Tuesday, April 12, 2011

உம்மு குல்தூம்

1920களில் வடஆபிரிக்கா முதற்கொண்டு மத்திய கிழக்கு வரை - முக்கியமாக அராபியத் தீபகற்பத்தில் வாழும் மக்களில் வாய்ப்புள்ள பலரும் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை கெய்ரோ நகரில் வந்து கூடிவிடுவது வழக்கமாக இருந்தது.

அன்றைய தினத்தில்தான் அறபுலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இசையரசியின் பாடற் கச்சேரி இடம்பெறும். ‘அறபுக் கலைகளின் தூதுவர்’ எனவும் ‘கிழக்கின் நட்சத்திரம்’ எனவும் வர்ணிக்கப்பட்ட அந்தப் பாடகியின் பெயர் உம்மு குல்தூம். ஒலிவாங்கியிலிருந்து இரண்டடி தள்ளி நின்றபடி ஒருகையில் தனது கழுத்தாடையை (Scarf) க் கட்டியபடி வாயைத் திறந்தாரானால் இந்தப் பூலோகமெங்கும் அறபு இசை வழிந்தோடும்.

மண்ணிலிருந்து விண்ணுக்கும் விண்ணிலிருந்து விளங்க முடியாத பிரபஞ்சத்தின் எல்லைகளுக்கும் மக்கள் அவரால் அழைத்துச் செல்லப்படுவார்கள். உணர்வு பெறும் ஒவ்வொரு இடைவெளியிலும் மக்களின் ஆரவாரத்தால் அந்தப் பிரதேசமே அதிர்ந்து அடங்கும். ஸ்ருதியும் லயமும் இயல்பாகவே இழைந்து வெளிவரும் கணீரென்ற உறுதியான அவரது உறுதியான குரலை இணையத் தளங் களில் இன்றும் கேட்கலாம். மத்திய கிழக்கில் இப்போதும் கூட அவரது பாடல்கள் கொண்ட ஒலிநாடாக்களையும் இறுவட்டுக்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இஸ்லாமியரிடம் மட்டுமன்றி இஸ்ரேலியரிடமும் அவர் பெயர் பெற்றிருந்தார். வருடமொன்றுக்கு பத்துலட்சம் இசை நாடாக்கள் விற்கப்பட்டன.

20ம் நூற்றாண்டின் பிரபல்யம் பெற்ற பாடகர் வரிசையில் இன்றும் கூட அழிக்க முடியாத இடத்தைக் கொண்டுள்ள உம்மு குல்தூமின் பாடல்கள் ஒலிக்காத வீடுகளோ கடைத்தெருவோ பொதுவிடங்களோ இருந்தது கிடையாது. இன்றும் கூட தங்களது வேலையைக் கவனித்துக்கொண்டு உம்மு குல்தூமின் பாடல்களை முணுமுணுக்கும் பல்லாயிரக் கணக்கானோர் அறபுலகில் வாழ்கிறார்கள். அவரது பாடற் கச்சேரிகள் ஒவ்வொன்றும் அதி முக்கியமான அந்தஸ்தைப் பெற்றிருந்தன. அதற்குக் காரணம் அறபுலகின் ஆத்மாவை விட்டோ அறபுக் கலாச்சாரத்துக்கு அப்பாலோ சென்று விடாமல் தங்களது கலைப் பாரம்பரியத்தின் அடிச்சுவட்டில் நின்று தனது பாடல்களைத் தந்ததுதான் என்று சொல்லலாம். எனவே தான் ‘இஸ்லாமியப் பாரம்பரியத்தையும் பாலைவனப் பூமியின் பழங் கவிதை மரபையும் அழிந்து விடாமல் பாதுகாப்பவர்’ என்று அவர் அழைக்கப்பட்டார். அவரது பாடல்கள் மிக நீளமானவை. ஒரு கச்சேரியில் இரண்டு அல்லது மூன்று பாடல்களே இடம் பெறும். மணித்தியாலக் கணக்கில் இடம்பெறும் அவரது பாட்டுக் கச்சேரியிலிருந்து யாரும் எழுந்து செல்லாமல் மயங்கிக் கிடப்பார்கள்.

1904ல் என்றும் 1908ல் என்றும் அவரது பிறப்பு ஆண்டு குறிப்பிடப்பட்டிருக் கின்றது. பாத்திமா இப்றாஹீம் அல் ஸையித் அல் பெல்தகீ என்ற இயற்பெயர் கொண்ட உம்மு குல்தூம் சிறு வயதில் தந்தையாரால் குர்ஆனை மனனமிடப் பணிக்கப்பட்டவர். அறபு மொழியில் துறையோகக் கற்றவர். அவரது திறமையைக் கண்ட பிரபல பாடகர் அபுல் அஃலா முகம்மட், ஸக்கரியா அஹமட் போன்றோரின் வழி காட்டலில் அவரது திறமை வெளிக் கொணரப்பட்டது. கெய்ரோவுக்கு வந்த பிறகு அவரது புகழ் கொடிகட்டிப் பறந்தது. எகிப்தின் பின்தங்கிய கரையோரக் கிராமமான அல் ஸஹீராவில் பிறந்த உம்மு குல்தூம் தாம் உழைத்ததில் பெரும் பணத்தை ஏழைகளுக்கே வாரி வழங்கினார்.

உலகில் அதியுச்ச பிரபலம் பெற்றவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் பேசப்படுவதுண்டு. மக்கள் வாழ்வோடு அவர்கள் ஏதோ ஒரு வித்தில் ஒன்றித்து விடுவதால் ஏற்படும் விளைவு அது. பிரபலம் பெண்ணாக இருந்தால் கிசு கிசுக்களுக்குப் பஞ்சமே கிடையாது. அந்தத் தொந்தரவை உம்மு குல்தூமும் எதிர் கொண்டார். 1940 களில் அரசர் பாரூக்கின் மாமனாரான ஷரிப் ஷப்ரி பாஷாவுடன் காதல் வசப்பட்டிருந்தார் என்ற வதந்தி உலாவியது. ஒரு வைத்தியரான ஹஸன் அல் ஹஃப்னோயியைத் திருமணம் செய்ததன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் உம்மு குல்தூம். அறபுலகத்துக்கும் அப்பால் புகழ் பெற வைத்த குரலையும் அறபுலகத்தையே ஆகர்ஷிக்கும் திறமையும் வாய்த்திருந்த அவருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைத்திருக்கவில்லை.

உம்மு குல்தூம் பற்றிய அனைத்துக் குறி;ப்புகளும் அவரது வசியக் குரல் பற்றியே பேசுகின்றன. அந்தக் குரலில் இயல்பாகவே இருந்த அந்த மயக்கும் சக்தியே அவருக்குக் கிடைத்த மாபெரும் வரமாக இருந்தது. எகிப்தில் ஒரே காலப்பிரிவில் இருவரே புகழ் பெற்றவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் கமால் அப்துல் நாஸர். மற்றவர் உம்மு குல்தூம். கமால் அப்துல் நாஸர் உம்மு குல்தூமின் பிரபலத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார். வானொலியில் ஒரு முக்கியமான அரசியல் செய்தி அறிவிக்கப்படுவதாக இருந்தால் அது உம்மு குல்தூமின் பாடற் கச்சேரியை ஒலிபரப்புவதற்குச் சற்று முன்னரே ஒலிபரப்பப்பட்டது. பாடகியாக மட்டுமன்றி ஒரு நடிகையாகவும் பாடலா சிரியையாகவும் அவர் விளங்கிய உம்மு குல்தூம் உச்சப் புகழ் பெற்றிருந்த போதும் மிகச் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தார். நடிகைகள், அமைச்சர்கள், தூதுவர்கள், வியாபாரிகள் பெரும் கோடீஸ்வரர்கள் என்று அவரது ரசிகர் பட்டியல் எழுதித் தீராதது.

1975ல் சிறுநீரக வியாதி யினால் மரணித்தார் உம்மு குல்தூம். எகிப்தின் வரலாற்றில் இரண்டு மரணங்கள் முக்கியத்துவம் பெற்றவை. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி கமால் அப்துல் நாஸரின் மரண ஊர்வ லத்துக்கு அடுத்த இடத் தைப் பெறுவது உம்மு குல்தூமுடையது. லட்சக் கணக்கில் திரண் டிருந்த மக்கள் ஊர்வலம் மூன்று மைல் தூரம் நீண்டி ருந்ததாம். உம்மு குல்தூம் ஞாபகார்த்தமாக 2008ல் பிரான்ஸில் ‘எகிப்தின் நான் காவது பிரமிட்’ என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி இடம்பெற்றது. அரபுப் பிரதேசத்துக்கு அப்பால் இன்றும் கூட அவர் நினைவுபடுத் தப்படுவது அவரது ஆளுமையை விளக்கப் போதுமானது.

2001ம் ஆண்டு எகிப்திய அரசு ‘கிழக்கின் நட்சத்திரம்’ என்ற பெயரில் ஒரு நூதனசாலையொன்றைத் திறந்திருக்கிறது. இந்த நூதன சாலையில் உம்முகுல்தூமின் மூக்குக் கண்ணாடி முதல் கைக்குட்டையீறாக அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது அரிய பாடல்கள் கொண்ட இசைத்தட்டுக்கள் என்பன பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

எகிப்தில் ஒரு வார்த்தை வழக்கத்தில் இருக்கிறது. அது சொல்கிறது:- ‘எகிப்தில் மாற்றமடையாத இரண்டு அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பிரமிட். மற்றது உம்மு குல்தூமின் குரல்!’
உம்மு குல்தூம் பெற்று வந்த வரம் அப்படிப்பட்டது!

(இருக்கிறம் சஞ்சிகையில் பிரசுரமானது.)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: