Saturday, March 9, 2013

வேளையில் வீசுங் காற்று!


ஆள நினைத்தும் வாழ நினைத்தும்
ஆடிய மனிதரெலாம் - ஒரு
கால நொடிதனில் காணாதாகினர்
கதைகள் நீயறிவாய்

அடக்க முயன்றும் அடைக்க முயன்றும்
அடங்காதிருந்தவரைப் - பிறர்
முடக்கி வீழ்த்திய முழுவரலாறும்
முடிந்து போனதில்லை

தடியை எடுத்தவன் தண்டல்காரனாய்த்
தன்னை நினைப்பதுண்டு - அவன்
தடுக்கி வீழ்ந்து தலைவெடித்தழிந்த
தனை யார் மறுப்பதுண்டு

மன்னாதி மன்னர் மாட்சிமை கொண்டோர்
மண்ணாய்ப் போய்விட்டார் - இனி
இன்னார் வந்து இடுக்கண் தரினும்
அன்னார் அழிந்திடுவார்

சூரியன் வந்து சுடுவதனால்தான்
சந்திரன் வருவதுண்டு - இந்தப்
பாரில் இதுபோல் பலகதை சொல்லப்
பழங்கதை நிறையவுண்டு

அவலை நினைத்தே உரலை இடிப்பதில்
ஆவது ஏதுமுண்டோ - தினம்
கவலை கொண்டு காலம் கழிப்பதில்
கடமை முடிவதுண்டோ?

நாளையை நினைத்து நடுங்கும் நண்பா
நெஞ்சில் உரங்கொள்ளுவாய் - இது
வேளையில் மட்டும் வீசுங்காற்று
விளங்கி உளங்கொள்ளுவாய்!

(மே 2002ல் எழுதப்பட்ட கவிதை - என்னைத் தீயில் எறிந்தவள் கவிதை நூலிலிருந்து)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

தரமான கவிதை எனில் அது காலத்தை வென்று நிலைபெறும் என்பார்கள்! இதுவும் அத்தகைய ஒரு கவிதைதான்! அன்று எழுதியதாய் இருந்தாலும், இன்றைக்கும் பொருந்துகின்றது; இனியும் பொருந்தும் இன்ஷா அல்லாஹ்!