Wednesday, February 1, 2012

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது வேதாளம்!


வருடாவருடம் அரச தேசிய சாகித்திய விழா பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த கையோடு பரிசளிப்பிற்கான நூற்தேர்வுகளில் இடம்பெறும் மோசடிகள், பித்தலாட்டங்கள் பற்றிய செய்திகள் கசிவது
வழக்கமாகியுள்ளது.

இது தொடர்பாக கடந்த சிலவருடங்களாக அவ்வப்போது ஞானம் ஆசிரியத் தலையங்கங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். நடந்து முடிந்த தேசிய சாகித்திய நூற்பரிசுத் தேர்வுகளிலும் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக
அறிய முடிகிறது.

23-01-2012 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மல்லிகை 47ஆவது ஆண்டுமலர் வெளியீட்டின்போது,பல பத்திரிகையாளர்களும், சஞ்சிகையாளர்களும், இலக்கிய வாதிகளும், ஊடகவியலாளர்களும் குழுமியிருந்த கூட்டத்தில் நான் பேசும்போது, பரிசுத் தேர்வுகளில் இடம்பெறும் மோசடிகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எனது ஆதங்கத்தை வெளியிட்டேன்.

எனக்குப் பின்னர் பேசிய ‘கொழுந்து’ சஞ்சிகை ஆசிரியர் அந்தனி ஜீவா, நடந்து முடிந்த தேசிய சாகித்திய பரிசுத் தேர்வில் சில தவறுகள் நடந்திருப்பதாகவும் அவை தொடர்பாக இப்பொழுது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அதேவேளை, ஒரு துறை சார்ந்த நூல்களின் பரிசுத்தேர்வில் நடுவராகக் கடமையாற்றிய எனது நண்பர் ஒருவர், தன்னால் மிகக் குறைந்த புள்ளிகள் வழங்கப்பெற்ற நூல் ஒன்றினை வேறொரு நடுவருக்கு அனுப்பி அதிக புள்ளிகள் போடவைத்து அந்த நூலுக்குப் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது என்று என்னிடம் குறைபட்டுக் கொண்டார்.

தேசிய சாகித்திய மண்டல நூற்தேர்வுகளில் மட்டுமன்றி வேறு பரிசுத் திட்டங்கள் சிலவற்றிலும் இத்தகைய முறைகேடுகள் இடம்பெறுவதாகப் பிரபல எழுத்தாளர் அல் அஸ_மத் ‘படிகள’; சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். “அண்மையில் நடத்தப்பட்ட கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசுப் போட்டிபற்றி அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “ஒரு மாதத்தின் முப்பதாம் திகதியைக் குறிப்பிட்டு போட்டி முடிவுத் திகதி என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த மாதம் முடிய மூன்று வாரங்கள் இருக்கும் போதே போட்டி முடிவு
வெளிவந்துவிட்டது. கடந்த ஆண்டும் இதுதான் நடந்தது ஏன் இந்தப் பித்தலாட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்குறிப்பிடும் மூன்று வாரம் முன்பே முடிவு வெளிவந்து விட்டது என்ற உண்மை உலகளாவிய ரீதியில் பலருக்கும் தெரிந்ததொன்று.

சமீபத்தில், தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய கு. சின்னப்பபாரதி அவர்கள், தனது உரையில் திரு. அந்தனி ஜீவாவும் திரு. கலைச்செல்வனும் தனக்குப் பல ஆலோசனைகள வழங்கியதாகக்
குறிப்பிட்டார். குறிப்பாக, பரிசளிப்புப் பரப்பினை உலகளாவிய அளவில் விரிவு படுத்தி புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கும் பரிசு வழங்கவேண்டும் என்பதை இவர்களே முன்மொழிந்தார்கள்” எனவும் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள். இது போன்ற நல்ல காரியங்களே இலக்கிய உலகிற்கு வேண்டப்படுவன.
மேலும், சின்னப்பபாரதி தனது உரையில் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்ட நூல்கள் சிலவற்றிற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன என்றும் ஆனால் தான் களத்திற்குச் சென்று பார்த்தபோது அந்த விமர்சனங்கள்
ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.

உண்மையில் நடப்பது என்ன?

கொழும்பில் சில இலக்கியத் தரகர்கள் குழுவாக இயங்குகிறார்கள். இவர்களை அணுகினால் பரிசு பெற்றுவிடலாம் என்ற ஒருநிலை இருப்பதாகப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். இவர்கள் தேசிய சாகித்திய மண்டல உயர்மட்ட தேர்வுக்குழுவினர் சிலரையும் வேறு சில பரிசுத் திட்டங்களை நடத்துபவர்களையும் தமது கைக்குள் போட்டு வைத்துள்ளார்கள். இந்தத் தரகர்களை அணுகி ஏதோ ஒருவகையில் அவர்களைச் சந்தோசப்படுத்தினால் இலகுவாகப் பரிசு பெற்றுவிடலாம் என அரசல்புரசலாகக் கதை அடிபடுகிறது.

இந்த நிலைமை மாறும்வரை பரிசு பெறும் சிறந்த படைப்புகள் கூட சந்தேகக் கண்களோடு நோக்கப்படும் துர்ப்பாக்கியம் நீண்டு கொண்டே போகும்.

பரிசுப்போட்டியை நடத்துபவர்களது நல்ல நோக்கமும் வீணாகிவிடும்.
இத்தகைய தரகுச் செயற்பாடுகள் ஆரோக்கியமானவையல்ல.
 இவை நிறுத்தப்பட வேண்டும்

பூனைக்கு மணிகட்டுவது யார்?
 
-----------------------------------------------------------------------------------------------------------
ஞானம் பெப்ரவரி 2012 - இதழ் 141 - ஆசிரியர் தலையங்கம் - நன்றி - ஞானம்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

பி.அமல்ராஜ் said...

திரும்பவுமா... என்ன வெக்கக்கேடப்பா இது? இதென்ன புதுத்தகவல்.. தரகர் கூட்டம்.. இவிங்க எல்லாம் இருந்து ஜோசிப்பாங்களோ எப்புடி நாதாரித்தனமா புளைப்பு நடத்தலாம் எண்ணு..

அண்ணா, யாரும் மணிகட்டப் போவதும் இல்லை. அவுங்க அதை நிறுத்தப்போவதும் இல்லை. எங்களால் முடிந்தது, ஆசிரியர் தலையங்கங்களில் பேசுவதும் நேர்காணலில் குறிப்பிடுவதும். இது எனது தனிப்பட்ட ஆதங்கம்.

Shaifa Begum said...

இங்கேயும் தரகர்களா..???ஹம்...... நல்ல பணி செய்றாங்களப்பா....

தேவமுகுந்தன் said...

பிடி" என்று கத்தியபடி ஓடித் தப்பிப்பான்.
2 மரியாமதலேனாளை விபச்சாரி என்று குற்றம் கூறி இயேசுநாதரிடம் ஒரு கூட்டத்தினர் அழைத்து வந்தனர். அவர் சொன்னார் "உங்களில் விபசாரம் செய்யாதவன் முதற்கல்லை எறியட்டும்" .
கொழுந்து ஆசிரியரின் பேச்சைக் கேட்டதும் இவை இரண்டும் ஏனோ எனக்கு நினைவில் உடனடியாக வந்தன.