Tuesday, April 5, 2011

ரீமிக்ஸ் கடைகள்

அன்புக்குரிய - கமலாம்பாள் கபே மற்றும் சோனகர் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு,

இந்தக் கடிதம் தங்கள் இருவரிடமும் ஒரே கோரிக்கையை விடுப்பதற்காக எழுதப்படுகிறது என்பதால் தனிக் கடிதமாக தங்களுக்கு அனுப்பப்படவில்லை. கடிதத்தைப் படித்து முடித்ததும் தனிக் கடிதத்துக்கு அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

எனது காரியாலயத்துக்கு அண்மையில் ஒரு சிறிய இடைவெளித் தூரத்தில் தங்களது கடைகள் அமைந்திருப்பதால் தங்களது கடைகளுக்கு அவ்வப்போது தேனீர் அருந்தவும் சிற்றுண்டி மற்றும் ஆகாரம் சாப்பிடவும் தனியாகவும் சிலவேளை நண்பர்களுடனும் வந்து செல்லும் தங்களது முக்கியமான நுகர்வோரில் நானும் ஒருவன்.

தங்களது கடைகளில் விற்கப்படும் பருப்பு வடைகள் வௌ;வேறு நிறங்களில் இருப்பதை நான் அவதானிப்பேன். புதிய வடை மஞ்சள் நிறமாகவும் ஒருநாள் பிந்தி மீண்டும் பொரிக்கப்பட்டது பொன்னிறமாகவும் இருநாட்கள் பிந்தி மீண்டும் அதாவது மூன்றாவது முறையாகப் பொரிக்கப்பட்டவை கபில நிறமாகவும் இருக்கும் என்று என்னுடன் சேர்ந்து வடை சாப்பிட்ட நண்பர் ஒருவர் ஒருநாள் எனக்குச் சொன்னார். இருந்தாலும் பொன்னிறமாக இருக்கும் வடை சாப்பிடச் சுவையாகத்தான் இருக்கிறது.

அதே போல் இறைச்சிக் கறி மிஞ்சினால் அடுத்த தினம் இறைச்சி ரொட்டி, சமோசா, ரோல்ஸ், கொத்து ரொட்டி ஆகியவற்றுக்குப் பயன்படுத்துகிறீர்கள். நான்காம் நாள் வடை ஐந்தாம் நாள் சாம்பாரில் கரைவதன் மூலமும் இறைச்சிக் கறி நான் மேற்சொன்ன சிற்றுண்டி வகைகளுக்காகவும் மீண்டும் சூடாக்கப்படுகிறது என்பதால் அதைக்; குற்றமாகச் சொல்ல முடியாது.

இலக்கிய நயமும் இசை இனிமையும் கொண்ட அன்றைய சினிமாப் பாடல்களை இன்றைய ஆடைகுறைத்த நாயகிகளுக்காகவும் அவர்களை வாயில் ஜொள்ளு வழியப் பார்த்து ரசிக்கும் இளவட்டங்களுக்காகவும் ரீமிக்ஸ் பண்ணுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும் போது நீங்கள் ரீமிக்ஸ் பண்ணினால் மட்டும் எப்படிக் கோபிக்க முடியும்?

உலகத்தில் பாதிப் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்குச் சீனி வியாதி வரவில்லை என்றால் அது பத்திரிகைச் செய்தியாக வருவதற்குத் தகுதியானது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் பலருக்கும் மூலவியாதி இருப்பது போல சர்க்கரை வியாதியும் இருப்பதால் பொறாமை காரணமாக சர்க்கரை வியாதி இல்லாதவர்களைப் படம் போட்டுச் செய்தி வெளியிட நமது பத்திரிகைத் துறையினர் விரும்புவதில்லை.

அது போகட்டும். சீனிக்கு விலை அதிகரித்ததும் தேனீரின் விலையை நீங்கள் அதிகரித்து விட்டீர்கள். ஒரு நாளைக்கு ஒரு தேனீர்க் கடையில் விற்கும் தேனீர்க் கோப்பைகளில் குறைந்த சீனி கொண்ட தேனீர்தான் அதிகம். பத்து வீதமானோர் சீனியே போட வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். ஆனால் நீங்கள் இவற்றைக் கண்டு கொள்ளாமல் எல்லோருக்கும் ஒரே விலையைச் சொல்லிச் சிட்டை எழுதி விடுகிறீர்கள். இது பொதுமக்களாகிய நுகர்வோருக்கு நீங்கள் செய்யும் துரோகமும் ஏமாற்றுமாகும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் உங்களது பிள்ளைகள் உறவினர்கள் சீனி வியாதி உண்டாகிச் சீரழிய இறைவன் வைத்து விடக் கூடும்.

இந்தக் கடிதத்தில் உண்மையில் நான் வேண்டுகோள் விடுக்க வந்தது வேறு ஒரு விடயம் சம்பந்தமாக. உங்களது ஹோட்டலில் உள்ள மேசைகளைத் துடைப்பதற்கு ஒரு துண்டுச் சீலை பயன்படுத்தப்படுகிறது ஞாபகம் இருக்கிறதா? அநேகமாக நீங்கள் ஹோட்டல் ஆரம்பித்த தினம் மட்டும்தான் அந்தச் சீலைத் துண்டு வெள்ளையாக இருந்திருக்கும். இப்போது ஒவ்வொரு மேசையின் கால் இடுக்கிலும் அப்படி ஒரு துண்டு அதியுச்ச அழுக்கோடும் உலகத்திலுள்ள அத்தனை கிருமிகளோடும் செருகி வைக்கப்பட்டிருக்கிறது.

மேசையில் சாப்பிட்டு முடிந்தவர்கள் எழுந்தால் அதே துண்டால் மேசையைத் துடைக்கிறார்கள் உங்கள் வெயிட்டர்கள். பிறகு நாம் அமர்ந்து வடை தாருங்கள் என்றால் அந்தத் துண்டை மேசைக்குக் கீழே செருகி விட்டு அதைப் பிடித்த கைகளால் வடையை எடுத்து வைத்துக் கொண்டு வந்து தருகிறார்கள். சாப்பாடு, தேனீர் கேட்டாலும் அப்படியே. அதாவது அதி அபாயகரமான முறையில் உங்களது கடைகளில் உணவு பரிமாறப்படுகிறது. இதைவிடச் சாப்பாட்டைத் தெருவிலே கொட்டி விட்டுச் சாப்பிடச் சொன்னீர்களால் அது அந்தச் சீலைத் துண்டினால் ஏற்படும் ஆபத்தை விடக் குறைவானதாகவேயிருக்கும்.

இந்தச் சீலைத் துண்டு மேசைக்குக் கீழே செருகி வைக்கப்பட்டிருக்கிறது. பகலில் தங்களது ஹோட்டல் பல்லிகளும் அதே மேசைக்குக் கீழேதான் பதுங்கியிருக்கின்றன. அவை அவ்வப்போது கழியும் எச்சங்கள் இச்சீலைத் துண்டில் விழும் வாய்ப்பு அதிகம். எனவே ஆபத்தும் அதிகம். அதே சீலையைப் பிடித்த கரங்களால்தான் பணத்தையும் பில்லைiயும் கொண்டு வந்து வெயிட்டர்கள் உங்களிடம் தருகிறார்கள். அந்தப் பணத்தை நேரடியாக நீங்கள் கையாளுகிறீர்கள். உங்கள் கடைக்கு உணவருந்த வருவோர் மட்டுமன்றி நீங்களும் ஆபத்தில் இருப்பதால் புதிய சீலைத் துண்டுகளைப் பயன்படுத்துவதுடன் அச்சீலைத் துண்டைத் தொட்டால் கைகளைச் சவர்க்காரம் பயன்படுத்திக் கழுவிக் கொள்ளவும் அறிவுறுத்துங்கள். நன்றி.
 
(நன்றி - இருக்கிறம் சஞ்சிகை - அதற்குத் தக)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

sinnathambi raveendran said...

நகைச்சுவையோடு நல்ல விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள்.

வதிரி .சி.ரவீந்திரன்.

Mohamed Faaique said...

உன்மையான விஷயம்தான்...