- ரோரி அலன் -
நோன்புப் பெருநாள் சிறுகதை
அவளது பெயர் மரியம். அவளுக்கு வயது ஆறு. அடர்ந்த கருங் கூந்தல். முகத்தில் நெஞ்சையள்ளும் புன்னகை. நாட்டியமாடும் விழிகள். நீங்கள் ஆழமாக அவளது கண்களைப் பார்த்தால் மரியம் ஒரு வித்தியாசமான, விசேடமான பிள்ளை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அதாவது மரியம் உளரீதியாகப் பாதிப்புக்குள்ளான பிள்ளை. பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி குறைவு. அவளது தாயின் வயிற்றிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம்தான் அவளை உலகுக்குக் கொண்டு வந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அறுவைச் சிகிச்சை செய்த வைத்தியர் அனுபவசாலியாக இருக்கவில்லை. இதன் காரணமாக வாழ்நாள் முழுவதும் ஒலியற்ற உலகத்தில் வாழ்வதற்கே அவளுக்கு விதிக்கப்பட்டு விட்டது. அவளால் பேசவோ மற்றவர் பேசுவதைக் கேட்கவோ முடியாது. ஒரு பக்குவமற்ற சைகை மொழிமூலமே அவளால் மற்றவர்களுடன் உறவாட முடிந்தது.
அப்படியிருந்தும் மரியம் மகிழ்ச்சியாக இருந்தாள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். முகம் பூக்கப் புன்னகைத்தாள். வாய் விட்டு அதிகம் சிரித்தாள். களங்கமற்ற ஆத்மாவின் ஆழத்திலிருந்து வெளிவரும் அவளது சிரிப்பைப் பார்ப்பதே ஆனந்தமானது.
மரியம் வாழ்வை மிகவும் விரும்பினாள். தாயாரை, தந்தையாரை, அவளது இளைய சகோதரியை, மூத்த தாயாரை - யாவரையும் அவள் அதிகம் விரும்பினாள். இவர்கள் எல்லோரையும் விடப் புதிதாகப் பிறந்த தம்பிப் பாப்பா இஸ்ஸாவை விரும்பினாள். மிகவும் பாசத்துடனும் ஆர்வத்துடனும் தம்பிப் பாப்பாவை அவள் கொஞ்சினாள். தம்பிப் பாப்பாவுடன் இருக்கும் வேளையில் தன்னைத்தான் அதிகம் புரிந்து கொண்டது போல் உணர்ந்தாள். சுருங்கச் சொன்னால், அவள் புரிந்து கொண்ட உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட இஸ்ஸாவை அவள் நேசித்தாள்.
கிராமத்திலுள்ள ஏனைய சிறார்களுடன் சேர்ந்து மரியம் அடிக்கடி விளையாடுவாள். அந்தச் சிறார்களும் அவளைப் பரிகாசம் செய்வதோ தொந்தரவு செய்வதோ கிடையாது. மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் இறைவனின் கரங்களால் தொடப்பட்டவர்கள் என்று ஒரு நம்பிக்கை அக்கிராம மக்களிடம் இருந்தது அதற்கு ஒரு காரணம். அவ்வாறானவர்கள் எதுவும் அறியாதவர்கள் என்பதாலும் பாவம் எதுவும் புரியாதவர்கள் என்பதாலும் அவர்களுக்கு சுவர்க்கத்தில் ஓர் இடம் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கைதான். மனோவியல் ரீதியான பாதிப்புள்ளவர்கள் இறந்தால் கேள்வி, பார்வை எதுவுமின்றி நேரடியாகச் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுவிடுவார்கள் என்று நம்பப்பட்டது.
எல்லோரும் அவள்மீது அளவு கடந்த அன்பு செலுத்தியதன் காரணமான மரியம் மகிழ்ச்சியாக இருந்தாள். அவளுடைய தந்தை யூஸூப், தாய் பாத்திமா மற்றும் குடும்பத்தினரும் அவள் பிறந்த ஒதுக்குப் புறமான கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் அவளை அதிகம் நேசித்தார்கள். அவள் நோயுற்றால் அவளது தாயார் அவள் மீது அதிக கவனம் செலுத்தினார். தூக்கத்தில் கெட்ட கனவுகளைக் கண்டால் தவழ்ந்து சென்று தந்தையாருக்கும் தாயாருக்குமிடையில் உறங்குவதன் மூலம் பாதுகாப்புத் தேடிக் கொள்வாள். தாயாருடையதும் தந்தையாருடையதும் வாசத்துக்கு நடுவில் கிடைக்கும் கதகதப்பும் பாதுகாப்பும் ஒரு பிள்ளைக்கு வேறு எங்குமே கிடைக்காது. பிறகு எக்கவலையுமற்ற உறக்கத்தில் ஆழ்ந்து காலையில் விழித்தெழுவாள். இரவில் ஏற்பட்ட கெட்ட கனவுகளோ அச்சமோ அவளுக்கு ஞாபகம் வருவதில்லை.
மரியமுடைய கழுத்தில் ஒரு சிறிய தங்கச் சங்கிலி இருந்தது. சிறிய எழுத்திலான குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட ஓர் அச்சிலக் கூடு அச்சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்தது.
தாய், தந்தையார், சகோதரி மற்றும் குட்டித் தம்பிப் பாப்பா ஆகியோருடன் மலைப் பிரதேசத்துக்கு அல்லது பாலைவனப் பிரதேசத்துக்கு ஒரு சந்தோஷப் பயணம் செல்வது மரியமுக்கு மிகவும் பிடித்த ஒரு விடயம். அங்கே தங்கையுடன் விளையாடுவது, கயிறடிப்பது, ஆடுவது, காட்டுப் பூக்கள் கொய்வது போன்ற செயற்பாடுகளில் அவள் ஈடுபடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவாள். பூக்களைப் பறித்து அவற்றில் ஒன்றைத் தாய்க்கும், ஒன்றைத் தந்தைக்கும் மற்றொன்றைத் தங்கைக்கும் கொடுப்பதுடன் ஏனையவற்றை மாலையாக்கிக் குட்டித் தம்பியின் கழுத்தில் அணிவிப்பாள். மாலை மயங்கியதும் தாயாரின் கரங்களுக்குள் அடைக்கலமாகி உறக்கத்தில் ஆழ்ந்து விடுவாள்.
இந்த உலகத்தில் வாழ்ந்து அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியமைக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் நோன்பு நோற்கும் புனித ரமளான் காலம் பற்றி மரியம் தெரிந்திருந்தாள்.
கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டங்களைப் போல நோன்பு முடிந்ததும் வரும் பெருநாள் பற்றி மரியம் தெரிந்திருந்தாள். அது கொண்டாட்டங்களுக்கும் பரிசுகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொள்வதற்குமான மகிழ்ச்சிக்குரிய தினம். எதிர் வரும் ரமளான் பெருநாளைப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அன்றைய தினம் எல்லோம் புத்தாடை அணிவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். நீலமும் பச்சையும் கலந்த சில்க் துணியாலானதும் தங்க நிற நூல் கொண்டு அழகு செய்யப்பட்டதுமான உடையை மரியம் சந்தையில் கண்டாள். இந்த ஆடையுடன் தங்க நிற நூல் கொண்டு வடிவமைக்கப்பட்;ட செருப்பும்தான் மரியத்துக்கான பெருநாள் உடைகள் என்று மரியமிடம் தாயார் சாடை காட்டியிருந்தார்.
மரியம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் தெரியுமா? பெருநாளன்று தாயாருடனும் தந்தையுடனும் கைகோத்துப் புதிய ஆடைகள், அணிகலன்களுடன் பெருமையுடன் தெருவில் நடந்து போவதை நினைத்துப் பார்த்தாள். அவளது கற்பனையில் அவளது அழகிய ஆடைகளை கிராமத்தின் ஏனைய பிள்ளைகள் ஆவலுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆயின் அவளது வாழ்நாளின் குறுகிய இடைவெளி மோசமடைந்தது.
கிராமத்துச் சிறுவர்கள் இப்போது விளையாடுவதற்காகத் தெருக்களுக்கு வருவதில்லை. தொடர்ச்சியான எச்சரிக்கை ஒலி அவளது காதில் கேட்கத் தொடங்கியது. சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் கிரகணம் போல் பெரும் நிழலை அவள் வானத்தில் பார்த்தாள். இவ்வாறான நிலைமை எப்போதாவது இரவில்தான் நிகழ்வதுண்டு. இப்போதெல்லாம் இரவு பகல் வித்தியாசமின்றி இந்நிலை தொடர்வதை அவள் கண்டாள்.
மரியத்தினால் செவியுற முடியாதபோதும் உடலைக் குலுக்கும் அதிர்வுகளை அவளால் உணர முடிந்தது. தொடர்ச்சியாக மேலும் மேலும் துர்க்கனவுகள் கண்டு பெற்றோரின் படுக்கையில் பாதுகாப்புத் தேடித் தினமும் அடைக்கலம் புகுந்தாள். உங்களுக்குத் தெரியுமா... யுத்த விமானங்களின் இரைச்சலையோ குண்டுகள் வெடிக்கும் சத்தங்களையோ மரியம் கேட்டதில்லை. உண்மையில் அவளது குறுகிய கால வாழ்வில் எதையும் செவியற்றது கிடையாது.
அவளது உடலைக் குலுக்கும் அதிர்வுகளும் சைரன் சத்தங்களும் வலுவான சக்தியுடன் தினமும் அதிகரித்துக் கொண்டே வந்தன. இப்போதெல்லாம் மரியம் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. வீட்டுக்குள்ளேயும் தாயாரை விட்டுத் தூரமாகி இருப்பதும் இல்லை. இன்னும் சொல்வதானால் தனது தாயாரின் ஆடையை அடிக்கடி பற்றிப் பிடித்த படி கூடவே நடமாடினாள். அந்தப் பிடியை விட்டால் எல்லாம் இருள்மயமாகி விடுமோ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவளால் உணரவே முடியவில்லை.
சில வாரங்களுக்கு முன்னால் அவளிடமிருந்த குழந்தைச் சிரிப்பும் புன்னகை படிந்திருந்த முகமும் இப்போது அவளிடம் இல்லாது போய்விட்டது. ஆனாலும் 'பெருநாள் சீக்கிரம் வந்து விடும், எல்லாமே மகிழ்ச்சியாகி விடும். கருப்புப் பேய்கள் அகன்று, பழையபடி சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியும். அதன் பிறகு சிறார்கள் அனைவரும் தெருவில் விளையாடுவதற்கு வந்து விடுவார்கள். எங்காவது மீண்டும் சுற்றுலா செல்லலாம்' என்று அவள் தனக்குள் நினைத்தாள்.
ஆனால் அப்படியாக எதுவும் நடக்கவில்லை. ஒரு நாள் இரவில் முழுக் கிராமமும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தில் திழைத்திருக்கையில் பேய்களில் ஒன்று அவளது கிராமத்தின் மேல் மரணத்தை விளைவிக்கும் பெருந்தொகையைக் கொட்டியது.
அழிவுகளையும் இழப்புகளையும் அடுத்த நாட் காலைச் சூரியனின் கதிர்கள் வெளிப்படுத்தின. மரியம் உயிரிழந்து உடைந்த ஒரு பொம்மை போலத் துவண்டு கிடந்தாள். அவளுடைய கழுத்தில் கிடந்த அச்சிலக் கூடு இணைக்கப்பட்ட தங்கச் சங்கிலி சூரிய ஒளியில் மி;ன்னியது. அவளுக்கு சில அடிகளுக்கு அப்பால் குழந்தை இஸ்ஸாவைக் கைகளால் அணைத்தபடி அவளது தாயார் கிடந்தார். தாயார் அள்றிரவு அணிந்திருந்த வெள்ளை முந்தானை இப்போது கருஞ் சிவப்பு நிறத்தில் குழந்தை இஸ்ஸாவைச் சுற்றியிருந்தது. குழந்தையையும் தாயாரையும் சுற்றியிருந்த இரத்த வெள்ளம் இஸ்ஸா அப்போதுதான் பிறந்தது போல் தோற்றம் தந்தது. குழந்தையை உலகுக்குத் தந்த கன்னி மரியாள் உயிர் வாங்கப்பட்ட நிலையில் அங்கே கிடந்தார்.
மரியம் இனி ஒரு போதும் காடுகளுக்குள் பூக் கொய்து திரியமாட்டாள். இனி ஒரு போதும் கயிறடித்து விளையாட மாட்டாள். காட்டுத் தென்றல் இனி ஒரு போதும் அவளுடைய கூந்தல் கலைத்துக் கன்னத்தைக் கொஞ்சாது. இனி ஒரு போதும் குழந்தை இஸ்ஸாவை மரியம் ஆசையுடன் கட்டி அணைக்க மாட்டாள். தனது ஒதுக்குப் புறக் கிராமத்தின் புழுதி மண்டிக் கிடக்கும் தெருக்களில் ; தங்க நிற நூல் சரகை கொண்டு பெருநாள் ஆடையையும் புதிய மினுங்கும் பாதணியையும் அணிந்து இனி ஒரு போதும் பெருமை பொங்கத் துள்ளித் திரிய மாட்டாள்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மரியம் இனிமேல் நம்முடன் இல்லை என்பதைத்தான். தனது தாயார், தந்தையார், சகோதரி, குழந்தை இஸ்ஸா மற்றும் கிராமத்தில் அவள் அன்பு செலுத்திய, இன்று நம்முடன் இல்லாத அனைவருடனும் அவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்று நம்புவோம்.
அன்றிரவு 9.00 மணிச் செய்தியில் மரியம் குறிப்பிடப்பட்டாள். ஆனால் அவளது பெயரை அவர்கள் சொல்லவில்லை.
வேறு ஒரு பெயரில் சொன்னார்கள்.
அதாவது, சண்டையில் ஈடுபடாதவள் என்று!
(மரியமுக்கான பாடல் என்பது இக்கதையை எழுதிய ரோரி அலன் வைத்த தலைப்பு. ரோரி அலன் பற்றிய உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.)