நண்பர் ஸனூஸ் முகம்மத் பெரோஸ் எடுத்த அழைப்பு பெருநாள் வாழ்த்தாக இருக்குமென்றுதான் நினைத்தேன். துரதிர்ஷ்டவசமான செய்தியாக அமைந்து விட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். அறிவிப்பாளர்களுக்கு இருக்க வேண்டியது மிகத் தடிப்பமான குரல் வளம் என்ற பிழையான கருத்து மிகப்பலமாக நிலவிய காலத்திலேயே அவரது குரல் மிக மென்மையானதாக இருந்தது. ஆயினும் அவருக்கென தனியே ஒரு இரசிகர் பட்டாளமே இருந்தது என்பதை அக்காலத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவில் பணிசெய்த யாரும் மறுக்க மாட்டார்கள்.
பாடல்கள் கொண்ட 50 ஒலித் தகடுகளுக்குள் அவருடைய ஒலிபரப்பு இருந்ததாக அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுவே அவருடைய பலமாகவும் இருந்திருக்கிறது.
நான் 1986ல் ஓரு பகுதி நேர அறிவிப்பாளனாக நுழைந்த போது அறிவிப்பாளராகப் பணியாற்றி முடிந்து அறிவிப்பாளர்களுக்குப் பொறுப்பதிகாரியாக அவர் பணியாற்றினார். தமிழ்த் தேசிய சேவை, வர்த்தக சேவை இரண்டுக்குமான அறிவிப்பாளர்களுக்கு அவரே பொறுப்பதிகாரி.
எனக்கும் அவருக்கும் என்றைக்குமே ஒத்துப்போனது கிடையாது. வாரத்துக்கு ஒருமுறை என்னில் அல்லது என்னுடன் தெரிவான ஏ.ஆர்எம். ஜிப்ரி, ஜவஹர் பெர்னாண்டோ ஆகியோரில் ஏதாவது ஒரு பிழை சொல்லிக் கொண்டேயிருப்பார். ஒரு வகையில் பெரும் நச்சரிப்பாகவும் அது இருந்திருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு நடந்த பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வில் நாங்கள் மூவருமே தெரிவு செய்யப்பட்டிருந்தோம். சில போது ஒலிபரப்பு உதவியாளர் விட்ட பிழைக்கும் எம்மிலேயே குற்றம் சொல்லுவார். நீ சரியாக இருந்தால் ஏன் பிழை போகிறது என்று கேட்பார்.
ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போய், 'இவருக்குமேல் கை வைத்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது' என்று அப்துல் ஹமீத் அவர்களிடம் முறையிட்டேன். எனது கோபத்தை ஆசுவாசப்படுத்தியவர் அப்துல் ஹமீத்.
அவர் இல்லாத இடத்தில் அவரைப் போல் மிமிக்ரி செய்து சிரித்து மகிழ்ந்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.
ஒவ்வொரு ஒலிபரப்பாளரோடும் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால் அவை யாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் அவர்களோடு சம்பந்தப்பட்ட அனுபவங்கள் பலருக்கு உண்டு. நாங்கள் அங்கு பணிக்குத் தேர்வாக முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மறைந்த நண்பர் கணேஷ்வரன் ஒரு போது சொன்னார்.
ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் என்றே அவரது பெயர் ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் பெயர் ஆர். எஸ். ஏ. கனகரட்ணம் என்றிருக்கும். கே. எஸ். ராஜாவைத் தெரியாதவர்கள் இல்லை. ஒரு போது ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் தனது அறிவிப்புப் பணியை முடித்து கே.எஸ். ராஜாவிடம் பணியை ஒப்படைக்கும் போது 'தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்க கே. சிவராஜா காத்திருக்கிறார்' என்று சொல்லி விட்டு ஒப்படைத்திருக்கிறார். கே.எஸ். ராஜாவுக்குத் தனதுவானொலிப் பெயரைச் சொல்லாமல் முழுப் பெயரை வானொலியில் சொன்ன கடுப்பில் வந்து அமர்ந்ததும் 'நன்றி ராஜகுரு சேனாதிபதி அன்னையா கனகரட்ணம் அவர்களே!' என்று ஒரு போடு போட்டு விட்டாராம்.
எனக்கும் அவருக்குமிடையில் இருந்த ஒரே நெருக்கக் கோடு கவிஞர் கண்ணதாசன். அவர் கண்ணதாசன் உபாசகர். நான் கண்ணதாசனின் பெரு ரசிகன்.
பாரதியார் நினைவு தினத்துக்கு நான் எழுதிய நினைவுச் சித்திரம் பெரும் தடைகள் தாண்டி ஒலிபரப்பானது. காலையில் வந்ததும் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் பிழை இருக்கிறது என்று கலகப்படுத்தி விட்டிருந்தார் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான நடேச சர்மாவும் ராஜேஸ்வரி அக்காவும் குரல் கொடுத்த நிகழ்ச்சி அது. என்ன பிழை என்று கேட்டு அவருடன் மல்லுக்கு நின்றேன். ' ஏம்பா... கண்ணனைக் காதலானாகவும் காதலியாகவும் பார்த்தான்னு போச்சுதே... அப்படி மட்டுந்தான் பாரதி பார்த்தானா?' என்று கேட்டார். கண்ணன் பாடல்கள் எல்லாவற்றையுமா ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட முடியும் என்று கேட்ட போது, 'ஆமா... அது பிழைதான்' என்று வாதிட்டார்.
நிர்வாகத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்ளும் அவருக்கு ஒலிபரப்பில் எந்நேரம் தவறுகள் நேர்ந்தாலும் கண்டு பிடித்து விடும் திறமை இருந்;தது. 'இவர் வானொலி கேட்காத நேரம் எது' என்று கண்டு பிடிக்க நாம் ஒரு மாதம் அவதானம் செலுத்திய பிறகு, இரவு 7.30க்கும் 8.00 மணிக்கும் இடையில் என்று கண்டு பிடித்தோம். அவர் பம்பலப்பிட்டி கிறீன்லான்ட்ஸில் இரவு உணவு உண்ணும் நேரம்தான் அது.
பிற்காலத்தில் பலமுறை அவரை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அவர் அன்று பிரயோகித்த அழுத்தங்களால் நான் செம்மைப்படுத்தப்பட்டேன் என்ற உணர்வு அடிக்கடி மேலோங்கும். ஒரு வர்த்தக சேவை அறிவிப்பாளனாக இல்லாமல் (அவ்வப்போது கடமை செய்த போதும்) தேசிய சேவை அறிவிப்பாளனாக இருந்து பணி செய்து அங்கிருந்து தொலைக் காட்சிக்கும் சென்று பெயரும் புகழும் பெற்றோன் என்றால் அதில் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் ஐயாவுக்கும் பங்கிருக்கிறது என்றே நம்புகிறேன்.
இவ்வாறான ஒரு பெருநாள் தினத்தில்தான் அவர் தொழிலை விட்டுப் போகவும் நேர்ந்தது. துரதிர்ஷ்ட வசமாக நடந்து போன சம்பவத்திலும் நான் சம்பந்தப்பட்டுள்ளேன்.
அந்திம நாட்களில் கனகரட்ணம்
(படம் - நன்றி - விசு கருணாநிதி)
அக்காலப் பிரிவில் ஒரு தொடர் நிகழ்ச்சிக் கலையகத்தில்தான் தேசிய தேவையும் வர்த்தக சேவையும் மாறி மாறி ஒலிபரப்பாகி வந்தது. தமிழ் நிகழ்ச்சிகளுக்கான எமது கலையகம் சி 9. பெருநாள் தினங்களில் தேசிய சேவையில் மேலதிகமாக முஸ்லிம் சேவை விசேட நிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம். எனவே சி 9 கலையகத்திலிருந்து காலை 8.15க்கு ஆரம்பமாகும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் பகல் 12.00 மணி வரை ஒலிபரப்பாகும். வழமையாக சி 9 கலையகத்திலிருந்து காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் வர்த்தக சேவை நிகழ்ச்சிகள் சி 3 கலையகத்துக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒலிபரப்பாகும்.
குறித்த அந்த பெருநாள் தினத்தன்று நான் 8.15லிருந்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக் கொண்டிருந்தேன். 9.00 மணி வர்த்தக சேவை ஒலிபரப்புக்கு வந்த நடராஜசிவம் வர்த்தக சேவைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லாமல் இருப்பதைக் கண்டு ஒலிபரப்பு அலுவலரிடம் முறையிட சிங்களவரான அவர் தடுமாறிக் கொண்டிருந்த போது ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணமும் வந்து விட்டார். அவர்கள் எடுத்த முடிவின்படி வழமைக்கு மாறாக என்னை சி 3 கலையகத்துக்கு செல்லுமாறு பணித்தார் ராஜகுரு சேனாதிபதி.
இவ்வளவு குழப்பமும் நடந்து கொண்டிருந்த போது பொரளை ஜூம் ஆ பள்ளியிலிருந்து பெருநாள் தொழுகை நேரடி அஞ்சல் வானலைகளில் போய்க்கொண்டிருந்தது. ஒலிபரப்பு உதவியாளரை அழைத்து அஞ்சலை சி 3 கலையகத்துக்கு மாற்றிவிட்டேன். அது தடங்கலின்றிப் போய்க்கொண்டிருக்க சி 9 கலையகத்திலிருந்து கதம்பமாலை சினிமாப்பாடல் தொழுகை அஞ்சலுடன் கலந்தது. அப்போது இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அறிவிப்பாளர் கையில் இல்லை. நான் பதறிப் போய் ஒலிபரப்பு உதவியாளரிடம் சொல்லி அந்த ஒலிபரப்பைத் தடையேற்படுத்தினேன். ஆனால் பாடலின் ஒரு பகுதி தொழுகை அஞ்சலுடன் சென்று விட்டது. இதனடிப்படையில் ராஜகுரு சேனாதிபதி இடைநிறுத்தப்பட்டார். அதற்குப் பிறகு அவர் தொழிலுக்குத் திரும்பி வர முயற்சித்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.
இடைவெளி விட்டு மூன்று நான்கு முறை அவரை ஆங்காங்கே சந்தித்துப் பேசியிருக்கிறேன். கடைசியாக அவரை நான் கண்டு பேசியது ராஜேஸ்வரி அக்காவின் மரணத்தின் போது ஆர்ட் கலரியில்.
கடந்த மாதம் நிகழ்ச்சி ஒலிப்பதிவொன்றுக்கு வானொலி நிலையத்துக்குப் போயிருந்த என்னிடம் தற்போது ஒலிபரப்பாளராகக் கடமை செய்யும் ஏ.பி. நஸார்கான் ஒரு விடயம் சொன்னார். தங்களுக்கு அறிவிப்பாளர் பயிற்சிக்கு வந்திருந்த ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் எனது பெயரைக் குறிப்பிட்டு அவன் சிறந்த செய்தி அறிவிப்பாளன் என்று புகழாரம் சூட்டினாராம். இதைக் கேட்டு நான் நெகிழ்ந்தேன். இதே விடயத்தைப் பல முறை அறிவிப்பாளர் பயிற்சிகளின் போதும் அவர் சொன்னதாக நான் அறிய வந்துள்ளேன். அப்போதெல்லாம் அவரது பெருந்தன்மையை நான் உணர்ந்து கொண்டேன்.
ராஜேஸ்வரி அக்காவின் மரணத்தில் ஆர்ட் கலரியில் அவரைச் சந்தித்த போது 'ஏன்பா.. இப்போ செய்தி வாசிக்கிறதில்லையா?' என்று கேட்டார். இப்போது செய்திகள் ஒலிபரப்பாகும் விதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பதில் சொன்னேன். அலுப்புடன் தலையை ஆட்டினார்.
தனது நண்பர்களால் “கனக்ஸ்“ என்று அழைக்கப்பட்ட ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் இன்று எம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.
நாம் பட்டை தீட்டப்படும்போது ஏற்படும் வலியினால் பட்டை தீட்டுபவருடன் இளமை முறுக்குடன் முரண்பட்டு விடுகிறோம். தீட்டப்பட்டு நாம் ஜொலிக்கும் போது தீட்டிய கைகளை எடுத்து முத்தமிட உணர்வு பொங்குகிறது.
இப்போது - இந்தக் கணத்தில் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் ஐயா மீது பொங்கும் எனது உணர்வும் அப்படியானதே!)
(படம் - நன்றி் - பி.எச். அப்துல் ஹமீத்)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
3 comments:
அருமையான கட்டுரை..கண்களில் கண்ணீர் பொங்குவதை தடுக்க சிரமமாக இருக்கிறது, அமரர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..
......."நாம் பட்டை தீட்டப்படும்போது ஏற்படும் வலியினால் பட்டை தீட்டுபவருடன் இளமை முறுக்குடன் முரண்பட்டு விடுகிறோம். தீட்டப்பட்டு நாம் ஜொலிக்கும் போது தீட்டிய கைகளை எடுத்து முத்தமிட உணர்வு பொங்குகிறது....." Great words
மிக நல்ல பதிவு. நன்றி நண்பா
Post a Comment