக்குப் பின்னால்... அங்குதான் எனது மனைவியின் கல்லறை இருக்கிறது. அவ்வளவுதான்.”

பார்வையிலிருந்து நழுவிச் செல்லும் கல்லறைகளைப் பார்த்துக்கொண்டேயிருந்த அவர் என்பக்கமாகத் திரும்பிய போது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியிருந்தது. கண்ணாடியைப் பற்றிக் கொண்டு அழுதபடி சொன்னார்:-

“எனது மனைவியின் ஞாபகார்த்தமாக!”

“உண்மையாக நீங்கள் ஜிம் ஹரிஸனைப்போல்தான் இருக்கிறீர்கள்.”

நான் சொல்லிச் சிரித்ததும் அவரும் சிரிப்பில் இணைந்து கொண்டார்.

சமந்தாவும் நிகலும் நெவாடாவின் ரெனோ ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றனர். நோர்மனும் ஜெனிஃபரும் ஸெக்ரமென்டோவிலும் அவுஸ்திரேலிய இளம் பெண் சோல்ற் லேக் சிற்றியிலும் பிரிந்து சென்றார்கள். ரயில் டேவிஸ், மார்ட்டினஸ் ஆகிய இடங்களைக் கடந்து அதன் கடைசித் தரிப்பான எமரிவில்லே வரை  புகைப்பிடிப்பதற்கான ரயில் பெட்டியிலிருந்து பாடிக் கொண்டிருந்த இரண்டு அமெரிக்கப் பெண்களதும் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அங்கிருந்து சென்பிரான்ஸிஸ்கோவுக்குச் செல்ல பஸ்ஸில் ஏறினோம். எனக்கு நண்பராகிவிட்ட கறுப்பரான ஹேர்மன் ஹெஸ்ஸேவும் அதே பஸ்ஸில் வந்து ஏறினார். பஸ்ஸில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்து ஓயாமல் கதைத்துக்கொண்டே வந்தார்.

சென் பிரான்ஸிஸ்கோவில் ஈராக்கியக் கவிஞரான எனது நண்பர் சார்ஜன் பவுலஸ் எனக்காகக் காத்திருந்தார். கறுப்பு இளைஞருடன் நான் கதைத்துக் கொண்டிருந்த என்னை அவர் அடையாளம் கண்டு  கொண்டார்.  அந்த இளைஞரை நண்பருக்கு அறிமுகம் செய்தேன்.

“இவர் ஹரி ஹெல்லர்.”

சார்ஜன் சில நாட்களுக்கு முன்னர்தான் ஆஸ்பத்திரியிருந்து வந்திருந்தார். மெதுவாகக் கேட்டார்:-

“ஸ்தெப்பன்வூல்ஃப் சென்பிரான்ஸிஸ்கோவில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?”

“நீங்கள் இருவரும் எதைப்பற்றிப் பேசுகிறீ்ர்கள்?”

- இளைஞர் வியப்புடன் கேட்டார்.

எனது பையிலிருந்த ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலை வெளியே எடுத்து அந்த இளைஞனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவன் அதை ஆவலுடன் புரட்டிப் பார்த்தபடி சொன்னான்:-

“எவ்வளவு அழகான பதிப்பு இது!”

என்னைப் பார்த்துக் கொண்டே புன்னகையுடன் தொடர்ந்தான்:-

“நன்றி. என்னிடம் இருப்பது மிகப் பழைய பிரதி.”

- இதை அவதானித்துக் கொண்டிருந்த சார்ஜன் பவுலஸ் வியப்புடன் கேட்டார்:-

“நீங்கள் எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்?”

“ஜேர்மன் ஹேர்மன் ஹெஸ்ஸேவைப் பற்றி.”

என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்று மறைந்தான்.

-------------------------------------------------------------------------------------------------

சாமுவெல் ஷிமொன்
------------------------------

ஈராக்கின் அல் ஹப்பானிய்யாவில் 1956ல் பிறந்த எழுத்தாளரான சாமுவெல் ஷிமொன் 1979ல் ஹொலிவூட் சினிமாக் கனவுடன் ஈராக்கை விட்டு வெளியேறியவர். 1985ல் பரிஸில் ஓர் அச்சகத்தை நிறுவினார். 1996லிருந்து இன்று வரை லண்டனில் வசித்து வருகிறார்.
லண்டனிலிருந்து வெளிவரும் “பானிபால்“ சஞ்சிகையை மார்கரட் ஒபாங்க்குடன் இணைந்து நிறுவியவர். அரபுலக இலக்கியத்தை இந்தச் சஞசிகை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருவதுடன் பல அறபுலகப் படைப்பாளிகளையும் உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. நாவலாசிரியர், சிறுகதையாளர், தொகுப்பாசிரியர், வெளியீட்டாளர் என்று இலக்கியத்தில் ஓயாது இயங்கி வருகிறார்.
பானிபால் சஞ்சிகையி்ன் அனுமதியுடன் இந்தக் கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: