Friday, March 15, 2013

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?



ஹலாலை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்று சகல பௌத்த மதபீடங்களும் தெரிவிப்பதாக ஒரு செய்தி இன்று வெளியாகியுள்ளது.

ஹலால் என்பது மனித வாழ்வை நெறிப்படுத்தும் அம்சங்களையும் கொண்டது என்ற விளக்கம் மீள மீள வழங்கப்பட்ட பின்னரும் கூட பன்றியின் சினையம்சங்கள் கொள்ளாதவை மட்டும்தான் ஹலால் என்ற நிலையில் மட்டும் நின்று சிந்திக்கிறார்கள் என்றால் அவர்கள் புரிந்துகொள்ளத் தயாரில்லை என்பதையே அது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இல்லை, அவர்களுக்குப் புரிகிறது என்றால் இது வேண்டும் என்றே மேற்கொள்ளப்படும் விசமத்தனம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கண்ணியத்துக்குரிய தேரர்களே,

பௌத்தம் சொல்லும் பஞ்ச சீலங்களில் ஒன்று (ஐந்த ஒழுக்கங்கள்) இது.

பானாதிபாதா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

பிராணிகளை உணவுக்காக முஸ்லிம்கள் மட்டுமல்ல பௌத்தர்களும்தான் கொல்லுகிறார்கள். முஸ்லிம்கள் உணவுக்காகக் கொல்லும் மாடுகள் மட்டும் உங்கள் கவனத்துக்கு வருவதென்ன?

அதை விடுங்கள்... பௌத்த தேசம் எனப் பெருமையடித்துக் கொள்ளுகின்ற இந்தத் தேசத்தில் எத்தனை மனிதக் கொலைகள் நடைபெறுகின்றன? வாழைக் குலை திருடுபவன் பிடிபட்டு விடுகிறான். சில மனிதக் கொலைகள் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமலே இருக்கின்றனவே! இந்த மனிதக் கொலைகளுக்கெதிராக நீங்கள் என்றாவது குரல் எழுப்பியது உண்டா? இது பௌத்த தேசத்துக்கே இழுக்கு என்று நீங்கள் இதுவரை ஏன் பொங்கி எழவில்லை? ஒரு கூட்டறிக்கை விடவில்லை?

மற்றொரு ஒழுக்கம் இப்படிச் சொல்கிறது.

காமேசு மிச்சாசாரா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருக்கும்  பயிற்சி விதியை ஏற்றுக்கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களாக தென்பகுதி அரசியல்வாதியொருவர் விபசாரத்தை சட்டபூர்வமாக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இலங்கையில் 40,000 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் அவர் கணக்குச் சொல்கிறார். இது பௌத்த ஒழுக்கத்துக்கு இழுக்காகத் தெரியவில்லையா? கொழும்பில் இரவு பகலாக நடைபெறும் கசினோக்களில் நடப்பது என்ன உன்று உங்களுக்குத் தெரியாதா? சீனா, தாய்லாந்து, கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விலைமாதர் நடமாடும் இந்தக் கசினோக்களால் பௌத்த சீலம் கெடுவது பற்றி, கலாசாரம் சீர் குலைவது பற்றி உங்களுக்கு ஏன் கவலை ஏற்படவில்லை.

இது இன்னொரு ஒழுக்கம்.

சுரா-மேரயா-மஜ்ஜா-பமா தத்தானா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

உலகில் மடாக்குடியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நமது பௌத்த நாடும் ஒன்று என்ற தகவல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. எவ்வளவு பெருமை பார்த்தீர்களா நமது நாட்டுக்கு? தெருக்குத் தெரு சாராயக் கடைகளால் நிரம்பி வழிகிறது நமது பௌத்த தேசம். விமானத்தில் நமது நாட்டுக்குள் நுழையுமொருவன் விசாவைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்தவுடன் கண்ணில் தெரிவது சாராயக் கடைதான். அதைக் கடந்துதான் அவன் தனது அடுத்த விடயத்துக்கு வரவேண்டும்.

இதுவெல்லாம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் ஏன் பேசுவதில்லை? குடியால் எத்தனை குடும்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கிறது.

இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதிருக்கும் நீங்கள் இந்த நாட்டில் வெகு அற்பத் தொகையினராக வாழும் மக்களது உணவில் எந்த நியாயத்தின் அடிப்படையில் நீங்கள் ஆதிக்கம் செலுத்த முயல்கிறீர்கள். நாட்டையும் கலாசாரத்தையும் மனித ஒழுக்க விழுமியங்களையும் பௌத்த பண்பாட்டையும் அழிக்கும் இவ்வாறான விடயங்களில் பேசாமடந்தைகளாக இருக்கும் நீங்கள் ஒரு சிறுபான்மை இனத்தின் உணவின் மீதும் உடையின் மீதும் அதிகாரம் செலுத்த முனைவது எந்த வகையில் தர்மமாகும்?

மேற்குறித்த பௌத்த ஒழுக்கங்களை முஸ்லிம்களாகிய நாங்கள் மதிக்கிறோம்.

சுட்டிக் காட்டிப்படவை விலக்கப்பட்டவை - ஹராம் - ஹலால் அல்ல - என்கிறோம்.

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

சரியான நெத்தியடி இது! சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தும் வெளியிடப்பட வேண்டும்!