Monday, May 16, 2011

என்னமாய்ச் சுத்துறாங்கையா... (இஸ்லாமிய இல. விழா. மலேசியா)


மலேசியாவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தும் குழு, மலேசியா வாழ் இஸ்லாமிய பெருங்குடி மக்கள், ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம் இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கவனத்துக்கு.....

இன்று காலை எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தவிப்புக் கடிதம் இது.

-----------------------------------------------------------------------------------------------------------

16.05.2011


அன்புள்ள நண்பர் அஷ்ரப் சிகாப்தீனுக்கு,

கானாமல் போனவர்கள் கவிதை நுலினூடாக உங்களை அறிந்து, பின்னர் யாத்ரா இதழினூடாக உங்கள் எழுத்துகளை இரசித்து தற்போது face book மூலமாக உங்களுடன் நண்பனான இணைந்த முகைதீன்சாலி,

உங்கள் வாயில் சீனியள்ளிப் போட வேண்டும். என்னவொரு தீர்க்க தரிசனமான முறையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள் என்பதனை சற்று நாளிகைக்கு முன்பாகத்தான் என்னால் நேரடியாக உணர முடிந்தது.

முதலில் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் அரசியல் ரீதியான முரண்பாடு காரணமாகவும் உங்களை முன்னிலைப்படுத்தவில்லை என்ற காரணத்திற்காகவுந்தான் நீங்கள் அவ்வாறு எழுதுகின்றீர்கள் என்று நான் நினைத்திருந்தேன். அது எவ்வளவு பிழையான நினைப்பு என்பதனை இப்போது நிதர்சனமாக உணர்ந்து கொள்கிறேன்.

ஒரு வேளை உங்களின் கட்டுரைகளை முதலில் இருந்தே நான் வாசித்திருந்தால் மலேசியா செல்வதற்கு பத்தாயிரம் ரூபாய் முற்பணத்தை கட்டாமலேயே விட்டிருப்பேன். என்ன செய்வது அண்மையில்தானே உங்களை face book மூலமாக நண்பணாக அடைந்தேன். அதன் பின்னர்தான் கடைசி இரண்டு கட்டுரைகளையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

பத்திரிகையில் வெளிவந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு சம்மந்தமான அறிவிப்பை பார்த்து இலக்கியம் மீதுள்ள காதலினால் மாநாட்டிற்கு செல்வதற்கு விண்ணப்பித்தேன். கூடவே மாநாட்டு கவியரங்கில் கவிதை வாசிக்கும் எண்ணத்தில் கவிதை ஒன்றையும் அனுப்பியிருந்தேன்.

முதலில் பேராளர் விண்ணப்பம் வந்தது. பின்னாளில் ஒரு சனிக்கிழமை பின்னேரம் நான் எனது சொந்த ஊரான காத்தான்குடியில் இருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘நான் உ.இ.த.மா இலங்கை ஏற்பாட்டுக் குழுவிலிருந்து பேசுகிறேன். உங்கள் கவிதை கிடைத்தது. அச்சிலிருந்ததை வாசித்தோம் நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் அனுப்பிய இறுவட்டிலிருந்து உங்கள் கவிதையை வாசிக்கமுடியவில்லை. ஏனென்றாள் நீங்கள் தட்டச்சு செய்திருக்கம் எழுத்துரு(font) எங்கள் கணினியில் இல்லை ஆகவே வேறொரு இறுவட்டை திங்கற்கிழமை கிடைக்கக் கூடிவாறு அனுப்பமுடியுமா? எனக் கேட்டார்.

நான் பேந்தப்பேந்த விழித்ததுதான் மிச்சம் எவ்வாறு ஒரு நாளைக்குள் இறுவட்டை அனுப்பமுடியும்? இந்த நவீன உலகில் எழுத்துருவுக்கா பஞ்சம்?

சரி மாநாட்டில் கவிதை வாசிக்க அவ்வளவு சீக்கிரம் நமக்கு சந்தர்ப்பம் கிடைத்திடுமா என என்னை நானே நொந்து கொண்டு காத்திருந்தேன். பத்தாயிரம் ரூபாவை ஹமாட் இன்டர்நெஷனலில் கட்டி சிலிப்பை அனுப்புமாறு சேர்குலர் வந்தது. பணத்தை வங்கியில் கட்டி ரசீதை நிறுவணத்திற்கு அனுப்பி பயணத்தை உறுதி செய்தேன்.

பின்னர் பாஸ்போட்டை கேட்டிருந்தார்கள். இரண்டாயிரம் செலவு செய்து கொழும்பு சென்று மத்திய கிழக்கு பாஸ்போட்டை 5000 ரூபாய் கட்டி சகலநாடுகளுக்குமான பாஸ்போட்டாக மாற்றி நிறுவனத்திடம் கொடுத்த போது 1030 ரூபாய் விசாவிற்கு கேட்டார்கள். ஆனால் விசாவில் 500 ரூபாய்தான் அடித்திருக்கிறார்கள் என்பது வேறு விடயம்.

இப்போதுதான் உங்களின் கட்டுரைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இருந்தாலும் உ.இ.த.இ.மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆவலில் உங்கள் ஆக்கம் எனக்கு சரியாக உறைக்கவில்லை. உற்றார் உறவினர்களுக்கெல்லாம் சொல்லியாயிற்று, மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினேன்.

பின்னாளில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உங்கள் பெயரினை பேராளர் பட்டியலில் காணவில்லையென்று. குழம்பிப் போய் அடுத்தநாள் அவர்கள் தந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு எடுத்தேன். நீங்கள் பத்தாயிரம் கட்டி விட்டீர்களா என்று கேட்டார். நான் எப்பவோ கட்டிவிட்டேன் என்றேன். அப்படியென்றால் அதன் றசீது உங்களிடம் இருக்கிறதா என்றார்கள். நல்ல வேளை மூலப்பிரதி என்னிடம் இருந்தது. சரி அதனை தொலை நகல் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள் உங்களை பேராளராக உறுதிப் படுத்துகின்றோம் என்றார்கள். நானும் அனுப்பி விட்டு மலேசியா செல்லும் எண்ணத்தில் உறுதியாக இருந்தேன். பின்னர் ஒரு கடிதம் வந்தது. மிகுதிப்பணத்தை முகவரிடம் செலுத்தி உங்கள் விமாணப்பயணச் சீட்டை மே 10க்கு முன்னர் பெற்றுக் கொள்ளுங்கள் என்று.

5ம் திகதி முகவர் நிறுவனத்திற்கு தொலைபேசியெடுத்து கேட்டேன். நான் பத்தாயிரம் முற்பணம் கட்டியிருக்கிறேன். எனக்கான டிக்கற்றை புக் பன்னி விட்டீர்களா என்று. அவர்கள் சொன்னார்கள் நீங்கள் தாமதித்து விட்டீர்கள் 26000ம் ரூயாய்க்குத்தான் ஏர் ஏசியா டிக்கற் கொடுத்தோம் ஆனால் இப்போது 29500 ரூபாய் வரும் என்று. நானும் பறவாயில்லை றிக்கற்றை போடுங்கள் என்று சொல்லிவிட்டு 6ம் திகதி காலை ஒன்பது மணிக்கே வங்கியில் பணத்தை போட்டு விட்டு 9.15 மணிக்கு பற்றுச்சீட்டை முகவருக்கு தொலைநகலில் அனுப்பினேன்.

பிற்பாடு, 11ம் திகதி முகவர் நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று எனது றிக்கட்டையும் விசாவினையும் கேட்டபோது இ.ஏ.குழு பேராளராக உங்களை உறுதிப்படுத்தவில்லை. அதனால் உங்களுக்கு நான் றிக்கற் போடவில்லை என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கிட்டத்தட்ட 3மணியிலிருந்து பிற்பகல் 5மணிவரை முகவர் நிலையத்தில் இருந்தபோதும் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அங்கிருந்தபோது மருதூர் மஜீத் வந்தார். நீங்கள் மலேசிய மாநாட்டுக்குழு உறுப்பினர்தானே என்று கேட்டேன். ஆம் என்றார் நான் எனது பிரச்சினையை சொன்னபோது நீங்கள் தாஸிம் அகமதுவிடம் செல்லுங்கள் அவரிடம்தான் லிஸ்ட் இருக்கிறது என்றார்.

நியாயம் தேடி மலேசிய மாநாட்டின் இலங்கைக் கிளையின் முகவரியான இல. 9 சவுண்டர்ஸ் கோட் என்ற இடத்திற்குப் போனேன். அது டொக்டர் தாசிம் அகமதுவின் கிளினிக் என்பது அப்போதுதான் எனக்குத் தெரியும்.

கிளினிக்கில் வேலைசெய்யும் பெண்மணியிடம் டொக்டரை கேட்டபோது டொக்டர் இரண்டு நாட்களாய் கிளினிக் வரவில்லை மலேசியா விடயம் என்றால் நீங்கள் தாருஸ்ஸலாமிற்குத்தான் செல்ல வேண்டும் என்றார். டொக்டரின் கைத்தொலைபேசி இலக்கத்தை கேட்ட போது டொக்டரின் கைத்தொலைபேசி இரண்டு நாட்களாய் வேலை செய்வதில்லை என்றார்.

அங்கிருந்து ஆட்டோ பிடித்து தாருஸ்ஸலாமிற்கு போனேன்.

மாலை ஆறு முப்பது மணி.

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசனலி இருந்தார். கூடவே எஸ்.எச். எம் ஜெமீல் இருந்தார். இன்னுமொருவர் இருந்தார். எனது விடயத்தைக் கூறினேன்.

‘இதில் எங்கள் பிழை ஒன்றுமில்லை நீங்கள் ஹமாட்டோடு பார்த்துக் கொள்ளுங்கள்;’ என்றார்கள்.

நீங்கள்தானே ஹமாட்டில் பணம் கட்ட சொன்னீர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்தாயிற்று என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றேன்.

இல்லை ஹமாட் தந்த லிஸ்டை வைத்து நாங்கள் 170 பேரை பூர்த்தியாக்கி விட்டோம் இனி ஒருவரைக்கூட அதிகரிக்க முடியாது. தலைவர் றவூப் ஹகீம் அவர்கள் கதைத்தும் கூட மலேசிய ஏற்பாட்டுக்குழு ஒருவரைக் கூட அதிகரிக்க வேண்டாமென்று கண்டிப்பாக கூறிவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

நீங்கள் கொடுத்த லிஸ்டுக்குத்தான் ஹமாட் றிக்கற் போட்டதாகச் சொன்னாரே என்ற போது ஹமாட்டை கடிந்து கொண்டார்கள்.

நான் எனக்கொரு சரியான முடிவைச் சொல்லுங்கள் என்று காத்திருந்தேன்.

அப்போது தாஸிம் அகமது வந்தார். தான் கிளினிக்கில் இருந்து வருவதாக மற்றவர்களிடம் சொன்னார். நான் எனது பிரச்சினையை தாஸிம் அகமதுவிடம் சொன்னேன். ‘நீங்கள் தானே பத்தாயிரம் பணம் கட்டிய பற்றுச்சீட்டை தொலைநகலில் அனுப்பச் சொல்லி உங்கள் பேராளர் பதிவு உறுதியென்று சொன்னீர்கள்.என்ற போது தiலையைக் குணிந்த கொண்டிருந்தார்.

அப்போது மருதூர் மஜீது வந்தார்.

ஹமாட்டிலிருந்துதான் வருகிறேன். பெரிய பிரச்சினை என்று ஏதோவொன்றை சொல்ல எடுத்தபோது ஜெமீல் அவர்கள் நிறுத்துங்கள் இங்கே ஒருவர் பிரச்சினையுடன் இருக்கிறார். உங்கள் பிரச்சினையை பிறகு சொல்லுங்கள் என்றார்.

பின்னரும் நான் அங்கிருந்தபோது ‘நீங்கள் இருப்பதாக இருந்தால் வெளியில் சென்று இருங்கள் எங்களுக்கு நிறைய வேலையிருக்கிறது. நாங்கள் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று சற்று உரத்த குரலில் கூற, எனக்கு என்ன முடிவு என்று கேட்டேன்.

நீங்கள் முகவரோடு பார்த்துக்கொள்ளுங்கள் அவர் றிக்கற் கொடுத்தவர்களின் பெயர் லிஸ்டை எங்களிடம் தந்தார் அதைத்தான் நாங்கள் மலேசியாவிற்கு அனுப்பப் போகிறோம் என்றார்கள் நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன்.

12ம் திகதி பொழுது நிச்சயமற்ற தன்மையோடுதான் புலருகிறது. ஊரிலிருந்தம் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒரே தொலைபேசி அழைப்பு றிக்கற் கிடைத்துவிட்டதா என்று. எல்லா எற்பாடகளும் செய்தாயிற்று தொழில் நிறுவனத்திலும் விடுகை பெற்றாயிற்று. மலேசியா போகா விட்டால் வெற்கக் கேடு. வெளியில் தலை காட்ட முடியாது. இதே கதிதான் எனது நண்பர் ஒருவருக்கும். அவர் ஒரு அரச நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருக்கு பிரியாவிடை நிகழ்வு கூட வைத்து விட்டார்களாம். அவர் சொன்னார் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் நாம் சும்மா சுற்றுலாவென்றாலும் மலேசியா போய் வருவோம் நீங்கள் எப்படியாவது றிக்கற்றிற்கு முயற்சி செய்யுங்கள் நான் கட்டாயம் ஊருக்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர் ஊருக்கு போய்விட்டார்.

12ம் திகதி மீண்டும் ஆட்டோ பிடித்து முகவர் நிறுவனத்திற்கு போய் றிக்கற் கேட்டபோது உங்களை போல பதினொரு பேர் பென்டிங் லிஸ்டில் இருக்கிறீர்கள் நான் றிக்கற் போட்டு தருகிறேன் ஆனால் 33000 ரூபாய் வரும.; வரும்போது 20 கிலோ கொண்டு வருவதாக இருந்தால் மேலும் 1600 ரூபாய் தர வேண்டும் என்றார். ஆனால் அதே ஏர் ஏசியா பிளைட்தான். பச்சத்தண்ணியும் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டுமாம். (என்ன கொடுமைசார். அவர்கள் அனுப்பிய கடிதத்தில் எயார் லங்கா பிளைட்டுக்குக் கூட 32500 ரூபாய்தான் வரும் என்று போட்டிருந்தார்கள்.) என்ன செய்வது முற்றாக மூழ்கிய பின் சாண் என்ன? முழமென்ன என்று எனதும் நண்பணினதும் றிக்கற்றையும் வீசாவையும் பெற்றுக்கொண்டு டொக்டர் தாசிம் அகமதுவை சந்திப்பதற்காக அவரது கிளினிக் சென்றேன்.

ஒரு கதையை சொல்லி விட்டு மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.

தர்ம காரியங்களுக்காக நிதி வசூலிக்கும் முல்லா, ஒரு நாள் ஒரு பணக்காரனின் வீட்டுக்குச் சென்று வெளியே நின்று கொண்டிருந்த வேலையாளிடம் ‘முல்லா நன்கொடை வாங்க வந்திருப்பதாக உன் முதலாளியிடம் போய் கூறு’ என்று சொன்னார். உள்ளே சென்ற வேலையாள் சிறிது நேரத்தில் திரும்பி வந்து ‘முதலாளி வீட்டில் இல்லை வெளியே சென்றிருக்கிறார்’ என்று கூறினான். அதற்கு முல்லா ‘சரி நான் கூறும் செய்தியை உன் முதலாளி வந்தவுடன் சொல்லி விடு . ‘இனிமேல் உன் முதலாளி வெளியே செல்லும் போது அவருடைய தலையையும் எடுத்துக்கொண்டு போகும்படி. ஏனெனில் நான் வரும் போது அவருடைய தலையை மேற்கு ஜன்னல் பக்கம் பார்த்தேன். அதை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டாரே’ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

கிளினிக்கில் வேலை செய்யும் பெண்மனி கூறினார் இங்கு டொக்டர் இல்லை அவர் எங்கே இருப்பார் என்று எனக்குத் தெரியாது அவரின் கையடக்கத் தொலை பேசியும் வேலைசெய்யாது எதற்கும் நீங்கள் தாருஸ்ஸலாமிற்குப் போய் பாருங்கள் என்றார்.

மீண்டும் தாருஸ்ஸலாம் சென்றேன் அங்கு மதிப்பிற்குரிய ஹசனலி எம்பி மாத்திரம் இருந்தார்கள் நான் சொன்னேன் மலேசியா விடயமாக வந்திருக்கிறேன் என்று அதெல்லாம் நேற்று முடிந்து விட்டது நான் வேறு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்றார். நான் வீசாவும் றிக்கற்றும் எடுத்துவிட்டேன் என்றேன். அப்படியானால் நீங்கள் மலேசியா வந்து பேராளராக பதிந்து கொள்ளலாம் உங்களுடைய லிஸ்டை முகவர் மலேசியா அனுப்புவார் என்றார்.

நான் அப்போது மலேசியாவில் எங்கு பதிவு செய்வது எங்கே மாநாடு போன்ற விபரங்களைத் தாருங்கள் என்று கேட்டேன்.

அதெல்லாம் தாஸிம் அகமதுதான் வைத்திருக்கிறார். அவர் கிளினிக்கில் இருப்பார் போய் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

நான் அங்கிருந்துதான் வருகிறேன் அவர் இல்லையாம் என்றேன்.

இல்லை அவரின் வீடு கிளினிக்கின் மேல்தான் உள்ளது அங்குதான் இருப்பார் போய் கேளுங்கள் என்றார்.

மீண்டும் போய் ஊளியப் பெண்மணியிடம் கேட்டேன் அதே பதில்.

எம்பி அனுப்பியதாகச் சொன்னேன்.

அவர் வர இரவு பத்து மணிக்கு மேலாகும் என்றார்;.

சரி வரட்டுமென்று முன்னாலுள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் இரவு 7.30இல் இருந்து 8.45 வரை கிளினிக் வாயிலைப் பார்த்த வாறு டொக்டரிடம் நாலு வார்த்தை பேச காத்திருக்கிறேன். டொக்டர் வந்ததாயில்லை. மீண்டும் ஊளியப் பெண்மணியிடம் கேட்போது ‘இப்பதான் கொஞ்ச நேரத்திற்கு முன்பாக டொக்டர் வந்து விட்டு போனார் என்ற முழுப் பொய்யை கூறிய போது என் மனது ரொம்பதான் வேனைப்பட்டது.

பின்னர் நான் பஸ்ஸிற்காக காத்து நின்ற போது திரும்பிப் பாhக்கிறேன். கிளினிக்கின் மேல்தட்டு ஜன்னலினூடாக தாஸிம் அகமது நடமாடுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

இப்போது

நாய் வேஷம் போட்டாச்சு குரைத்துத்தான் ஆக வேண்டும் என்ற ஆதங்கத்தோடு நானும் நண்பனும் 18ம் திகதி இன்ஷா அல்லாஹ் மலேசியா செல்கிறோம்.

எங்களுக்காக பிராhத்தியுங்கள் நண்பரே!

இதை எழுதி முடிக்கும் போது மனதிலிருந்து ஒரு பாரம் குறைந்தது போல் இருக்கிறது மீண்டும் சந்திப்போம்

என்றும் அன்புடன்

காத்தநகர் முகைதீனசாலி

0777971414
----------------------------------------------------------------------------------------------------------

இந்தக் கடிதத்துக்கு நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. இதற்குப் பிறகும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்த விரும்புவோர் மட்டும் இதனைக் கவனத்தில் கொண்டால் மகிழ்ச்சியடைவேன்.




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Mohamed Faaique said...

இஸ்லாத்தின் பேரில் ஏன் ஸார் இவ்வளவு அழிச்சாட்டியம்????
எல்லாமே சுயனலத்தனமாகத்தான் இருக்கு....
நன்பரை நினைத்தால் கவலையாக இருக்கு.. எவ்வளவு அலைச்சல்.. எவ்வளவு திரிச்சல்... எவ்வலவு செலவு

Shaifa Begum said...

அட!! பாவம் அந்த உறவு...எனக்கு எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது.
.என்ன சொல்வதென்று தெரியவில்லை.
எல்லாம் வெளிவேசம்...உண்மையான உணர்வுடன் யாரும் இல்லையா..?
இப்படியா அலைய விடுவாங்க..?
இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த பொறுமை நமக்கு வருமோ என்று யோசிக்கிறேன்.
கண்டிப்பாக எனக்கு வராது என்று நினைக்கிறேன்..
இதனைப் படிக்கும் எனக்கே எரிச்சலாக வருகிறது. அவர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்.?? நினைத்துப் பார்க்கவே கஸ்டமாக இருக்கிறது.

காலை வாரி விடாமல் எடுத்த காசுக்கு டிக்கட் கொடு்த்தாங்களே , அந்த வகையில் சந்தோசம்..
சிறப்பாக உங்கள் பயணம் அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்....சென்று வாருங்கள் !
வென்று வாருங்கள் !