Monday, April 25, 2011

அஷ்பகுல்லாஹ் கான் - அங்கம் - 1

ஆங்கிலத்தில்:
என்.பி. சங்கரநாராயண ராவ்
 
  ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஏழாம் ஆண்டு டிஸம்பர் 19ம் திகதி. குளிர் காலமாதலால் சூரியன் தாமதமாகவே கிழக்கு வானில் எழுந்தான். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அவன் பொன்னிறக் கதிர்கள் வெது வெதுப்பையும் சந்தோஷத்தையும் அளித்தன.

அன்றைய சூரியோதயத்தின் போது பைஸாபாத் மாவட்டச் சிறைச்சாலை அதிகாரிகள் ஒரு மனிதனின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். அம்மனிதர் ஒரு புரட்சிகரப் போராளி.

சிறைச்சாலையின் மேலதிகாரிகளும் கீழ் நிலை அதிகாரிகளும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். பிரதான சிறையதிகாரி சுருக்குக் கயிற்றையும் மணல் மூட்டைகளையும் மற்றும் அவசியம் எனக் கருதப்பட்ட அனைத்தையும் மிகக் கவனமாகப் பரிசோதித்துப் பார்த்தார். ஏற்பாடுகளில் பூரண திருப்தியடைந்த அவர் உதவியாளரை அழைத்துக் குற்றவாளியைக் கொண்டுவரப் பணித்தார். உதவியாளர் பத்து ராணுவ வீரர்களுடன் அங்கிருந்து நகர்ந்தார். மரண தண்டனைக்குரிய மனிதன் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கதவு எரிச்சலூட்டும் சத்தம் எழுப்பியபடி திறந்தது. அதுதான் அம்மனிதனுக்காக கதவு திறக்கப்பட்ட கடைசிச் சந்தர்ப்பமாகும்.

அந்த அறைக்குள் வீரம் மிக்க தேசாபிமானி அந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார். அவர் உற்சாகத் தொனியில் கேட்டார், “எல்லாம் தாயாரா?”

ஓர் ஆண் சிங்கம்

அவரது உறுதியான குரல் அவர் இறப்பதற்குத் தயாராக இருப்பதை எடுத்துக் காட்டியது. எனவே அவரை அழைத்துச் செல்ல வந்தவர்களுக்கு எவ்விதத் தயக்க உணர்வையும் அச்சூழ்நிலை ஏற்படுத்தவில்லை. எனினும் அந்த அதிகாரி இறுக்கமான மன நிலையுடன் ‘ஆம்’ என்று பதிலளித்தார். அம்மாவீரர் அதுவரை ஓதிக் கொண்டிருந்த குர்ஆனை மூடினார். அதனைத் தனது கைகளில் பற்றிக் கொண்டவராக எழுந்து நின்று சொன்னார், “நாம் போகலாம்.”

அவர் அகன்ற நெஞ்சும் ஆறடி உயரமும் கொண்டவர். எஃகு போன்ற உறுதியும் சிங்கத்தின் இதயமும் உடையவர். அவரது தாடி அவரது முகத்துக்கு மேலதிக கவர்ச்சியைத் தந்தது. எப்போதும் அவரது உதடுகளில்; படிந்திருக்கும் உறுதி மிகுந்த புன்னகை இந்த நிலையிலும் கூடப் பிரகாசித்தது.

சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த அப்புரட்சி வீரர் தூக்கு மரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ராணுவத்தினர் நடுவே உறுதியான நெஞ்சுடன் நிமிர்ந்து நடந்தார். அவரை அழைத்துச் சென்றவர்கள் தங்கள் தகுதிகளையும் பதவிகளையும் மறந்தவர்களாக அவரை ஆச்சரியத்துடன் நோக்கியவாறு நகர்ந்தனர். தூக்கு மரத்துக்கு ஓர் அடி இடை வெளியில் அவரை அழைத்து வந்தவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அவரைச் சூழ்ந்து நின்றனர். அவரைப் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் அகற்றப்பட்டதும் தனது கைகளை முன்னே நீட்டி தூக்குக் கயிற்றை இழுத்து அதனை முகர்ந்தார். பின்னர் சொன்னார் “;மனிதக் கொலைக் கறை படியாதவை எனது கரங்கள். எனக்கெதிராகச் சுமத்தப்பட்ட குற்றம் பிழையானது. இறைவன் எனக்கு சரியான தீர்ப்பைத் தருவான்.”

பின்னர் அவரது உதடுகளிருந்து லாஇலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸ_லுல்லாஹ் என்ற வார்த்தைகள் வெளிவந்தன.

தூக்குக் கயிறு அவரது கழுத்தில் மாட்டப்பட்டது. நெம்புகோல் இழுக்கப்பட்டதும் அவர் நின்றிருந்த பலகைத் தளம் இரண்டாகப் பிளக்க அவரது உடல் கீழிறங்கியது. தேசத்துக்காக உயிர் துறந்த அழியாப் புகழ் பெற்ற ஆயிரக் கணக்கான தேசிய வீரர்களுடன் அவரும் இணைந்து கொண்டார்.

புகழ்ப+த்த அம்மாவீரர்தான் அஷ்பகுல்லாஹ் கான்!


புரட்சியை நோக்கி

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பிரிவில் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர் அஷ்பகுல்லாஹ். அவரது தந்தையின் பெயர் ஷபிகுல்லாஹ் கான். 1921ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் அஷ்பகுல்லாஹ் படித்துக் கொண்டிருந்தார்.

இந்தியா பிரிட்டிஷரின் ஆளுகைக்குள் இருந்தது. மகாத்மா காந்தியின் தலைமையில் இந்தியா முழுவதும் ஒத்துழையாமைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. வரிகளைச் செலுத்த வேண்டாம் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்றும் காந்தி அனைத்திந்திய மக்களிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோள் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் சுதந்திர தாகத்துக்கு எண்ணெய் வார்த்தது.

சவுரி சவுரா என்ற இடத்தில் வாழ்ந்த மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக வன்முறையில் இறங்கினார்கள். ஆத்திர மிகுதியால் சில பொலிஸ்காரர்களைக் கொளுத்தினார்கள். இதைக் அறிய வந்த காந்தி மனம் வருந்தினார். மிகவும் துயரப்பட்டார். அதன் விளைவாக 1922ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டார். காந்தியின் இந்த முடிவினால் இந்திய இளைஞர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர். உற்சாகமிழந்தனர்.

இவ்வாறு உற்சாகமிழந்த இளைஞர்களுள் அஷ்பகுல்லாஹ்வும் ஒருவர். எவ்வளவு விரைவாக நாடு சுதந்திரத்தைப் பெற முடியுமோ அவ்வளவு விரைவாக அது அடையப் பெற வேண்டுமென்ற ஆவல் அஷ்பகுல்லாஹ்விடம் இருந்தது. ஆகவே அவர் புரட்சியாளர்களின் அணியில் இணைந்தார். இதற்காக ஷாஜஹான்பூரின் புரட்சியாளராக விருந்த ராம் பிரசாத்தின் நட்பைப் பெற வேண்டும் என்று தீர்மானித்தார். பண்டிற் ராம்பிரசாத் பிஸ்மில் ஒரு புரட்சியாளராக ஏற்கனவே பெயர் பெற்றிருந்தார். ஓர் ஆசிரியராகவிருந்த ஜென்டலால் தீக்ஸித்தின் தலைமையில் இயங்கிய குழுவின் மூலம் கொள்ளைகளை மேற்கொண்டு ராம்பிரசாத் போராட்டத்துக்காக ஆயுதங்களையும் பணத்தையும் சேர்த்திருந்தார்.

ராம் பிரசாத்தின் நட்பை வெல்வது அஷ்பகுல்லாஹ்வுக்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது. ராம்பிரசாத் ஆரிய சமாஜத்தின் அங்கத்தவராயிருந்தார். அவர் எப்போதும் இந்து சமயத்தின் மேன்மையை ஏனைய சமயத்தினருக்கு எடுத்துச் சொல்வதில் பெரும் ஆர்வம் கொண்டவராயிருந்தார். இந்து சமயத்துக்கு வர விரும்புவோரை வரவேற்கும் ஆவல் கொண்டவராகவும் இருந்தார். இந்த முயற்சியை ஒரு சபதமாகவே மேற்கொண்டு அவர் செயல்பட்டு வந்தார். ஆனால் அஷ்பகுல்லாஹ் பக்திபூர்வமான ஒரு முஸ்லிமாக இருந்தார்.

இருந்த போதும் அஷ்பகுல்லாஹ்வுக்கு தனது மதம் ராம்பிரசாத்தின் நட்பைப் பெறும் முயற்சியில் இடையூறு செய்யவில்லை. தான் கற்ற பாடசாலையிலேயே ஒரு முறை அவர் ராம் பிரசாத்தைச் சந்தித்தார். ‘ஒரு முஸ்லிம் இளைஞன். ஒரு புரட்சியாளனாக இருப்பதற்கு உண்மையிலேயே இவன் விருப்பமுள்ளவனாக இருக்க மாட்டான். இதுவெல்லாம் வெறும் வேஷமாக இருக்கலாம்” - இவ்வாறுதான் ராம் பிரசாத்தின் சிந்தனையோட்டம் இருந்தது. எனவே நட்பு மிகுந்ததாக இல்லாமல் ஒரு சம்பிரதாய ரீதியில் அஷ்பகுல்லாஹ்வுடன் உரையாடினார்.

ஆயினும் அஷ்பகுல்லாஹ் தனது முயற்சியைக் கைவிட்டு விடவில்லை. இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்களின் உதவியுடன் அஷ்பகுல்லாஹ் தனது உளப்பூர்வ உண்மை ஈடுபாட்டை ராம்பிரசாத்துக்கு நிரூபிக்க முயன்றார். அதிர்ஷ்டவசமாக அஷ்பகுல்லாஹ்வின் சகோதரர் ராம்பிரசாத்தின் வகுப்புத்தோழராயிருந்தார். அஷ்பகுல்லாஹ்வின் தளராத முயற்சியின் காரணமாக இருவரும் நண்பர்களாயினர். இருவரும் ஒன்றாக உணவருந்தினர். தங்களது புரட்சிகரப் போராட்ட வாழ்வில் ஒன்றாக இணைந்தனர். ஒரே நாளில் ஆனால் வெவ்வேறு சிறைகளில் நாட்டின் சுதந்திர உயிர்த் தியாகிகளாக இருவரும் மரணிக்கும் வரை இந்த நட்புத் தொடர்ந்தது.


புரட்சியாளர்களின் இணைப்பு

மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து நாடு பூராவும் உள்ள இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வு மேலும் வலுப்பெற்றது. ஆனால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பலம் மிக்கதும் விசாலமானதுமாக இருந்தது. அவர்களிடம் சக்தி மிக்க ஆயுதங்களும் பெருந்தொகை இராணுவத்தினரும் இருந்தனர். சாதாரண வார்த்தைகள் கொண்டு இப்பெரும் சாம்ராஜ்யத்தை இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்துவிட முடியுமா? நிச்சயமாக அது சாத்தியப்படப் போவதில்லை. ஆகவேதான் புரட்சிகர இளைஞர்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டார்கள்.

 பலம் பொருந்திய பிரிட்டிஷாரோடு போராடுவதற்கு கைத்துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் மற்றும் ஆயுதங்களையும் தயாரிக்கும் தேவை அவர்களுக்கு இருந்தது. இந்தியாவை கைவிட்டுத் திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு பிரிட்டிஷாரின் மனதில் ஒரு பய உணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த உறுதியான தீர்மானத்தின் விளைவாக சிதறிக் கிடந்த புரட்சிகர இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். காசி (வாரணாசி) என்ற இடம் அவர்களது செயற்பாட்டு மத்திய நிலையமாக மாறியது. ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தை அவர்கள் உருவாக்கினார்கள். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை அடைவதே இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.

1925ம் ஆண்டு ‘கிரந்திகாரி’ என்ற அதன் கொள்ளை விளக்க விஞ்ஞாபனத்தை இந்த அமைப்பு வெளியிட்டது. அதில் ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பின் நோக்கங்களைத் தெரிவிக்கும் இவ்விஞ்ஞாபனம் கல்கத்தா முதல் லாகூர் வரையுள்ள அனைத்து நகரங்களிலும் ஒரே நாளில் விநியோகிக்கப்பட்டது. இவ்விஞ்ஞாபனம் பிரிட்டிஷ் அரசுக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஒரு மனிதன் கஷ்டப்பட்டு உழைக்க அவ்வுழைப்பில் இன்னொரு மனிதன் செல்வச் செழிப்பில் வாழ்வதுவும் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எஜமானாக இருப்பதுவும் பிழையானது என்பதை அவ்விஞ்ஞாபனம் எடுத்துச் சொன்னது. ஆகவே இவ்வாறான விடயங்களை மாற்றியமைப்பதற்காக இவ்வமைப்பு செயற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வமைப்பின் ஷாஜஹான்பூர் பிராந்திய அமைப்பாளராக ராம்பிரஸாத் செயற்பட்டார். அவரது அனுபவங்களைக் கொண்டு அவ்வமைப்பின் ஒரு சொத்தாக அவர் மதிக்கப்பட்டார்.

பணம் தேவை. ஆனால் அது எங்கே?

இந்தப் புரட்சிகர அமைப்புக்கு ஒரு விடயத்தில் பெரும் சிக்கல் இருந்தது. அதுதான் பணம். அமைப்பின் தேவைகளுக்கும் போராட்டத்துக்கான ஆயுதங்களை வாங்குவதற்கும் அங்கத்தவர்களை வழிநடத்தவும் பணம் தேவைப்பட்டது. அங்கத்தவர் சந்தா மூலம் குறிப்பிட்ட ஒரு தொகை சேர்க்கப்பட்டது. சில அங்கத்தவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கெஞ்சிப் பெற்றும் சிலர் திருடிக் கொண்டு வந்தும் பணம் கொடுத்தனர். சிலர் நண்பர்களிடம் பணம் சேகரித்தனர். ஆனால் அவர்களது நோக்கத்தை எய்துவதற்கு பெருந் தொகை தேவைப்பட்டது. தேச விடுதலைப் போராட்டத்துக்குத் தேவைப்படும் பணத்தை எப்படிப் பெறுவது என்பது அவர்களது சிந்தனையாக இருந்தது.

ராம்பிரஸாத்தின் தலைமையில் அவர்கள் சில கிராமங்களைக் கொள்ளையடித்தார்கள். இந்நடவடிக்கைகளில் பங்கு கொண்ட அஷ்பகுல்லாஹ் அனுமதிப் பத்திரம் உள்ள தனது சகோதரருக்குச் சொந்தமான துப்பாக்கியைப் பயன்டுத்தினார். வழிப்பறியிலும் கொள்ளையிலும் அவர்கள் ஈடுபட்ட போதும் அதன் மூலம் கிடைத்த பணம் அவர்களது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லப் போதுமானதாக இருக்கவில்லை. ஏனெனில் சில கிராமங்களைக் கொள்ளையிட்டதில் அவர்களுக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய்களே கிடைத்தன.

கிராமங்களைக் கொள்ளையடிப்பதில் ராம்பிரஸாத் விருப்பம் குறைவானவராக இருந்தார். உண்மைதான். இப்பணம் தேச விடுதலைக்குப் பயன்படுத்தப்படப் போகிறது. கிராமத்தவர்களோ தனது தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே அவர்களை இனிமேல் சிரமத்துக்குள்ளாக்குவதில்லை என்று தீர்மானித்தார்.

இதோ பணம்!

ஒரு நாள் ராம்பிரஸாத் ஷாஜஹான்பூரிலிருந்து லக்னோவை நோக்கி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் நிலையத்தில் ரயில் தரித்து நிற்கும் போது தான் பயணம் செய்த பெட்டியிலிருந்து இறங்கி நின்று அங்கு நடப்பவைகளை அவதானித்துக் கொண்டிருந்தார். ஒரு ரயில் நிலையத்தில் ரயில் தரித்து நின்றதும் அந்த ரயில் நிலைய அதிகாரி பணப் பொதியொன்றை எடுத்துக் கொண்டு கார்ட் பெட்டியில் ஏறுவதை அவதானித்தார். இதை அண்மையிலிருந்து பார்க்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தனது இருப்பிடத்தை கார்ட் பெட்டியை அண்மிய பெட்டிக்கு மாற்றிக் கொண்டார். ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்தும் பணப் பொதி கார்ட் பெட்டியில் ஏற்றப்படுவதை அவர் அவதானித்தார். அப்பணப் பொதிகள் கார்ட் பெட்டிக்குள் இருந்த இரும்புப் பெட்டிக்குள் வைக்கப்பட்டன. இப்பணத்துக்கென விசேட பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்பதை அவர் லக்னோவில் கண்டு கொண்டார். அவர் விரைந்து சென்று நேரசூசியில் நேரத்தையும் ரயிலின் இலக்கத்தையும் குறித்துக் கொண்டார். முழுப்பணமும் பத்தாயிரம் ரூபாய்கள் அளவில் இருக்கலாம் என்பது அவரது கணிப்பாக இருந்தது. இந்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

இதுவே பின்னாளில் காகோரிக் கொள்ளையின் துவக்கமாக அமைந்தது.


பணம் ஏராளம்... ஆனால்...!

சம்பவத்துக்குச் சில நாட்களுக்குப் பின்னர் புரட்சியாளர்கள் ஒன்று கூடினார்கள். காசி, கான்பூர், லக்னோ மற்றும் ஆக்ரா ஆகிய பிரதேசங்களிலிருந்து வந்து இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டார்கள். அங்கத்தவர்களுக்கு ராம்பிரஸாத் திட்டத்தை விளக்கிக் கூறினார்.

“அரசாங்கத்தின் இந்தப் பணத்தை நாம் கொள்ளையடித்தோமானால் நமது நடவடிக்கைகளுக்குத் தேவையான பணம் கிடைத்து விடும். அதேவேளை பணத்துக்காக நாம் நமது மக்களை வருத்தத்துக்குள்ளாக்கவும் அவசியம் இருக்காது. இந்தத் திட்டம் மிகவும் சிரமமானது. இதைச் செயல்படுத்துவதற்கு மிகவும் அவதானம் தேவை. ஆயினும் நமது முயற்சி சிறந்த வெற்றியைக் கொண்டு வரும். புரட்சியாளர்கள் வெறுமனே கதைத்துக் கொண்டிருக்காமல் செயல்பாட்டிலும் இறங்கியிருக்கிறார்கள் என்பதை அரசாங்கமும் அறிந்து கொள்ளும்.”

அங்கத்தவர்கள் இந்தத் திட்டத்தை விரும்பினார்கள். அவர்களது தைரியத்தையும் பலத்தையும் நிரூபிக்கும் வகையில் செயல்படுவதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். எனவே ‘இது ஒரு சிறந்த திட்டம்’ என்று ஏகமாக எல்லா அங்கத்தவர்களும் அங்கீகரித்தார்கள்.

அஷ்பாக் இவற்றையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ராம்பிரஸாத் இதைச் சொன்ன நாளிலிருந்து மிகவும் ஆழமான ஈடுபாட்டுடன் சிந்தனையில் இருந்தார்.

சகல அங்கத்தவர்களும் ‘நாம் இப்பொழுதே முடிவெடுப்போம்’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்க, இனிமேலும் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது என்று எண்ணிய அஷ்பாக் எழுந்தார்.

“அன்புள்ள நண்பர்களே... இது ஒரு அவசரத் துணிவு. இது ஒரு வகையில் அருமையான திட்டம்தான். ஆனால் நமது சக்தியையும் அரசாங்கத்தின் சக்தியையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதிகமான பணம் அல்லாத சாதாரண ஒரு கொள்ளையாக இருந்தால் அரசாங்கம் வழமையாக நடக்கும் ஒரு கொள்ளை போல இதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளும். இவ்வாறான ஒரு கொள்ளையில் பொலிஸ் நடந்து கொள்ளும் வழமையான செயற்பாடுகளையே நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசாங்கத்தின் பணம் என்ற வகையில் இதை வித்தியாசமாகவே அணுக வேண்டியிருக்கும். முழு அரச இயந்திரமும் முடுக்கி விடப்பட்டுத் தேடுதல் நடத்தப்பட்டு நம்மைக் கசக்கிப் பிழிந்தெடுத்து விடும். என்னுடைய கருத்து என்னவெனில் இத்திட்டத்தினால் நாம் பிடிபடுவதிலிருந்தோ தண்டனையிலிருந்தோ தப்பிக்க முடியாது. இப்போதைக்கு நமது இயக்க அங்கத்தினரின் சக்தி போதாது. எனவே நாம் இந்தத் திட்டத்தைக் கைவிடுவோம்!”

ஆனால் புரட்சியாளர்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் ஆர்வத்தில் ஊறிப்போயிருந் தார்கள். இதன் அபாயங்குறித்துக் கவனம் செலுத்தும் நிலையை அவர்கள் தாண்டியி ருந்தார்கள். மிக நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் ராம்பிரஸாத்தின் திட்டத்தை நிறைவேற்றுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

முதலில் ஒரு எச்சரிக்கையை அஷ்பகுல்லாஹ் அங்கு விடுத்தார்.

“நண்பர்களே... யாரும் நம்மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தாத வரை நாம் யார் மீதும் சுட்டுவிடக் கூடாது. முடிந்த வரை இரத்தம் சிந்தாமல் இந்தக் காரியத்தை முடிப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.”

கூட்டம் கலைந்தது!

நிறுத்தப்பட்ட ரயில்

1925ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் திகதி ஷாஜஹான்பூரிலிருந்து லக்னோ நோக்கிச் செல்லும் எட்டாம் இலக்க ரயில் காகோரி என்ற இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியனின் பயணம் மேற்கு நோக்கி இடம்பெற்றபடியிருந்தது.

ரயில் திடீரென நிறுத்தப்பட்டது! யாரோ சங்கிலியைப் பிடித்து இழுத்திருக்க வேண்டும்.

இரண்டாம் வகுப்புப் பெட்டியிலிருந்து சச்சீந்திர பக்ஷி, ராஜேந்திர லஹிரி ஆகிய நண்பர்களுடன் அஷ்பகுல்லாஹ் கீழே இறங்கினார். அவர் காகோரித் திட்டத்தின் முதல் அங்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

கார்ட் பெட்டியிலிருந்த கார்ட் கீழே இறங்கினார். எந்தப் பெட்டியில் யார் எதற்காகச் சங்கிலியை இழுத்தார்கள் என்பதை அறிந்து கொள்வது அவரது நோக்கமாக இருந்தது. திடீரென இரண்டு புரட்சியாளர்கள் அவர்மீது பாய்ந்தார்கள். கார்ட்டை குனிந்தபடி இருக்கும்படியும் தலையை உயர்த்தினால் சுடப்படுவாய் என்றும் அவரை எச்சரித்தார்கள். மற்றுமிருவர் ரயில் சாரதியைக் கீழே இறக்கி அந்தச் சாரதிக்குக் காவல் நின்றனர். மற்றுமிருவரில் ஒருவர் ரயில் எஞ்சினுக்கு முன்னாலும் மற்றவர் கடைசிப் பெட்டியருகிலும் காவல் நின்றனர். அவர்கள் இருவரும் தமது கைத்துப்பாக்கியால் வேட்டுக்களைத் தீர்த்து பின்வருமாறு சொன்னார்கள்:-

“பயணிகள் எவரும் பயப்படத் தேவையில்லை. நாங்கள் சுதந்திரம் கேட்டுப் போராடும் சுதந்திரப் போராளிகள். உங்களது உயிர், பணம், கௌரவம் எல்லாவற்றுக்கும் உத்தரவாதம் தருகிறோம். கவனமாக இருங்கள். எக்காரணங்கொண்டும் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்க்க வேண்டாம்.”

நான்கு இளைஞர்கள் கார்ட் பெட்டிக்குள் நுழைந்தார்கள். அதற்குள்ளிருந்து பணம் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியை நிலத்தை நோக்கித் தள்ளி வீழ்த்தினார்கள். அந்தப் பெட்டி பலமான பூட்டுக் கொண்டது. கார்ட் இடம் அல்லது ரயில் சாரதியிடம் அதன் சாவி இருக்க வேண்டும். அந்தப் பெட்டியின் மேலே ஒரு வழியிருந்தது. ஆனால் அதற்குள் பணத்தைப் போட முடியுமே தவிர திரும்ப எடுக்க முடியாது.

புரட்சியாளர்கள் அந்த இரும்புப் பெட்டியைச் சுத்தியல் கொண்டு உடைக்கத் தொடங்கினார்கள். ஆனால் அதை அவ்வளவு இலகுவாக உடைக்க முடியவில்லை. காவலில் நின்ற அஷ்பாக் இதைக் கண்ணுற்றார். அந்த புரட்சிகர இளைஞர்கள் அணியில் அஷ்பகுல்லாஹ்கான்தான் மிகவும் பலசாலி. தனது கைத்துப்பாக்கியைத் தனது தோழனான மன்மதனாத்திடம் ஒப்படைத்து விட்டு இரும்புப் பெட்டியிருந்த இடத்தை நோக்கி ஓடினார். சுத்தியலை எடுத்து ஓங்கி அந்தப் பெட்டி மேல் அடிக்கத் தொடங்கினார். அந்த அடியினால் எழுந்த உலோகச் சத்தம் ஒதுக்குப் புறமான அந்த இடத்தில் எதிரொலியெழுப்பிக் கொண்டிருந்தது.


மற்றொரு ரயில்

லக்னோவிலிருந்து மற்றொரு ரயில் வந்து கொண்டிருக்கும் சத்தத்தை அவர்கள் உணர்ந்தனர். வருகின்ற அந்த ரயில் தாம் நிறுத்தி வைத்திருக்கும் ரயிலோடு மோதிப் பெரும் விபத்து ஏற்படப் போகிறதென்று ராம்பிரஸாத்துக்கு ஒரு கணம் நடுக்கம் எடுத்தது. அப்படி நடக்குமானால் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பெண்கள், ஆண்கள், குழந்தைகளின் மரணத்துக்குத் தானே பொறுப்பேற்க வேண்டும் என்று எண்ணினார். எத்தகையதொரு துர்ப்பாக்கியம் இது! ஆனால் அந்த இடத்தில் மற்றொரு இருப்புப் பாதை இருந்தது. அதைக் கண்டதும் மனது ஆறுதலடைந்தது.

ஆனால் வருகின்ற ரயிலை அந்தச் சாரதி நிறுத்தி விட்டால்? அல்லது தாம் நிறுத்திய ரயிலின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாரதி அபயக்குரல் எழுப்பி விட்டால்...? நிறுத்தப்பட்ட ரயிலின் பிரயாணிகளும் சத்தமிட்டுக் குரல் கொடுக்கும் பட்சத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டு விடுலாம்!

எல்லோரது கண்களும் ராம்பிரஸாத்தை நோக்கியிருந்தன. அவர் கட்டளையிட்டார்...

“யாரும் சுட்டு விட வேண்டாம். துப்பாக்கிகளை மறைத்துக் கொள்ளுங்கள். பெட்டியை உடைப்பதை நிறுத்துங்கள்... அஷ்பாக்... கொஞ்சம் நிறுத்து!

உறைந்த அமைதியில் அந்த ஒரு சில கணங்கள் ஒரு வருடத்தைப் போல் நகர்ந்தது.

வேகமாக வந்த அடுத்த ரயில் மற்றைய இருப்புப் பாதையூடாகக் கடந்து சென்றது.

தொடரும்...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: