Wednesday, February 26, 2020

ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் மிக அவசியம்!

ஒலி, ஒளிபரப்பாளர், கவிஞர், பன்னூலாசிரியர், கலைஞர் என்று பல் துறை ஆளுமையான அஷ்ரஃப் சிஹாப்தீன் அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கவிதைக்கான 'மகரந்தச் சிறகு' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருடனான நேர்காணல்.
நேர்கண்டவர் - நாச்சியாதீவு பர்வீன்

01. கேள்வி:

அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகம் - கவிக்கோ நினைவு - மகரந்தச் சிறகு விருதை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இது பற்றிய உங்களது எண்ண வெளிப்பாடு என்ன?

பதில்:
இது ஓர் உயர்ந்த விருது. அப்படித்தான் நான் இதனைக் கருதுகிறேன். அகில இலங்கை கம்பன் கழகத்தின் பார்வையும் அவதானமும் என் மீது விழுந்திருக்கிறது என்பதையே ஒரு பெரு மதிப்பாக நினைக்கிறேன். நுணுகி ஆய்ந்துதான் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த விருது எனக்குக் கிடைத்ததையிட்டு அதிலும் அவர்களது வெள்ளி விழா ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கம்பன் கழகத்துக்கும் அதன் உயிர் மூச்சாக இயங்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகம் என சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

02. கேள்வி:

இலக்கியத்தை நோக்கி உங்களை உந்திய காரணிகள் எவை?

பதில்:

எனது தாய் வழிப் பாட்டனார் ஒரு புலவராயிருந்தார். கிண்ணியா நாச்சிக் குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஒலுவிலில் திருமணம் செய்து ஓட்டமாவடியில் வாழ்ந்து வந்தார். அவர் மூன்று விடயங்களில் ஈடுபட்டார். ஒன்று, ஒரு குர்ஆன் மத்ரஸாவை நடத்தினார். இரண்டு, அறபு எழுத்தணியைக் கண்ணாடிகளில் எழுதி விற்பனை செய்து வந்தார். கண்ணாடியில் வலது புறமாக எழுத வேண்டிய அறபு எழுத்துக்களை அவர் இடது புறமாக எழுதினால்தான் அடுத்த பக்கம் சரியான முறையில் தெரியும் என்பதைக் கவனிக்க வேண்டும். மூன்றாவதாக, சிறு சிறு காப்பியங்களைப் படைத்தார், இஸ்லாமிய இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார், அவற்றை விற்பனை செய்தும் வந்தார். எனவே அவரது புத்தகங்களில்தான் அதுவும் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பாடல்களை வாசிப்பதில் எனது ஆர்வம் மிகச் சிறிய வயதிலேயே ஆரம்பித்தது.

03. கேள்வி:

இலக்கியத் துறைக்குள் நீங்கள் நுழைந்த காலப் பிரிவு, அப்போதைய சூழல் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்:

1976ல் நான் பேருவளை ஜாமிஆ நளீமியாவுக்குள் மாணவனாக நுழைகிறேன். அங்கு நிறைய வாசிக்க முடிந்தது. சத்தியத் தீபம் என்னொறு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம். அக்காலப் பிரிவில் பலப்பிட்டி அரூஸ் அவர்கள் ஜூம்ஆ என்று ஒரு பத்திரிகை வெளியிட்டார். அதில்தான் எனது முதலாவது சிறிய வசன கவிதை வெளிவந்தது. இன்று அதைக் கவிதை என்று சொல்ல முடியாது. (அந்தக் காலத்து வசன கவிதைகள் இன்று கவிதைகளே இல்லை என்பது வேறு விடயம்) காலியைச் சேர்ந்த எம்.எச்.எம். ஹாரிஸ் அவர்கள் தமிழாசிரியர். இவர் ஆசிரிய கலாசாலைத் தமிழ் விரிவுரையாளராக இருந்த தமிழறிஞர். இவர்தான் மரபுக் கவிதையில் எதுகை மோனை சொல்லித் தந்தவர். மற்றொருவர் எனது வகுப்புத் தோழன் எம்.எம். முகம்மத். தேர்தல் திணைக்களத்தில் மேலதிக ஆணையாளராக இருந்தவர். அவர் ஒரு நல்ல மரபுக் கவிதைக் காரர். ஓசை நயத்தைக் கண்ணதாசனின் கவிதைகளில் கற்றேன்.

அக்காலத்தில் தினபதி பத்திரிகையில் 'தினபதி - கவிதா மண்டலம்' என்று ஒரு பகுதி. அதில் தினமொரு மரபுக் கவிதை வெளிவரும். 1977 இறுதிப் பகுதி அல்லது 78ன் ஆரம்பப் பிரிவில் எனது முதலாவது மரபுக் கவிதை அதில் பிரசுரமானது. அதில் கவிதை வரவேண்டுமாயின் அக்கவிதையை சிபார்சு செய்யவென்று சிலர் பத்திரிகையினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த சிபார்சு இல்லாமலே எனது கவிதைகள் பிரசுரமாயின.

தொடர்பு சாதனங்கள், வசதி வாய்ப்புகள் என்று எதுவுமற்ற காலப் பிரிவு அது. நான் 17 வயது இளைஞன். லீவில் வந்தால் ஊரில் உள்ள இலக்கியவாதிகளோடுதான் உறவு இருந்தது. அவ்வேளை பிரதான இலக்கியவாதிகள் மூவர் இருந்தனர். வை. அகமத் அவர்கள் நாவலாசிரியராகவும் சிறுகதையாளராகவும் அறியப்பட்டவர். எஸ்.எல்.எம். ஹனிபா சிறுகதையாளர். ஓட்டமாவடி ஜூனைத் எனக்கு முன்பே கவிதைத் துறையில் ஈடுபட்டவர். அவருடைய நிறையக் கவிதைகள் பத்திரிகை, சஞ்சிகைளில் வந்திருக்கின்றன. இதற்கப்பால் யூசுப் ஆசிரியர், யூ.அகமட், எஸ்.எம்.தலிபா, ஓட்டமாவடி இஸ்மாயில் என்று சிலர் இலக்கிய ஆர்வத்துடன் இயங்கி வந்தார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு முந்திய தலைமுறையினர். எனக்குப் பிற்பாடு வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம். ஸதக்கா, வாழை மயில் (இஸ்மாயில்) ஆகியோர் கவிதை, கதை, பத்திரிகை, சஞ்சிகை என்று இயங்கி வந்தவர்கள். பின்னால்  எஸ்.நளீம், ஓட்டமாவடி அறபாத், ஜிப்ரி ஹஸன், சல்மான் வஹாப், சல்மானுல் ஹாரிஸ் என்று ஒரு படை உருவாகியது. இதற்குள் சில பெயர்கள் ஞாபக மறதியால் விடுபட்டிருக்கலாம். இங்கே நான் குறிப்பிட்டவர்கள்  எனது இலக்கியத் தொடக்கத்தின் சற்று முன்னும் பின்னுமானவர்களாவர்.

இதற்கெல்லாம் அப்பால் ஒருவரை நான் குறிப்பிட்டாக வேண்டும். அவர்தான் பொது நூலகராக இருந்த சமத் நானா அவர்கள். நூலகத்துக்கு நல்ல நூல்களைக் கொள்வனவு செய்து வைத்திருப்பார். நல்ல நூல்களை எனக்குத் தெரிந்து வைத்திருந்து தருவார். எல்லாருக்கும் இரண்டு புத்தகங்கள்தாம் வழங்குவார். எனது வாசிப்பு வேகத்தைக் கண்டு எனக்கு மூன்று நூல்கள் தருவார். அவரை என்னால் மறக்க முடியாது.

04. கேள்வி:

உங்களது முதலாவது கவிதை தொகுதிபற்றியும், அதற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்:

முதலாவது கவிதைத் தொகுதியான 'காணாமல் போனவர்கள்' 1999ல் வெளி வந்தது. இதில் இடம்பெற்ற இரண்டு கவிதைகளைத் தவிர ஏனைய அனைத்தும் 1978க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பெற்றவை. ஒரு நூலுக்கான கவிதைகளை 1984லேயே தொகுத்து வைத்திருந்தேன். ஆனாலும்  வெளியிடும் அளவு வசதி வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. பயிற்றப்பட்ட ஆசிரியனாக இருந்த நான் 1992ல் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரம் பெற்ற அலுவலர் தெரிவுக்கான அகில இலங்கை ரீதியான பரீட்சையில் சித்தியடைந்ததுடன் 1993ல் அதில் இணைக்கப்பட்டேன். 1996 அளவில் எனது முதல் நூலைக் கொண்டு வந்திருக்கலாம். அப்போதும் அதுபற்றி ஆர்வம் இருக்கவில்லை.
1998ம் ஆண்டு எனது முதற்தொகுதியைக் கொண்டு வர பலவந்தப் படுத்தியவர்கள் இருவர். ஒருவர், மறைந்த கவிஞர் ஏ.ஜி.எம். சதக்கா. மற்றையவர் வாழைச்சேனை அமர் என்கிற அப்துல் ரகுமான். இதற்காகவே அவர்கள் ஊரிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டு வந்து ஒரு முழுநாளும் நின்று என்னை ஊக்கப்படுத்தினர். இதன் விளைவாக 1999ல் முதற் தொகுதி வெளியாயிற்று. என்னை மீண்டும் அவர்கள் இலக்கியத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் பின்னால் எழுதப்பட்ட அனைத்து எழுத்துக்களுக்குமான தோற்றுவாயை உண்டு பண்ணியவர்கள் அவர்கள் இருவரும்தாம்.  'காணாமல் போனவர்கள்' முதற்பதிப்பாக ஆயிரம் பிரதிகளும் இரண்டாம் பதிப்பாக அறுநூறு பிரதிகளும் வெளியிடப்பட்டன.

நாச்சியாதீவு பர்வீன் 

அங்கீகாரம் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா? யாருடைய அங்கீகாரத்துக்காகவும் நான் எதையும் எழுதவில்லை. யாருடைய அங்கீகாரத்தையும் நான் எதிர்பார்ப்பவனும் அல்லன். இன்னின்னார் பாராட்ட வேண்டும், பல்லக்கில் ஏற்ற வேண்டும் என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் எனக்குக் கிடையாது. எனக்குக் கவிதை எழுதத் தோன்றினால் எழுதுகிறேன். கதை, கட்டுரை, பத்தி, மொழிபெயர்ப்புகள் - இவையெல்லாமே நானே தீர்மானித்து நானே எழுதினேன், எழுதுகிறேன். வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் எழுதுவேன்.

05. கேள்வி:

ஆரம்பத்தில் கவிதைக்கூடாக ஆரம்பித்த உங்களது இலக்கியப் பயணம் பத்தி எழுத்து, கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு  என்று இலக்கியத்தின் எல்லாத் தளத்திலும் பயணித்தது எவ்வாறு?

பதில்:
இதில் எந்த மாயமோ மந்திரமோ இல்லை. எனக்கு முன்னரும் கவிதையில் ஆரம்பித்து பல் துறைகளில் ஜொலித்தவர்கள் இருக்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் கிடைக்கக் கிடைக்க அவனது தளம் விரிந்து செல்லும். சிலர் எனக்கு ஒரு துறையே போதும் என்று அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவார்கள். இதுவும் வாலாயமாகும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் ஏளைய துறைகளுக்குள்ளும் கால் பதிப்பார்கள்.
சிறுவர் இலக்கியத்தில் ஈடுபட்டது எதிர்பாராமல் நடந்நதது. ரூம் டு ரீட் என்ற நிறுவனத்தில் தமிழ்ப் பிரிவில் கடமை புரிந்த ராஜா மகள் என அறியப்பட்ட லதா சிறுவர் இலக்கியம் பற்றிய பயிலரங்குக்கு அழைத்து இதில் ஈடுபட வைத்தவர். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நான் சொல்ல வேண்டும். இந்தியரான சுபீர் சுக்ளா என்ற பயிற்றுவிப்பாளர்தான் இந்தப் பயிலரங்கை நடத்தியவர். இந்திய கல்வியமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அவர். சிறுவர் இலக்கியத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவர். கடந்த காலங்களில் ஈஸாப்பு நீதிக் கதைகள், தந்திரக் கதைகள் போன்றவற்றைச் சிறுவர்களுக்குக் கற்பித்தது பிழை என்று அவர் சொன்னார். தந்திரம், ஏமாற்று ஆகியவற்றைக் கதைகள் மூலம் இளம் பிஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும் முயற்சி மூலம் இலக்கை அடைவதைப் பற்றியே கதைகள் எழுதப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுடன் அதன் படி எழுதவும் தூண்டினால். ஆனால் துரதிர்ஷ்டமாக இன்று விற்பனைக்கிருக்கும் சிறுவர் கதைகள் இந்த நியமங்கள் அடிப்படையில் எழுதப்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பயிலரங்குக்குப் பின் நான் மூன்று கதைகளை எழுதினேன். சிறார்களுக்கென இலக்கியம் படைப்பது ஏனைய படைப்பாங்களைச் செய்வதை விட முற்றிலும் வேறு பட்டது, சவாலானது, சிரமம் மிக்கது என்பதே எனது கணிப்பாகும்.

06. கேள்வி:

இலங்கை அரசினால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற உயர் விருதான சாகித்திய மண்டலப்பரிசினை மூன்று தடவைகள் பெற்றவர் என்ற வகையில் அந்த விபரங்ளை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

பதில்:

முதல் விருது 'என்னைத் தீயில் எறிந்தவள்' என்ற எனது இரண்டாவது கவிதை நூலுக்கு 2009ம் ஆண்டு கிடைத்தது. இரண்டாவது விருது அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' நூலுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'பட்டாம் பூச்சிக் கனவுகள்' தொகுதிக்கு 2016ம் ஆண்டு கிடைத்தது.

இது தவிர, ஏனைய நான்கு நூல்கள் இறுதிச் சுற்றுக்குள் வந்த மூன்று நூல்களில் ஒன்றாக இடம்பிடித்துச் சான்றிதழ் பெற்றன. 2011ல் 'ஒரு குடம் கண்ணீர்', 2014ல் எனது சிறுகதைகளின் தொகுதியான 'விரல்களற்றவனின் பிரார்த்தனை', 2017ல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியான 'யாரும் மற்றொருவர் போல் இல்லை', 2018ல் எனது மூன்றாவது கவிதைத் தொகுதியான 'தேவதைகள் போகும் தெரு' ஆகியனவாகும்.

கேள்வி

07. இலங்கை இந்திய தமிழ் பரப்புக்கு பெரிதும் பரிச்சயமற்ற அரேபிய சிறுகதைகளை மொழி பெயர்க்கும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

என்னுடைய அவதானத்தின் படி உலகத்தை ஆகர்ஷிக்கும் இலக்கியப் படைப்புகள் லத்தீன் அமெரிக்க, அரேபிய, ஆபிரிக்க நாடுகளிலேயே வெளிவருகின்றன. அதிகமாகப் பேசப்படும் இலக்கியங்களாக இவையே இருக்கின்றன. தமழ் சூழலில் என்ன காரணம் பற்றியோ லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுமளவுக்கு, பேசப்படுமளவுக்கு அறபு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதுமில்லை, பேசப்படுவதுமில்லை.

அறபு மொழி இலக்கியச் செழுமையும் ஆழ வேருன்றிய இலக்கியச் சிறப்பும் கொண்டது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கவிதைகளை எழுதி கஃபா என்ற இறை ஆலயத்தில் தொங்க விட்டவர்கள் அவர்கள். கவிதையிலேயே பொருதிக் கொண்டவர்கள். கதையும் அப்படித்தான். ஆயிரத்தொரு அராபியக் கதைகள் இன்று வரை பேசப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

மேற்கு நாடுகளில் குடியேறிய பல அறபு எழுத்தாளர்கள் ஆண்களும் பெண்களுமாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்ற மொழிகளில் அற்புதமான இலக்கியங்களைப் படைக்கிறார்கள். 1998லிருந்து லண்டனில் 'பானிபால்' என்றொரு சஞ்சிகை அறபு நாடுகளின் இலக்கியத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதை நிறுவியவர்கள் மார்கிரட் ஒபாங் என்ற பிரிட்டிஷ் பெண்மணியும் சாமுவேல் சிமோன் என்ற ஈராக்கிய எழுத்தாளருமாவர். இருவருமே முஸ்லிம்கள் அல்லர். தேடல்கள் மூலமே இவற்றை நான் அறிந்து கொண்டேன். எனவே அவற்றில் எனக்குப் புரிந்தவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்து மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். நான் மொழிபெயர்த்த சிறுகதை ஒன்றை எழுதியவர் ஜோக்ஹா அல் ஹார்த்தி. ஓமானைச் சேர்ந்த இப்பெண்மணியின் அறபு நாவல் ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேன் புக்கர் விருது பெற்றிருக்கிறது. ஓமானில் இருந்த வேளை நமது முன்னோடி எழுத்தாளர் மானா மக்கீன் அவரைச் சந்தித்ததாக அறிந்தேன்.

எனக்கு மொழிபெயர்ப்புக்கான நூல்களை வாங்கித் தரும் இருவர் லண்டனில் வசிக்கின்றனர். சட்டத்தரணி ஷர்மிலா ஜெய்னுலாப்தீன், ஒலிபரப்பாளர் ஷைபா அப்துல் மலிக் ஆகிய இருவருமே அவர்களாவர்.

அறபு மொழி துறைபோகக் கற்றவர்கள் அந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இது லாபமீட்டும் துறையல்ல. அறபு மொழியில் பாண்டித்தியம் பெற்று அரச பதவிகளில் இருப்பவர்களும் இவ்விடயத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. எல்லாருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனையவர்கள் அறபு நாடுகளில் வாழும் பணிப்பெண்களின் 'பாபா'வுக்குக் கடிதம் எழுதுவனுடன் தமது திறமையை மட்டுப் படுத்திக் கொண்டார்கள்.

எனது அறிவுக்கெட்டியவரை உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஷெய்க் ஏ.பி.எம். இத்ரீஸ், ஷெய்க் ஏ.சீ. மஸாஹிர் போன்றோர் சற்றுப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரியாமலும் வேறு சிலரும் இருக்கக் கூடும்.

Friday, February 14, 2020

அப்துல் ஹமீத் - ஒலியில் ஒளிரும் வானவில்!


முன்னோடி ஒலிபரப்பாளர்களில் ஒருவரான பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள் நேற்று 13.02.2020 அன்று கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நடைபெற்ற வானொலி அரச விருது விழாவில் 'பிரதீபா பிரணாம' என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் காசார அமைச்சின் கீழ் இயங்கும் கலாசாரத் திணைக்களம் இதனை வழங்கியிருக்கிறது.

இந்த விருது எப்போதோ அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மிக அண்மித்த காலங்களில்தான் இவ்வாறான விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்தன என்ற வகையில் ஆறுதலடைய முடியும். இன்னொரு வகையில் அவர் தொடர்ந்தும் ஒலிபரப்புத் துறையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற அடிப்படையிலும் தாமதத்துக்காகக் கவலை கொள்ள வேண்டியதில்லை.

அப்துல் ஹமீத் அவர்களை ஓர் அறிவிப்பாளன் என்ற வகையில்தான் பலரும் மேலோட்டமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர் ஓர் அற்புதமான கலைஞர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பாடலாசிரியர் என்ற விடயங்கள் பற்றிப் பெருமளவில் யாரும் அறிந்திருக்கவில்லை. அதற்கு ஒரு பிரதான காரணம் தன்னைப் பற்றி அவர் எடுத்துக் காட்ட முனைந்ததில்லை.

1985இல்தான் நான் அவரை முதன் முதலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தாழ்வாரத்தில் சந்தித்தேன். யாரோ ஒருவர் என்னை அறிமுகம் செய்தார். அப்போது 'யாவரும் கேளிர்' என்ற நிகழ்ச்சியை முஸ்லிம் சேவையில் நடாத்திக் கொண்டிருந்தேன். அப்போது அவர் வர்த்தக சேவையில் 'ஒலி மஞ்சரி' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தார். 'உங்களது கவிதையொன்று ஒலி மஞ்சரி'யில் ஒலிபரப்பாகியிருந்தது கேட்டீர்களா?' என்று கேட்டார். 'நான் ஒலிமஞ்சரிக்குக் கவிதை அனுப்பவில்லையே' என்றேன். நண்பர் கிண்ணியா அமீர் அலி வீரகேசரி வார மஞ்சரியில் வெளி வந்த 'குழந்தைகளுக்கு மாத்திரம்' என்ற கவிதையை இரசித்த கவிதையாக 'ஒலி மஞ்சரி'க்கு அனுப்பியிருந்த விடயத்தை எனக்குச் சொன்னார்.

வர்த்தக நிகழ்ச்சிகளூடாக இலக்கியத் தரத்துடனான ஒரு நிகழ்ச்சியாக 'ஒலி மஞ்சரி' இருந்தது. மிக அதிகமான இளைய தலைமுறை அதில் எழுதி வந்தது. கவிதையாக இல்லாத போதும் அதைத் தனது வாசிப்பின் மூலம் கவிதையாக்கி விடுவார் அப்துல் ஹமீத் என்று அந்நிகழ்ச்சி பற்றிப் பேசும் போது ஒலிபரப்புத் துறை சாராத ஒரு நேயர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அதை ஒரு பல்சுவை நிகழ்ச்சியாக அவர் நடாத்தி வந்தார்.

அக்காலங்களில் இன்று போல் உடனடியாக ஒருவரோடு தொடர்பு கொள்ளும் எந்த வாய்ப்பும் இல்லை. ஒருவரைப் பற்றிய முழுத் தகவல்களும் பத்திரிகைகளில் வந்தால்தான் உண்டு. ஒலிபரப்பாளர்களின் பேட்டிகள் கூட வருவதில்லை. அறிவிப்பாளர்கள் பற்றிய சில செய்திகளை அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு எப்போதாவது அவர்களுடன் தொடர்பு பட்டவர்களிடம் கேட்பார்கள். ஒரு பகுதிநேர அறிவிப்பாளனாகச் சேர்ந்த பிறகு விசாலாட்சி ஹமீத் தான் பி.எச். அப்துல் ஹமீதின் மனைவியா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். என்னைப்போல் எத்தனை பேரிடம் யார் யார் கேட்டிருப்பார்களோ?

அவரிடமுள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, யாரையும் பற்றி யாரிடமும் அவர் பேசமாட்டார். விமர்சிக்கவும் மாட்டார். இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று யாருக்கும் இலவச அறிவுரை வழங்குவதும் இல்லை. அவரிடம் எதையாவது கேட்டால் மாத்திரமே அது பற்றிய விபரங்களையும் ஆலோசனையையும் நமக்குத் தருவார். 'என்னுடைய சக தொழிற் பயணியாக ஒருவர் வந்து விட்டால் அவர் என்னைப் போல் ஒருவர்தான்' என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.



தொண்ணூறுகளில் தொலைக் காட்சிச் செய்தி வாசிப்புக்குச் சென்ற பிறகு ஒரு நாள் என்னைக் கண்டு சொன்னார், 'அஷ்ரஃப்... மீசை ரொம்பப் பெரிதாகத் தெரிகிறதே.. சிறிதாகக் கத்தரித்துக் கொள்ளக் கூடாதா?' அவர் சொல்லும் வரை நான் அதுகுறித்துச் சிந்தித்திருக்கவில்லை. அவர் அப்படிச் சொன்னதே ஓர் அபூர்வமான விடயம். அது பற்றிப் பிறகு யோசித்தால் இளவயதில் நறுக்கப்படாத மீசை திரையில் நமது முகத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பது புரிந்தது மட்டுமல்ல, அது குறித்து அவரது நுணுக்கமான அவதானிப்பை நினைத்தும் வியந்தேன்.