Friday, March 29, 2013

அப்பிடிப்போடு...! போடு...! போடு...!


அமைச்சுப் பதவியை தூக்கியெறிய தயாராக இருக்கின்றோம் 

– றிசாத் பதியுதீன்-


'இப்பொழுது முஸ்லிம்களுக்கெதிராக நடக்கின்ற அட்டூழியங்களைக் சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30இ 40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.' இவ்வாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அறைகூவல் விடுத்தார்.

இன்று 29.03.2013 மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பெருவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பைஇ கல்வி காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்கஇ முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலிஇ தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம். நஸீர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்இ

'கலகம் விளைவிப்பவர்களை கைது செய்யுங்கள் அவர்களை அடையாளம் காட்ட மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்று சொன்னோம்.

சட்டத்தைக் கையிலெடுக்கும் நாம் சட்டபூர்வமற்ற பொலிஸார் என்று சொல்கின்றவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கின்றோம்.

கடை உரிமையாளர் முஸ்லிம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அந்தக் கடையைச் சூழ்ந்து கொண்டு தாக்கியிருக்கின்றார்கள். பக்கத்திலிருந்த பௌத்த வழிபாட்டுத்தலத்திலிருந்து வந்துதான் இந்த அராஜகத்தைப் புரிந்திருக்கின்றார்கள். கடை உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தால் பாரிய உயிரழிவும் சொத்தழிவும் எல்லாமே கணப்பொழுதில் ஏற்பட்டிருக்கும். இந்தக் கலகக் காரர்களுக்குத் தேவை பிரச்சினை என்ற ஒன்றுதான். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டிலே நிம்மதி தேவை.

நாட்டிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் நையாண்டி செய்து குழப்பம் விளைவித்து அவர்களை எப்படியாவது வம்புக்கு வலிந்திழுத்து எடுக்க அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.

ஆயிரத்து நாநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு அம்சங்கள் இன்று நேற்று வந்தது போல இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.

புதுப்புது விளக்கங்களுடன் பொது பல சேனா என்றும் ஜாதிக ஹெல உறுமய என்றும் ராவய என்றும் சட்டரீதியற்ற பொலிஸ் காரர்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்டு முஸ்லிம்களுக்கு அநியாயமிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அநியாயத்தை இப்பொழுதே தடுக்கவில்லை என்றால் இந்த நாடு இன்னும் முப்பது வருடங்கள் அல்ல முடிவுறாத காலத்திற்கு அழிவைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை ஜனாதிபதிக்கும்இ பஷில் ராஜபக்ஷவுக்கும்இ கோத்தபாயவுக்கும்இ பொலிஸ் மா அதிபருக்கும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை நாங்கள் நேற்று அல்லது முந்தநாளிலிருந்து அரசுடன் சேர்ந்தவர்களல்ல. ஆட்சியமைப்பதற்குப் பெரும்பான்மை இல்லாமல் இவர்கள் தடுமாறிய பொழுது கைகொடுத்தவர்கள்தான் நாம்.இந்த நாட்டிலே சமாதானம் மலர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவ்வாறு செய்தோம். சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கை கொடுத்தோம்.

அவருடைய இந்தத் தலைமைத்துவம் இந்த நாட்டிலே எல்லோருக்கும் சமத்துவத்தைப் பெற்றுத் தரும் என்பதற்காகவே நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

அவரது கரங்களைப் பலப்படுத்தி இந்த நாட்டிலே அவரின் தலைமையின் கீழ் இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்க அப்பொழுது ஒரு சொற்ப பெரும்பான்மை மூலம் அவருக்குச் சந்தர்ப்பம் வழங்கினோம். எம்மைப்போலத்தான் அமைச்சர் அதாவுல்லாஹ்வும் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

முஸ்லிம்களுக்கு இத்தனை நடந்தும் ஏன் பேசா மடந்தையாக இருக்கின்றீர்கள் என்று எமது சமயத் தலைவர்கள்இ சிறியவர்கள்இ பெரியவர்கள் எமக்கு வாக்களித்த மக்கள் என்று எல்லோரும் இப்பொழுது எம்மைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுக்கின்றார்கள்.

ஒரு வசனமும் பேசாமல் அமைதி காக்கிறீர்களே என்பதுதான் அவர்களது ஆக்ரோஷமான கேள்வி! பயத்திலா இருக்கிறீர்கள்? முஸ்லிம் சமுதாயத்தை இழிவு படுத்தும் பொழுதுஇ மதத் தளங்களை அசிங்கப்படுத்தும் பொழுதுஇ கடைகளை உடைக்கும் பொழுதுஇ கலாசார ஆன்மீக விடயங்களில் மூக்கை நுழைத்து எங்களை இழிவு படுத்தும் பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று மக்கள் கேட்கின்றார்கள்.

நாங்கள் இவை பற்றி வாய் திறக்காமல் இல்லை. அரச உயர் மட்டத்துடன் கதைக்கின்றோம்இ ஜனாதிபதியிடமும் பேசுகின்றோம்இ அமைச்சரவையில் கதைக்கின்றோம்இ அமைச்சரவை உப குழுவில் கதைக்கின்றோம். நாங்கள் ஜெனீவாவுக்குப் போய் முறையிடவில்லைஇ வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் போகவில்லைஇ சர்வதேச சமூகத்திடம் சென்று குறை சொல்லவில்லை.

நாங்கள் எங்களது நாட்டுக்குள்ளே கண்ணியமாகப் பேசி எமது பிரச்சினைகளை ஏறெடுத்துப் பாருங்கள் என்று கூறுகின்றோம். மிகவும் இக்கட்டான ஒரு சூழலிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இனிமேல் எமது அரசியல் கொந்தராத்து அரசியலாகவும்இ அபிவிருத்தி அரசியல்இ குறுகிய அரசியல் என்கின்ற மாயையிலிருந்து விடுபட வேண்டிய அவசரமும் அவசியமும் உள்ளது.

நாங்கள் கண்ணியமாக உடையணிவதைக் கூட ஒரு பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள். முழு நிர்வாணமாகப் போவது அவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.

உடலை மூடி கண்ணியமாகப் போவதுதான் அவர்களது கண்களைக் குற்றுகிறது. முழு நிர்வாணமாகி கொழும்பிலேஇ காலிமுகத்திடலிலே கண்டியிலே நடமாட முடியும். அது ஒன்றும் ஒருத்தருக்கும் பாதிப்பில்லை என்றுதான் அவர்கள் கருதுகிறார்கள்.

கௌரவமாக கண்ணியமாக உடையணிந்து மரியாதையாக நடந்து செல்லும் இஸ்லாமிய சமூகப் பெண்களால் அவர்களுக்கு அச்சமும் பயமும் ஏற்பட்டுள்ளதாம் என்று பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.

கடந்த 30 வருட கால உள்நாட்டு ஆயுதக் கிளர்ச்சியின் போது ஹபாயாவுக்குள் குண்டு கொண்டு வரவில்லை. தற்கொலைப் படை வந்து பாயவில்லை.

ஆனால் இப்பொழுது இந்த சமாதான சூழ் நிலையில்தான் ஹபாயாவுக்குள்ளும் பர்தாவுக்குள்ளும் குண்டு வந்து விடும் அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டு விடுவோம் என்று குண்டுப் புரளி எழுப்புகின்றார்கள்.

எங்களை இன்னுமின்னும் சீண்ட வேண்டாம் என்று நாங்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். வலிய வம்புக்கிழுத்து வளமான நாட்டை சுடுகாடாக்க வேண்டாம் என்று இந்த ஆசாமிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அது மட்டுமல்ல தேவைப்படுமிடத்து இந்த அமைச்சுப் பதவியையும் இப்பொழுதே தூக்கியெறிந்து விட்டு சமுதாயத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபடத் தயாராக இருக்கின்றோம் என்று சகோதரர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அதாவுல்லாஹ் அவர்களுக்கும் நான் இந்த இடத்தில் அறைகூவல் விடுக்கின்றேன்.

நாங்கள் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ்வதற்கு இந்த அமைச்சுப் பதவி தடையாக இருக்குமாக இருந்தால் அதனைத் துச்சமென மதித்து உதறித்தள்ளி விட்டு ஓடிவர நாங்கள் தயாராக இருக்கின்றோம்.'

கிழக்கிலே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதைக் கேட்டு என்னுள்ளம் பூரிப்படைகின்றது. 30 வருடகாலம் ஒரே மொழியைப் பேசுகின்ற நாம் பிரிந்து பிளவுபட்டுச் சின்னா பின்னமாகி இழக்க வேண்டியவை அனைத்தையும் இழந்து இன்று மீண்டும் குடிசைகளையும் கடைகளையும் பாடசாலைகளையும் கட்டுகின்ற சமூகமாக மாறிப்போயிருக்கின்றோம்.

விரும்பியோ விரும்பாமலோ கடந்தகால கசப்புணர்வுகளை நாங்கள் மறந்து புதிய பாதையிலே பயணிக்க வேண்டும். இந்த நாடு பிளவு படக்கூடாது என்பதிலே முஸ்லிம் சமூகம்இ மிகக் கவனமாக இருந்திருக்கின்றது.

அன்றைய பேரினவாதத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கியதனால் ஆயுதமேந்திப் போராட வேண்டிய துரதிஸ்டம் ஏற்பட்டது. 30 வருடங்கள் பேரழிவும் சின்னா பின்னமும் உண்டானது.

நான் இப்பொழுது இரவில் உறங்குவதில்லை. ஏனென்றால் எங்காவது முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் நடந்து விடும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதால் எனக்குத் தூக்கமே வருவதில்லை.

'வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரைவப் பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற விடயத்திலே எங்களுடன் பேச வேண்டும். நாங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து இந்தத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற தருணம் இப்போது வந்துள்ளது.'

தமிழ் பேசும் சமூகம் கிழக்கிலே ஒன்று பட்டு வாழ்வதைப்போல வடக்கிலும் சகவாழ்வு வாழ்வதற்கு நாங்கள் படாதபாடு படுகின்றோம். ஆனால் இந்த விடயத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒத்துழைப்புப் போதுமானதாக இல்லை. இந்த இடத்திலே நாங்கள் பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம். உங்களுடன் ஒருசேர இருந்து தமிழ் முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். இனியும் நாங்கள் அர்த்தமில்லாமல் பிளவுபடுட்டு நிற்க முடியாது. தமிழ் பேசும் சமூகங்கள் பலவீனப்பட்டு அழிய முடியாது. இழப்பதற்கு இனி எதுவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களோடு இது விடயமாகப் பேச முன் வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும். இதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள். ஒன்றிணைவோம் வாருங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.

-அப்துல் ஹாதி-

நன்றி - காத்தான்குடி இன்போ  29/03/2013
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: