Wednesday, April 13, 2011

வாகனக் கொட்டில் அடிமை

எனது பெயர் ஷஹீமா. நான் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் பிறந்தவள். நான் எனது பன்னிரண்டாவது வயதில் அமெரிக்காவுக்கு வந்தேன்.


நான் அமெரிக்காவுக்கு வந்தது கல்வி கற்பதற்காகவோ உறவினர்களைச் சந்திப்பதற்காகவோ அல்ல. மாறாக அமெரிக்கப் பிரம்மாண்டங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வதற்காகவும் அல்ல. எனது வருகை ஒரு பெரிய கதை. யாருக்கும் நிகழக் கூடாத துன்பங்கள் நிறைந்த கதை. அக்கதையைத்தான் உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்.

அலெக்ஸாண்ட்ரியாவில் வாழும் ஏழ்மைக் குடும்பங்களில் எமது குடும்பமும் ஒன்று. எனது பெற்றோருக்கு நான் உட்படப் பதினொரு பிள்ளைகள். ஒரேயொரு குளியலறை கொண்ட ஒரு வீட்டில் வசித்த மூன்று குடும்பங்களுள் எமது குடும்பமும் ஒன்று. தினமும் ஒரு வேளை உணவு கிடைப்பதே பெரும்பாடு. ஓர் அறைக்குள் ஒரேயொரு கம்பளிப் போர்வைக்குள்தான் அனைத்து சகோதர சகோதரிகளும் உறங்குவோம். அதுவும் நிலத்தில். தந்தையார் பல வாரங்களுக்குப் பின் வருவார். அவர் வீட்டுக்கு வந்தால் நிச்சயம் எங்களுக்கெல்லாம் அடி கிடைக்கும். காரணத்தை அவர் மட்டுமே அறிவார்.

கெய்ரோவில் வாழும் அப்தல் யூசுப் - அமல் முத்தலிப் என்ற செல்வந்தத் தம்பதியின் வீட்டில் வேலை செய்யுமாறு பெற்றோர் ஒரு நாள் என்னைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அப்போது எனக்கு வயது எட்டு.

உண்மையில் எனது மூத்த சகோதரிகளில் ஒருத்தி அங்கு வேலை செய்து வந்தாள். ஒரு முறை அவள் பணம் திருடி விட்டதாகக் குற்றஞ் சாட்டி அவளை நெருப்பால் சுட்டிருந்தார்கள். அவளது இடத்தை ஈடு செய்வதற்காக ஒரு பிள்ளையைத் தரவேண்டும் என்று எமது பெற்றோரை அப்தல் யூசுப் குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். செல்வந்தக் குடும்பத்தின் அதிகாரத்துக்குக்குப் பயந்தும் எமது குடும்ப நிலை கருதியும் என்னை அவர்களிடம் வேலைக்காக ஒப்படைக்க வேண்டியிருந்தது. மாதச் சம்பளமாக முப்பது டாலர்களை அவர்கள் தீர்மானித்தார்கள்.

இரண்டு வருடங்களின் பின்னர் அப்தல் யூசுப் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயரத் தீர்மானித்தது. தமது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா பொருத்தமானது என்று அவர்கள் முடிவுக்கு வந்திருந்தார்கள். எனவே தமது ஐந்து பிள்ளைகளுடன் அக்குடும்பம் அமெரிக்காவுக்கு வரும்போது வேலைக்காரியான என்னையும் சேர்த்தே அழைத்து வந்தது.

அமெரிக்காவில் வந்து வாழ்வதற்கு ஆசைகளுடனும் கனவுகளுடனும் பல்லாயிரம் பேர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பின்னாளில் நான் அறிய வந்தேன். ஆனால் அமெரிக்காவில் அப்தல் யூசுப் தங்குவதற்கென எனக்குத் தந்த இடம் எட்டடிக்குப் பன்னிரண்டு அடி அளவுள்ள கார் நிறுத்தும் கராஜ். இந்த அறை வீட்டுக்குச் சம்பந்தமில்லாத வகையில் கட்டப்பட்டிருந்தது. அப்தல் யூசுபின் வீடு அவசரத்துக்கு அழுதாலும் அடுத்த வீட்டிலிருந்து எட்டிப் பார்க்காத பெருஞ் செல்வந்தர்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்திருந்தது. மிக மிக உயரமான மதில்களும் பிரம்மாண்டமான வாயிற் கதவுகளும் கொண்ட வீடு. நான் உறங்கும் அறைக்குள் காற்று வருவதற்காவது ஒரு சிறு ஜன்னல் கிடையாது. கடும் வெப்பம் நிலவும் காலத்தில் பயன்படுத்த ஒரு மின் விசிறி இல்லை. அப்தல் யூசுபோ அமல் முத்தலிப் அம்மையாரோ என்னைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவர்களாக இருந்தனர். அக்கறை இல்லாமல் இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை
அடிக்கடி என்னை அடிக்காமலும் கெட்ட வார்த்தைகள் கொண்டு தூஷிக்காமலாவது இருந்திருக்கலாம்.

காலை ஆறுமணிக்கு என்னைஎழுப்பி விடுவார்கள். ஆறு வயதான ஆண் இரட்டையர்களை முதலில் நான் கவனிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து முறையே 11, 13, 15 வயதான அவர்களது பெண் குழந்தைகளின் கட்டளைகளை சிரமேற் கொண்டு நிறைவேற்றியாக வேண்டும். படுக்கைகளை சரிப்படுத்துவது, குளியலறையில் வெந்நீர் கலக்கிக் கொடுப்பது, குளியலறை சுத்தம் செய்வது, உணவு பரிமாறுவது, அடுப்புகளைக் கவனிப்பது, குசினி, வீடு முழுவதும் தினமும் பெருக்கித் துடைப்பது, உடைகளைக் கழுவுவது, காயப் போடுவது, உண்டபின் பாத்திரங்களைக் கழுவுவது என்று அனைத்து வேலைகளையும் நானே கவனிக்க வேண்டும். இதற்கிடையில் யாராவது கூப்பிட்ட குரலுக்குத் தாமதித்து விட்டால் “நீ ஒரு மடச்சி, உனக்கு அறிவே கிடையாது” என்று ஏச்சும் பேச்சும் கூடவே அடியும் கிடைக்கும்.

தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுடன் பிறந்த ஒரு பத்து வயதுப் பாலகி, அவர்களது அரவணைப்பிலும் அன்பிலும் வாழ வேண்டிய நிலையில் அவர்களது கண்காணாத தேசத்தில் ஆக்கினைகளுடனும் அடி, உதைகளுடனும் வாழ வேண்டிய நிலை எத்தகைய துர்ப்பாக்கியம் என்பதை நீங்கள் சற்று எண்ணிப் பாருங்கள். அதற்கும் மேலலாக தினமும் பன்னிரண்டு மணித்தியாலம் ஓய்வொழிச்சல் இல்லாமல் அத்தனை துயரங்களைத் தாங்குவதென்பது பெரியவர்களாலும் கூடத் தாங்கமுயாத சுமை அல்லவா? ஆனால் அச்சுமைகளுடனேயே எனது துயர வாழ்க்கை நீடித்துக் கொண்டிருந்தது.

வாயிலுக்கு அப்பால் ஒரு போதும் நான் தனியே போனது கிடையாது. அப்படி எதையாவது சுமந்து வரப் போக வேண்டுமென்றால் அப்தல் யூசுப் அல்லது அமல் முத்தலிப் எனக்குக் காவலாக வருவார்கள். அவர்கள் அவ்வாறு வருவது என்னைப் பாதுகாக்க அல்ல நான் யாரிடமாவது எனது கஷ்டத்தைச் சொல்லி விடுவேன் என்ற பயம்தான். அதனால் “நீ சட்டப்படி இங்கு வந்தவளல்லநீ சட்டபூர்வமற்ற முறையில் இங்கிருப்பது தெரிந்தால் பொலீஸார் உன்னைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள்” என்று அடிக்கடி இருவரும் என்னைப் பயங்காட்டிக் கொண்டேயிருப்பார்கள். என்னுடைய பன்னிரண்டாவது பிறந்த நாளன்று நான் நள்ளிரவு வரை வேலை செய்து கொண்டிருந்தேன்.

எகிப்திலும் சரி, அமெரிக்காவிலும் சரி நான் ஒரு நாளாவது பாடசாலைக்குச் சென்றது கிடையாது. அதற்குரிய வாய்ப்பு ஏழையான எனக்கு எட்டாத தூரத்திலேயே இருந்தது. பாடசாலை செல்லா விட்டால் என்ன... இந்த நரகிலிருந்து விடுதலை கிடைத்து விட்டாலே போதும் போதும் என்றிருந்தது எனக்கு. ஒரு நாள் எனக்குக் கடும் காய்ச்சல் உண்டானது. மிகவும் வருத்தப் பட்டேன். எகிப்திலிருக்கும் தாயாரை, சகோதர, சகோதரியரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அப்தல் யூசுபிடமும் அமல் முத்தலிபிடமும் வாய் விட்டு அழுது கெஞ்சினேன். அவர்களோடு பேசுவதற்கான ஒரு வாய்ப்பைத்தானும் கடைசி வரை அவர்கள் ஏற்படுத்தித் தரவில்லை. அவ்வளவு ஏன்? எனது காய்ச்சலுக்கு மருந்தைக் கூட அவர்கள் பெற்றுத் தரவில்லை. அன்றும் கூட நான் எனது வேலைகளைச் செய்தேயாக வேண்டும் என்று அமல் முத்தலிப் என்னை வற்புறுத்தினார். அன்று என்னிடமிருந்த எனது கடவுச் சீட்டையும் அப்தல் யூசுப் எடுத்துச் சென்று விட்டார்.

2002ம் ஆண்டு ஏப்ரல் 9ம் திகதி எங்களது வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அங்கே பெண் பொலீஸ் அதிகாரி போல் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வீட்டில் யார் யார் வசிக்கிறீர்கள் என்று அப்தல் யூசுரிடம் கேட்க, நானும் மனைவியும் எனது ஐந்து பிள்ளைகளும் என்று அவர் பதில் சொன்னார். அப்பெண்மணி நிச்சயமாக வேறு யாரும் இல்லையா? என்று கேட்ட போது எனது தூரத்து உறவுப் பெண்ணொருத்தியும் இருக்கிறாள் என்று சொன்னார். அவளை நான் பார்க்க வேண்டும் என்று அந்த பெண் அதிகாரி சொல்வது எனக்குக் கேட்டது. மேல் மாடியில் வேலை செய்து கொண்டிருந்த என்னை அப்தல் யூசுப் எனது பெயரைச் சொல்லிச் சத்தமிட்டு அழைத்தார். நான் படியிறங்கி வரும் போது “நீ இங்கே வேலை செய்வதாகச் சொல்லி விடாதே... எனது சொந்தக் காரி என்று சொல்லு” என அப்பெண்ணுக்கு விளங்காத வகையில் அறபியில் என்னிடம் சொன்னார். ஆனால் நான் அணிந்திருந்த ஆடை நான் யார், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அப்பெண்மணிக்கு உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். நான் தங்கியிருக்கும் அறையைக் காட்டுமாறு அப் பெண் அதிகாரி என்னை உத்தரவிட்டார்.

யன்னல் இல்லாத, குளிரூட்டியோ மின் விசிறியோ இல்லாத அந்த அறையை அப் பெண் தன் கண்களைச் சுழற்றிப் பார்வையிட்டு முகம் சுளித்தார். ஒரு அழுக்கு மெத்தை, சுவரும் நிலமும் இணையும் இடத்தில் பொருத்தப் பட்டிருந்த விளக்கு, அழுக்கு ஆடைகள் அலங்கோலமாகக் கிடக்கும் சிறிய மேசை ஆகியவற்றை அவதானத்துடன் பார்த்துக் கொண்டே வந்த அவர் தனது காரின் பின் ஆசனத்தில் என்னை ஏறி அமரப் பணித்தார். என்னை அவர் எடுத்துச் செல்லும் வழியில் மீண்டும் அந்த வீட்டில் என்னை இப்பெண் விட்டு விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டே வந்தேன். என்னை ஒரு வீட்டில் இறக்கி விட்டு அந்த வீட்டில் இருப்பவரிடம் அவர் சொன்னார்:- “இவள் வாழ்வதை விடச் சிறப்பாக வளர்ப்பு மிருகங்கள் வாழ்கின்றன.”

சில நாட்களுக்குப் பின்னர் அப்தல் யூசுபும் அமல் முத்தலிபும் கைது செய்யப்பட்டதாக அறிய வந்தேன். அவர்கள் என்னை என் பெற்றொரிடமிருந்து பத்து வருடங்கள் வேலை செய்வதற்கு ஒப்பந்தப் பத்திரம் பெற்றிருப்பதாகவும் கேள்விப் பட்டேன். ஒரு நாள் என்னை அந்த அதிகாரி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் என்னைப் பேசுமாறு உத்தரவிட்டனர். “அமல் முத்தலிப் நல்லது எது கெட்டது எது என்று தெரியாத பெண் அல்ல. நான் அவர்களோடு இருக்கும் வரை ஒரு மனிதப் பிறவியாக என்னை அவர்கள் மதித்தது கிடையாது. இவர்களுடன் கழித்த காலம் எனது வாழ்வு முழுவதும் அழியாத வடுவாகவே இருக்கும்” என்று சொன்னேன்.

அப்தல் யூசுப் மூன்று வருடச் சிறைத்தண்டனையும் அமல் முத்தலிப் 22 மாதச் சிறைத் தண்டனையும் பெற்றார்கள். அத்துடன் எழுபத்தாறாயிரம் டாலர்களை எனக்கு நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் தண்டனைக் காலம் முடிந்ததும் அவர்கள் எகிப்து அனுப்படுவார்கள் என்றும் நீதிபதி தீர்ப்புச் சொன்னார்.

அதன் பிறகு என்னை ஒரு வளர்ப்புப் பெண்ணாக ஒரு குடும்பம் தத்தெடுத்தது. தங்களில் ஒருவரைப் போல் பார்த்துக் கொள்வதாக அதிகாரிகளுக்கு வளர்ப்புப் பெற்றோர் உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் சில நிபந்தனைகளை விதித்தனர். முதலில் கல்வி கற்க வேண்டும் என்றும் வீட்டுப் பணிகளை மற்றோருடன் பகிர்ந்து செய்து கொள்ள வேண்டும் என்பன அவர்களது நிபந்தனைகளாக இருந்தன. அவற்றை முழு மனதுடன் நான் ஏற்றுக் கொண்டேன். எனக்குக் கிடைத்த நஷ்ட ஈட்டுத் தொகையில் ஒரு மடிக் கணினி, ஒரு டிஜிட்டல் கமரா, ஒரு புதிய கார் ஆகியவற்றை வாங்கினேன். மீதிப் பணத்தைக் கல்லூரி நிதிக்கு நன்கொடையாக வழங்கி விட்டேன்.

கல்வி கற்று ஒரு பொலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அப்படி வந்தால்தான் என்னாலும் பலருக்கு உதவி செய்யக் கூடிதாக இருக்கும். அத்துடன் ஒரு முறை எகிப்து சென்று எனது சகோதர, சகோதரிகளையும் பார்த்து வர வேண்டும். ஆனால், இப்போது இல்லை. எனது கனவுகளை நிறைவேற்றிய பின் அப்பயணத்தை மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

என்னைத் தத்துப் பிள்ளையாக வழங்குவதற்கு முதல் அதிகாரிகள் என்னிடம் கேட்ட கேள்வி:- “நீ எகிப்து செல்கிறாயா? அமெரிக்காவில் தங்கி வாழ விரும்புகிறாயா? என்பதுதான்.

யோசிக்காமல் நான் சொன்ன பதில், “நான் அமெரிக்காவில் வாழ விரும்புகிறேன்.”

(இது ஓர் உண்மைக் கதை)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: