Wednesday, April 20, 2011

நாய்ப் பாசம்

அந்நாய் எனது கவனத்தைக் கவர்ந்ததற்குக் காரணமிருந்தது.


அது ஒரு தெருநாய். அந்த நாயைப் போல சொறி பிடித்து உடம்பெல்லாம் வெள்ளைப் படை கொண்ட ஏராளமான நாய்களை நான் பலவிடங்களில் பலசந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். இதுவும் அவ்வாறான ஒரு நாய்தான். ஆனால் இதன் பின்னங்கால்கள் முன்னங் கால்களை விட நீளமாக இருந்தன. அதேவேளை அப்பின்னங்கால்கள் உட்புறமாக நீண்டிருந்ததால் குதியுயர்ந்த செருப்பு அணிந்து செல்லும் பெண்களுக்குப் போல் புட்டம் பின்பக்கமாக சற்றுத் தூக்கலாகத் தெரிந்தது. இதனால்தான் அந்த நாய் என் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்.

எனது வாகனத் திருத்த வேலைகளுக்காக அந்த இடத்துக்கு வந்திருந்தேன். ஒரு ‘ட’ வளைவில் வாகனத் திருத்தங்கள் மேற்கொள்ளும் ‘கராஜ்’ அமைந்திருந்தது. டானா வளைவின் மூலையில் மூன்று வாகனங்களை நிறுத்தலாம். அதற்கு அப்பால் நெருக்கடி மிகுந்த அந்தச் சந்துப் பகுதியின் அடுக்கு மாடி வீடுகளிலுள்ள குப்பை கூளங்கள் கொட்டப்பட்டிருந்தன. அம்மூலையில் நின்றால் இடது புறம் விளையாட்டு மைதானம். டானாவின் கிடைப் பகுதி முடியும் இடத்தில் தனியார் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் நெடுஞ்சாலை.

எனது வாகனத்தின் முன் சக்கரங்களைக் கழற்றி சத்தம் வருவதற்கான காரணத்தை அறிய காருக்குக் கீழே படுத்தபடி குடைந்து கொண்டிருந்தான் கராஜ் பையன். அது வரை நான் தெருப்புதினங்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அந்த நாய் என் கண்ணில் பட்டது.

குதிகால் செருப்புப் பெண்களை ஞாபகப்படுத்துவதற்கு முன்னர் அந்த நாய் நடந்து சென்ற விதம் எனது அந்த நாளைய வாத்தியார் ஒருவரை ஞாபகப்படுத்தியது. வாத்தியாரை நாயுடன் உதாரணங்காட்டுவதாக நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது. எனது ஆசான்களின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் குறிப்பிடும் வாத்தியார் ஒரு குதூகலப் பேர்வழி. இயல்பாகவே பெரிய புட்டம் கொண்ட அவர் சிவாஜி கணேசனைப் போல் ஸ்டைலாக நடக்க முற்பட்டதால் வந்தது வினை. சிவாஜி கணேசனைப் போல் நடப்பதாக நினைத்துக் கொண்டு முன்புறம் சற்றுக் கூனி தோள்களை அசைத்துக் கொண்டு அவர் நடந்து போனால் அவர் வேறாகவும் புட்டங்கள் வேறாகவும் தெரியும். பெரிய வகுப்பு மாணவர்கள் அவருக்கு ‘சிவாஜி’ என்று சிறப்புப் பட்டம் வைத்து அழைத்தனர்.

அந்த நாய் தெருவை அவ்வப்போது குறுக்கறுத்து நடந்து கொண்டிருந்தது. தெருவில் நடந்து சென்றவர்களின் அருகே அது நெருங்கியபோது முகச் சுழிப்புடன் விலகிச் சென்றார்கள். அதன் உடலைப் பார்க்க யாருக்கும் அருவருப்புத் தோன்றும். அந்த நாயின் அருவருக்கத்தக்க மேல் தோல் பெரிதாக என் கண்ணில் தெரியவில்லை. நான் அதன் நடையையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தச் சூழலின் அமைதி குலைத்து மைதானப் பக்கத்தில் பல நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்ப்பதற்குகுள் டானா வளைவூடாக குதிரைப் பாய்ச்சலுடன் ஏழெட்டு நாய்கள் வந்து கொண்டிருந்தன. செம்மஞ்சள் நிற நாயொன்றை ஏனைய நாய்கள் துரத்தி வந்து என்னைத் தாண்டி குப்பை கூளங்கள் கொட்டியிருக்கும் இடம் வரை வந்து அதே வேகத்தில் திரும்பிச் சென்றன.

காருக்குக் கீழே படுத்து நோண்டிக் கொண்டிருந்த கராஜ் பையன் தலையை வெளியே நீட்டி,

“என்ன தெரியுமா சேர்? அவுங்கட ஏரியா பிரச்சினை!” என்றான்.

“அப்படியெண்டா?”

“குப்பத்தொட்டிப் பக்கம் இருக்கிறவுங்க கிறவுண்ட் பக்கம் போனாலுஞ் சரி, அங்கயிருக்கிறவுங்க குப்பத் தொட்டிப் பக்கம் வந்தாலுஞ்சரி சண்டதான்!” என்றான்.

“அப்ப இவங்கதான் ஏரியாச் சண்டியங்களோ?”

“ஆமா... சார்!” என்று சிரித்துவிட்டு தலையை உள்ளிழுத்துக் கொண்டான்.

இதன் விளக்கம் என்னவென்றால் சினிமாப்படங்களில் வரும் இரண்டு ஊர்களுக்கிடையிலான பிரச்சினை போல குப்பைப்புரத்துக்காரர் மைதானபுரத்துக்குச் சென்றாலும் மைதானபுரத்துக்காரர் குப்பைப்புரம் வந்தாலும் கோஷ்டி மோதல் உருவாகும் என்பதுதான். கொழும்பிலும் அதன் அயற்புறங்களிலும் அந்தப் பிரதேசத்தார் அல்லாதவரால் ஒரு சிறிய தவறு நடந்தாலும் கோஷ்டியாகக் குழுமி அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் ஓட்டிவரும் சைக்கிள் ஒருவரில் லேசாகப் பட்டால் போதும். சைக்கிளில் அவராகவே வந்து விழுந்தாலும் கூட சைக்கிள்காரருக்குத்தான் செமத்தியாகச் சாத்துவார்கள். பிரதேசத்தான் என்பதுதான் அங்கு முதல் வாதம்.

ஆறறிவு கொண்டவர்களே இவ்வாறு நியாய தர்மங்களைத் தெரிந்து கொண்டே மீறி நடக்கும் போது ஐந்தறிவு கொண்ட நாய்கள் இவ்வாறு நடந்து கொள்வது மிகச் சரி என்றே எனக்குப் பட்டது.

இவ்வளவு பிரச்சினையும் நடந்து கொண்டிருக்கும் போது நான் அந்தச் சொறி நாயின்மீது அவதானமாகவே இருந்தேன். அதுவும் ஸ்டைலாக முன்னால் வந்து ஒருமுறை ‘வள்’ என்று குரல் கொடுத்துப்பார்த்தது. இரண்டு பிரதேச நாய்களில் ஒன்று கூட அந்நாயைக் கண்டு கொள்ளவில்லை. தேமேயென்று அதே இடத்தில் ஒரு நிமிடம் தரித்துவிட்டுத் தன்பாட்டில் நெட்டி நெட்டி நடந்து மர நிழல் பக்கம் நடந்து போனது.

கராஜின் பிரதான நபர் குகன் மற்றொரு வாகனத்துக்குளிருந்து வெளியே வந்து எனது காருக்குக் கீழே நோண்டிக் கொண்டிருந்த பையனை விரைவுபடுத்தி விட்டு எங்கோ நெடுக நடந்து போனார்.

குப்பைச் சந்துப் பகுதியால் நடந்து வந்த ஒருவரை இரண்டு பையன்கள் ‘கூ’ இட்டுக் கூப்பிட்டார்கள்.

ஆனால் அவர் தெருவில் ஆட்கள் நின்றதால் எதையும் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தார். அவரது தோற்றம் சிறுவர்கள் கிண்டலடிக்கும் படியானதாக இருக்கவில்லை. ஆனால் அந்தச் சிறுவர்கள் இருவரும் அவர் பின்னால் வந்து ஏதோ ஒரு பட்டப் பெயர் சொல்லி மிகவும் கேலியாக அவரை அழைத்து வந்தார்கள். நான் அவரையும் அந்தச் சிறாரின் செய்கை யையும் பார்த்து எனக்குள்ளேயே சிரித்தேன். நான் அந்தச் செயலை ரசிப்பதை அந்த நபர் எனது முகத்தைப் பார்த்து அறிந்து கொண்டார் என்று தெரிந்தது. அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறே வேகமாகக் கடந்து போனார். அவர் இயல்பாக ஒரு கிண்டல் பேர்வழியாக இருக்க வேண்டும் அல்லது எக்குத் தப்பாக எதிலோ அகப்பட்டவராக இருக்க வேண்டும்; என்று யூகித்தேன்.

அந்த வேளை சனங்கள் அனைவரும் பார்க்க அச்சிறுவர்கள் அவரைக் கிண்டல் பண்ணும் போது அவரது நிலை அந்தச் சொறி நாயின் நிலையை விடக் கேவலமாக எனக்குத் தோன்றியது.

காருக்குக் கீழே இருந்த பையன் மீண்டான். காரிலிருந்து கழற்றிய சன்னங்கள் நிறைந்த ஒன்றை ஏற்கனவே கறுப்பாகியிருந்த மண்ணெண்ணெய்த் தட்டத்துள் போட்டு அலசி ஒரு சொப்பிங் பையில் போட்டுப் புதிதாக ஒன்றை வாங்கி வருமாறு என்னைக் கேட்டுக் கொண்டான்.

பொருளை வாங்கிக் கொண்டு பஞ்சிகாவத்தையிலிருந்து நான் திரும்பிப் பொருளை ஒப்படைத்து விட்டு நாயைத் தேடினேன். குப்பைத் தொட்டியருகே எதையோ தேடி முகர்ந்து கொண்டிருந்தது.

திரும்பி வந்த குகன் எனது காருக்குக் கீழே நான் வாங்கி வந்த பொருளைப் பொருத்திக் கொண்டிருந்த பையனை வெளியேறுமாறு கூறிவிட்டு அவர் புகுந்து பார்த்தார்.

குகன் எனது வாகனத் திருத்தக்காரர் மட்டுமல்ல, எனது நண்பரும் கூட. வேறொரு நண்பரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட குகனின் பிள்ளையைப் பெரிய பாடசாலையொன்றில் சேர்ப்பதற்கு ஒரு முறை உதவி செய்திருந் தேன். அந்த நன்றியையும் விசுவாசத்தையும் அவர் என்னில் வைத்திருந்தார்.

உதவியாளனின் வேலையில் திருப்தி கண்டு வெளியேறிய அவர் தூரத்தில் மோட்டார் சைக்கிளில் நின்ற ஒருவரைக் கைதட்டி அழைத்தார்.

அந்த நபர் வந்ததும் அந்த நபரிடம் யாருக்கோ ஏசத் தொடங்கினார்.

“இந்த மாதிரி நாய்வேல செய்ய வாணாண்ணு சொல்லுங்க சரியா?” என்று மீண்டும் மீண்டும் அந்த நபரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் குகன்.

வாகனத் திருத்தம் மேற்கொண்ட ஒருவர் குகனின் கூலியைக் கொடுக்காமல் இழுத்தடிப்பதைக் குகனின் கதையில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. குறித்த அந்த நபர் மோட்டார் சைக்கிள் நபரின் உறவினராயிருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள்காரர் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

‘செய்த வேலைக்குக் கூலி கொடுக்காதது எப்படி நாய் வேலையாகும்?’ என்று சிந்தித்தேன். நாய்கள் செய்யும் வேலைகள் யாவற்றையும் மனிதர்கள் செய்கிறார்கள். மனிதர்கள் செய்வதையெல்லாம் நாய்கள் செய்வதில்லையே! பாவம் நாய்கள்! மனிதர்கள் செய்யும் திருகுதாளங்களுக்கு நாய்களை இழுப்பது சரியில்லையல்லவா?


நாய்களின் நல்ல குணங்கள் எவ்வளவோ உள்ளன. பாடசாலையில் ‘நாய் நன்றியுள்ள மிருகம்’ என்றும் ‘அது வீட்டைக் காவல் காக்கும்’ என்றும் நீங்கள் படித்துத்தானேயிருப்பீர்கள்? செல்வந்தர்கள் தமது செல்வத்தைப் பாதுகாக்க பெரிய நாய்களை வளர்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! தனது மோப்பச் சக்தியால் திருடர்களையும் வெடிகுண்டுகளையும் அது காட்டிக் கொடுக்கிறதே! மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் அது உதவி செய்ய மனிதன் செய்த இழிவு வேலைக்கு ‘நாய் வேலை’ என்று குகன் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.

குகனுடன் இதை விவாதிக்கவோ விமர்சிக்கவோ நான் விரும்பவில்லை. பணம் கிடைக்கவில்லையென்ற எரிச்சலில் இருப்பவரிடம் போய் நாய்க்காகப் பரிந்து பேசினால் நட்புக்குப் பாதகம் ஏற்படவும் கூடும். அல்லது அவர் என்னை ஒரு புதிய ஜந்து போல் பார்க்கவும் செய்யலாம். அதுவாவது பரவாயில்லை! என்னைப் போன்ற மற்றொரு சேரிடம், நான் பணத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், இந்தாள் நாயைப் பற்றிப் பேசுகிறார் என்று சொல்ல. அவர் என்னைப் பிடிக்காத நபராக இருக்கும் பட்சத்தில் எல்லோருக்கும் சொல்லி என்னை நாறடிக்கும் ‘நாய் வேலை’ - ச்சே... மனித வேலை பார்க்கவும் கூடுமல்லவா?

சிறிய வயதில் தெருநாயையும் வசதியுள்ளவர்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட அல்சேஷன் வகை நாயையும் தவிர வேறு நாய்களை நான் கண்டதில்லை. தொலைக் காட்சி, இணையம் என்று வந்த பிறகு நூற்றுக் கணக்கான வகை நாய்களைப் பார்க்கிறோம், ஆயிரக் கணக்கான வகை மனிதர்களைப் பார்ப்பதைப் போல!

கொழும்புக்கு வரும் வரை நாய்கள் என்றால் எனக்குப் பயம் அதிகம். அதற்குக் காரணம் எனது மச்சான்காரன். நாயைக் கண்டு விட்டால் அவனுக்கு ஏற்படும் குஷி போல் வேறு எந்த விடயத்திலும் அவன் குஷியாவதில்லை. தெருவில் நாயைக் கண்டால் தனது உடம்பைக் கோணி நாய்க்குக் காட்டி விட்டு அதற்குப் பயந்து ஓடுவது போலப் பாவனை செய்வான். உடனே அந்த நாய் துரத்தத் தொடங்கும். பிறகு தலை தெறிக்க ஓடுவான். அவனை விட வயதில் சிறிய நான்தான் பாவம். பலமுறை பயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி உரக்க ஓலமிட்டுக் கொண்டு ஓடித் தவறி விழுந்திருக்கிறேன். அதைப் பார்த்துச் சிரிப்பதில் அவனுக்கு மெத்தச் சந்தோஷம். நான் மட்டுமல்ல, எனது வயதொத்த அவனோடு பழகும் எல்லோருக்கும் இவ்வாறுதான் செய்வான்.

இவ்வாறு நாயை உசிக் காட்டியும் நாய் துரத்தவில்லையென்றால் ஒரு கல்லை எடுத்து எறிந்து விட்டுப் பயந்து ஓடுவது போலப் பாசாங்கு பண்ணி நாயைத் துரத்த வைப்பான். அவனோடு பயணம் போக வேண்டி வந்தால் நாயைக் கண்டால் உசிக்காட்ட மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொள்வேன். அந்தச் சத்தியம் நாய் ஒன்று அவன் கண்ணில் படும் வரை மாத்திரம்தான்!

புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கியதும் இந்தியக் கதைப் புத்தகங்களில் கதாநாயகி ‘பாமரேனியன்’ நாய்க்குட்டி வைத்திருப்பதைப் படித்திருக்கிறேன். தலை நகரில் பல்வேறு வகையான நாய்களைத் தமது சொகுசு வாகனங் களில் ஏற்றிக் கொண்டு பயணம் செய்வோரையும் நீண்ட கயிற்றில் நடைபயில அழைத்துச் செல்வோரையும் நம்மால் காணமுடிகிறது. அவ்வாறு ஏதாவது நாயைக் கண்டால் அந்தக் கயிற்றின் எல்லையை மனத்தில் கணக்குப் பண்ணிச் சற்று விலகியே போவது இன்றும் எனது வழக்கம்.

முஸ்லிம்கள் நாயையும் பன்றியையும் தவிர்த்துக் கொள்ளுமாறு நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் விபசாரம் செய்த ஒருத்தி நீர் விடாயில் தவித்த ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டினாள் என்பதற்காக அவளுக்கு சுவர்க்கம் வாக்களிக்கப்பட்டதைச் சரித்திரம் சொல்கிறது.

ஒருவாறு எனது காரின் திருத்தம் முடிந்து வெளியேறினான் கராஜ் பையன்.

நாய் இப்போது தனது ஸ்டைல் நடையோடு கராஜை நோக்கி வந்தது. காருக்கு அருகில் வந்தது, அந்தப் பையன் காருக்குக் கீழே விரித்திருந்த அட்டையில் மிதித்து முகர்ந்தது. அவன் அருகே கிடந்த ஒரு இரும்புக் குழாயை அவசரமாகக் கையிலெடுத்தான். நான் அவனைத் தடுத்தேன்.

ஏனெனில் ஒரு விபச்சாரியைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது இதைப் போன்ற ஒரு சொறி நாயாகவும் இருக்கக் கூடும் அல்லவா?

(சமநிலைச் சமுதாயம் - மாரச் 2011 இதழில் பிரசுரமான சிறுகதை)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

kathai romba piddithu kondathu.Adhilum நாய்கள் செய்யும் வேலைகள் யாவற்றையும் மனிதர்கள் செய்கிறார்கள். மனிதர்கள் செய்வதையெல்லாம் நாய்கள் செய்வதில்லையே! பாவம் நாய்கள்! மனிதர்கள் செய்யும் திருகுதாளங்களுக்கு நாய்களை இழுப்பது சரியில்லையல்லவா? varigal romba piddithu kondathu,,Oru atputha kathai soneengal. Vaazhthukkal Sir